லாட்டரி ( சிறுகதை ) ஷிர்லே ஜாக்சன் / தமிழில் – ஸ்ரீதர்ரங்கராஜ்

[ A+ ] /[ A- ]

download (78)

ஜூன் 27ஆம் தேதியின் காலை மேகமற்று வெளிச்சமாக ஒரு முழுமையான கோடைநாளின் வெம்மையோடு இருந்தது; மலர்கள் அபரிமிதமாக மலர்ந்தன புற்களின் பச்சை மிகுந்தது. கிராமத்துமக்கள், காலை பத்துமணிக்கெல்லாம் தபால் நிலையத்துக்கும் வங்கிக்கும் இடையிலிருந்த சதுக்கத்தில் கூட ஆரம்பித்தனர்; சில நகரங்களில் மக்கள்தொகை அதிகம் என்பதால் லாட்டரிக் குலுக்கல் இரண்டுநாள் நடைபெறும், எனவே ஜூன் 26ஆம் தேதியே அது ஆரம்பிக்கப்படும், ஆனால், இங்கே கிராமத்தில் கிட்டத்தட்ட முன்னூறு பேர்தான், எனவே மொத்த குலுக்கலும் இரண்டு மணிநேரத்திற்குள் முடிந்துவிடும் என்பதால் நிதானமாகப் பத்துமணிக்கு ஆரம்பித்தாலும் கிராமவாசிகள் மதியச்சாப்பாட்டுக்கு வீட்டிற்குப் போய்விடலாம்.

வழக்கம்போல, முதலில் குழந்தைகள் கூடினார்கள். பள்ளிக்கூடம் கோடைகாலத்திற்காக சமீபத்தில்தான் மூடப்பட்டது, எனவே சுதந்திர உணர்ச்சி அவர்களில் பெரும்பாலானோரிடையே அசௌகரியமாகத்தான் அமர்ந்திருந்தது; கும்மாளமிட்டு விளையாடுவதற்கு முன்பாக முதலில் அமைதியான முறையில் சிறிதுநேரம் ஒன்றுகூட நினைத்தனர், அவர்கள் இன்னமும் வகுப்பறை மற்றும் ஆசிரியர் பற்றி, புத்தகங்கள் மற்றும் கண்டிப்புகள் குறித்துப் பேசினர்.

பாபி மார்ட்டின் ஏற்கெனவே தன் பைகளுக்குள் கல்லை நிரப்பி வைத்திருந்தான், மற்றவர்கள் அவனை உதாரணமாகக் கொண்டு தொடர்ந்தனர், உருண்டையான மற்றும் வழுவழுப்பான கல்லையே தேர்ந்தெடுத்தனர்; பாபி மற்றும் ஹாரி ஜோன்ஸ் மற்றும் டிக்கி டெலக்ரோஸ் – அதைக் கிராமவாசிகள் “டெலக்ரோய்” என்று உச்சரிப்பார்கள் – ஆகியோர் சதுக்கத்தின் மூலையில் சிறு குவியலாகக் கற்களைச் சேகரித்து அதை மற்றசிறுவர்கள் கைபடாவண்ணம் பாதுகாத்தனர். சிறுமிகள் தனியாக நின்றுகொண்டிருந்தனர், தங்களுக்குள் பேசிக்கொள்வது, தங்கள் தோள்களின் வழி பயல்களைப் பார்ப்பது என, சிறு குழந்தைகள் புழுதியில் புரண்டு கொண்டிருந்தனர் அல்லது தன் அக்கா அல்லது அண்ணன்களின் கையைப் பிடித்தபடி இருந்தனர்.

சீக்கிரமே ஆடவர்கள் குழும ஆரம்பித்தனர், அவரவர் குழந்தைகளைக் கவனித்தபடி, தங்களின் நடவு மற்றும் மழை குறித்தும் டிராக்டர்கள் மற்றும் வரி குறித்தும் பேசினர். சதுக்கத்தின் மூலையிலிருந்த கற்குவியலிலிருந்து தள்ளி, ஒன்றாக நின்றுகொண்டனர், அவர்களின் நகைச்சுவைகள் அமைதியாக இருந்தன, வாய்விட்டுச் சிரிப்பதற்குப் பதிலாகப் புன்னகைத்தனர். பெண்கள் மங்கிய வீட்டுஉடைகளையும் கம்பளி ஆடைகளையும் அணிந்தபடி அவர்களது ஆண்கள் வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் வந்து சேர்ந்தனர்.

தங்கள் கணவரோடு சேர்ந்து கொள்ளும்முன் ஒருவருக்கொருவர் முகமன் கூறி வாழ்த்தியபடி சில புரணிகளையும் பரிமாறிக்கொண்டனர். சீக்கிரமே, தங்கள் கணவன்மார்களின் அருகில் நின்றுகொண்டிருந்த பெண்கள், தத்தம் குழந்தைகளை அழைக்க ஆரம்பித்தனர், குழந்தைகளும் வர மனதில்லாமல் அவர்கள் நான்கைந்து முறை அழைத்தபின் வந்துசேர்ந்தனர். பாபி மார்ட்டின், தன்னைப் பிடிக்க வந்த அம்மாவின் கைப்பிடியிலிருந்து தப்பி கற்குவியலை நோக்கி ஓடினான். ஆனால், அவன் அப்பா கடிந்துசொன்னதும் ஓடிவந்து பெற்றோருக்கிடையே, தன் மூத்த சகோதரனுக்கு அருகில் வந்து நின்றுகொண்டான்.

