ஆகியின் ஏழு கவிதைகள்

[ A+ ] /[ A- ]

images (12)

சிலருக்கு (அ) பலருக்கு

இது கிராமத்திலிருந்து

நகரத்திற்கோ

நகரத்திலிருந்து

கிராமத்திற்கோ

அல்லது ஒரு நகரத்திலிருந்து

இன்னொரு நகரத்திற்குள்

செல்வது போலல்லாது

தனிவாழ்வு புவி

வாழ்விலிருந்து

மணவாழ்விற்குள்

செல்வதென்பது

சிலருக்கு

ஒரு நரகத்திலிருந்து

இன்னொரு நரகத்திற்குள்

நுழைவது போலும்

அந்தக் காதற்கவிகள்

கூறியது போல

மணவாழ்வு புவி

வாழ்வினில் வாழ்வென்பது

நரகத்திலிருந்து

சொர்கத்திற்கோ

சொர்கத்திலிருந்து

நரகத்திற்கோ

அல்லது ஒரு சொர்கத்திலிருந்து

இன்னொரு சொர்கத்திற்குள்

நுழைவதோ

அல்லது சொர்கமும்

நரகமும் கலந்ததொரு

வாழ்வில்லை போலும்

இதொரு எது அதொரு

இதெல்லாமொரு

தோற்றமயக்கமும்

மிகைநவிற்சியும் கலந்ததொரு

மாற்றுத்திணைமயக்கம் போலும்

….

அவரும் இவரும்

சிலசமயம் அவர்

புத்தம்புதிய விலை

உயர்த்தி விற்கப்படும்

இலவம்பஞ்சுத் தலையணை

மறுசமயம் மாபெரும்

தள்ளுபடியின் போதும்

வாய்பிளக்கவைக்கும் மாக்புக்

வேறுசமயம் வர்ணம் பூசி

திறக்கமுடியாவண்ணம்

இறுக்கமூடப்பட்டு

கண்கூசும் வெளிச்சத்தில்

வைக்கப்பட்டப் புட்டி

இவரோ சிலசமயம்

மூலையில் வீசப்பட்ட

கீறல்விழுந்த வெற்றுப்பூந்தொட்டி

மறுசமயம் தூசி தட்டாது

ஓரமாக ஒதுக்கப்பட்ட

மூட்டைப்பூச்சிகள் வசித்த மெத்தை

வேறுசமயம் இருட்டில்

வைக்கப்பட்டு துருபிடிக்க

எத்தனிக்கும் ஓலைச்சுவடிகள்

பதுக்கப்பட்ட தகரடப்பா

…..

இத்துணை தூரம்

குழந்தையின் உபயோகிக்கப்பட்ட

குட்டையான சட்டைத்துணிமணிகள்

வைக்கப்பட்டப் பை முதல் அலமாரியிலிருந்து இரண்டாவது

அலமாரிக்கு இடம் மாறியிருந்தது

ஒரு அலமாரிக்கும் இன்னொரு

அலமாரிக்கும் எத்துணை தூரம்.

கண்டறியப்பட்டப் பை

வெளியிலெடுக்கப்பட்டு

கேள்விகள் கேட்கப்பட்டு

பதில்கள் அளிக்கப்பட்டு

பெரிய பயணப்பைக்குள் திணிக்கப்பட்டது.

திணிக்கப்பட்டப் பை

மறுநாள் மீண்டும்

இடம் மாறியிருந்தது.

இடம்மாறியிருந்தப் பை

மீண்டும் கண்டறியப்பட்டு

கேள்விகள் கேட்கப்படாது

பதில்கள் அளிக்கப்படாது

சிறிய பயணப்பைக்குள்

திணிக்கப்பட்டது.

அந்தப்பை மறுநாள்

பெரிய பயணப்பைக்கு சிறிய

பயணப்பையிலிருந்து இடம்மாறியது.

அங்கிருந்து அது கேள்விகள் கேட்கப்படாது

பதில்கள் அளிக்கப்படாது முதல் அலமாரியில் இருத்தப்பட்டது.

இரு அலமாரிகளுக்கிடையே

நூற்றெண்பது கிலோமீட்டர்.

