நெய்ப் பந்தம் ( சிறுகதை ) ( அறிமுக எழுத்தாளர் ) / பிரதீப் கென்னடி

[ A+ ] /[ A- ]

download

எது நேர்ந்துவிடக்கூடாது என மறந்தாற்போல் இருந்தானோ அதுவே நேர்ந்துவிட்டது போல் அவன் மனதை ‘பதைபதை’க்கச் செய்தது. அந்தி மங்கி மறைந்து போகப்போகும் இந்த வேளையில், இருபுறமும் கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சிளம் நாத்துகளைத் தாங்கிய வயல்பரப்புகளின் நடுவே வகுடெடுத்தாற்போல் நீண்டு செல்லும் அந்த தார்ச்சாலையில், தன் சைக்கிளின் பெடல்களை அழுத்தி மிதித்தான். ஆத்தாவீட்டுக்கு விரைந்துவிட்டு எப்படியாவது வீடு திரும்பிவிட நினைத்தான். எங்கும் எதிலும் அமைதியும் நிசப்தமும் நிலைத்திருக்க அவனுக்கு மட்டும் கேட்கும் செய்ன் கவரில் செய்ன் உரசும் “கிரீச் கிரீச்” இன்னும் ‘கிலி’யைத் தருவதுபோல் இருந்தது.

இதேபோல் அந்தி மங்கிய பல வெள்ளி இருளின் துவக்கத்தில் இந்த ஆரேழு மைல் தூரத்தை “ஆத்தாவூட்டுக்கு போறோம்” என சந்தோசம் தளும்ப கடந்ததறியாமல் கடந்திருக்கிறான். ஒருநாளும் ஆத்தாவீடு இன்றுபோல் அவனுக்கு தூரமாய் இருந்ததேயில்லை.

” அப்பாட்ட செலவுக்கு எவ்ளோ காசு கேக்குறது? மத்த பயலுவோலாம் ஐநூருவா கொண்டு வாரானுவோ, அப்பா ஐநூருவா கேட்டா தருவாரா? அங்க குளுருமாமா, அப்பத்தாவ சொட்டரத் தொவச்சு போட சொன்ன. போட்டுச்சா? ஸ்கூல்ல காலைல அஞ்சு மணிக்கெல்லாம் பஸ் எடுத்துருவாங்க, ஸ்கூலுக்கு அஞ்சுமணிக்கெல்லாம் போயிர இங்க நம்மூர்லெந்து நாலுமணிக்கெல்லாம் பஸ் கெடைக்குமா? கெடைக்கலன்னா?” இப்படி எண்ணற்ற கேள்விகளோடு பள்ளியில் இருந்து வீடு திரும்பியவனுக்கு ‘ஆத்தா’வைப் பற்றி எந்த கேள்விகளும் எழுந்திருக்கவில்லை.

ப்ரின்ஸ்பல் சார் எட்டாம் வகுப்பு ‘ஏ’ சக்ஸனுள் நுழைந்து இரண்டு நாள் “டூர்” அறிவிப்பு செய்து ஊட்டியையும் ப்ளாக்தண்டரையும் பற்றி செய்த விவரணைகளிலேயே அவன் டூர் போக முடிவெடுத்துவிட்டிருந்தாலும் அப்பொழுது ஆத்தாவைப் பற்றி இவ்வளவு பயம் இருந்திருக்கவில்லை. “டூர்” பணம் ஆயிரத்தைனூரு எண்ணி கொடுத்த அப்பா, ” ஒங்க ஆத்தா இப்டி இருக்கடா” என்ற பொழுது வெளிரித்தான் போனாலும் எப்படியோ “அதெல்லா ஒண்ணூ ஆவாது” என நம்பி இருந்தவனாய் இன்று இருக்கமுடியவில்லை.

இவ்விருதினங்களாக ஆத்தாவை மறந்து வேறெந்த நினைவுமின்றி, டீவியில் ப்ளாக்தண்டர் விளம்பரம் போடச்சொல்லி ஏங்குவதும், நண்பர்களோடு சேர்ந்து எப்படி ஆறுபேர் சீட்டை பிடிப்பது அதில் நாமெப்படி சன்னலோர சீட்டைப்பிடிப்பது என்ற யோசனையுமாய் ஊட்டியின் உருவ அமைப்புகளை அவனாக உருவகப்படுத்தி உருபோட்டுக்கொண்டிருந்தான். விரல் விட்டு எண்ணி ஒவ்வொருநாளைக் கழித்து நாளை “டூர்” கிளம்பிவிடலாம் வென்றிருக்கையில் “ஆத்தாவுக்கு ரொம்ப முடியல, ஆத்தா ஒன்னப் பாக்கணுங்குது அப்பு” என்ற சின்னமாமி யின் அழைப்பு அவன் ஆசைகள் யாவையும் ஆட்டிப்படைத்து அவனை ஆழ்ந்த அக்கழிப்புக்குள்ளாக்கிவிட்டது.

