நிஷாமன்சூரின் மூன்று கவிதைகள்

[ A+ ] /[ A- ]

images (13)

1)

மாமுதுகு போற்றுதும்..!

ஒரு சிறுகவிதை எழுதிவிடலாம் போலொரு
வனப்புமிகு முதுகு இவளுக்கு

ஒரு நீள்கவிதை எழுதிவிடலாம் போலொரு
வாளிப்புமிகு முதுகு அவளுக்கு

ஒரு சிறுகதை எழுதிவிடலாம் போலொரு
பிரம்மாண்ட முதுகு இன்னொருத்திக்கு

மல்லிகைப்பூச்சரம் புரளும்
மலர் முதுகென் பால்யகாலசகிக்கு

ஈரம்காயாத நீள்ரோமங்கள் தவழும்
கார்குளிர்மேக முதுகென் ரகசிய சிநேகிதிக்கு

பிடரிக்குழல்மேற் சூடியரோஜா இதழுதிர்ந்து
வியர்வையருவி மேல்மிதக்கும் பரந்தவெண் முதுகென் அணுக்கிக்கு

அன்புசூழ் மாந்தரனைவரையும் ஆராதிக்க
வான்போல் விரிமனசுகொண்ட யாம்
பின்புறமிருந்து கட்டியணைத்து முகம்புதைக்க அருள்பாலிக்கும்
மாமுதுகுகள் போற்றுதும்
மாமுதுகுகள் போற்றுதும்.

2)

போதாமைகளின் பெருநகரம்

இந்நகரம் மாறிவிட்டது
இந்நகரத்தின் அழகிகளுக்கு வயதாகிவிட்டது
இந்நகரத்தின் அடையாளச் சின்னங்கள்
சீந்துவாரற்றுச் சிதிலமடைந்து விட்டன
இந்நகரத்தின் புகழ்பெற்ற நவீன விடுதிகள்
போதைமருந்துக் கிடங்குகளாகி விட்டன
இந்நகரத்தின் எழில்மிகு பூங்காக்கள்
குடிகாரர்கள் வாந்தியெடுக்கும் கழிவுத்தொட்டியாகின

இந்நகரத்தின் கார்ப்பரேட் மஹான்கள்
ஒரு மாபெரும் கான்கிரீட் கூரையை வடிவமைத்தனர்.
அதற்குள் ஒருநாள் செயற்கைப் பூங்கா அமைக்கப் படுகிறது
மறுநாள் செயற்கை வனம் அமைக்கப் படுகிறது
அடுத்தநாள் செயற்கை மலைநகரம் நிமிர்ந்தெழுப்பப்படுகிறது
வார இறுதியில் செயற்கை பனிப்பொழிவு நிகழ்த்தப் படுகிறது
மக்கள் எல்லா இடங்களிலும் தற்படம் எடுத்து குதூகலிக்கிறார்கள்
அறிவிக்கப்படும் போட்டிகளில் உற்சாகமாகக் கலந்துகொண்டு
சிறுபரிசுகளை வென்று உளமகிழ்கிறார்கள்.
வண்ணக் கண்ணாடிகளுடன்
ஏழுபரிமாணக் குறும்படங்களைக் கண்டபடி
கற்பனை சாகசங்களில் இறும்யூதெய்துகிறார்கள்.

வாசல்களில் காத்துக் கொண்டிருந்த
வயசாளிகளில் ஒருவர்
இங்கே ஒரு பெரும் குளம் இருந்தது என்றார்.
அந்தக் குளத்தில் நீச்சல் பயின்றபோது ஏற்பட்ட
சிறுகாயத் தழும்பைத் தடவிக்கொண்டபடி
அங்கு துவைக்கவந்த காதலியை
ஆளரவமற்ற நண்பகலொன்றில் கட்டித்தழுவியதை நினைவுகூர்ந்தார்
சுற்றத்தாரை எதிர்த்து அவளைக் கரம்பிடித்து
பிள்ளைகள் பெற்று பெருவாழ்வு வாழ்ந்ததை நினைவுகூர்ந்தார்
அவள் மட்டும் உயிரோடு இருந்திருந்தால்
இப்படி கொடுநரகம்சூழ் தனிமையில் வாழ நேர்ந்திருக்காதே
எனக் கண்ணீர் உகுத்தார்.

அவரது இருக்கைக்குப் பின்புறம்
பூச்சொரிந்து கொண்டிருந்ததொரு செயற்கை நீரூற்று
அதில் பரப்பப்பட்டிருந்த ஆதிக்குளத்தில் இருந்த கூழாங்கற்களில் ஒன்று
உந்தி வெளியேறி அம்முதியவரின் குதிகாலில் தெறித்தது.
துணிகளைத் தப்பித்தப்பித் துவைக்கும் காதல் மனைவி
குறும்புத்தனமாக முகத்தில் தெறிக்கவைத்த
புடவை ஈரத்துளியைக் குதிங்காலில் உணர்ந்து
விதிர்விதிர்த்தெழுகிறார் அந்த முதியவர்.

அந்தக் கணத்தில் ஒரு வாழ்வின் முடிச்சவிழ்ந்து
ஒரு குலவையொலி அதிர்ந்தெழுந்தது.

3)

பெயர்ச்சொல்

யாரையாவது நினைவூட்டும் செயலை
யாராவது செய்கிறார்கள்

யாருடைய சாயலிலாவது
யாராவது இருக்கிறார்கள்

விரும்பாத சில பெயர்களைச்
சிலபோது கேட்கநேர்கையில் எரிச்சலுறுகிறோம்

நேசத்துக்குரிய சில பெயர்களை
சிலபோது கேட்க நேர்கையில்
புன்னகைத்து மலர்கிறோம்

மறக்க நினைக்கும் சில துரோகிகளின் பெயர்களை
யாராவது வலியவந்து நினைவூட்டுகிறார்கள்

இதயத்தைத் திருடிச்சென்ற ஒரு பெயரை
யாருடையதாகவோ எழுத நேர்கையில்
விரல்களில் சிறுநடுக்கம் பரவுகிறது

ஒரு பெருவரலாற்றைச் சுமந்து கொண்டிருக்கும் சில பெயர்களை
அந்தப் பெயருக்குரியவர் அறியாதிருப்பது
கடும் மனப்பதட்டத்தை உண்டாக்குகிறது

யாரையோ யாரோ அழைக்கும் ஒரு பெயர்
என்னுடையதாக இருக்கும்போது
யாரோ ஒருவராகக் கடந்து செல்ல வாய்க்கிறது

ஒரு நள்ளிரவில் இனி பெயர்கள் செல்லாப் பெயர்களென அறிவித்துவிட்டு
எண்களாக மாற்றிக்கொள்ள மாமன்னர் ஆணையிடுவதற்கு முன்
எல்லாப் பெயர்களையும் ஒருமுறை எழுதிப் பார்த்து விடுங்கள்

நாளை என்னுடையதென்று உரிமை கொண்டாட உங்களுக்கு
ஒரு பெயர்கூட இல்லாமற் போய்விடலாம்.

******

Comments are closed.