குலுக்கல் நிகழ்ச்சியை – நடனம், பதின்ம வயதினர் குழு, ஹாலோவீன் நிகழ்ச்சிகள் போல – நடத்திக் கொடுப்பவர் திரு.சம்மர்ஸ், இதுபோன்ற பொதுநடவடிக்கைகளில் ஈடுபட அவருக்கு நேரமும் தெம்பும் இருந்தது. அவருக்கு வட்டவடிவிலான முகம், கலகலப்பான மனிதர், நிலக்கரி வியாபாரம் செய்து கொண்டிருந்தார், எல்லோரும் அவருக்காகப் பரிதாபப்பட்டனர், ஏனெனில் அவருக்குக் குழந்தைகள் இல்லை, அவர் மனைவி ஒரு சண்டைக்காரி. அவர் கருப்பு மரப்பெட்டியைச் சுமந்தபடி சதுக்கத்துக்கு வந்தபோது கிராமவாசிகள் முணுமுணுவெனப் பேசிக்கொண்டிருந்தார்கள், அவர் வந்ததும் கையைவீசி, “சற்று தாமதமாகிவிட்டது நண்பர்களே.” என்றார்.

போஸ்ட்மாஸ்டர் திரு.க்ரேவ்ஸ், அவரைத்தொடர்ந்து ஒரு முக்காலியைச் சுமந்தபடி வந்தார், அந்த முக்காலி சதுக்கத்தின் நடுவில் வைக்கப்பட்டதும் திரு.சம்மர்ஸ் அந்தக் கருப்புப் பெட்டியை அதில் இருத்தினார். கிராமவாசிகள் முக்காலிக்கும் தங்களுக்கும் இடையே சற்று இடைவெளிவிட்டு தாங்கள் நிற்கவேண்டிய தொலைவில் நின்றனர், திரு.சம்மர்ஸ், “நீங்கள் யாரேனும் எனக்கு உதவ விரும்புகிறீர்களா?” என்று கேட்டதும், சிறு சலசலப்புக்குப் பிறகு இருவர், திரு.மார்ட்டின் மற்றும் அவரது மூத்தமகன் பாக்ஸ்டர் ஆகியோர், திரு.சம்மர்ஸ் பெட்டியிலுள்ள காகிதங்களைக் கலக்கும்போது பெட்டி முக்காலியின்மீது அசையாமல் பிடித்துக்கொண்டனர்.

ஆரம்பத்தில் லாட்டரிக் குலுக்கலுக்குப் பயன்படுத்தப்பட்ட பெட்டி வெகுகாலம் முன்பே போய்விட்டது, இப்போது முக்காலியின் மீது அமர்ந்திருக்கும் இப்பெட்டியும் வயசாளியான வார்னர் பிறப்பதற்கு முன்பே உபயோகத்திற்கு வந்தது, வார்னர்தான் ஊரிலேயே வயது முதிர்ந்த ஆள். திரு.சம்மர்ஸ், பெட்டியை மாற்றுவது குறித்து அவ்வப்போது ஊரிலுள்ளவர்களிடம் பேசிக்கொண்டுதான் இருந்தார், ஆனால், யாருமே அந்தக் கருப்புப்பெட்டி வழிவழியாக வகித்து வரும் வழக்கத்திற்குக்கூட ஊறுவிளைவிக்கும் விதமாக நடந்துகொள்ள விரும்பவில்லை. இப்போதுள்ள பெட்டி, இதற்கு முன்பாக இருந்த பெட்டியின், அதாவது முதன்முதலாக இங்கேவந்து தங்கி கிராமம் ஒன்றை ஏற்படுத்திய மக்கள் உருவாக்கிக்கொண்ட பெட்டியின் சில பாகங்களைக்கொண்டு உருவானது என்றொரு கதை உண்டு.

ஒவ்வொரு வருடமும் லாட்டரி முடிந்தபின் திரு.சம்மர்ஸ் புதியபெட்டி குறித்துப் பேசத்துவங்குவார், ஆனால் ஒவ்வொரு வருடமும் அதுகுறித்த எந்தவிதமான செயல்பாடும் இல்லாமல் அப்பேச்சு மறைந்துவிடும். கருப்புப்பெட்டி ஒவ்வொரு வருடமும் நசிந்துகொண்டே வந்தது; இப்போதோ, அது முழுவதுமாகக் கருப்பு என்று சொல்லமுடியாத அளவில் ஒருபக்கம் சிதைந்துபோய் மரத்தின்நிறம் வெளியில் தெரிந்தது, மற்ற பகுதிகள் மங்கலாகவோ அல்லது கறை படிந்தோ இருந்தன.

திரு.மார்ட்டின் மற்றும் அவர்களின் மூத்தமகன் பாக்ஸ்டர் ஆகிய இருவரும் திரு.சம்மர்ஸ் தன்கையால் பெட்டியிலுள்ள காகிதங்களை நன்றாகக் கலக்கும்வரை பெட்டியைப் பத்திரமாகப் பிடித்துக்கொண்டனர். பல சடங்குகள் ஏற்கெனவே மறக்கப்பட்டுவிட்டன அல்லது தவிர்க்கப்பட்டுவிட்டன, திரு.சம்மர்ஸ் பல தலைமுறைகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த மரச்சில்லுகளுக்குப் பதிலாக காகிதத்தைப் பயன்படுத்த வைப்பதில் வெற்றிகண்டார். கிராமம் சிறியதாக இருந்தவரையில் மரச்சில்லுகளைப் பயன்படுத்தியது சரிதான், ஆனால் இப்போது மக்கட்தொகை முன்னூறைத் தாண்டிவிட்டது, இன்னமும் வளரும் எனும்போது கருப்புப் பெட்டிக்குள் எளிதாகப் பொருந்தும் ஒன்றுதான் சரி என வாதிட்டார். குலுக்கல் நடைபெறுவதற்கான முந்தைய இரவில் திரு.சம்மர்ஸ் மற்றும் திரு.க்ரேவ்ஸ் இருவரும் சீட்டுகளைத் தயாரித்து பெட்டிக்குள் போட்டுவைப்பார்கள், பிறகு அது திரு.சம்மர்ஸ்சின் நிலக்கரி நிறுவனத்தில் உள்ள பெட்டகத்தில், மறுநாள் காலை திரு.சம்மர்ஸ் அதை சதுக்கத்திற்கு எடுத்து வரும்வரை, பத்திரமாக வைக்கப்படும்.

