நெகிழன் கவிதைகள்

[ A+ ] /[ A- ]

download (15)

1)
பனியிரவின்
ஆஸ்துமா நோயாளியைப்போல
சுருதி பிசகாமல்
அதிவேகமாய் இசைக்க உனக்கு
ஒருபோதும் வராது குயிலே.
ஆயினும் நீ முயல்கிறாய்
அந்த ஆஸ்துமாக்காரன் போல.
உன் ஆயிசு முழுக்கவும்
அவன் வீட்டின்
பூசனம் பிடித்த முதுகுக்குப் பின்னால்,
கருவேல மரத்தின் கைகளில் அமர்ந்துகொண்டு
சதா கத்திக்கொண்டே இருக்கிறாய்.
மனம் தளராமல் கத்து, கத்திக்கொண்டேயிரு.
நான் வருவேன்
ஒருநாள் அல்லது ஒருநாள்
உன்னிலிருந்து வெளியேறும்
அந்த சீக்கி சத்தத்திற்கு
ஒரு உதட்டு முத்தமிடுவேன்.

2)
உருண்டு திரண்டிருந்த
வாழ்வின் பிருஷ்டத்தை நாவால் சுத்திகரித்தேன்.
தோல் பற்றி எரியுமளவுக்கோர்
சூடான முத்தமிட்டேன்.
அதன்பின்
நேரம் போனதும் தெரியவில்லை
மரணம் வந்ததும் தெரியவில்லை.
உயிர் துறந்த பின்னும்கூட
வாழ்வின் வெளிர் கூந்தலை
விடாப்பிடியாக பிடித்துக்கொண்டு
இயக்கத்தை நிறுத்தாமல்
புணர்ந்துகொண்டிருக்கிறேன்.
வலி தாளாது புதைகுழியிலிருந்தபடியே
அழுகிறது
ஓ…வென்று அழுகிறது.
அதன் அழுகுரலோசை என் எலும்புக் கூட்டின்
இண்டு இடுக்கெல்லாம் புகுந்து
கிச்சுகிச்சு மூட்டுகிறது.
என்ன செய்ய
எனக்கு சிரிப்புதான் வரமாட்டேன் என்கிறது.

3)
இயந்திரத்தின் பற்சக்கரங்களுக்கிடையே
என் முழுக் கை சட்டையின் நுனி சிக்கிக்கொள்ளும் ஓர் நாளில்
இருக்குமிந்த ஒரேயோர் சட்டையை
சிறிதளவும் கிழிசலுறாமல்
மீட்டாகவேண்டும்.
சட்டை மீட்கும் முனைப்பில்
தன்னை அடகு வைத்த கைக்காக
நானே கூப்பாடுபோடவேண்டும்
நானே கதறியழவேண்டும்
நானே மூர்ச்சையுறவேண்டும்
நானே..
நானே… அய்யோ.. நானே

4)
பசிக்கிறதென்று
கடையில் ஒரேயொரு தோசை ஆர்டர் செய்தேன்.
பாயைப்போல சுருட்டி
வட்டலில் வைத்துப்போனார் கடைக்காரர்.
சாம்பரில் தொட பிய்க்கையில்
தோசை நிறைய துளைகள் தெரிந்தன
ஒவ்வொரு துளையினுள்ளிருந்தும்
ஒவ்வொரு தலை எட்டிப்பார்த்தது
எனக்குத் தெரியும் அவையெல்லாம்
விடாப்பிடியாய், களைப்புறாமல், இளைப்பாறாமல் துரத்தும்
துயரின் தலைகளே.
ஆனால் பார்க்க மட்டும் ஒரு சின்ன குட்டியான ஈயின் தலையைப்போல காட்சியளிக்கும்.

5)
அவள் சிரிக்கையில்
மாதுளை முத்துகளாய் கொட்டுகின்றன.
அவளழும்போதோ
நீர்மக் கம்புகளாய் உதிர்கின்றன.
ஒரு ஜோசியர் சொன்னார்
அவள் முன்பொருகாலத்தில் தானியநிலமாய் இருந்தாளாம்.

