கவிதையைக் கண்டடைதல் ( கட்டுரை ) / ராஜேஷ் சுப்ரமணியன்

[ A+ ] /[ A- ]

1623604_10201990198890135_836757269_n

நவீனத் தமிழ் கவிதை உலகம், கடந்த சுமார் பத்து ஆண்டுகளில் பெரும் மாற்றத்தை சந்தித்திருக்கிறது. இணையத்தின் பெரும் வளர்ச்சியும், அதன் மூலம் உலகம் முழுவதிலுமிருந்தப் படைப்புகளை வாசிக்க கிடைத்ததும் புதியப் படைப்பாளிகளுக்கு உத்வேகத்தைக் கொடுத்திருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் பெருகி வரும் மொழிப்பெயர்ப்புப் படைப்புகளும் ஒரு ஆரோக்கியமான வளர்ச்சியை நோக்கி செல்வதை சான்றுக் கூறுகிறது.

அரசியல், பெண்ணியம், சமூக நீதி போன்ற ” கருத்துக்களை ” மையமாகக் கொண்டக்கவிதைகள் பொதுவாக நேரடித்தன்மைக் கொண்டவையாகவும், அகப் பிரச்சினைகள் , உள் மனவுலகம் சம்பந்தப்பட்டக் கவிதைகள் சிக்கல் நிறைந்த மொழியால் எழுதப்பட்டவையாகவும் பெரும்பான்மையான சமயங்களில் இருக்கின்றன.

மொழியின் எளிமையிலா, கடினத்திலா , எதில் இருக்கிறது கவிதை? ஒரு கவிதை, தன்னகத்தே “கவிதையை ” கொண்டிருக்க வேண்டாமா ? கவிப்பொருளை சொல்ல வரும் நவீனக் கவிஞன், ஏன் தனது “கவிதையை” சிக்கலான வார்த்தைகளுக்கு இடையில் மறைத்து வைக்கிறான் ? பல சமயங்களில் வாசகனை அருகே நெருங்கவிடாமல் நழுவிப் போய்விடுகின்றனவே கவிதைகள் !

நவீனக் கவிதைகளின் கடின மொழிக்கு ஒரு காரணம் இருக்கக்கூடும். பழகிய மொழியின் பெரும்பான்மையான வார்த்தைகள், தமது வீரியத்தை இழந்து, அவைகளின் அர்த்தங்கள் சேதப்பட்ட நிலையில் , தேய்ந்து,நைந்துப் போன சொற்களாக (cliches ) நிற்கின்றன. ஆகவே, தனது கவிதையைக் கட்டமைக்கும் கவிஞன், புதிய சொற்களைத் தேடி அலைகிறான், தனது “கவிதையின் ஆன்மாவை” வாசகனுக்கு சேர்ப்பிக்க. ஒரு வேளை, புழக்கத்தில் உள்ள சொற்களையேப் பயன்படுத்தினால், வாசகனை இதயத்தை அடையும் பயணத்தில், தனது கவிதை குறைத்தூரத்திலேயே தோற்றுப் போய் , வெற்றுக் கூச்சலாக நின்றுவிடுமோ என்று அச்சப்படுகிறான்.

இத்தாலிய கவிதை இதழ் “பொயசியா ” (Poesia ), கட்டுடைத்தல் (deconstruction ) கோட்பாட்டின் தந்தையான தெர்ரிதாவிடம் (Jacques Derrida ), தனது தலையங்கமான ” எதுக் கவிதை ?/ கவிதை என்றால் என்ன ? ” எனும் தலைப்பில் ( இத்தாலிய மொழியில், “Che cos’e la poesia ? ) அவரது கருத்துக்களைக் கேட்டபொழுது, அவரால் பிரெஞ்சு மொழியில் சொல்லப்பட்டு, இத்தாலிய மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டக் கட்டுரை, மிகவும் புகழ்ப்பெற்றது . வார்த்தைகளால், ஒலி /எழுத்து சங்கேதங்களால் ஆன மொழி, அந்த மொழியால் எழுதப்பட்ட பிரதி ( புனைவு / கதை /கட்டுரை/கவிதை எதுவாயினும்) எப்பொழுதும் குறைப்பாடுகளால் ஆனதே ; அவை எப்போதுமே உண்மையை , புனைவு ஆசிரியன் சொல்ல வந்ததை, முழுவதுமாக வெளிக்கொணர்வதில்லை. தொடர்ந்த கட்டுடைத்தல் மூலமாகவே , ஒரு பிரதியின் ஆழத்தை, ஆன்மாவை அடைய முடியும் எனும் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது கட்டுடைத்தல் தத்துவம்.