வருடத்தின் பிறநாட்களில் அப்பெட்டி சமயத்தில் இங்கேயும் சமயத்தில் அங்கேயுமாகக் கிடக்கும்; ஒருவருடம் அது திரு.க்ரேவ்ஸ்சின் பண்ணையில் கிடந்தது, அடுத்தவருடம் தபால்நிலைய மேசையின் கீழ் கால்வைக்குமிடத்தில் இருந்தது, ஒருசமயம் அது மார்ட்டினின் மளிகைக்கடை அலமாரியில் வைக்கப்பட்டது.

திரு.சம்மர்ஸ், சீட்டுக்குலுக்கலை அறிவிப்பதற்கு முன் நிறையத்தயாரிப்புகள் தேவைப்படும். குடும்பத்தலைவர்களின் பட்டியல், ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள தலைக்கட்டுகளின் எண்ணிக்கை, ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள தலைக்கட்டுகளில் உள்ள நபர்களின் எண்ணிக்கை என நிறையப்பட்டியல்கள் தயாரிக்கவேண்டும். லாட்டரியை நடத்தும் அலுவலர் என்ற முறையில் ஓர் உறுதிமொழியும் போஸ்ட்மாஸ்டர் முன்னிலையில் திரு.சம்மர்ஸ் எடுக்கவேண்டும்; ஒருமுறை, அதற்கென ஒருவகையான ஒப்பித்தல் வரிகள் இருந்தன, அலுவலர்கள் அதை நடத்திவைப்பார்கள், ஒரு சடங்குபோல, அதற்கென இசைத்தன்மை ஏதும் இல்லாத ஓதுதல், ஒவ்வொரு வருடமும் ஓதப்படும் என்று சிலர் நினைவுகூர்ந்தனர்; சிலர், அலுவலர் அதை வாசிக்கும்போது அல்லது ஓதும்போது அசையாமல் நிற்கவேண்டும் என நம்பினர், மற்றவர்கள் அலுவலர் மக்களிடையே நடந்து செல்லவேண்டும் என்றனர், ஆனால், வருடங்கள் செல்லசெல்ல இந்தச்சடங்கு தொடர்ச்சியற்று கைவிடப்பட்டுவிட்டது.

18300852_1070384146427620_7726105906220831506_n

அதுபோலவே சடங்குமுறை வணக்கச்செயல் ஒன்றும் இருந்தது, பெட்டியிலிருந்து சீட்டை எடுக்கப்போகும் நபரின் பெயரை அழைக்கும்போது அலுவலர் இதைப் பயன்படுத்துவார், ஆனால் இதுவும் காலத்தோடு மாறிவிட்டது, இப்போதுவரை சீட்டை எடுக்கவருபவரிடம் அலுவலர் கட்டாயமாகப் பேசவேண்டும் என்ற அளவிலேயே இருந்துவருகிறது. திரு.சம்மர்ஸ் இதிலெல்லாம் தேர்ந்தவராக இருந்தார்; அவரது தூய வெள்ளைச்சட்டை மற்றும் நீலக்கலர் ஜீன்ஸுடன், ஒருகை இயல்பாக பெட்டியின் மீதிருக்க, இடைவிடாமல் திரு.க்ரேவ்ஸ் மற்றும் மார்ட்டின்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் இதற்குப் பொருத்தமானவராக மற்றும் முக்கியமானவராகத் தெரிந்தார்.

திரு.சம்மர்ஸ் பேசிமுடித்து, கூடியிருந்த கிராமவாசிகள் பக்கம் திரும்பும்போது, திருமதி.ஹட்சின்ஸன் வேகமாக சதுக்கத்தின் பாதைக்குள் நுழைந்தாள், அவளது கம்பளி மேலாடை தோள்மீது கிடந்தது, கூட்டத்தின் பின்புறம் கிடைத்த இடைவெளிக்குள் நுழைந்து உள்ளே வந்தாள். “இன்று என்ன நாள் என்பதை சுத்தமாக மறந்துவிட்டேன்,” என்று தன்னருகில் நின்று கொண்டிருந்த திரு.டெலக்ரோஸிடம் சொல்லிக்கொண்டாள், இருவரும் மெதுவாகச் சிரித்துக் கொண்டனர். “என் வீட்டுக்கிழவர் பின்பக்கம் விறகு அடுக்கச் சென்றிருந்தார்,” திருமதி.ஹட்சின்ஸன் தொடர்ந்தாள். “சன்னல் வழியாகப் பார்த்தால் குழந்தைகளைக் காணோம், பிறகுதான் இன்று இருபத்தியேழாம் தேதி என்று ஞாபகம் வந்தது, அவசரமாக ஓடிவந்தேன்.” தான் கட்டியிருந்த மேலங்கியில் கையைத் துடைத்துக்கொண்டாள், திரு.டெலக்ரோஸ், “இருந்தாலும், நீங்கள் சரியான நேரத்திற்கு வந்துவிட்டீர்கள். மேடைமேல் அவர்கள் இன்னமும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.” என்றார்.

