வானம் பூனைக்குட்டியாகி கடலை நக்குகின்றது / அனாரின் கவிதை உலகம் – முனைவர் சு. செல்வகுமாரன்

[ A+ ] /[ A- ]

download (18)

ஈழத்தமிழ் இலக்கியப் பரப்பில் இஸ்லாமியப் பெண்களின் கவிதை எழுத்தானது சமீபகாலமாக அதிகமாக வெளிவருவதை பார்க்க முடிகின்றது. குறிப்பாக அனார் பஹிமாஜஹான், ஸர்மிளா ஸெய்யித் போன்றோரும் அவர் தம் எழுத்துக்களும் குறிப்பிடத்தக்கனவாகும். ஈழத்தில் நடைபெற்றுள்ள இனஅழிப்பு போரும் அவற்றிற்கு எதிராக தமிழின விடுதலை இயக்கங்கள் நிகழ்த்தியுள்ள எதிர் நடவடிக்கைகளும் இத்தகையதான ஒரு சூழலை அங்கு உருவாக்கியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

அனாரின் கவிதைகள் ஈழத்தின் பிற பெண் கவிஞர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது. அவை போர் சார்ந்த அரசியலை பேசியிருப்பினும் அதனை தாண்டியதாக காதலை, காமத்தை, புணர்தலின்பத்தை வெவ்வேறு நிலைகளில் அவர் ரசித்தும் சுவைத்தும் சொல்லும்விதம் பெண் உணர்வை கட்டுப்படுத்துகின்ற ஆணாதிக்கத்திற்கு எதிராக தம் வேட்கையை பதிவு செய்வதன் மூலம் பெண் அரசியலை முன்னெடுப்பது என்றே சொல்லவேண்டும். அதனை தாம் விரும்பியபடி வெளிப்படுத்துவதற்கு அவருக்கு படிமங்களும், உவமைகளும், குறியீடுகளும், தொன்மங்களும் அவருக்கு வசப்பட்டிருக்கின்றன. ஆக சமூகத்தில் பெண்ணை நிலைநிறுத்த முயலும் அனாரின் அடையாள அரசியல் முகம் இக்கவிதைகளில் திடமாகவும் தெளிவாகவும் புலப்படுகின்றன.

“சுலைஹா” ஒரு இசுலாமிய தொன்மம். சுலைஹா, யூசுப் எனப்படும் இறைத்தூதரைக் காதலித்த எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒரு அமைச்சரின் மனைவி. கவிதையில் ஒரு இசுலாமியப் பெண்ணின் அடையாளமாக ஒலிக்கும் சுலைஹாவின் குரல் தன்னைப் பற்றி சொல்லுகின்ற போது நான் அர்த்தங்களுக்கு வெளியே வளர்பவள், நெருப்புப் பொறிகளால் உருவானவள், தாவுகின்ற மின்னொளி, மலைகளைக் கட்டி இழுத்து வரும் சூனியக்காரி ஒளியை அணிந்திருப்பவள், கடந்த கால சாபங்களிலிருந்து மீண்டவள், எதிர்காலச் சவால்களை வென்றவள் உப்புக்குவியலைப் போல ஈரலிப்பானவள் என்பதாக தம்மை உருவகப்படுத்திக் கொள்ளும் சொற்கள், பெண்ணின் ஆற்றலை அடையாளப்படுத்திக் கொள்ள விளைகின்ற இஸ்லாமியப் பெண்ணுலகம் மற்றும் பொது நிலையிலான பெண்ணுலகம் என்பதாக இருநிலைகள் சார்ந்து இயங்குகின்றது. அழகிய பெரியவனின் கவிதை குறித்து பேசும் தமிழச்சி ”அழகியபெரியவனின் கவிதைகளில் ஒரு நுட்பமான அரசியல் ஊடுருவி நிற்க, தகிக்குமொரு நெருப்புக்குரல், டெமாக்ளஸின் கத்தியாய், ஆதிக்க வர்க்கத்தின் தலைமீது எப்பொழுதும் தொங்குகின்றது” என்பார். (சொல்தொடும் தூரம், ப-23.) அந்த கத்தி அனாரின் கவிதைகளில் இஸ்லாமிய ஆணாதிக்கப் புள்ளியை குறிபார்ப்பதை உணரமுடிகின்றது.