6)
அம்மா ஒரு கோடை நாளில் மாய்ந்தாள்.
ஒரு கடிதம் வழி கூறினாள் இப்படியாக.
“அன்பு மகனே, அன்பு மகனே
என்றென்றைக்கும் நலமாய் இரு.
நம்பிக்கையாய் செயற்படு.
ஒருபோதும் சோர்ந்துவிடாதே.
ஒன்றில் மட்டும் தெளிவாகு,
வாழ்வென்பது சற்று கசப்பான உண்மை”.
முன்வாசலினூடே எனது சடலம் கொண்டுசெல்லப்பட்டதும்,
நான் விட்டுச்சென்ற அவ் வெற்றிடம் நிரப்ப
பின்வாசலினூடே
வேறொரு புதிய அம்மாவை உன் அப்பா கொண்டுவந்து நடுவார்
சென்ற ஆண்டு நட்ட
தக்காளிச்செடியின் நேர்த்தியில்.
அதற்கு உன் அப்பா
தொடர்ச்சியாக நான்கு நாள்
அயராது நீரிறைத்தார்.
பின்நாட்களில் சோம்பல் அவரை தொற்றிக்கொண்டது.
அச்செடியும் பழுப்பேறி நிலைகுலைந்து மாய்ந்தது.
அதை நன்கு உற்றுப் பார்த்திருப்பாயானால்
அதிலுன் அம்மாவின் முகச் சாயையை அறிந்திருப்பாய்.
இப்போது வந்திருக்கும் அவள்
எனைக்காட்டிலும் வாளிப்பான இளமையான ரோஜாச்செடியின் வடிவுடையவள்.

7)
1.
பொழுது சாய்ந்துவிட்டிருந்தபோது
மழை பெய்ய ஆரம்பித்தது.
அப்போது தலையை முந்தானையால் போர்த்தியபடியே சாவகாசமாய் நடந்துவந்து
நானொதுங்கியிருந்த
அந்த அங்கன்வாடியின் பட்டாசாலைக்குள் நுழைந்தாள் அப்பெண்.
ஒருமுறை என்னை பார்த்துவிட்டு
தலையை வேறு திசைக்கு திருப்பி
கூரையிலிருந்து ஊற்றிக்கொண்டிருந்த
மழைக்கு
தன் மருதாணிச் சிவப்பேறிய கையை நீட்டினாள்.
மழைநீர் பட்டுப் பட்டுத் தெறித்தது.
என்னிலிருந்து ஐந்தடி இடைவெளியில் நின்றபோதிலும்
அவள் கைபட்டுத் தெறித்த துளிகள் என்மீது விழுந்தன.
என் சூடான உணர்ச்சியின் மீது விழுந்தன.

8)
எனது Tvs50இன் பழுதுபட்ட தலைவிளக்கு எப்போதாவது அதிசயமாய் ஒளிரும் சுபாவமுடையது.
நேற்றிரவு
இருபக்கமும் புளியமரங்கள் அடர்ந்த சாலையின் கும்மிருட்டில் விரைந்தபோது
சக்கரங்கள் மழை தேங்கிய
ஓரடிக் குழிக்குள் இறங்கி ஏறியதும் சட்டென ஒளிர்ந்து
சாலையின் கருத்த உடலில் மஞ்சளொளியை பீய்ச்சியடித்துக்கொண்டே வந்தது.
ஒருவழியாய் இருளை விலக்கி விலக்கி
வீடடைந்ததை எண்ணி பெருமூச்செறிந்துகொண்டே
நிறுத்தியை இடுகையில்
என்றைக்குமல்லாது
இன்று பேசிற்று எனதருமை மோட்டார் சைக்கிள்.
ஓ..என் ஓனரே கவனித்தீரா
எனக்கு முன்பாக ராஜநடையிட்டு
சாலையை கடந்த அந்த செவலை நாயை,
அதன் ரேடியம் கண்களை.
எனை நோக்கிப் பார்வையை எறிந்ததே அது,
அப்போதுதான் என் தலைவிளக்குக்கு முழிப்புதட்டியது.
என் மரியாதைக்குரிய ஓனர் அவர்களே
உங்களுக்குத் தெரியுமா
அதன் ரேடியம் கண்கள்
எத்தனை வசீகரமானதென்று.
எனக்காக நீங்கள் உங்கள்
காய்ப்புக் காய்ச்சிய விரல்கொண்டு
மிகமிக மென்மையாய்
அதன் ஒளிர்கண்களை நோண்டியெடுத்து
எனக்கு பொருத்தவேண்டும் என்று
மன்றாடிக் கேட்கிறேன்.
செய்வீர்களா, இந்த ஒன்றையேனும் எனக்காக.

9)
மரத்திலிருந்து உதிர்வன.
அவ்வப்போது
சில இலைகள்,
சில பூக்கள்,
சில கனிகள்
மற்றும்
சில பறவைகள்.

10)
யுகயுகமாய்
ஆடையரணுள்
சிறைபட்டுக்கிடக்கும்
பாக்கு நிறப் பல்லி முட்டைகளே.
பற்கடிப்பின்போது திமிரும்
மந்திர மணிகளே, செல்லங்களே.
எலும்புகள
தளதளவென வளர்ந்த கைவிரல்கள்
காற்றில் நீந்தியபடி அழைப்பது உங்களைத்தான்.

••••

Comments are closed.