திருமதி.ஹட்சின்ஸன் கழுத்தைவளைத்து கூட்டத்தைத்தாண்டி தன் கணவரும் குழந்தைகளும் முன்வரிசையில் இருப்பதைப் பார்த்துவிட்டு. விடைபெறும் விதமாக திரு.டெலெக்ரோஸின் கைகளில் லேசாகத் தட்டிவிட்டு கூட்டத்தினுள் நுழைந்தாள். கூட்டத்தினர் மகிழ்வோடு அவளுக்கு வழிவிட்டனர்; இரண்டு அல்லது மூன்றுபேர், கூட்டத்திற்குள் மட்டுமே கேட்கும்படியான குரலில், “இதோ உங்கள் திருமதி, ஹட்சின்ஸன்” என்றும் “பில், இதோ அவர் வந்து சேர்ந்துவிட்டார்,” என்றும் கூறினர். திருமதி.ஹட்சின்ஸன் தன் கணவரை நெருங்கியதும், அவள் வருகைக்காகக் காத்திருந்த திரு.சம்மர்ஸ் சந்தோஷமாகக் கூறினார்.

”நீ இல்லாமலே ஆரம்பிக்க வேண்டிவரும் என்று நினைத்தேன் டெஸ்ஸி.”. திருமதி.ஹட்சின்ஸன் இளித்தபடி, “கழுவவேண்டிய பாத்திரங்கள் என்னை விடவில்லை, இப்போது ஆரம்பிக்கிறீர்களா, ஜோ?” என்றாள், மெல்லிய சிரிப்பலை கூட்டத்தில் பரவியதோடு அவளின் வருகையால் சற்றே கலைந்திருந்த கூட்டம் மீண்டும் ஒழுங்குக்கு வந்தது.

“சரி, இப்போது.” திரு.சம்மர்ஸ் நிதானமான குரலில் தொடங்கினார், “ஆரம்பித்துவிடலாம் என்று நினைக்கிறேன், சீக்கிரமாக முடித்துவிட்டால், எல்லோரும் அவரவர் வேலையைப் பார்க்கப் போகலாம். இன்னும் யாராவது வரவேண்டுமா?”

“டன்பர்,” என்று நிறைய குரல்கள் எழுந்தன. “டன்பர், டன்பர்.”

திரு.சம்மர்ஸ் தன் கையிலிருந்த பட்டியலைப் பார்த்துவிட்டு, “க்ளைட் டன்பர்.” என்றார். “ஆமாம். அவருக்குக் கால் உடைந்துவிட்டது சரிதானே? அவருக்குப் பதிலாக சீட்டு எடுக்கப்போவது யார்?”

“நான்தான் எடுக்கவேண்டும்,” என்றாள் ஒரு பெண், திரு.சம்மர்ஸ் அவள் பக்கம் பார்த்தார். “மனைவி கணவனுக்காகச் சீட்டு எடுக்கப்போகிறார், “சீட்டை எடுப்பதற்கு உனக்கு வளர்ந்த மகன்கள் யாரும் இல்லையா ஜெனி?” என்றார் திரு.சம்மர்ஸ். அவருக்கும் கிராமத்தில் இருக்கும் எல்லோருக்கும் அதற்கான பதில் தெரியும் என்றாலும் அலுவலக முறைமைக்காக அதைக்கேட்டாக வேண்டும். திருமதி.டன்பரின் பதில் வரும்வரை திரு.சம்மர்ஸ் அமைதியான ஆர்வத்துடன் காத்திருந்தார்.

“ஹோரேஸ்சுக்கு இன்னும் பதினாறு வயதாகவில்லை,” வருந்தும் குரலில் திருமதி.டன்பர் கூறினாள். “எனவே, இந்தவருடம் அவருக்காக நான்தான் எடுக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.”

”சரிதான்,” என்றார் திரு.சம்மர்ஸ். தன்னுடைய பட்டியலில் அதைக் குறித்துக்கொண்டார். பிறகு, “வாட்சனின் பயல் இந்த வருடம் எடுக்கப்போகிறானா?”

ஓர் உயரமான பையன் கூட்டத்திலிருந்து கையை உயர்த்தி “இங்கே,” என்றான். “நான் எனக்காகவும் என் அம்மாவுக்காகவும் எடுக்கப்போகிறேன்.” கூட்டத்திலிருந்து பல குரல்கள், “நல்ல விஷயம் ஜாக்,” என்றும் “உன் அம்மாவுக்கென்று சீட்டு எடுக்க ஒரு ஆண் இருப்பதில் சந்தோஷம்,” என்றெல்லாம் குரல்கள் கேட்டதும் பதட்டமாகக் கண்களைச் சிமிட்டியபடி தலையைக் குனிந்து கொண்டான்.

“சரி,” என்றார் திரு.சம்மர்ஸ். “எல்லோரும் வந்தாயிற்று என்று நினைக்கிறேன். முதியவர் வார்னரால் வர முடிந்ததா?”

“இதோ,” என்று குரல் வந்ததும் திரு.சம்மர்ஸ் தலையசைத்தார்.

திரு.சம்மர்ஸ் தொண்டையைக் கனைத்துக்கொண்டு பட்டியலைப் பார்க்க ஆரம்பித்ததும் திடீரென கூட்டத்தில் ஒரு மௌனம் பரவியது. “எல்லோரும் தயாரா?” என்றார். “இப்போது நான் பெயர்களை வாசிப்பேன் – குடும்பத் தலைவர்களின் பெயர்கள் – அவர்கள் மேலே வந்து பெட்டியிலிருந்து ஒரு சீட்டை எடுக்கவேண்டும். சீட்டைப்பிரிக்காமல் மடித்தபடி கையில் வைத்திருக்க வேண்டும், எல்லோரும் எடுத்து முடியும்வரை பிரித்துப்பார்க்கக் கூடாது. எல்லாம் புரிந்ததா?”

