வில்லியம் பிளேக் கவிதைகள் / தமிழாக்கம்: ஆகி

[ A+ ] /[ A- ]

download

காதல்தேவனொரு சிறுவனாய் ஏனிருந்தான்

ஏன் காதல்தேவனொரு சிறுவனாயிருந்தான்,

ஒரு சிறுவனாய் அவன் ஏனிருந்தான்?

நானறிந்த வரையில் அவனொரு

சிறுமியாயிருந்திருக்க வேண்டும்.

ஏனெனில் தன் வில்லால் அவன் எய்கையில்

அவள் தனது கண்களினால் எய்து,

அவர்களிருவரும் அகமகிழ்ந்து களிகூர்ந்து

கலகலக்கின்றனர், நாம் கண் கலங்குகையில்.

காதல்தேவனையொரு சிறுவனாக்கியது

காதல்தெய்வச் சிறுமியின் விகடத் திட்டம்;

ஏனெனில் சிறுவனொருவனால் அவ்விடயத்தை

உய்த்தறியவியலாது தான் மனிதனாகும் வரை.

பிறகவன் அக்கறைகளால் ஊடுருவப்பட்டு

கூரியக் குத்தல்களால் ஊறுபட்டு,

அவனின் வாழ்நாளெலாம் அம்புகளின்

நுனிகளைக் களைவதெனக் கழியும்.

கிரேக்கர்களின் போர் மீதானக் காதல்

காதலையொரு சிறுவனாய்,

பெண்ணையொரு கற்சிலையாய்

உருமாற்றியதால் அப்பால் சென்றது இன்பமெலாம்.

……………………………………………..

காதற்தோட்டம்

காதற்தோட்டத்தினுள் நான் செல்கையில்,

இம்மட்டும் கண்டிராதவொன்றைக் கண்டேன்;

வழக்கமாக நான் களித்துத் திரியும் பசுமையினூடாக

தேவாலயமொன்று எழுப்பப் பட்டிருந்தது.

இத்தேவாலயத்தின் வாயிற்கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன,

கதவின் மீது ”நீயதைச் செய்யாதே” என்ற நீதிப்பேராணையுடன்;

ஆதலால் எண்ணிறந்த இனிய மலர்களைத் தாங்கிநின்ற

காதற்தோட்டத்திற்கு நான் திரும்பி வந்தேன்.

அங்கே அது கல்லறைகளால் நிறைந்திருப்பதைக் கண்டேன்,

மலர்கள் மலர்ந்திருக்குமிடமெங்கும் நடுகற்களாய்;

கருப்பு அங்கியணிந்த பாதிரிகள் கண்காணித்தவண்ணம் சென்றனர்,

எனதின்பங்களையும் இச்சைகளையும் முட்புதர்களால் கட்டியெடுத்து.

……………………………………………..

Why was Cupid a Boy மற்றும் The Garden of Love என்ற கவிதைகளின் தமிழாக்கம்

Comments are closed.