தர்மராஜ் பெரியசாமி

[ A+ ] /[ A- ]

19248102_1452851751425249_4583387086008257091_n

ஈமச்சடங்கு

பொத்தாம்பொதுவாக

இங்கு எங்களை இந்தியர்கள் என்கிறார்கள்

அதில் எனக்குக் கொஞ்சமும் உவப்பில்லை

இங்கு எவருக்கும் அவரவர் முகமில்லை

அனைவருக்கும் ஒரே முகம்

அது அடிமையின் முகம்

வாரயிறுதிகளில் பேரங்காடிகளின் வாயில்களில்

வழி கேட்கும் ஒரு வியர்வை முகம்

‘தம்பி நீங்கள் தமிழா’ எனும்போதும் மட்டும்

எங்கள் முகங்களில் அன்பு சுடர்விட்டு

ஒளிர்விடும். மற்றபடி வைபை யூட்யூப்

குலதெய்வங்காளகிவிட்ட உலர்நிலத்தில்

தூய அன்பு ஒரு கனவுப்பிரதியின்

கடைசிக் கவிதை.

இப்பொழுதெல்லாம் நகைச்சுவை நிகழ்ச்சிகளில்

சிரிப்பே இல்லை

கோழிக்கால்களிலும் ஆட்டுத்தொடைகளிலும்

சுவையே இல்லை

ஆண்கள் விநோத உருவில் எப்போதும்

இறுக்கத்துடனே வலம் வருகின்றனர்

பெண்களின் அதீத முகப்பூச்சுகளிலும்

எடுப்பான போலி பாகங்களிலும்

கவர்ச்சியே இல்லை

நான் என் காதலியிடம் சதா எரிந்து எரிந்து விழுகிறேன்

குறிப்புணர்ந்தவள் மகராசி

என் மனதை ஆசுவாசப்படுத்த

விர்ச்சுவல் இதயங்களையும்

விர்ச்சுவல் முத்தங்களையும்

ஓயாது அனுப்பிக்கொண்டேயிருக்கிறாள்

ஒருமுறை அவளிடம்

அம்மா இங்கு இருக்கவே பிடிக்கவில்லை

என்றேன்

வெடித்து அழுதுவிட்டாள்.

சென்ற வாரம் என் தகப்பன் வழி

முதுகிழவி செத்துவிட்டாள்

அப்பா அம்மா தங்கைகள் காதலி தோழர்கள்

அனைவரும் ஒருசேர சொன்னார்கள்

நீ அங்கிருந்தே அழுதுவிடு

என்னால் தாங்கமுடியவில்லை

கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை

வீறிட்டு அழுகிறேன்

என் மூத்தகுடியின் எச்சத்தின் எச்சத்திலிருந்து

பாலை மண்ணை நனைக்கின்றன

வெம்மையான குருதித்துளிகள்.

எனக்கு ஒரு கனவு உண்டு

அங்கு அப்பா உழவு செய்வார்

அம்மா கஞ்சிக்கலயம் சுமந்து வருவாள்

நான் பள்ளி முடிந்து கால்நடைகளை

கிடையில் அடைப்பேன்

செங்கதிர்கள் வரப்பை மறைத்து

ஓங்கி வளரும்

என் தங்கைக்கு மாம்பழம் பறித்துத் தருவேன்

அணில்களும் பறவைகளும்

பப்பளிகளையும் கொய்யாப்பழங்களையும்

மனம்போலச் சுவைக்கும்

மாலைகளில் ஒன்றாக அமர்ந்து

உணவருந்துவோம்

கதைகள் கேட்டபடி

பாய் விரித்த சற்று நேரத்திற்கெல்லாம்

நிம்மதியாக ஆழ்ந்துறங்குவோம்

அப்போது

என் கனவுக்குள்

கனவுக்குள்ளிருக்கும் நான் மட்டும்

அமைதியாக எழுந்து

என் நிலத்தின் ஒருபிடி மண்ணில்

என் ஒரு துளிக் கண்ணீரை ஆனந்தமாக

நனைப்பேன்

அதற்கு நான் எந்தப் பெயரும் இடப்போவதில்லை

ஆம். அது காலம் தேக்கிப்

பத்திரப்படுத்த மறந்த நம் வாழ்வின்

உள்ளுறையும் ஒரு துளி ஈரம்

என்பதைத் தவிர.