எல்லோரும் இதைப் பலமுறை செய்தவர்கள் என்பதால் பாதிதான் காதில் வாங்கிக் கொண்டனர்; பெரும்பாலானோர் அமைதியாக, தங்கள் உதடுகளை ஈரப்படுத்தியபடி, அக்கம் பக்கம் பார்க்காமல் இருந்தனர். திரு.சம்மர்ஸ் தன் ஒருகையை உயர்த்தி, “ஆடம்ஸ்” என்றார். ஒரு மனிதர் கூட்டத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு முன்னே வந்தார். “ஹாய், ஸ்டீவ்.” என்றார் திரு.சம்மர்ஸ். பதிலுக்கு திரு. ஆடம்ஸ், “ஹாய், ஜோ.” என்றார். இருவரும் மகிழ்ச்சியற்ற பதட்டமான புன்னகையைப் பரிமாறிக்கொண்டனர். பிறகு திரு.ஆடம்ஸ் கருப்புப்பெட்டியை அடைந்து மடிக்கப்பட்ட ஒரு தாளை எடுத்துக்கொண்டார். அதன் ஒருமுனையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, வேகமாகக் கூட்டத்தில் தன்னுடைய இடத்திற்குச் சென்று, தன் குடும்பத்திலிருந்து சற்றுத்தள்ளி தன் கைகளைக் குனிந்து பார்க்காமல் நின்று கொண்டார்.

“ஆலன்.” என்று அழைத்தார் திரு.சம்மர்ஸ். “ஆண்டர்சன். . .பென்தம்.”

“லாட்டரிகளுக்கிடையே இடைவெளியே இல்லாததுபோல் தோன்றுகிறது,” திரு.டெலக்ரோஸ், பின்வரிசையில் அமர்ந்திருந்த திரு.க்ரேவ்ஸ்சிடம் கூறினார். “கடந்த லாட்டரி ஏதோ போனவாரம்தான் முடிந்ததுபோல் இருக்கிறது.”

“காலம் உண்மையில் வேகமாகத்தான் நகர்கிறது.” என்றார் திரு.க்ரேவ்ஸ்.

“க்ளார்க். . . டெலக்ரோஸ்”

“அதோ என் கணவர் போகிறார்,” என்றார் திருமதி.டெலக்ரோஸ். தனது கணவன் முன்னே செல்லும்போது மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டார்.

“டன்பர்,” திரு.சம்மர்ஸ் அழைத்ததும் திருமதி.டன்பர் உறுதியோடு கருப்புப் பெட்டியை நோக்கிப் போகும்போது ஒருத்தி, “தைரியமாக ஜேனி,” என்றாள், மற்றொருத்தி “அதோ போய்விட்டாளே.” என்றாள்.

“அடுத்து நாங்கள்தான்.” என்றார் திருமதி.க்ரேவ்ஸ். பெட்டியின் பக்கவாட்டிலிருந்து திரு.க்ரேவ்ஸ் நடந்து வந்து திரு.சம்மர்ஸ்சுக்கு முகமன் கூறிவிட்டு ஒருதாளை எடுக்கும்வரை அவரையே பார்த்துக்கொண்டிருந்தார். இப்போது, கிட்டத்தட்ட கூட்டம் முழுவதிலும் உள்ள ஆண்கள் கையில் சீட்டு இருந்தது, அதைப்பதட்டத்தோடு திருப்பித்திருப்பி வைத்துக்கொண்டிருந்தனர். திரு.டன்பரும் அவரது இருமகன்களும் ஒன்றாக நின்றிருந்தனர், திரு.டன்பரின் கையிலும் ஒரு சீட்டு இருந்தது.

“ஹார்பர்ட். . . .ஹட்சின்ஸன்.”

“மேலே போ பில்,” என்றாள் திருமதி.ஹட்சின்ஸன், அவருக்கு அருகில் இருந்தவர்கள் சிரித்தனர்.

“ஜோன்ஸ்.”

“நான் கேள்விப்பட்டது, வடக்குப்புற கிராமங்களில் எல்லாம் லாட்டரியைக் கைவிடுவது பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்களாம்.” திரு.ஆடம்ஸ் தனக்கருகில் நின்றுகொண்டிருந்த முதியவர் வார்னரிடம் கூறினார்.

முதியவர் வார்னர் செறுமிக்கொண்டார். “முட்டாள் இளையவர்களின் கூட்டம்,” என்றார். “இளையவர்களின் பேச்சைக் கேட்கிறார்கள், அது அவர்களுக்கு நல்லதல்ல. அடுத்தது என்ன தெரியுமா, அவர்கள் குகைகளில் சென்று வாழவேண்டும் என்று சொல்வார்கள், ஒருபயலும் வேலை செய்வது இல்லை, அப்படி வாழ்வது யாராலும் முடியாத காரியம். பழமொழியே இருக்கிறது, ‘ஜூனில் லாட்டரி, நல்ல சோளவிளைச்சலின் அறிகுறி’, ஒன்றைத் தெரிந்துகொள், இது இல்லையென்றால் நாமெல்லாம் களையையும் ஓக் விதையையும்தான் வேகவைத்துத் தின்னவேண்டும். லாட்டரி என்பது எப்போதுமே இருந்து வந்துள்ளது,” என்றார் எரிச்சலுடன். “இந்த ஜோ சம்மர்ஸ் மேடைமேல் இருந்துகொண்டு எல்லோரிடமும் சிரித்துப்பேசுகிறான் என்பதே போதுமான அளவு கெடுதல் நடந்துவிட்டதன் அறிகுறி.”

