மனச் சிட்டு.. ( சிறுகதை ) ராகவபிரியன்

[ A+ ] /[ A- ]

images

“எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டாள்..எப்பொழுது பார்த்தாலும் என் அண்ட்ராயரை வாசல் கொடியிலதான் காயவைப்பாள்..என் மானம் போறதுல அவ்வளவு சந்தோஷம்….”

புலம்பிக்கொண்டிருந்தார் புகழேந்தி..

“என்னங்க என்னை திட்டிக்கிட்டே ஆபீஸ் போகாதீங்க ..ஏற்கனவே உங்களுக்கு அங்க நிறைய மானப் பிரச்சனை இருக்கு..அண்ட்ராயர எங்க காயப்போட்டா என்ன..? இல்ல இந்த ஊர்ல யாருமே அன்ட்ராயர் போடலயா…சீக்கிரம் கிளம்புங்க ..பஸ் போயிடப்போவுது…”சவுந்தர்யா அம்மாள் தன் பங்குக்கு அவரின் மானத்தை வாங்க சத்தமாக கூவத்தொடங்கினாள்..

இது என்ன பிரச்சனை..?

மானம் அவமானம் என்பதெல்லாம் என்ன..?

புகழேந்திக்கு தலை சீவாமல் புறப்பட்டாலே மானம் போவது போல் தெரியும்..சவுந்தர்யா.. பிராவின் நாடா தோளில் தெரியும் படி உடையணிந்து உடன் வந்தால்..அவரின் மூடு அவுட்டாகிவிடும்..

என் மானம் போறது..மானம் போறது..என்றபடி புலம்பிக்கொண்டே வருவார்..

அவரின் கைச்சட்டையை கால்சட்டையினுள் டக் செய்து வருகையில் இடுப்போரம் அவரின் அண்ட்ராயரின் எலாஸ்டிக் வெளித்தெரிவதாய் யாராவது சுட்டிக் காட்டினால் அவர் அங்கேயே உயிரை விட்டு விடுவார்…

மானம் மறைக்கத்தானே..துணி..?துணியின் துளியில் மானம் தூக்கு மாட்டிக்கொள்கிறதா…? புரியாது புகழேந்திக்கு…

புகழேந்தியின் எதிரில் வருபவர்கள் எல்லோரும் அவரையே பார்ப்பதாக அவரின் உள்ளுணர்வு அவரை உறுத்தும்..அவரின் குறைகள் எல்லோர் கண்களிலும் படுவதாக ஒரு பிரமை வந்து போகும் ..சட் டென்று..அதனால் தன் மானம் பங்கப்பட்டுவிட்டதாக… ஒரு தாழ்வு மனப்பாண்மை அவர் இதயத்தில் எல்லாத் தொகுதிகளிலும் ஜெயிக்கும்..

கிழிந்த சட்டைக்காலர்..பிய்ந்த பட்டன்..தொப்புள் விட்டிறங்கியிருக்கும் அரை வட்டக கால் சட்டையின் பலூன் வடிவ பிம்பம்..எல்லாமே..எல்லாமே அவரை கட்டிப்போட்டுவிடும் அவ்வப்போது..

மானம் போகும் வேகத்தில் அலுவலகம் வந்து சேர்ந்தார் புகழேந்தி..எதிரில் வந்த கிஷோர் வேண்டுமென்றே குட்மார்னிங்க் சொல்லாமல் போவது போல் தோன்றியது..கிஷோர் அவரின் ஜூனியர்..அடுத்த பதவி உயர்வு பட்டியலில் புகழேந்திக்கு அடுத்த பெயர் கிஷோருடையதுதான்..

கிஷோர் கொஞ்சம் கர்வம் உடையவன் என்று புகழேந்தி எல்லோரிடமும் சொல்வார் சமய சந்தர்ப்பம் வாய்த்தால்..ஒரு பனிப்போர் இருவரிடையே நீண்ட நெடு வருடங்களாய் நடந்து கொண்டிருப்பதை அந்த அலுவலகச் சுவர்கள் கூட அறியும்..

புகழேந்தியின் இந்த அமைதியற்ற தன்மையைக் கிளறி சீண்டிப்பார்ப்பதில் கிஷோருக்கு அல்ப சந்தோஷம்..ஒரு சின்ன குறுகுறுப்பு.. ஒரு கணப்பித்தம்..ஆனால் அது எவ்வளவு அகல இடைவெளியை இருவருக்குமிடையில் கட்டியிருக்கிறதென்பதை சொன்னால் புரியாது… இருவருக்குமே..

