மலைகள் அடையாளமாக மாறிக்கொண்டிருக்கிறது / சிபிச்செல்வன்

[ A+ ] /[ A- ]

சிபிச்செல்வன்

சிபிச்செல்வன்

வணக்கம் நண்பர்களே

மலைகள் இந்த இதழுடன் 128 ஆவது இதழாக வெளிவருகிறது

மலைகள் இணைய இதழ் தொடங்கிய காலத்திலிருந்து இரவு முழுவதும் பணி செய்வதால் இது எனக்கு 128 ஆவது சிவராத்திரி

ஆக, விடாப்பிடியாக இதழைக் கொண்டு வருகிறிர்களே என வியப்பைக் காட்டுகிற நண்பர்களும் இருக்கிறார்கள்.

சேலம் மண்ணின் மைந்தரான அக் பரந்தாமன் கடந்த மாதம் மறைந்துவிட்டார். அவருக்கு மலைகள் தன்னடைய அஞ்சலியை செலுத்துகிறது.

ஒருவகையில் இந்த விடாப்பிடிக்கு சி.மணி மற்றும் அக் பரந்தாமன் மற்றும் மீட்சி பிரம்மராஜன் இப்போது இதழ்களை கொண்டுவரும் புது எழுத்து ஆகிய என் முன்னோடிகள்தான் காரணம் என நினைக்கிறேன். ( இவர்கள் எல்லோரும் சேலம் சார்ந்து இயங்குபவர்கள் )

மேலும் ஒருவரைக் குறிப்பிட வேண்டுமானால் நவீன விருட்சம் அழகியசிங்கரைக் குறிப்பிட வேண்டும். நவீன விருட்சம் 102 இதழை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது. கனவு இதழும் இந்த வரிசையில் தொடர்கிறது,

இவர்களைத் தவிர என் சிற்றிதழ் முன்னோடிகள் அனைவரையும் நன்றியுடன் இந்த நொடியில் நினைத்து பார்க்கிறேன். அவர்களின் தொடர்ச்சியாகவே நான் இயங்கிக்கொண்டிருக்கிறேன்,

ஒவ்வொரு இதழையும் கொண்டு வருவதில் பெரும் சிரமங்கள் இருக்கின்றன. முக்கியமாக படைப்பாளிகளிடம் படைப்புகளை வாங்குவது

சமீபத்தில ஒரு நண்பர் இதை சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு இதழுக்கும் பிச்சை கேட்பதைப் போல முகப்புத்தகத்தில் குரல் எழுப்புவதாக நண்பர்கள் சொல்கிறார்கள் என்றார்,
உண்மைதான். ஆம் நான் அப்படிதான் ஒவ்வொருவரிடமும் கெஞ்ச வேண்டியிருக்கிறது.

என்ன செய்ய படைப்பாள நண்பர்கள் கருணை காட்டினால்தானே இதழ் ஒழுங்காக வரும்

இவ்வளவிற்கும் 6 வருடங்களாக இதழை நடத்த இந்த படைப்பாள நண்பர்கள் இல்லையெனில் இதழ் குறித்த நேரத்திற்கு வருவது சாத்தியமேயில்லை

கடைசி நொடியில் சில நண்பர்கள் உரிமையெடுத்து அனுப்புவார்கள்

சில நண்பர்கள் அப்போதும் அனுப்பாமல் இதழ் பதிவேற்றம் செய்த அடுத்த நாள் காலையில் சுடச்சுட அனுப்புவார்கள்

அப்புறம் உடனே பதிவேற்றம் செய்யவில்லையே எனக் கோபித்து வேறு இதழுக்கு அனுப்புவார்கள்
அல்லது சிலர் பதிவேற்றம் பெற்ற உடன் அவர்களின் முகப்புத்தக பக்கத்தில் பதிவேற்றுவார்கள் .

அல்லது அவர்களின் வலைப்பக்கத்தில் அதை அப்படியே பதிவேற்றுவார்கள். தவறை சுட்டிக்காட்டினால் என் விருப்பத்திற்கு அப்படிதான் போடுவேன் என படுகோபத்தைக் காட்டுவார்கள்.

இன்னும் சில நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மலைகள் இதழில் வெளியாகி அது பரவலாக கவனிக்கப்படுகிற கதையோ கட்டுரையோ மொழிபெயர்ப்போ எதுவாக இருந்தாலும் அதை அப்படியே கட் காப்பி பேஸ்ட் செய்து அவர்கள் வலைப்பக்கங்களில் போஸ்ட் செய்வார்கள்
இதை குறிப்பாக வெளிநாடுகளில் வாழுகிற சில நண்பர்கள் தான் செய்கிறார்கள். ( வெளிநாட்டிலிருந்து படைப்புகளை பங்களிப்பவர்கள் இதை செய்வதில்லை )

முதிர்ச்சியான படைப்பாளிகள் மேற்சொன்ன காரியங்களை செய்வதில்லை என்பதுதான் ஒரே ஆறுதல். அவர்களுக்கு புரிதல்கள் இருக்கின்றன.

இப்படி நிறைய பிரச்சினைகள் இருந்தாலும் மலைகள் விடாப்பிடியாக வெளிவருகிறது என்பது மட்டுமல்லாமல் அதில் வெளியாகும் படைப்புகளின் தேர்வினாலும் , படைப்பாளிகளின் சிறப்பான பங்களிப்புகளாலும் வாசகர்களிடம் நல்ல கவனிப்பைத் தொடர்ந்து பெற்று வருகின்றன.