“சில இடங்கள் லாட்டரியைக் கைவிட்டுவிட்டன.” என்றார் திரு.ஆடம்ஸ்.

“அதில் சங்கடங்களைத் தவிர வேறெதும் வரப்போவதில்லை,” முதியவர் வார்னர் உறுதிபடப் பேசினார். “முட்டாள் இளையவர்களின் கூட்டம்.”

”மார்ட்டின்.” பாபி மார்ட்டின் தன் அப்பா முன்னே செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்தான். “ஓவர்டைக். . . .பெர்சி.”

”இவர்கள் சீக்கிரம் முடித்தால் பரவாயில்லை,” திருமதி.டன்பர் தன் மூத்த மகனிடம் சொன்னார். “சீக்கிரமாக முடித்தால் நல்லது.”

“அநேகமாக முடித்துவிட்டார்கள்,” என்றான் அவரது மகன்.

“நீ ஓடிச்சென்று அப்பாவிடம் சொல்லத் தயாராக இரு,” என்றார் திருமதி.டன்பர்.

திரு.சம்மர்ஸ் தன் பெயரை அழைத்துக்கொண்டு துல்லியத்தோடு நடந்துவந்து பெட்டிக்குள்ளிருந்து ஒரு சீட்டை எடுத்துக்கொண்டார். பிறகு, “வார்னர்.” என்றழைத்தார்.

“எழுபத்து-ஏழாவது வருடம் நான் லாட்டரியில் கலந்துகொள்வது,” முதியவர் வார்னர் கூட்டத்தினூடாகச் செல்லும்போது சொல்லிக்கொண்டே சென்றார். “எழுபத்தேழாவது முறை.”

“வாட்சன்.” அந்த உயரமான பையன் அசௌகரியமாக கூட்டத்தினுள் நடந்து வந்தான். யாரோ, “பதட்டமாகாதே, ஜாக்” என்றார்கள் திரு.சம்மர்ஸ், “வேண்டிய நேரத்தை எடுத்துக்கொள், மகனே.” என்றார்.

”ஸனினி.”

அதன்பிறகு, அங்கே நீண்டஅமைதி நிலவியது, மூச்சற்ற அமைதி, திரு.சம்மர்ஸ் தன் கையிலிருந்த சீட்டை உயர்த்திப் பிடித்தபடி, “நல்லது நண்பர்களே.” என்றார். ஒருநிமிடம், யாருமே அசையவில்லை, பிறகு அனைத்து சீட்டுகளும் திறக்கப்பட்டன. உடனே பெண்கள் அனைவரும் பேச ஆரம்பித்தனர், “யாரது?” “யாரது?”, “அது டன்பரா?”, “அது வாட்சனா?” பிறகு அனைத்துக் குரல்களும், “அது ஹட்சின்ஸன். அது பில்.” “பில் ஹட்சின்ஸனுக்குக் கிடைத்துள்ளது,” என்றன.

“உன் அப்பாவிடம் போய்ச்சொல்,” திருமதி.டன்பர் தன் மூத்தமகனிடம் சொன்னார்.

மக்கள் திரு.ஹட்சின்ஸனைத் தேடி அங்குமிங்கும் பார்த்தனர். பில் ஹட்சின்ஸன் அமைதியாக நின்றுகொண்டு, தன் கையிலிருந்த தாளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென, டெஸ்ஸி ஹட்சின்ஸன் சத்தம்போட ஆரம்பித்தாள், “அவர் விரும்பிய தாளை எடுக்குமளவு நேரத்தை நீங்கள் அவருக்கு வழங்கவில்லை. நான் அதைக்கவனித்தேன். இது நியாயமில்லை!”

“இலகுவாக எடுத்துக்கொள் டெஸ்ஸி,” என்றார் திருமதி டெலக்ரோஸ். திருமதி.க்ரேவ்ஸ், “எல்லோருக்கும் ஒரே மாதிரியான சாத்தியம்தான் இருந்தது,” என்றார்.

“வாயை மூடு டெஸ்ஸி,” என்றார் பில் ஹட்சின்ஸன்.

“நல்லது நண்பர்களே,” திரு.சம்மர்ஸ் ஆரம்பித்தார், “இது சீக்கிரமாக நடந்தது. இதை முடித்துவைக்க நாம் இன்னும் சற்று விரைவாகச் செயல்படவேண்டும்.” என்றார். பிறகு, தனது அடுத்த பட்டியலைப் பார்த்தார். “பில்,” என்றழைத்தார். “நீங்கள் ஹட்சின்ஸன் குடும்பத்துக்காக சீட்டை எடுத்திருக்கிறீர்கள். ஹட்சின்ஸன் குடும்பத்தில் வேறு தலைக்கட்டுகள் உண்டா?”

“டான் மற்றும் ஈவா, அவர்களுக்காவது போதுமான வாய்ப்பை வழங்குங்கள்,” திருமதி.ஹட்சின்ஸன் கத்தினாள்.

“பெண்கள் தங்கள் கணவன் குடும்பத்தாரோடு எடுப்பார்கள் டெஸ்ஸி,” திரு.சம்மர்ஸ் கனிவாகச் சொன்னார், “எல்லோரையும் போல உனக்கும் அது தெரியும்.”

“இது நியாயமில்லை.” என்றாள் டெஸ்ஸி.