“புகழேந்தி சார்..இன்னைக்கு புரமோஷன் லிஸ்ட் வருதுன்னு சொல்றாங்களே..தெரியுங்களா..”

கிண்டல் எனத் தெரியும் புகழேந்திக்கு…தன் மானத்தை வாங்கவே கிஷோர் கிண்டலடிப்பதாய் நினைத்து முகத்தைத் திருப்பிக்கொண்டார்..

“சார்..என் பேரு முதல்ல இருக்குன்னு சொல்றாங்க…அப்ப உங்கள விட்டுட்டாங்களா…கொஞ்சம் செக் பண்ணிக்கோங்க..”

சற்றே துளிர்த்த நெருப்புக் கொழுந்தின் மேல் நெய்வார்த்தன கிஷோரின் வார்த்தைகள்.. சுற்றி நிறைய சக ஊழியர்கள் நிற்பதைக் கவனித்தவர் கூனிக் குறுகிப்போனார்….

கிஷோர் மாபாதகம் செய்யவும் தயங்கமாட்டான் என்பது அவரின் அபிப்ராயம்..எதோ தகிடுதத்தம் கிஷோரின் தலைமையில் நடந்திருக்க வேண்டும் என நினைத்தார்…நடு வீதியில் ஆடைகளற்று அம்மணமாய் நிற்பது போல் உணர்ந்தவர் விருட் டென்று தன் இருக்கையில் போய் அமர்ந்தார்..

அவரின் மானம் போயே போய்விட்டது..எப்படி அதைத் திரும்ப அழைத்துவருவது என்ற யோசனையில் ஆழ்ந்திருப்பதுபோல் தலைகவிழ்ந்திருந்தார்…

அண்ட்ராயரின் நாடாக்கள் வெளியில் தொங்குவது போல் உணர்ந்த அந்த நொடியில்..குனிந்து கால்சட்டையின் இழுவை[ஜிப்] சரியாக இருக்கிறதா என உறுதி செய்து கொண்டார்..மானம் போகவில்லையென்பதை உணர்ந்து இயல்பு நிலைக்குத் திரும்பியவுடன்..

வேக வேகமாக மேலதிகாரியின் அறைக்குள் நுழைந்தார்…

“வாங்க புகழ்…குட்மார்னிங்க்..என்ன எதோ டென்ஷனா இருக்கறாப்ல இருக்கு…” மேலதிகாரின் கனிவான குரலில் கொஞ்சம் குளிர் புகழேந்தியின் இதயம் வரை எட்டிப்பார்த்தது…

“சார்..புரமோஷன் லிஸ்ட் வந்திருக்குங்களா…? தெரிஞ்சுட்டுப் போக வந்தேன்..”

“இன்னும் வரல…ஒரு போஸ்ட் தான இருக்கு..ஸீனியருக்கு கிடைக்கும்..நீங்க ஸீனியரா..இல்ல கிஷோர் ஸீனியரா…”

எதுவும் தெரியாதவர் போல மேலதிகாரி கேட்பதாகவும்..இதில் ஏதோ உள்குத்து இருப்பதாகவும் புரிந்துகொண்ட புகழேந்தி..தன்னை மீறி கிஷோருக்கு பதவி உயர்வு வந்தால் என்னாவது என்ற ஷண நினைப்பில்

தனது மன இயல்பின் மான அரக்கனிடம் தன்னை இழந்தார்..

“சார்…இது அநியாயம் சார்..எனக்கு ஜூனியர் சார் அவன்..எனக்குத் தராம புரமோஷன அவனுக்குக் குடுத்தா..என் மானம் போயிடும் சார்…”புகழேந்தியின் கண்களில் காவிரியின் துளி ஒன்று புறப்படத் தயாரானதைக் கண்ட மேலதிகாரி..

“புகழ்..ஏன் டென்ஷன் ஆகறீங்க..லிஸ்ட் வரட்டும் …பார்க்கலாம்…நீங்க போய் உங்க வேலையைப் பாருங்க..” கண்டிப்பு நிறைந்த மேலதிகாரியின் பதிலில் புரமோஷன் தனக்கா இல்லை கிஷோருக்கா எனப் புரிபடாமல்..இறுக்கிப்பிடிப்பானின் பிடியில் கொடியில் தொங்கி காற்றிலாடும் அண்ட்ராயர் போல் இங்கும் அங்கும் கால்வைத்து தன் இருக்கைக்கு வந்தார் புகழேந்தி..