கடந்த இதழில் இடம் பெற்ற எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமாரின் சிறுகதை இதுவரை மலைகள் இதழில் வெளியான சிறுகதைகளிலேயே அதிக கவனம் பெற்று இதழின் உள்ப்பக்க முகப்புத்தக பகிர்வாக 775 பெற்றுள்ளது என்பது மகிழ்ச்சியான தகவல்.

பல மூத்த எழுத்தாளர்கள் மலைகள் இதழைத் தொடர்ந்து வாசித்தாலும் வெளிப்படையாக பேசவோ எழுதவோ செய்யாமல் கள்ள மௌனம் காக்கிறார்கள் என்பது இலக்கியத்தை சுமார் 30 ஆண்டுகளாக கவனித்துக்கொண்டிருக்கிற எனக்குப் புரியாமல் இல்லை.

சில குழுக்களில் நான் இல்லாததால் இந்தக் கவனிப்பு இல்லையென்பதும் எனக்குப் புரியாமல் இல்லை, அப்புறம் எனக்கோ மலைகள் இதழுக்கோ இதுவரை குழுக்கள் இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

குறைந்தபட்சமாக என் நிறத்தவர்கள் யாருமே இலக்கிய பங்களிப்பவர்களாக இல்லாமல் இருப்பதும் இவற்றிற்கு காரணங்களாக இருக்கலாம். இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் நான் பிறந்த ஜாதியில் எந்த சங்கத்திலும் அங்கத்தினராக நான் இல்லாமல் இருப்பதும்கூட ஒரு மிக முக்கியமான காரணமாக இல்லாமல் இருக்கலாம். ( இப்படி எழுதுவதில் எனக்கு கூச்சமாக இருப்பதாக நினைக்கிறேன். இந்த நினைப்புதான் இதுபோல இருக்கிற பலரிடம் என்னை நெருங்கவிடாமல் செய்கிறது.)

இன்னொரு உண்மையும் இருக்கிறது என் சொந்த ஜாதியைச் சேர்ந்த யாருமே இலக்கிய துறையில் இல்லாமல் இருப்பதுதான் ஆகப் பெரிய உண்மை. அப்படி யாராவது இருந்திருந்தால் மலைகள் இதழைக் கொண்டாடியிருப்பார்களோ?

( மேலே சொன்னது அனைத்தும் தற்போது தமிழிலக்கியத்தில் நடைபெறுகிற யதார்த்தம். இந்த யதார்த்தம் எப்போதும் எனக்கு பொருந்தாமலே போகட்டும்.)

இதுதவிர மலைகள் இதழின் தொடக்க காலத்திலிருந்து மொழிபெயர்ப்பு கதைகள் கவிதைகள் சிறப்பாக நண்பர்கள் தோழிகள் படைத்து அனுப்புகிறார்கள். மலைகளின் பலமாக அதை பலரும் குறிப்பிடுகிறார்கள்.

மலைகள் இணைய இதழ் எனக்கு இப்போது ஒரு தனித்த அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது என்பது நான் இப்போது அடிக்கடி சந்திக்கிற புதுப்புது நண்பர்களிடம் காண்கிறேன்.

மலைகள் சிபிச்செல்வன் என சொன்னால் இலக்கிய நண்பர்கள் அல்லது அவர்களின் நண்பர்கள் உடனே அடையாளம் கண்டுகொள்கிறார்கள் என்பது 100 சதவிகித உண்மையாகி வருகிறது

வழக்கம்போல என் குடும்பத்தாரின் ஒத்துழைப்பின்றி இதழை தொடர்ந்து நடத்துவது சாத்தியமில்லை என சொல்லி வழக்கம்போல தப்பிக்க நினைக்கவில்லை, உண்மையிலேயே கடந்த 5 தேதியன்ற என் மகன் அமுதராஜின் திருமண வரவேற்பிற்கு இலக்கிய நண்பர்கள் பெருமளவில் நேரில் வந்திருந்து வாழ்த்தியமை என்னைவிட என் குடும்பத்தார் அதிகமாக நெகிழ்ந்து போனார்கள். என் சொந்த பந்தங்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாக வந்திருந்து வாழ்த்தினார்கள் என் இலக்கிய நண்பர்கள்.

படைப்பாள நண்பர்கள் மொழிபெயர்ப்பாள நண்பர்கள் பதிப்பக நண்பர்கள் பத்திரிகையாளர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளை சார்ந்த நண்பர்கள் சமூக ஆர்வலர்கள் கல்விதுறை சார்ந்தவர்கள் இப்படி பல்வேறு துறை சார்ந்த நண்பர்களும் நேரில் வந்திருந்து வாழ்த்தினார்கள்.

சில நண்பர்களுக்கு தவிர்க்கவியலாத காரணங்களால் நேரில் வரமுடியாமல் ( வெளிநாட்டு நண்பர்களும் இதில் அடங்குவார்கள் ) தங்களது வாழ்த்துகளை போனில் இமெயிலில் வாட்சப்பில் முகப்புத்தகத்தில் என பல்வேறு சமூக ஊடகங்களின் வழியாக வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள் .

இவர்கள் அனைவருக்கும் என் சார்பிலும் என் குடும்பத்தாரின் சார்பிலும் நெஞ்சார்ந்த கோடானு கோடி நன்றி

Comments are closed.