தெர்ரிதாவின் மேற்சொன்ன கட்டுரையில், கவிதையை ஒரு முள்ளெலியுடன் (ஆங்கிலத்தில், “hedgehog “, பிரெஞ்சில், “herrison” ) ஒப்பிடுகிறார். கவிதை, சாலையைக் கடக்க முயலும் ஒரு முள்ளெலியைப் போன்றது. முற்கள் நிறைந்த மேல்தோலையும், மென்மையான உள்பாகத்தையும் கொண்டிருக்கிறது முள்ளெலி .

கவிதை என்றால் என்ன ? எது கவிதை? கவிதையை விளக்க முற்படும்போது, வார்தைகளால்தான் சொல்ல இயலும். அத்தகைய விளக்கம், உரைநடையை நோக்கி நகர்கிறது. கவிதை, தன்னுடைய கவிதைத் தன்மையை இழந்தவாறே , வார்த்தைகளால் ஆன உரையால் (prosaic ) தன்னை விளக்கிக் கொள்ள முற்படுவது, முள்ளெலி சாலையைக் கடக்க முற்படுவதற்கு ஒப்பானது. கவிதைக்கான விளக்கம், சாலையில் வேகமாக வரும் வாகனத்தைப் போன்றது. வாகனத்தைக் கண்டு, முள்ளெலி பயத்தால் தன்னுடலை உள்நோக்கி சுருக்கிக் கொள்கிறது. அவ்வாறு தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள கவிதை முற்படும்பொழுது, தன்னை விளக்கிக் கொள்ளும் சக்தியை இழக்கிறது. கவிதைக்கான விளக்கமும் குறைப்பாடுடனே நிற்கிறது.

download

“சுருங்கிக் கொள்ளும் முள்ளெலி ” என்னும் உதாரணப் படிமம், கவிதைக்கும் உரைநடைக்கும் உள்ள முரண்பாட்டை மட்டும் அல்ல,கவிதையை மொழிபெயர்க்கும் முயற்சிக்கும் பொருந்தும். கவிதையை மொழிபெயர்ப்பது என்பது, கவிதையைத் தாக்கி, அதன் இதயத்தைக் கண்டடைந்து , அதன் மொழிப் பயன்பாட்டை உணர்ந்து, இன்னொரு மொழியில் ஆக்குவது, கவிதை என்னும் முள்ளெலியைத் தாக்க வரும் வாகனத்திற்கு ஒப்பானது. உடனே, அது உள்முகமாக சுருங்கிக்கொள்கிறது, தன்னை முழுவதுமாக வெளிப்படுத்த மறுக்கிறது. தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில், ஆபத்திலிருந்து (மொழிபெயர்ப்பிலிருந்து) தன்னைத் தற்காத்துக்கொள்ளும் முயற்சியில், இன்னொரு மொழியின் சங்கேதக் குறிகளில் (வார்த்தைகளில்) தன்னை முழுவதுமாக அது வெளிப்படுத்திக்கொள்ள மறுக்கிறது. மொழிபெயர்ப்பின் முயற்சியிலும், முள்ளெலி சாலையைக் கடக்கத் தவறுகிறது.