” நா போன வாரோ பாத்தப்பக்கூட ஆத்தா நல்லாத்தான் இருந்துச்சு, யேன் எல்லாரு என்ன ஏமாத்ரிய ” என உள்ளார புழுங்கியபடி யாரும் ஏமாற்றவில்லை என்ற உண்மையறிந்தும் அதை எள்ளளவும் ஏற்றுகொள்ள மனமில்லாதவனாய் – இடக்கையால் ஹேன்டில்பாரை பற்றி வலக்கையால் கண்ணீரைத் துடைத்து, ” கடவுளே ஆத்தா இன்னைக்கி செத்தரக்கூடாது கடவுளே, நா நாளைக்கி எப்டியாது டூர் போவனு கடவுளே, ப்ளீஸ் கடவுளே ப்ளீஸ் கடவுளே ” என வேண்டியழுதவாறே சைக்கிளை இன்னும் வேகமாக அழுத்தி மிதித்தான்.

ஆத்தாவின் நிலைமைபற்றி சின்னமாமி இவன் அப்பாவுக்கு போன் செய்து இவனிடம் கொடுக்க சொல்லி சேதி பேசுவதெல்லாம் புத்தம் புதிய வழக்கம், ஒருவேளை பெரியமாமி போல் ஆத்தாவின் அண்ணன் மகளாய் பிறந்துவிடாதவள், புதிதாய்தான் புகுந்தவள் என்பதனால் பகையில் பாத்துசம் இல்லாமலிருக்கலாம். ஆத்தாவீட்டிற்கும், இவன்வீட்டிற்கும் பேச்சு மூச்சு அற்றுப்போய் பத்து வருடங்களாவது இருக்கும். இவனின் மூன்று வயதில் அவன் அம்மா தன்னைத்தானே மாய்த்துக்கொண்டபின் இருகுடும்பங்களுக்கிடையே ஒட்டு-ஒறவு நல்லது-கெட்டது என எதுவுமில்லை. “என் ஒத்த புள்ளையே பொய்த்து ஒங்க ஒறவெதுக்கு எங்களுக்கு” என ஆத்தா வீட்டில் அப்படியே இருந்து விட்டார்கள். இரு மாமன்களின் கல்யாணத்தின் போதும்கூட இவனப்பா உயிரோடிருக்க பத்திரிக்கையில் மாப்பிள்ளை என இவன் பெயரைத்தாம் அடித்தார்கள். அவர்களுக்கு இவன் மட்டும் போதும் – இவன் தான் அங்கு எல்லாம் – இவன் தான் அவர்களுக்கு ராசா.

இவனும் தீபாவளி, பொங்கல், வார விடுமுறை, கோடைவிடுமுறை என அங்கு தான் கிடப்பான். ஏன் கிடக்கமாட்டான் ? தரையில் இவன் கால்படவிடாது தோளில் தூக்கித் திரிந்த தாத்தா – அவர் இப்போதில்லை. மாமன்கள், “திங்க மெல்லதான் செல்லம்” என அவ்வபோது அதட்டினாலும் தாயில்லா பிள்ளை என தாலாட்டும் சீராட்டும் பாராட்டும் ஏகபோகம். எல்லாத்துக்கும் மேலாய் இன்றுவரை (இன்று அவளால் முடியாது என்றாலும் முடிந்தால் இன்றுவரை), “டங்” என ஊரில் இருந்து வந்தவனின் சைக்கிள் ஸ்டாண்ட் சத்தம் கேட்டதுமே சத்தமின்றி எண்ணெய்சட்டியை அடுப்பில் ஏற்றுவிட்டு முந்தானையால் கண்ணைத் துடைத்தவாறே இவன் முகம் பார்க்க ஓடிவரும் ஆத்தா, இவனை நினைத்தும் இவனை இப்படிவிட்டுவிட்டு போன தன் பெண்னை நினைத்தும் அவள் அழாத நாளே இல்லை . இந்த ஆத்தாவை இதுநாள்வரை இறந்துவிடக்கூடாது என நினைத்துவிட்டு இன்று ‘ இன்று இறந்துவிடக் கூடாது’ என்று நினைப்பது சரியா என்ற கேள்வி “சுருக் சுருக்” என குத்தினாலும் அவனால் அப்படிதான் நினைக்கமுடிந்தது.