கிஷோருக்குத்தான் பதவி உயர்வு என்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது போன்ற செய்திகள் வர அவரின் மானம் துளித்துளியாக வெளியேறுவதாக உணர்ந்தவர்.. ஒரு துண்டுக் காகிதம் எடுத்தார்…

ராஜினாமா கடிதத்தைத் எழுதி முடித்தார்..உறுதி செய்யப்படாத தகவல் தான் எனினும்..மானம் முக்கியம்…கிஷோருக்கு பதவி உயர்வு வந்து அவனின் கீழ் தான் வேலை செய்ய வேண்டிய நிலையை விட ராஜினாமா சாலச் சிறந்தது என முடிவு செய்தார்..

அப்போது தான் எங்கிருந்தோ வந்த சிட்டுக் குருவியொன்று அவரின் இருக்கையில் இருந்த பெயர் தெரியா பூச்சி ஒன்றை கொத்திவிட்டுப் பறந்து போனது..அதன் இறகுகளில் அவரின் மானமும் ஒட்டிக் கொண்டுவிட்டிருக்க வேண்டும்..

ஷணச் சித்தம்..ஷணப்பித்தம்..

மேலதிகாரியிடம் ராஜினாமா கடிதம் குடுத்துவிட்டு ..போன மானத்தை மீட்டெடுத்த திருப்தியுடன் வெளியில் வந்தவர்..ஒரு வாஞ்சையுடன் அந்த அலுவலகத்தை புதிதாக பார்ப்பது போல் பார்த்தார்..கேண்டின் வந்து ஒரு தேனீர் சொல்லிவிட்டு ..எதையோ சாதித்த முகபாவத்தைக் கொண்டு வந்தபடி சுற்று முற்றும் பார்த்தார்..

கிஷோர் ஒரு சாடிஸ்ட் என்பது ஓரளவு உண்மை என்பதை கிஷோரே ஒப்புக்கொள்வான்..கல்லூரியில் நிறைய ராகிங்க் செய்திருக்கிறான்..அவனே சொன்னது தான்..அலுவலகத்திலும் புதிதாய் யாராவது சேர்ந்தால் ஒரு வித்தியாசமான ராகிங்க் செய்து கெட்டபெயரெடுப்பதை ஒரு கெளரவமான செயலாகவே எண்ணிக் கொண்டிந்தான்..

அந்த கிஷோர்தான் இப்போது பக்கத்து மேசையில் தனக்குப் பிடிக்காத இன்னும் சில சகஊழியர்களுடன் தேனீருக்காகக் காத்திருப்பதைக் கண்டார் புகழேந்தி..

வாசல் கொடியில் காய்ந்து கொண்டிருக்கும் அண்ட்ராயரை பார்த்து எல்லோரும் சிரிப்பது போல் ஒரு அட்டகாசமான நம்பியார் சிரிப்பு அவரைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டது..அவரின் இதயத் துடிப்பு பக்கத்து மேசை கிஷோருக்கும் கேட்டது..

“சார்..இன்னிக்கி யூனியன் மீட்டிங்க் இருக்கு சார்..அதுல எனக்கு புரமோஷன் வந்ததைப் பாராட்டி நீங்க தான் பேசப் போறீங்க..” கிஷோர் கன கச்சிதமாக தன் சாடிசத்தின் சாகஸ முடிச்சை அவிழ்க்கத் தொடங்கினான்..

எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியேறிய புகழேந்தியை கூவிக் கூப்பிட்டார் கேண்டின் சிப்பந்தி.. கேண்டின் சிப்பந்தியின் அண்ட்ராயரின் கோடுகளையும் கட்டங்களையும் ஏற்கனவே கவனித்து முகம் சுளித்தவர் இப்போது இன்னும் கோபத்துடன் திரும்பிப் பார்த்துக் கத்திவிட்டுப் போனார்..

தேனீர் தேவையில்லை என்பதை சிப்பந்தி புரிந்து கொள்ள வேண்டும்..

புரமோஷன் கிஷோருக்குத்தான் கிடைத்தது..

புரமோஷன் களின் ரிஷிமூலம் நதிமூலம் கண்டறிவது இப்போதும் கடினமாகத்தான் இருக்கிறது..அதிர்ஷ்ட்டம் என்று சமயத்தில் அதற்கு பெயரும் வைத்துவிடுகிறார்கள்..கோவணம் கட்டத் தொடங்கிய காலத்திலிருந்து புகழேந்திக்கு அந்த பாழாய் போன அதிர்ஷ்ட்டம் வந்ததேயில்லை..ஆனால் அவருக்கு மானபங்கம் அடிக்கடி வந்துவிடுகிறது என நொந்து கொள்வது அவரின் வாடிக்கை..இப்போதும் அது நடந்துவிட்டதில் அவரின் கோபம் அந்த சிட்டுக் குருவியின் மேல் திரும்பியது…மேசைக் கனத்திற்காக வைத்திருந்த அந்த பூவேலைப்பாடுடைய கண்ணாடிக் குடுவையை தூக்கி அடித்தார்..குருவியின் மேல் அது படாமல் ஜன்னல் வழி எங்கோ போய் விழுந்தது நல்லதாகப் போய்விட்டது..

