உடலின் கடவுள்ஜி ( கவிதைகள் ) / ஜிஃப்ரி ஹாஸன்

[ A+ ] /[ A- ]

download (2)

உடலின் கடவுள்

எவ்வளவு குழம்பி இருக்கிறது மனம்

கல்லெறியப்பட்ட குளம் போல்

சலனங்களை உகுக்கிறது மனம்

மனத்தின் சலனத்தால்

உபாதையுறுகிறது உடல்

உடல் ஒரு கருவி

மனத்தின் கரங்களால்

இயக்கப்படும் ஒரு வெற்றுக் கருவி

மனத்திடம் தான் இருக்கிறது

உடலின் சாவி

இன்னும்

உடலின் மேன்மை

உடலின் வீழ்ச்சி

உடலின் வாசனையும்

உடலின் துர்வாடையுங் கூட

மனதிடமே இருக்கிறது

மனம் உடலின் கடவுள்

உடல் கடவுளின் சிறை

உடலின் அழிவிலிருந்து தொடங்குகிறது

ஆன்மாவின் உண்மையான விடுதலை!

2. பலிபீடம்

சுவற்றில் உறைந்திருக்கும் பல்லி

இரை தேடிப் பதுங்க

புதர்களற்ற சுவர்வெளி

தன் நச்சுப் பற்களால்

இரையைக் கவ்வும் போது

இரையின் இறுதி நேரப் படபடப்பு

பல்லிகளின் நடமாற்றமற்ற

வெற்றுச் சுவர்களில்

இன்னும் எதிரொலித்தபடியே இருக்கிறது!

••••

Comments are closed.