“நான் அப்படி நினைக்கவில்லை ஜோ,” பில் ஹட்சின்ஸன் வருந்தும் குரலில் கூறினார். “என் மகள் அவளது கணவன் குடும்பத்தாரோடுதான் எடுக்கவேண்டும்; அதுதான் நியாயமானது. என் குழந்தைகளைத்தவிர எனக்கு வேறு குடும்பம் இல்லை.”

”அப்படியென்றால், குடும்பத்திற்காக என்று பார்த்தால் நீங்கள்தான்,” என்று விளக்கும் விதமாகச் சொன்னார் திரு.சம்மர்ஸ். “தலைக்கட்டுக்காக என்று பார்த்தால் அது மறுபடியும் நீங்கள்தான். சரிதானே?”

”சரிதான்.” என்றார் பில் ஹட்சின்ஸன்.

“எத்தனை குழந்தைகள், பில்?” திரு.சம்மர்ஸ் முறைமைக்காகக் கேட்டார்.

“மூன்று,” என்றார் பில் ஹட்சின்ஸன். பில் ஜூனியர்., நான்சி, மற்றும் இளையவன் டேவ். அப்புறம் டெஸ்ஸியும் நானும்.”

”அப்படியென்றால் சரி,” என்றார் திரு.சம்மர்ஸ். “ஹேரி, அவர்களது சீட்டைத் திரும்ப வாங்கிக்கொண்டீர்களா?”

திரு.க்ரேவ்ஸ் ஆமோதிப்பாகத் தலையசைத்து தாள்களை உயர்த்திக் காட்டினார். “அதைப் பெட்டிக்குள் போடுங்கள்,” திரு.சம்மர்ஸ் வழிநடத்தினார். “பில்லின் சீட்டையும் வாங்கி உள்ளே போடுங்கள்.”

“மீண்டும் முதலிலிருந்து நடத்தவேண்டும் என்று நினைக்கிறேன்,” என்று எவ்வளவு நிதானமாகச் சொல்லமுடியுமோ அவ்வளவு நிதானமாகச் சொன்னார் திருமதி.ஹட்சின்ஸன். “இது நியாயமாக நடக்கவில்லை. அவர் சீட்டைத் தேர்ந்தெடுப்பதற்கான நேரத்தை நீங்கள் அவருக்குத் தரவில்லை. எல்லோரும் அதைப் பார்த்தார்கள்.”

திரு.க்ரேவ்ஸ் ஐந்து சீட்டுகளைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பெட்டியிலிட்டார், அவற்றைத் தவிர மற்ற சீட்டுகளை கீழே எறிந்தார், அவற்றைக் காற்று அடித்துக்கொண்டு போனது.

“எல்லோரும் கவனியுங்கள்,” திருமதி.ஹட்சின்ஸன் தன்னைச்சுற்றி நின்றிருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

“தயாரா பில்?” திரு.சம்மர்ஸ் கேட்டதும், பில் ஹட்சின்ஸன் ஒருமுறை தன் மனைவி குழந்தைகளைப் பார்த்துவிட்டு, தலையசைத்தார்.

“ஞாபகமிருக்கட்டும், எல்லோரும் சீட்டை எடுக்கும்வரை பிரிக்காமல் கையில் வைத்திருக்க வேண்டும். ஹேரி, நீங்கள் குழந்தை டேவ்வுக்கு உதவுங்கள்.” திரு.க்ரேவ்ஸ் அச்சிறுவனின் கைகளைப் பிடித்துக்கொண்டார், அவன் விருப்பமாக கருப்புப்பெட்டி இருக்குமிடத்திற்கு நடந்து வந்தான். “ஒரு சீட்டை பெட்டியிலிருந்து எடு டேவ்,” என்றார் திரு.சம்மர்ஸ். டேவ் பெட்டிக்குள் கையை விட்டதும் சிரித்தான். “ஒரேயொரு தாளை மட்டும் எடு,” என்றார் திரு.சம்மர்ஸ். “ஹேரி, அவனுக்காக நீங்கள் அதை வைத்திருங்கள்.” திரு.க்ரேவ்ஸ் குழந்தையின் கையை வெளியே எடுத்து அவன் இறுகப்பிடித்திருந்த சீட்டை வாங்கி வைத்துக்கொண்டார், டேவ் அவருக்கு அருகில் நின்றுகொண்டு அவரை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“அடுத்தது நான்சி,” திரு.சம்மர்ஸ் அழைத்தார். நான்சிக்கு பன்னிரண்டு வயது, அவளது பள்ளி நண்பர்கள், பாவாடையைச் சரிசெய்தபடி பெட்டியை நோக்கிச்செல்லும் அவளை வேகமாக மூச்சிரைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தனர், அவள் வேண்டாவெறுப்பாக பெட்டியிலிருந்து ஒரு சீட்டை எடுத்தாள். ”பில் ஜூனியர்.,” திரு.சம்மர்ஸ் அழைத்ததும் பில்லி வேகமாகப் பெட்டியில் மோதுவதுபோலச் சென்று சீட்டை எடுத்தான். “டெஸ்ஸி,” என்றார் திரு.சம்மர்ஸ். அவள் ஒருநிமிடம் தயங்கினாள், விரோதமாகச் சுற்றிலும் பார்த்தாள், பிறகு இறுக்கமாக உதட்டை வைத்தபடி பெட்டிக்கு அருகில் சென்று, அதிலிருந்து பிடுங்குவதுபோல ஒரு சீட்டை எடுத்துப் பின்பக்கம் கையை வைத்துக்கொண்டாள்.

“பில்,” என்றார் திரு.சம்மர்ஸ், பில் ஹட்சின்ஸன் பெட்டிக்குள் கையைவிட்டுத் துழாவி, கடைசியில் ஒரு சீட்டோடு கையை வெளியிலெடுத்தார்.