“அரசி” கவிதையில் பெண்ணை ஒரு அரசியாக உருவகப்படுத்தும் அனார் ஆணின் அதிகாரத்தை பிடுங்குகின்ற வகையில் சொல்லைத் தேர்வு செய்வது விசித்திரமானது. அனாரின் அரசி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவளும் ஆண்கள் விளங்கிக் கொள்ளும் அர்த்தப்பாடுகளுக்கு முரணானவளும் ஆவாள். மட்டுமில்லாது மகாராஜாக்களின் அரியணைக்கு சவால்விடும் பேரரசியாகவும், கட்டளையிடப் பிறந்தவளாகவும் விளங்குவதென்பது பெண் எழுச்சியின் அடையாளங்களாகின்றன.

‘ஆணையிடுகிறேன் மந்தைகளுக்கு
குகைகளிலிருந்து தப்பிச் செல்லுங்கள்
ஆணையிடுகிறேன் சூரியனுக்கு
ஓர் இனத்தையே விழுங்கிக் கொண்டிருக்கும்
சமையலறையின் பிளந்த வாயை பொசுக்கிவிடுமாறு
பெரும் மலைகளை நகர்த்தி தளர்ந்துவிட்ட
மூதாட்டிகளின் பாரித்த பெருமூச்சுக்களை
வருடி விடுமாறு பறவைகளைப் பணிக்கிறேன்”
(எனக்கு கவிதை முகம், ப- 28)

கவிதை ஆணின எதிர்ப்பைக் கடுமையாக முன்வைக்கும் அதே வேளை பெண்ணினத்தை ஆற்றுப்படுத்த பறவையை வருடிவிட பணிப்பது ஒரு தாய்மையின் இதமாக உள்ளது.

இன்னொரு கவிதை பெண்ணின் குரவை ஒலியை அவளது போர்வாளாக, முழக்கமாக மீள அடையாளப்படுத்துகின்றது. பெண்ணின் மரபிலிருந்து நவீனப் போர்க்குணம் மிக்கப் பெண்ணை தோற்றுவிக்கின்ற ஒரு முயற்சியாக, மரபுசார் நம்பிக்கை மிகு பெண்ணின் குரலாக அது ஒலிக்கின்றது. நான் என்னுடைய வாளைக் கூர் தீட்டுகின்றேன். பாட்டம் பாட்டமாய்ப் பெண்கள் குலவையிடும் ஓசை பேரிகைகளாய்க் கேட்கின்றன. நான் சாம்ராஜ்ஜியத்திலிருந்த படியே கைகளிரண்டையும் மேலுயர்த்திக் கூவுகின்றேன், நான் நான் விரும்புகின்றபடியான பெண், நான் எனக்குள் வகிக்கும் அரசி என்பதான பதிவுகள் பெண் சுதந்திரத்தின் கட்டற்ற விடுதலை வெளிப்பாட்டை வெளிப்படுத்துவனவாய் உள்ளன.

“பெண்பலி” கவிதை உடல், உள்ளக்குமுறல், உயிர்த்துடிப்பு அனைத்தும் இருபாலருக்கும் ஒரே விதமெனினும் பெண் என்பதனாலேயே எந்த மரியாதையும் இருப்பதில்லையெனவும், என் முன்தான் நிகழ்கின்றது என் மீதான கொலை என்றும் பெண் திட்டமிட்டு அவமதிக்கப்படுகின்ற ஆணாதிக்க நிலையினை விவரிக்கின்றது. மேலும் அனாரின் கவிதைகளில் இரண்டு மையங்கள் செயல்படுகின்றன. இரண்டும் ஒன்றுக்கொன்று முழுமைப்படுத்திக் கொள்ளும் மையங்களாகும். ஒன்று பெண் இருப்பின் அனுபவங்களை மையமாகக் கொண்டது. இதில் காதலுணர்வு முதன்மை பெறுகின்றது. காதல் உணர்வில் நான் என்னவாக இருக்கிறேனோ அதுவாக ஏற்றுக்கொள் என்று பெண்ணை முதன்மைப்படுத்துகின்றது. இன்னொன்று அதைப் பொருட்படுத்தாத சகத்தோழமையின் நிலைப்பாட்டை விமர்சிக்கின்றது.