அன்று இதேபோல் சின்னமாமி, “ஆத்தா ஒன்ன பாக்கணுங்குது அப்பு ” என்று போன் செய்த பின் ஆத்தாவீட்டிற்குப் போய் அங்கிருந்து சின்னமாமனுடன் மோட்டர்சைக்கிளில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்த ஆத்தாவை முதன் முதலாய் பார்க்கப் போனவன், “தஞ்சாவூர் புற்றுநோய் மருத்துவமனை என்ற பெயரிடப்பட்ட ஆஸ்பத்திரியும், கட்டிலில் கட்டி தொங்கவிடப் பட்டிருந்தப் பரீட்சை அட்டையின் முதல் தாளில் பேஷண்ட் நேம் கிருஷ்ணவேணி என்பதையும் அதன் கீழ் ஏதோ கேன்சர் என்ற கோழிக்கிறுக்கல் எழுத்தையும்” பார்த்துவிட்டு ஆத்தாவுக்கு கெர்பப்பை ஆபரேஷன் என்றிருந்தவன்(அவனுக்கு அப்படித்தான் சொல்லப்பட்டிருந்தது) திக்பிரமை பிடித்தவனாய் நின்றான். ரேடியேஷன் அறையில் இருந்து வார்டுக்குள் நுழைந்த ஆத்தா, “நானும் ஒன்ன விட்டுட்டு போப்போரணடா” என்று அவனை வாரியணைத்து அழுத பொழுது புரிந்தும் புரிந்துகொள்ள முடியாதவனாய் அழுதான் – அன்று மூக்குறுஞ்சலும் கண்துடைத்தலும் இடர்பட ஆத்தா ” நீ ஒன்னாப்பு படிச்சப்ப ஒன் தாத்தா இப்படித்தான் படுத்த படுக்கையா கெடந்தாரு. ஹார்ட்டடாக்கு . ஒன்ன பாக்கனு பாக்கனுட்டு இருந்தாரு. பள்ளியோடத்லேருந்து ஒன்ன அலச்சார ஆள் போய்ருந்தது .நான் சும்மா இருக்காம சும்மானாச்சுக்கும் ‘அப்பு வந்துட்டாயா’ன்னேன். ‘எங்க எங்க’ ன்னு படக்குன்னு எந்துருச்சு பாத்துட்டு படுத்தவருதான் அப்டியே போய்த்தாரு” என்றுவிட்டு “நா சாவயில நீ என் கண்ணு முன்னாலயே நிக்கனுயா” என்று சொன்னதன் நினைவு வந்ததும் என்ன நினைத்தானோ? ‘ஆத்தா இன்னிக்கி சாவவே கூடாது கடவுளே’ என்ற வேண்டுதலை ‘ஆத்தா சாவவே கூடாது கடவுளே” என்று மாற்றிகொண்டு “எப்டியாது டூர் போவனு கடவுளே”என்பதையும் சேர்த்துக் கொண்டான்.

“ஆத்தா ஒன்ன பாக்கனுங்குது அப்பு ” என்று ஃபோன் செய்த சின்னமாமியின் மீதும், “டங்” என இவனின் சைக்கிள் ஸ்டாண்ட் சத்தம் கேட்டு வாசலுக்கு வந்து எட்டி பார்த்துவிட்டு உள்ளே போய் ஆத்தாவிடம் ” அம்மா அப்பு வந்துடான் மா” என்ற சின்னமாமன் மீதும், ஆத்தா மீதும் எல்லோரின் மீதும் அவனுக்கு ஏவெரிச்சலாய் வந்தது-ஊட்டி மலைத்தொடர்களும்,ப்ளாக்தண்டர் நீர் விளையாட்டுகளும், “ஹேர்பின் பெண்டுல பஸ்சு எப்டி போவும் தெரியுமா” என்ற முன்னமே ஊட்டி போய் வந்திருந்த நண்பர்களின் சிலாகிப்பும், ” நாளைக்கு நம்ம ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்துல உக்காந்துக்கலாம்” என்றுவிட்டு இந்நேரம் தூக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருக்கும் உயிர்நண்பனும், காலை கிளம்பிவிட இருக்கும் கலர் விளக்குகள் பொருத்தப்பட்ட செமிஸ்லீப்பர் பஸ்சும், இரவு மேட்டுப்பாளையம் ஹோட்டல் அறையில் நண்பர்களோடு சேர்ந்து போடப்போகும் குட்டி குட்டி கும்மாலங்களும் அவனை வாவா! என்றழைத்தது.