கூட்டம் அமைதியாக இருந்தது. ஒரு பெண், “அது நான்சி அல்ல என்று நம்புகிறேன்,” என்று கிசுகிசுத்தாள், அந்த ஒலி கூட்டத்தின் கடைசி வரை கேட்டது.

“இது இப்படி நடத்தப்படுவதே இல்லை. மக்கள் முன்பு எப்படி இருந்தார்களோ இப்போது அப்படி இல்லை.” முதியவர் வார்னர் உறுதிபடச் சொன்னார்.

“நல்லது, சீட்டைப் பிரித்துப்பாருங்கள். ஹேரி, நீங்கள் டேவ்வின் சீட்டைப் பிரியுங்கள்.” திரு சம்மர்ஸ் கூறினார்.

திரு.க்ரேவ்ஸ் அந்தச்சீட்டைப் பிரித்து உயர்த்திக் காட்ட, அது வெறுமையாக இருப்பதைப் பார்த்து கூட்டத்தில் எல்லோரும் பெருமூச்செறிந்தனர். நான்சி மற்றும் பில் ஜூனியர் இருவரும் ஒரேநேரத்தில் தங்கள் சீட்டைப் பிரித்து, இருவரும் மகிழ்வோடு சிரித்தனர், தங்கள் சீட்டை கூட்டத்தை நோக்கித் திருப்பி தலைக்குமேல் உயர்த்திப் பிடித்தனர்.

“டெஸ்ஸி,” என்றார் திரு.சம்மர்ஸ். ஒருகணம் அமைதி நிலவியது, திரு.சம்மர்ஸ் பில் ஹட்சின்ஸனைப் பார்க்க, பில் தனது சீட்டைப் பிரித்துக்காட்டினார். அது வெறுமையாக இருந்தது.

“அது டெஸ்ஸிதான், அவளது சீட்டை எங்களுக்குக் காண்பியுங்கள் பில்” என்றார் திரு.சம்மர்ஸ், அவரது குரல் அமைதியாக இருந்தது.

பில் ஹட்சின்ஸன் தன் மனைவியை நெருங்கி அவளது கையிலிருந்த தாளை வலுக்கட்டாயமாகப் பிடுங்கினார். அதில் ஒரு கரும்புள்ளி இருந்தது, திரு.சம்மர்ஸ் தனது நிலக்கரி அலுவலகத்திலுள்ள கரிய பென்சிலால் முதல்நாள் இரவு வரைந்த கரும்புள்ளி. பில் ஹட்சின்ஸன் அதை உயர்த்திப்பிடிக்க கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது.

“சரி… சரி… மக்களே, சீக்கிரம் முடிக்க வேண்டும்.” திரு.சம்மர்ஸ் கூறினார்.

கிராமவாசிகள் சடங்குகளை மறந்து, உண்மையான கருப்புப்பெட்டியைத் தொலைத்திருந்தாலும், இன்னமும் கற்களை உபயோகப்படுத்துவதை ஞாபகம் வைத்திருந்தார்கள். முன்பு சிறுவர்கள் குவித்து வைத்திருந்த கற்குவியல் தயாராக இருந்தது; சதுக்கம் முழுவதும் கற்களும் பெட்டியிலிருந்து எறியப்பட்ட தாள்களும் இறைந்து கிடந்தன. திருமதி.டெலக்ரோஸ் தேர்ந்தெடுத்த கல் மிகப்பெரியது, இரண்டு கைகளாலும் அதைத் தூக்கியபடி திருமதி.டென்பரைப் பார்த்து, “வேகமாக வா, சீக்கிரம்,” என்றார்.

திருமதி.டன்பர் இரண்டு கைநிறைய சிறு கற்களை வைத்துக்கொண்டு மூச்சிரைக்கச் சொன்னார், “என்னால் ஓடமுடியாது. நீங்கள் முன்னால் போங்கள், நான் பின்னால் வருகிறேன்.”

குழந்தைகள் கற்களை ஏற்கெனவே எடுத்துவைத்திருந்தனர். யாரோ டேவி ஹட்சின்ஸனின் கையில் சில கூழாங்கற்களைக் கொடுத்தனர்.

இதற்குள் டெஸ்ஸி யாருமில்லாத ஒரு இடத்தின் மையத்தில் நிற்க வைக்கப்பட்டிருந்தாள், கிராமவாசிகள் அவளை நெருங்கும்போது தனது கைகளை நம்பிக்கையற்று விரித்தபடி, “இது நியாயமே இல்லை,” என்றாள். ஒரு கல் அவளது தலையின் பக்கவாட்டில் வந்து அடித்தது.

முதியவர் வார்னர் சத்தமிட்டார், “வேகமாக… வேகமாக மக்களே.” ஸ்டீவ் ஆடம்ஸ் மக்கள் கூட்டத்தின் முதல் வரிசையில் இருந்தான், அவனுக்குப் பின்னால் திரு.க்ரேவ்ஸ்.

“இது நியாயமே இல்லை, இது சரியானதல்ல,” திருமதி ஹட்சின்ஸன் கிறீச்சிட, அவர்கள் அவளைச் சூழ்ந்தனர்.

000

ஷிர்லே ஜாக்சன் 1916-1965 – அமெரிக்காவில் பிறந்த புகழ்பெற்ற நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர். இவருடைய The Haunting of Hill House புகழ்பெற்ற நாவலாகும். சிறந்த அமெரிக்கச் சிறுகதையாளர் விருதைப் பலமுறையும், ஓ.ஹென்றி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் குவித்த இவரது பெயரிலேயே தற்போது விருதுகள் வழங்கப்படுகின்றன.

Comments are closed.