எழுத்து என்பது சுயதேடல்தான் — டைலன் தாமஸ் – தி.இரா.மீனா

[ A+ ] /[ A- ]

download

டைலன் தாமஸ் ( Dylan Marlais Thomas 1914—1953 )
Welsh கவிஞர் என்று போற்றப்படும் டைலன் தாமஸ் “எழுத்து என்பது சுய தேடல்தான்” என்ற நம்பிக்கையுடையவர். தன் ’இருப்பையும், கண்டுபிடிப் பையுமே தன் கவிதைகளின் கருவாக்கியவர்.உருவகம்,புலனறிவு சார்ந்த கற்பனை. உளவியல் பாணியிலான விளக்கம் என்ற கோட்பாட்டின் அடிப் படையில்தான் அவர் கவிதைகள அமைந்தன. சுயம் சார்ந்ததாகக் கவிதைக ளிருப்பினும் உலகளாவிய சிக்கல்களான பிறப்பு, இறப்பு,காதல்,மதம் என்ப வைகளின் மீது ஆழ்கவனம் செலுத்தியவர்.

James Joyce , Arthur Rimbaud D.H. Lawrence மற்றும்William York Tindill ஆகியோரின் படைப்புகளின் தாக்கம் பெற்ற வர். 18 Poems அவருடைய முதல் கவிதைத் தொகுப்பாகும். Early Prose Writing Collected Prose , Note books ஆகியவை அவருடைய உரைநடை நூல்களில் சிலவாகும். Under Milk Wood அவருடைய சிறந்த நாடகப் படைப்பாக மதிப்பி டப்பட்டுள்ளது. Light breaks where no sun shines” என்பது அவரது முதல் கவிதைப் படைப்பாகும். ஆபாசம் என்று அது விமர்சிக்கப்பட்ட அதே அளவிற்கு வரவேற்பும் பெற்றது. Stephen Spender, TS Eliot உள்ளிட்டோர் அதனை வரவேற் றனர். “மலைப்புத் தருகிற புதுமையெனினும் ,புறக்கணிக்கப்பட்ட, மறந்து போன நம் தொன்மையையும் காட்டுகிற கவிதைகள் அவருடைய தென்றும், அவரைப் போல சொற்களை யாரும் குண்டூசிகளாய் நமக்குள் செலுத்த முடிந்ததில்லை என்றும்Philip Larkin விமர்சிக்கிறார்.

தன் கவிதைகளுக்கான பின்புலத்தையும், கவிதையார்வத் தையும் “சொற்களின் மீது எனக்கிருந்த காதலே தொடக்கத்தில் என்னை எழுதத் தூண்டியது.முதலில் எனக்கு அறி முகமான கவிதை என்பது நர்சரிப் பாடல்கள்தான்..அவற்றை நானாகப் படிக்கத் தொடங்குவதற்கு முன்னாலேயே நான் சொற்களை விரும்பத் தொடங்கிவிட்டேன்.சொற்கள் மட்டும்தான்.அவை எதைக் குறிக்க வந்தவை என்பது இரண்டாம் பட்சம்தான்…எனக்கு நினைவில் வருவது நான் சொற் களைக் காதலிக்கத் தொடங்கியதுதான்.

இப்போது ஓரளவிற்கு அவற்றின் செயல்பாடு தெரிந்தாலும் இன்னமும் சொற்களின் கருணையினால்தான் வாழ்கிறேன்.இப்போது அவற்றை ஓரளவு என் வசப்படுத்தி மாற்ற முடியு மென்று நினைக்கிறேன்.நர்சரிப் பாடல்கள், பின்பு மற்ற கவிதைகள், கதைப் பாடல்கள் என்று தொடர்ந்து படித்த பிறகு அவைதான் எனக்கு எல்லாமும் என்று புரிந்தது”என்று தன் கவிதைத் தளம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

நிலவில் கோமாளி

மாய ரோஜாஇதழ்களின்

நகர்வுபோல என் கண்ணீர்;

மறக்கப்பட்ட வானத்திலிருந்தும் பனியிலிருந்தும்

என் எல்லா சோகமும் பிளவாய் வழிகிறது.

நான் பூமியைத் தொட்டால்

அது நொறுங்கிப் போகுமென நினைக்கிறேன்.;

தடுமாற்றமுடைய கனவு போல

அது சோகமானதும் அழகானதுமாகும்.