கொஞ்சம் இடது கால் எக்கி தன் அண்டராயரைச் சரிசெய்தார் புகழேந்தி..அடங்காசினத்துடன்..யூனியன் மீட்டிங்க் நடக்கும் அறைக்குள் நுழைந்தார்..அங்கே அதீத மெளனம்..

புகழேந்தியைப் பார்த்து கிஷோர்…”சார்..உங்க சர்வீஸ் ரெக்கார்ட்ல எதோ அட்வர்ஸ் ரிமார்க்ஸ் இருக்கு..அதனால உங்கள ஓவர் லுக் பண்ணி என்ன புரமோட் பண்ணிருக்காங்க…அப்படி என்னதான் சார் பண்ணினீங்க…”

இப்போது எல்லோரும் நகைத்தார்கள்..இடது கையால் தன் கால்சராயின் வெளித்துருத்திக் கொண்டிருக்கும் அண்ட்ராயரை உள்ளே தள்ளி மறைத்தபடி

“இது ரொம்ப அநியாயம்.. இது நடக்கும்னு தெரிஞ்சுதான் நான் வேலையை ராஜினாமா செஞ்சுட்டேன்..உனக்கு வாழ்த்துக்கள்..” என்று சொல்லியபடி எழுந்த புகழேந்தியை எல்லோரும் ஏளனம் செய்வது போல் கைத்தட்டினார்கள்..

“கிஷோர்..பதவிக்காக எதை வேணும்னாலும் விற்கத் தயாரான காலம் இது..நீ எதை விற்று இந்த புரமோஷன் வாங்கினேன்னு இங்க எல்லோருக்கும் தெரியும்..” அணல் பறந்தது அவரின் வார்த்தைகளில்..

நிலமை புத்தம் புதிய உள்ளாடையின் எலாஸ்டிக்காய் இறுக்கத் தொடங்கியது…

கிஷோர் கோபமானான்..” புகழேந்தி..மானம் போனப் பிறகு …எதுக்கு மேல்சட்டை போட்டிட்டிருக்க..கழட்டி வீசிட்டு ..புரமோஷன் இல்லங்கறத்துக்காக வேலையை விட்டெறிஞ்ச மாதிரி..விட்டெறிஞ்சுட்டுப் போக வேண்டியதுதானே…”

இப்போது உண்மையிலேயே புகழேந்தியின் உயிர் பிரியும் நேரம் வந்து விட்டதாக உணர்ந்தார்..

“கிஷோர்..உன்னோட வக்கிரம் இப்ப எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சு..நான் சட்டைய கழட்டிட்டு போக முடியும்..நம்ம கூட வேலை செய்யற லேடிஸும் இங்க இருக்காங்க..என்னோட நெலமையில அதுல யாராவது இருந்தா அவங்க கிட்டயும்..சட்டைய கழட்டச் சொல்வியா….”

கோபம் கொப்பளித்தாலும் நிதானமிழக்காமல் நியாய வார்த்தைகளை பேசுவதாக நினைத்து அப்படிக் கேட்டுவிட்டார் புகழேந்தி..

ஒரு கனத்த மெளனம்…

கிஷோர் இதை எதிர்பார்க்க வில்லை…சாடிஸத்தின் இறுதிக் கட்டம் என்பது மட்டும் அவனுக்குப் புரியவில்லை..உச்ச கட்டம் என்பதும் தான்..அவரை இன்னும் காயப்படுத்துவதாக நினைத்து..”நிச்சயமா புகழேந்தி..லேடிசா இருந்தாலும் கழட்டச் சொல்லுவோம்..” என்றான்…

இப்போது தன்னுடைய கால்சட்டையின் இழுவை மூடியையும் மீறி அண்ட்ராயரின் நாடாக்கள் வெளியில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார் புகழேந்தி…செளந்தர்யாவின் கழுத்திலும் பிராவின் நாடா வெளியில் துருத்திக்கொண்டிருக்க வேண்டும்…

••••••••

Comments are closed.