காதலுணர்வின் பல கோணங்களை பேசும் அனாரின் கவிதைகளில் பெண் ஆதரவுக்குரல் சார்ந்த விமர்சனப் போக்கினையும் தெளிவாக காணலாம். அவரின் கவிதைகளில் இடம்பெறும் நுட்பமான அரசியல் என்று கூட இதனை நாம் அடையாளப்படுத்தலாம். காலங்காலமாக பல பெண்ணியக் கவிஞர்களால் இவை தொடர்ந்து பேசப்பட்டே வந்தாலும் அனாரின் இன்னொரு பின்புலத்தில் இதனை முதன்மைப்படுத்த விளைகின்றார்.

அனாரின் “மேலும் சில ரத்தக் குறிப்புகள்” கவிதை ஓரு பெண் மாதம் தவறாமல் ரத்தத்தைப் பார்த்து பழக்கப்பட்டிருந்தாலும், குழந்தை விரலை அறுத்துக் கொண்டு வருகையில் ஒரு பெண் முதல் முறையாக ரத்தத்தைப்பார்ப்பது போன்று அதிர்ச்சியுறுவதாகச் சுட்டி கேள்வி எழுப்புகின்றார். ரத்தம் கருணையை, பரிதவிப்பை, இயலாமையை வெளிப்படுத்துவதனையும் கவனப்படுத்துகின்றார். இரத்தம் குறித்த விவாதத்தை கவிதையிலே நிகழ்த்தும் அனார், இறுதியாகக் கல்லறைகளில் காய்ந்து கொண்டிருக்கும் இரத்தம் சாவின் தடயமாய் என்னைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பதன் மூலம் பெண்ணுக்கும் ரத்தத்துக்குமான நெருக்கத்தை புலப்படுத்தும் அதேவேளை, அதனை சாவின் தடயமாய் அடையாளப்படுத்துவதும் பெண் அழிப்பு நோக்கில் முக்கியத்துவம் பெறுகின்றன. மட்டுமின்றி அனார் ஒரு ஈழத்துக் கவி என்ற நிலையில் அதனை நாம் இனஅழிப்பாகவும், இஸ்லாமியர் என்ற நிலையில் இஸ்லாமிய இன ஒடுக்கு முறை சார்ந்ததாகவும் கூட எண்ணிப்பார்க்கத்தக்கனவாகும்.

பெண் எழுத்தியல் பரப்பில் பெண்களை மறுப்புக்குள்ளாக்கிய காதல், உடல், உள்ளம் சார்ந்த விஷயங்களை அனார் தன் கவிதைகளில் தீவிரமாகவும், யதார்த்தமாகவும் அழுத்தத்துடன் பேசியுள்ளார்.

‘மரம் முழுக்கக் கனிகள் குலுங்கும்
உச்சாணிக் கொம்பில்
மயக்கிப் படமெடுத்து ஆடுகின்றாய்”
(எனக்குக் கவிதை முகம், ப – 19.)

‘வானம் பூனைக்குட்டியாகி
கடலை நக்குகின்றது”
(எனக்குக் கவிதை முகம், ப – 19.)

என்பன அனாரின் கவிதை முகமாய் ஒளிர்ந்து ஆணை தரிசிக்கச் செய்கின்றன.