****

கன்னத் தசைகள் வற்றிப்போய் மருக்கள் மட்டுமே முகமாய் , சுண்டுவிரலால் உச்சந்தலையில் குண்டுமணியளவு கொண்டை போடுமளவு தலைமுடி கொட்டிப்போய், கேன்சர் கட்டி உறுஞ்சிவிட்டு போட்ட மீதியாய் கட்டிலில் உருக்குலைந்து கிடந்த அவளைப் பார்க்க அங்கு அழும் மாமா, மாமி, உறவுமுறைகள், அக்கம் பக்கத்து பெண்கள் என யாருக்கு எப்படி இருந்ததோ? அந்த அறையின் ஒரு மூலையில் சம்மனங்காலிட்டு அமர்ந்திருந்தவனுக்கு ஆத்தாவும், அந்த அழுகுரலுக்கு மத்தியில் இருந்து அவனுக்கு மட்டும் கேட்கும் அவளின் மூச்சு காற்றும் , அவனையும் ‘நாளைக்கு எப்டியாது டூர் போவனு கடவுளே’என்ற அவனின் பிரார்த்தனையையும் மாறி மாறி அறைவது போல் பட்டது.

பேச்சுமூச்சற்று அடித்துப்போட்டாற் போல் கிடந்த ஆத்தா அவனை முற்றிலும் நம்பிக்கையிழந்தவனாகச் செய்தாள். அவன் மாமா மாமி என யாரிடமும் நாளை “டூர்” போகவேண்டும் என்ற செய்தியைச் சொல்லவில்லை, ஏதோ ஒரு சனிக்கிழமை மதியம் இவன் தலையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய போது முதுகில் வழிந்தோடும் நாலைந்து பேன்களை பார்த்துவிட்டு முச்சந்தியில் ‘ஒனக்கு ஒருத்தி அம்மானு இருந்துருந்தா ஒன் தல இப்புடி இருக்குமாடா’ என மாரில் அடித்துகொண்டு அழுதுவிட்டு அர டப்பா அரப்பை தலையில் தேய்த்து குளிப்பாட்டிய ஆத்தா, வாரா வாரம் சனி ஞாயிறுகளில் வந்து இருந்துவிட்டுப் போகும் அவனுக்கு வாரத்தின் ஒவ்வோரு நாளும் செருவாடு சேர்த்து கையில் நூறுகளில் பெருவாடாக கொடுத்தனுப்பும் ஆத்தா,இப்படி இன்னும் எத்தனையோ “ஆத்தா” முக்கியமா “டூர்” முக்கியமா என அவர்கள் நினைத்தவிடக் கூடும் என்று பயந்தான்.

“அழுவாத அப்பு அழுவாத அப்பு ஆத்தா நம்மல விட்டு எங்கயும் போவாது ப்பு”என்று பெரியமாமன் இவன் கண்ணைத் துடைத்தபோது ‘பத்து வருசத்துக்கு முன்னாடி டாக்டர் சொன்னப்பயே கெர்பபைய எடுத்துருந்தா அம்மா வுக்கு இந்த நெலம வந்துருக்குமா’ என்ற குற்றவுணர்வு அவனுக்கிருந்ததோ இல்லையோ ‘டூர் போவ முடியாதோ’ என அழுதவனுக்கு அவனின் கண்துடைப்பு அருவருப்பை தந்தது. ஒரு கணம்,ஒரே ஒரு கணம் ” டூர் போவேனா” என நினைத்தான்.

ரா சாப்பாட்டிற்கு நேரமாகி விட்டதால் அக்கம் பக்கத்து பெண்கள் கிளம்பினார்கள், எதாவது சேதி என்றால் சொல்லச் சொல்லி விட்டு பக்கத்து ஊரில் இருந்து வந்த ரத்த பந்தங்கள் ஒறவுமுறைகளும் கிளம்பிற்று. மாமா மாமி அந்தன்ட இந்தன்ட நகர தன்னந்தானியாய் கட்டிலில் கிடந்த ஆத்தாவின் தலைமாட்டருகில் முட்டி இட்டு அமர்ந்து ” ஆத்தா நாளைக்கி நா டூர் போரந்தா ஊட்டி த்தா ஒனக்கு ஒண்ணுமில்லத்தா நீ நல்லாதான் ஆத்தாயிருக்க ப்ளீஸ் த்தா- செத்துராதத்தா என சொல்ல நினைத்தாலும் அதை சொல்லவில்லை – நா டூர் போவனுத்தா ப்ளீஸ்த்தா நா டூர் போவனுத்தா”என அவளுக்கு மட்டும் கேட்கும்படி இதை திரும்ப திரும்ப சொல்லி கேவியழுது ஆத்தாவின் காதுமடல்களை கண்ணீரால் நனைத்தான்.