நினைவகத்துக்குள்ளிருக்கும் வீடு

ஊன்றுகோலிட்டுத் தாண்டி

ஒரு பருவத்திலிருந்து இன்னொரு பருவம்

குதூகலமாக மீளுகிறவனின் மனச்சித்திரங்கள்

ஒருகணம் நிலைகொள்ளாது

குழம்பிப்போகின்றன.

இது நம் ஊர் இல்லையே;

இது நம் ஊர் இல்லையே;

அந்தரத்தில்

பள்ளி வாயிலை கடக்கும்போது

என் செவிகளில் கேட்கிறது

குமிழ் வடிவ ஒலிப்பான் உமிழ்ந்தொலிக்கும்

சப்தம் பாம்ம்ம்ம்ம் பாம்ம்ம்ம்ம்.

நான் ஆவலோடு திரும்பிப் பார்க்கிறேன்

ஒரு பால்யகாலக் கோடை

ஒரு கால் குச்சியைஸாக உருகி

என் நாவில் குளிர்ந்து சொட்டுகிறது

நான் அச்சிறுவனிடம் சொல்ல விரும்பினேன்

செல்லமே… உனக்குத் திகட்டும் வரை

உனது நா மரக்கும் வரை

சேமியா வார்க்கப்பட்ட பல

வண்ணங்களிலான உன் ஆனந்தத்தை

இப்போதே உண்டு களித்துவிடு

இனியுன் வாழ்வில் குச்சியைஸ்களின்

வாசம் திரும்பவே போவதில்லை

நீ மண்டியிட்டுக் கெஞ்சினாலும்

உன் உள்நாவை இனியொருமுறை

தொட்டுத் தீண்டிவிடவே போவதில்லை

அக்கள்ளமில்லா தித்திப்பு.

ஊடறுத்து நகரும் அகன்ற சாலையின்

இருமருங்கிலும் விறைத்திருக்கும்

அங்காடிக்குள் நுழைந்து தேடுகிறேன்

அலைபேசிக் கடைக்குள் புகுந்து தேடுகிறேன்

இங்குதானே நம் வீட்டிற்குச் செல்லும்

வழி இருந்தது

ஒரு வார்த்தையும் சொல்லாமல்

யாரதன் தடத்தை மாற்றி வைத்தவர்?

தவிர இதன் விளிம்பில்தானே சில முதியவர்கள்

தங்கள் நடுநடுங்கும் வாழ்வைப்

பத்திரப்படுத்தி வாழ்ந்திருந்தனர்

அவர்களின் பருக்கைகளை

அந்த முதுகரங்களேந்திய கஞ்சிக் கலயங்களை

விடாப்பிடியாக இடறிவிட்ட கரம்

எவர் கரம்?

கொஞ்சதூரம் சென்று பின் அதே இடம் திரும்பி

தேம்பித் தேம்பி அழுமொரு சிறுமியாக

நான் மறுபடி மறுபடி தேடுகிறேன்

இங்குதானே எல்லாமும் இருந்ததென

இங்குதானே எல்லாமும் வைத்துவிட்டுச்

சென்றோமென.

கக்கடைசியில்

நினைவுக் கண்ணிகள் அறுபட

களைப்புற்று ஏமாறும் ஒருவன்

போகிற வருகிற வாகனங்களின் பின்னால்

லொள் லொள்ளென புத்தி பேதலித்த

ஒரு குட்டிநாயைப் போல

குரைத்துக்கொண்டே ஓடுகிறான்

ஐயா ஓட்டுநரே

ஐயா நடத்துநரே

உங்களுக்குப் புண்ணியமாப் போகும்

எப்படியேனும் என்னை

என் பால்யத்துக்குள்ளிருக்கும்

என் ஊரில் விட்டுவிடுங்கள் என.

எப்படியேனும் என்னை

என் நினைவகத்துக்குள்ளிருக்கும்

என் வீட்டில் விட்டுவிடுங்கள் என.

•••

Comments are closed.