“உரித்தில்லாத காட்டின் அரசன்” உன்னிடம் இருக்கின்ற இறக்கைகளால் என்னை இடுக்குகளிலும் கவ்விப் பறக்கின்றாய். காடு முழுவதிலும் நம் கவிதைகள் மேய்கின்றன. உள் நுழைந்தவனின் பிரகாசமும் பாடலும் ரகசியப் பூட்டுக்களை வெது வெதுப்புடன் திறக்கின்றன. அரசன் கீறி விட்ட காயங்கள் என் காடெங்கும் பூப்பெய்கிறது கமழும் அஸ்த்தமனம் வரை, என்று புணர்தலின் உணர்வினை பதிவு செய்கின்றது. “மின்னல்களைப் பரிசளிக்கும் மழை” கவிதை மழையாய் குளிர்வித்தன எனக்குள் உன் பேச்சு. ஈரச்சிதறல் தெப்பம் புதுமையை மொழிபெயர்ப்பது போல பொழிகின்றாய். ஓயாத பரவசமாய் கோடைமழை அடைமழை. எங்கிலுமாய் பித்துப் பிடித்து பாட்டம் பாட்டமாய் பெய்யும் மழை. பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு சமயத்தில் எனக்கு அது மின்னல்களைப் பரிசளிக்கின்றது. மழையின் வாடை உறைந்திருக்கும் ராஜவனமாக பசுமையின் உச்சமாகி நிற்கிறேன் நான். வேர்களின் கீழ் வெள்ளம். இலைகளின் மேல் ஈரம். கனவு போல் பெய்கின்ற உன் மழை என முடிவுறும் அந்தக் கவிதையும் புணர்ச்சி, தொடுதல் உணர்வுசார் இன்பத்தை அணு அணுவாக ரசித்து சொல்லுகின்றது. “கவிதை தனக்கான அழகியலோடு வாழ்வின் அழகியலையும் முன்வைக்கின்றது. இவை ஒரு பெண்ணுக்குள் கங்குகளாய் மின்னிக் கொண்டிருக்கின்ற அகத்தினை வெளிக்காட்டி பரவசப்படுகின்றது. ‘ஒரு உண்மையான கவித்துவக் குரல் தனதேயான பார்வையை, அனுபவத்தை, வெளியிடும் இயக்கத்தில் தனதேயான சொல் முறையையும், சொற்சேர்க்கைகளையும் உவமைகளையும் பிறப்பித்துக் கொண்டு செல்கிறது” (என்பார்வையில் கவிதைகள், ப – 60) என்னும் வெங்கட்சாமிநாதனின் கருத்து இங்கு ஒப்புநோக்கத் தக்கதாக அமைகின்றது.

பெண் எழுத்தின் பன்முகப் பதிவாக அவர்களின் இன்பங்களை, துன்பங்களை, கொண்டாட்டங்களை, காதலை, அழகியலை, புணர்ச்சியின்பத்தை வெளிப்படுத்தும் அனாரின் “முதல் சுவை” தொன்மம், படிமக் குறியீட்டின் மூலமாகவே பேசுகின்றது. கவிதையின் மொழிப்பிரயோகம் அழகியலின் உச்சத்தைத் தொட்டுச் செல்கின்றது.

‘மாய லோகத்தில் வெள்ளிமலை
உச்சிகளைக் காண்பித்தாய்.
என் வரிக்குதிரைகள்
அங்கு தான் இளைப்பாறுகின்றன.
மலை உச்சிகளுக்கப்பால்
அவதாரில்… பறந்த ராட்சத ராஜாளிகள்
நீயும் நானும்”
(பெருங்கடல் போடுகிறேன், ப – 41)

என்பதாக தொடரும் பாலியல் சார்ந்த படிம அழகியலின் மூலம் வாழ்வின் தரிசனத்தை முழுமையாய் காட்சிப்படுத்துகின்றது. மேலும் ஏவாளின் உடல்கள் முதல் சுவையுடன், முதல் மொழியுடன் அமிழ்கின்றன என்னும் தொன்மத்தை நினைவு படுத்துவதோடு நாக்குத் தீச்சுவாலையாகப் பற்றி எரிகின்றது என்பனவும்; அனுபவிப்பில் அடங்கிப்போகின்ற பாலியல் உணர்வின் தன்மையினை உணர்த்துகின்றது. சாத்தானின் கோட்டைச் சுவரில் நெருப்பின் வெப்பம். கனியின் வாசனை மீண்டும் என்பதாக பழங்கள் தேடி அலையும் வண்ணக்குருவியாய் மீண்டும் மீண்டுமாய் புணர்ச்சியின் சுகம் தேடி அலையும் மனதினை இக்கதையில் அனார் சித்திரப்படுத்துகின்றார்.