மரணம் என்பது இராச்சியமில்லை
மரணம் என்பது இராச்சியமில்லை
காற்றாக இருப்பினும் மேற்கிலிருப்பினும்
இறந்த பிறகு மனிதர்கள் அனைவரும் ஒன்றுதான்;
அவர்களின் முழங்கையிலும் காலிலும் நட்சத்திரங்கள் இருக்க
அவர்களின் எலும்புகள் பரிசுத்தமாய் மாறிப் போயின,
அவர்கள் பித்துப்பிடித்தவர்களெனினும் அவர்கள் மனநலமுடையவர்கள்.
அவர்கள் கடலிடையே மூழ்கினாலும் அவர்கள் மீண்டெழுவார்கள்.
காதலர்கள் தம்மைத் தொலைத்தபோதும் காதல் தொலையாது
மரணம் என்பது இராச்சியமில்லை.

மரணம் என்பது இராச்சியமில்லை.
கடலின் சுழலுக்கடியில்
அவர்கள் நீண்ட பொழுது இருந்தபோதும் சுழலால் இறக்கமாட்டார்கள்.
விலா எலும்புகள் முறுக்கினாலும்
சக்கரத்தில் சிக்கிக் கொண்டாலும் அவர்கள் நொறுங்க மாட்டார்கள்.
கூரான கொம்புகள் அவர்களை ஊடுருவினாலும்
அவர்களின் நம்பிக்கை இரண்டாக ஒடிந்தாலும்
எல்லா நிலையிலும் பிளவுகள் வரினும் அவர்கள் சிதைவதில்லை
மரணம் என்பது இராச்சியமில்லை

மரணம் என்பது இராச்சியமில்லை
அவர்களின் காதுகளில் கடற்பறவையின் இரைச்சல்
அல்லது கரைகளில் மோதும் அலைகளின் இரைச்சல் இல்லாமல் போகும்;
மழையின் தாக்குதலை எதிர்கொள்ளும் மலரைக்
காணமுடியாமல் போகலாம்;
அவைகள் நகங்கள் போல பித்துப்பிடித்து இறந்தும் போகலாம்
பண்புகள் டெய்சிகளாய் நிலைக்கும்
சூரியன் உடையும் வரை உடையாமலிருக்கும்
மரணம் என்பது இராச்சியமில்லை.

அந்த நல்ல இரவிற்குள் அமைதியாகப் போகவேண்டாம்
அந்த நல்ல இரவிற்குள் அமைதியாகப் போகவேண்டாம்
நாளின் இறுதியில் முதுமை எரிக்கப்பட வேண்டும்;
சீற்றம், இருளுக்கு எதிரான சீற்றம்.

ஞானிகளுக்கு அவர்கள் பக்கத்திலான முடிவு தெரியுமெனிலும்
அவர்களின் சொற்கள் இன்னமும் ஒளியை உருவாக்கவில்லை
அந்த நல்ல இரவிற்குள் அமைதியாகப் போகவேண்டாம்

நல்லமனிதர்கள்,மோதும் அலையாய் அவர்களின்
செய்த சிறிய செயல்கள் சாதனையாய் நடனமாடும்.
சீற்றம்,இருளுக்கு எதிரான சீற்றம்.

மூர்க்கமான மனிதர்கள் சூரியனில் பறப்பதான வெளிப்பாடு
தாமதமாக உணர்ந்து இறுதியில் அவர்கள் அதற்கு வருந்திக் குறையுடன்
அந்த நல்ல இரவிற்குள் அமைதியாகப் போகவேண்டாம்.

சாவை நெருங்கும் மனிதர்கள் பார்வையற்றுப்
போனாலும் கண்கள் எரிநட்சத்திரமாய் ஒளிவிட
சீற்றம்,இருளுக்கு எதிரான சீற்றம்.

நீங்கள் என் தந்தை ,இது சோகத்தின் உச்சம்
எனக்கு சாபம், வாழ்த்து எதுவெனினும் சரி,கிடைக்கட்டும் சீற்றக் கண்ணீர்
அந்த நல்ல இரவிற்குள் அமைதியாகப் போகவேண்டாம்.
சீற்றம்,இருளுக்கு எதிரான சீற்றம்.

——–

Comments are closed.