வார்த்தை சங்கேதங்களால் ஆன மொழி, புற உலகையும், அக உலக அனுபவங்களையும் பிரதிபலிக்க முயற்சிக்கிறது. அந்த “மொழியிலும்”, உரைநடையைத் தவிர்த்த கவிதை மொழி, தனக்கே உரிய “இதயத்தைக்” கொண்டுள்ளது. அந்த “இதயத்தை” அடைய வாசகன் செய்யும் முயற்சி,” தன்னைத் தக்க வரும் முயற்சியாகக் ” கருதும் கவிதை முள்ளெலி , உடனே உள் சுருங்கிக்கொள்கிறது. எனவே,கவிதை சொல்ல வரும் அனுபவத்தையும், வாசகனால் முழுவதுமாக உள்வாங்கிக் கொள்ள இயலாமல் போய்விடுகிறது. அது அப்படி சுருங்கிக் கொள்வதனாலேயே, எதிரே வரும் வாகனத்தால் கொன்றுவிடப் படும் அபாயத்திற்கு உட்படுத்திக்கொள்கிறது, அதனை அணுகும் வாகனம் ( வாசகன்) தன்னைக் கொன்றுவிடுவானோ என்ற அச்சத்தில்.

கவிதை தன்னைப் பற்றியே சொல்கிறது, ” நான் ஒரு உச்சரிக்கப்பட்ட வார்த்தை, என்னை மனப்பாடமாக கற்று உணருங்கள், என்னை பிரதி எடுங்கள், பாதுகாத்து பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள், என்னை நன்றாக கவனியுங்கள்- உச்சரிக்கப்பட்ட உச்சரிப்பு, உங்கள் கண்களுக்கு நேரெதிராக: ஒலிப் பேழை, விழிப்பு, ஒளிக்கீற்று, மரணத் துக்க விருந்தின் புகைப்படம்.”

கவிதை, உச்சரிக்கப்பட்ட வார்த்தையாக உலா வருகிறது; அதை சரியாக உள்வாங்கிக்கொள்வது அவசியம். அந்த வார்த்தையை பிரதி எடுத்து, மீண்டும் மீண்டும் அணுகவேண்டும். கவிதையை, ” விழிப்பு” (wake ) என்றும் தெர்ரிதா குறிப்பிடுகிறார். கவிதையின் “விழிப்பை” உணர்பவன், கவிதை தரும் ஞானத்தை அடைகிறான். ஒரு புகைப்படம் போல், உருவங்களின் விகசிப்பைக் கண் முன் நிறுத்துகிறது கவிதை. ஒளி/ஒலி காட்சியாக உரு மாறுகிறது, வாசகனின் மனதில் கவிதை.

கவிதையின் அடிப்படை குணாம்சங்களை இரண்டு வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், அவை: “அடர்த்தி” மற்றும் “இதயம்”. ஒரு கவிதை, மிகக் குறைந்த வார்த்தைகளில், அடர்த்தி நிறைந்ததாக, எந்தப் பொருளைப் பற்றி பேசும் கவிதையாக இருந்தாலும், தன்னகத்தே அடர்த்தி நிறைந்ததாக இருத்தல் அவசியம். “இதயம்” என்பதை கவிதையின் ஆன்மா என்றுக் கருதலாம். கவிதையின் ஆன்மாவைக் கண்டடைதலே சிக்கலான விஷயம்.

முள்ளெலியின் முட்கள் போன்றவை, கவிதையின் சிக்கனமான, கடினமான வார்த்தைகள்; அவற்றுள்ளே புதைந்துள்ளது, கவிதையின் ஆன்மா. தனது ஆன்மாவைப் பாதுகாத்துக்கொள்வதற்காக, எதிர்வரும் ஆபத்துகளில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் சாதனமாக தனது முற்களால் ஆன மேலாடையை அணிந்திருக்கிறது கவிதை. ஒரு வாசகன் , முற்களால் தளர்ந்து விடாமல் , கவிதை முள்ளெலியை “சாலையைக் கடக்க” செய்ய வேண்டும். அவ்வாறு செய்து விட்டான் என்றால், கவிதையை அவன் பூரணமாக உள்வாங்கி விட்டான், “மொழிபெயர்த்து” விட்டான் என்றே சொல்லி விடலாம். ஆனால், அது அவ்வளவு சுலபமானதில்லை.

