தர்ம சாலாவில் மழை விழும்போது.. ( திபேத்திய கவிதைகள் ) / பூச்சிங் டீ சோனம். / தமிழில் விஜயராகவன் ( ஈரோடு )

[ A+ ] /[ A- ]

download (84)

தர்மசாலாவில் விழும் மழைத்துளிகள்
குத்துசண்டை கையுரைகளை போட்டு கொள்கின்றன
ஆயிரக்கணக்கான துளிகள்
எனது அறையை பாய்ந்து சாடும்.
தகரகூரையின் கீழே அறை சாடல் பொறாமல் உள்ளிருந்து கதறும்.
மழை எனது படுக்கையையும்
எழுதிய தாள்களையும்
நனைத்துவிடும்.
சில நேரங்களில் இந்த புத்திசாலி மழை எனது அறையின் பின்புறமாக வரும்போது இந்த நன்றிகெட்ட சுவர்கள் அனுமதிப்பதால் எனது அறையில் சிறு வெள்ளமே வந்துவிடும்.

எனது தீவுநாடாக மாறிய படுக்கையில் இருந்து கொண்டு
வெள்ளம் என் தேசத்தை சூழ்வதை பார்ப்பேன்.
சுதந்திரம்பற்றிய பதிவுகள்,
எனது சிறைநாட்களின் நினைவுகுறிப்புகள்,கல்லூரி நண்பர்களின் கடிதங்கள்,
மேகி நூடிலும், ரொட்டி துணுக்குகளும், இந்த ஜலபெருக்கில் மறந்தநினைவுகள் திடீரென வருவதுபோல் மேலே வந்து
மிதக்கும்.

மூன்று மாத சித்ரவதை
பருவமழையானது ஹிமாலயத்தின் ஊசியிலை பைன் மரங்களை கழுவி சுத்தபடுத்தி விடுவது மாலை
சூர்யஒளியில் ஒளிர்கிறது.

பிரித்தானிய அரசாட்சி காலம்தொட்டு பயனிலுள்ள
எனது அறைத்தகர கூரையை
மாரிக்காலம் அடித்து அடங்குமட்டும் நான் சமாதானம் செய்ய வேண்டியுள்ளது.
இந்த அறை பல வீடற்ற அபலைகளுக்கு இடமளித்துள்ளது.

தற்போது கீரிகளும்,எலிகளும்,
பல்லிகளும்,சிலந்திகளும்,
கைப்பற்றியுள்ள இதில் நானும் வாடகைக்குள்ளேன்.

இல்லம் என குடியிருக்க வாடகை அறை எடுப்பது
தாழ்வான பிழைப்புதான்.
எண்பது வயதான எனது காஷ்மீரி வீட்டு சொந்தகாரி
தனது சொந்த பூமிக்கு திரும்ப முடியவில்லை.
அடிக்கடி திபேத்தா,காஷ்மீரா
எது சிறந்த அழகு என
விவாதித்துகொள்வோம்.

ஒவ்வொரு சாயங்காலமும்
எனது வாடகை அறைக்கு திரும்ப வருவேன்.
ஆனால் நான் இப்படியே இருந்து இறக்கப்போவதில்லை.

இங்கிருந்து அகல ஏதாவது
ஒரு வழி இருக்கத்தான் செய்யும்.

எனது அறையை போல என்னால் அழ முடியாது.
வேண்டுமென்கிற அளவிற்கு சிறைச்சாலைகளிலும்,எனது
இக்கட்டுகளிலும் அழுதிருக்கிறேன்.

இங்கிருந்து அகல ஏதாவது ஒரு வழி இருக்கத்தான் செய்யும்.

நான் அழப்போவதில்லை,
போதுமான அளவிற்கு எனது
அறையே ஈரமாகத்தான் உள்ளது…

••••

Comments are closed.