இடையில் மானுடர்

ஒலிகள் ஒளிகள்

சிந்தனைகள்

புகை மழை

கொசுக்கள்

மணங்கள்

அமைதி

சிற்றிடர்

பிணக்குகள்

வண்ணங்கள்

காழ்ப்பு ஆதல்

மூடுபனி இருள்

மகிழ்தல் இருப்பு

பசி

துண்டாடப்பட்டு

உண(ர்)வு மறுக்கப்பட்ட

தலையற்ற பனைகள்

ஏவிய ஏவுகணைகள்

யட்சன் யட்சினியாய்

அந்தரத்தில் கடல்மேல்

கலவி செய்கையில்

விசித்திர அமில மழை

பேயெனப் பெய்ய

புவியை வலம் வந்த

விண்மென்கலன்கள்

மெய்சிலிர்க்கின்றன

இனப்பெருக்கமுற்ற

யட்ச எறிகணைகள்

மலைகள் கடந்து

கட்புலனாகாமல்

நகரங்கள் கடந்து

மின்காந்த நிழற்பட்டையை

ஊதிப் பற்ற வைத்து

நுண்ணலைகளை

தேர்ந்தெடுத்துப் புசித்தும்

பசியாறாது பதினெட்டுத் திக்கும்

வலசை செல்கின்றன

இலக்கை நோக்கி

வலசை வருகின்றன

….

இவ்வியத்தகு பொழுதில்

மெய்மை பேணுவோர்

உண்மை சொல்கின்றனர்

தங்கள் வரலாற்றை

உறுப்புகளோடும்

நினைவுகளோடும்

நாகரிகமடைந்தோரிடம்

காவு கொடுத்தவர்கள் எஞ்சும்

இப்புண்பட்ட பொழுதில்

கட்டுக் கதையை வரலாறாக்கி

தொன்மமாக மாற்றும்

தொன்று தொட்ட

அரூப தொழில் நுட்பம்

உயர்தொழில்நுட்பத்துடன்

இரண்டறக்கலந்துவிட்ட

இப்படியும் பண்படவியலுமாவென

வியப்பூட்டும் இப்பண்பட்ட பொழுதில்

தமது வரலாறை எழுதி வைத்திராத

சமூகம் காவு வாங்கப்படுமென்று

மெய்யாகவே அவர்க ளென்றெழுதி

வாசித்து செல்கையில்

பேச்சின்மையென்றோர் எறிகணை

குரல்நாணினுள் ஏறிச் சென்று

நினைவுச் சங்கிலியை

துண்டித்து விட்டாற்போல்

….

அசரீரி

நீயோவைக் காணாது

யோநீக்கு வருத்தம்

உட்தேங்கும் வருத்தமும்

வருத்தந்தா னென்றாலும்

வெளிப்படாது உட்தங்கும் வருத்தம்

தெள்ளத் தெளிந்த வருத்தமாகாதது குறித்து

சிலர் வருத்தந் தெரிவிப்பதை

பரிசீலனைக்குட்படுத்துவதால் ஒன்றும்

இன்னொன்றும் பத்தொன்பதாகிடாது

எல்லாவற்றுக்கும் காரணம்

ஒநான் என்றொலித்த

ஒன்றை இன்றொலித்து

நாளை இன்னொன்றை யொலிக்கும்

அசரீரி எல்லாவற்றுக்கும்

காரணம் யோநீ என்றொலிக்க

நீயோ என்ன செய்வாள்

பாவம் அவளும் அதையே

முன்முடிவுகளின்றி

பின்மொழிகிறாள்

….

கொலுசொலியாடல்

நள்ளிரவில் கழிப்பறை செல்லத்தோணும்

கணத்தில் கேட்கும் கொலுசொலி

சன்னலை மூடினாலும் நிற்காதொலிக்கும்

சிலசமயம் சல் சல் சல் பிறசமயம் கீச் சல் சல் சல்

என்றொலிக்கும் கொலுசொலி கொலுசொலிதானா

அருகில் வசிக்கும் குழந்தையின் கொலுசொலியா

அவளேன் இந் நேரத்தில் நடமாடப்போகிறாள்

இன்மையில் சல சலம்பும் ஆவியின் கொலுசொலியா

அதெப்படி மேடையின்றி நின்று நிற்காது நடனமாடும்

ஆதலால் இது நிச்சயமாக சுவர்கோழியின் கீச் சல்தான்

அங்கனமெனில் நிச்சயமாக இது கட்புலனாகாக்

காற்றிலெழும் ஆவியின் கொலுசொலியில்லையா

அவ்விதமும் எவ்விதமும் இவ்விதமும்

பரிதவிக்கும் அணிற்குஞ்சின் கீச் சல்லாகவும்

இருக்கலாமில்லையா

போங்க இவா இது தூங்கா தவளையின் சத்தம்

என்றவள் தலைமுதல் கால்வரை

மூடிக்கொள்ளுமுன் கால்களை காற்றில் மிதித்தியக்கி

கண்மூடி தூங்கி என்றெழுந்தான் பசியிலும்

பேச்சொலியிலும் கண்முழித்த சக்கரச்சுட்டி

…….

Comments are closed.