முள்ளெலி மேலுள்ள முட்கள் போன்ற அடர்த்தியான வார்த்தைகளுக்குளே புதைந்திருக்கிறது கவிதையின் ஆன்மா . அதைக் கண்டடைய நெருங்கும்பொழுது, தன்னையே சுருக்கிக் கொள்வதின் மூலம் , தனது முழு ஆன்மாவையும் தரிசிக்கத் தருவதில்லை எந்த நல்லக் கவிதையும். ஒரு வாசகன் மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறான், கவிதை சொல்லும் செய்தியை அறிந்துவிட. ஒவ்வொரு முறையும் தனது ஆன்மாவின் ஒவ்வொரு முகத்தையோ , பகுதியையோ காட்ட வல்லது கவிதை. ஆகவே தான், ஆங்கிலத்தில், “learn by heart ” என்று சொல்வதுப் போல, வாசகனின் இதயம் நேரடியாக கவிதையின் இதயத்துடன் உறவாடும்பொழுதே, உண்மையான கவிதை நிகழ்வு நேரிட வாய்ப்புண்டு.

வாசகனின் இதயமும் கவிதையின் இதயமும் உறவாடத் தடையாக இருப்பது மொழி. உண்மையை, கருத்துக்களை, எண்ணங்களை, புற /அக கருத்துக்களை மொழி என்றும் நூறு சதவிகிதம் பிரதிலிபலித்ததில்லை . தன்னுடைய நீண்ட வரலாறினால், மொழி மாசு அடைந்திருப்பதால், கவிஞன் சொல்ல விரும்பும் கவிதையை, அவனுடைய மொழி சற்று அரைகுறையாகத்தான் எதிரொலிக்கிறது. அத்தகைய ஒரு படைப்பை, வாசகன் மீண்டும் அதே மொழி மூலம் அணுகும்பொழுது, மொழியின் குறைப்பாடுகளால், அவன் கவிதை மூலம் பெறுவதும் முழுமையானதன்று. அதனால்தான், தெர்ரிதா, கவிதையின் “இதயத்தை, ஆன்மாவைப் ” , நமது இதயம்/ஆன்மா மூலம் நேரடியாக அணுக சொல்கிறார்.

கவிதையை ஒரு மொழியிலிருந்து வேறொரு மொழிக்கு மொழிபெயர்ப்பது ஒரு புறம்; கவிதை சொல்லும் பொருளை புரிந்துக் கொள்ள வாசகன் முற்படுவதும், கவிதையை ” மொழிபெயர்ப்பதற்கு ” சமமே. அவ்வாறு வாசகன் மொழிபெயர்ப்பதன் மூலமே, அதாவது,கவிதையின் வார்த்தைகள் சுட்டும் அனுபவத்தை உள்வாங்குவதும் ஒரு வகையான மொழிப்பெயர்ப்பே.அவ்வாறு ஒரு வாசகன் தன்னை நெருங்குகிறான் என்று தெரிந்ததுமே, கவிதை தனது தற்காப்பு கவசத்தை போர்த்திக்கொள்கிறது; தன்னை முழுவதுமாக வெளிப்படுத்தப் பயந்து, உள்முகமாகத் திரும்பிக்கொள்கிறது. கவிதையுடன் வாசகனின் போராட்டம் ஒரு தொடர்க் காதல் கதையாகி விடுகிறது. அவனும் கவிதையை விடுவதில்லை; கவிதையும் அவன் வசப்படுவதில்லை. ஒவ்வொரு கவிதையின் கதையும் இதுவே.

***

Comments are closed.