ஆச்சரியம் தான் ,எதற்கோ கோபித்துக் கொண்டு குப்புறப் படுத்த குழந்தை அது கிடைத்துமே படக் என எழுந்துவிட கூடாது என பொறுமையாக எழுவதுபோல ,அடுத்த அரைமணி நேரத்தில் ஆத்தா அப்படி இப்படி அசைந்து ஒருஒரமாக ஒருகணித்துச் சாய்ந்து அரை டம்ளார் பால் குடித்தாள்,பின் சீனி போட்டு சுடுதண்ணி விட்டு ஒரு இட்லியும் தின்றாள்,ஓரிரு வார்தைகளும் பேசினாள்.

ஆத்தா தேறியதைக் கண்டு உடனே கிளம்பிவிடலாம் என மனம் துடியாய்துடித்தாலும் அவன் அப்படி செய்துவிடவில்லை .” இருந்துட்டு நாளைக்கு போலம்லடா” என்ற பெரியமாமனுக்கு ” இல்ல மாமா நாளைக்கி கண்டிப்பா வரணுமாமா டெஸ்ட் இருக்கு”என்றுவிட்டான் ” மணி ஒம்போதுக்கு மேல ஆவபோவுதடா யாரையாச்சும் கொண்டாந்து விட சொல்லவா” என்றதுக்கு ” இல்ல மாமா நான் போய்ருவன்,போய்த்து சின்னமாமிக்கி போன் பண்ணி சொல்லியரன்” என முடித்துவிட்டு அடுத்த அரைமணி நேரத்தில் சைக்கிளை எடுத்துவிட்டான். “போய்த்து வாரன் த்தா” என்றதுக்கு ஆத்தா காற்றில் அவனுக்கு மட்டும் கேட்கும்படி இரண்டு வார்த்தைகள் பேசி கண்ணால் அனுப்பி வைத்தாள்.

நட்சத்திரங்கள் நிறைந்திருந்த அவ்விருளில் அழகாய்ச் சிரித்துச்சென்றவனை, கருமேகங்கள் கைபிடித்து ஊட்டி அழைத்துச் சென்றது. சைக்கிள் செய்ன் கவரில் செய்ன் உரசும் ‘கிரீச் கிரீச்’, “பாத்து பத்ரமாபோ” என்ற ஆத்தாவின் அசரிரியாய் ஒலித்தது.

பொட்டனிக்கல் மலர்பூங்காவின் பூக்களின் மத்தியுள்ளும், தொட்டபெட்டா மலை சிகர உச்சியிலும், ப்ளாக் தண்டர் ஜெயண்ட்வீல் ராட்டனங்களிலும் ஆத்தாவின் உயிரை அவன்தான் தன் கையில் கெட்டியாய் பிடித்துவைத்திருந்தான் – ” இந்த ஊர்ல இது பேமஸ்” என்று கிளாஸ் டீச்சர் சொன்னதும் வாங்கி எங்கு மாமாவோ மாமியோ என்ன?ஏது? என கேட்டுவிடுவார்களோ எனப் பயந்து அவன் சம்படத்தில் எடுத்து வந்திருந்த ஊட்டி வறுக்கிகளில் ஒன்றை பாலில் ஊற வைத்து மசித்து ஆத்தா உண்ட போது இருவர் கண்களிலும் , நீரூத்தெடுத்தது.

****

ஆத்தா இறந்தபின், ஆத்தா இல்லாத ஆத்தாவீட்டில் அவளின் நினைவுகள் நிழற்படமாய் ஓட அவன் எவ்வளவோ அழுதிருக்கிறான். ஆனால் ஆத்தா இறந்த அன்றிரவு, இந்திய கிரிக்கெட் அணி விளையாடி அந்த பிரம்மாண்ட தொடரின் ஒவ்வொரு போட்டியையும் பார்த்துவிட்டு, இரவு நடக்கபோகும் இறுதிபோட்டிக்காக காலையில் இருந்து கடிகார முள்ளைக் கவனித்து கொண்டிருந்தவன், ஆத்தாவிற்கு நெய்ப் பந்தம் ஏந்திய கைகளோடு “இந்தியா ஜெய்சிருச்சா?” என யாரிடம், எப்படி ? கேட்பது என்பதறியாமல் தவித்தான்.

•••••••••••••

Comments are closed.