download (19)
“மருதாணி இளவரசி”யும் புணர்ச்சி இன்பத்தை குறியீடாய் விவரிக்கின்ற கவிதையாகவே தொழிற்படுகின்றது. இரண்டு உள்ளங்கைகளிலும் மருதோன்றிக் காடுகளை விரித்துக் காட்டுகிறாய். விரல்களில் ஊன்றிப் பதிந்த சிவப்புப் பயத்தம் விதைகளை கொறிக்கும் குருவிகளின் கீச்சொலிகள் உரத்து மோதுகின்ற வேளையில் திருப்பி கைகளை மடித்து மூடுகின்றாய். மருதோன்றிக் கைகளில் மறைந்துள்ள சாத்திரக் குறிகளை நீ உறங்கும் வேளை வாசித்தறிகிறேன். மருதாணிச் சாயமேறிய கைகளில் ஒளிந்து கொள்ளத்தக்க ரகசியத் துளைகள் உள்ளன. மலைப்பாம்பு மண் குவியலில் ஓய்வெடுக்கிறது என்பதாக நகரும் கவிதையில் கவிஞனைப் போலவே நாமும் மூழ்கித்திளைக்கவும் தரிசிக்கவும் முடிகின்றது. கவிதையை வழிநடத்துவது அதன் கலைத்துவம். அந்த கலைத்துவமே கவிதையை முழுமைப்படுத்துகின்றது. இவையே கவிதையின் சொற்களை நீக்கிவிட்டு நம்மை வாசிக்க அனுமதிப்பதில்லை. ஒருவேளை நாம் அவ்வாறு செய்வோமாயின் கவிதையின் கருத்து சிதைவதோடு அதன் வடிவமும் கலைத்துவமும் சிதைந்து கவிதை தன்மையை இழக்கின்றது.

வாழ்க்கையையும், இலக்கியத்தையும் ஒரே நேர்கோட்டில் நிலை நிறுத்தும் புதுமைப்பித்தன் ‘இலக்கியத்தைப் பற்றி விஸ்தரிக்கலாம் விவாதிக்க முடியாது சூத்திரத்தால் விளக்க முடியாது. தாக்கத்திற்கு அடங்கியதல்ல. சிருஷ்டி வகையே அப்படித்தான். தாக்கத்தின் வழியாக இலக்கியத்தைப் பார்க்க முடியாது. இலக்கியம் சிருஷ்டியின் மேதைமையுடன் எதிரெதிரான விஷயங்களை உள்ளடக்கியிருக்கலாம். தாக்கம் ஒரு படிக்கட்டு வழியாக, ஒரு பரிசோதனை வழியாக விஷயங்களை நோக்க முயலுகிறது. அதற்கு ஒன்று சரி என்று பட்டு விட்டால் மற்றவை இருக்க நியாயமில்லை, இருக்காது என்ற கொள்கை. ஆனால் இந்த வாழ்க்கை அவ்வளவு லேசான கட்டுக்கோப்பில் சிருஷ்டிக்கப்படவில்லை. தாக்கத்தின் பிரியமான அந்தரங்கமான கொள்கைகளை சிதறடிக்கும்படி வாழ்க்கை இருந்து வருகிறது. அதே மாதிரிதான் இலக்கியமும். வாழ்க்கைதான் இலக்கியம், இலக்கியம் தான் வாழ்க்கை” (இலக்கியத்தின் இரகசியம், ப – 39) என்று குறிப்பிடுவது சிந்தனைக்குரியது.

‘கவிதையை அனுபவிப்பதற்கு நமக்குத் தேர்ந்த ஓர் உள்ளம் வேண்டும். சில அபூர்வ, புதிய சொல்லிணைவுகள், தரிசனங்கள் மூலம் மின்னல் தெறிப்பில் தெரிந்து மறையும் வனப்பிரதேசம் போல கவியின் உள்ளத்தைக் கண்டு கொள்ள நேர்கிறது. கவியின் பால் ஈர்க்கப்பட்டு, கவியின் ஒரு கவிதைக்கும் மற்றொரு கவிதைக்குமிடையே உள்ள தனிப்பட்ட தொடர்புகள் மூலம் களிப்பின் பிரத்யேக உலகத்தின் முழுமையைக் கவிதைகளுடனே காண இயல்கிறது. இக்காட்சியால் கவியின் பிரதேசத்திற்குள், தன் தோட்டத்திற்குள் அல்லது கானகத்திற்குள் உலாவுவது போல வாசகன் சுயாதீனம் கொள்ள நேர்கிறது இதுவே கவிதை வாசிப்பு” (குட்டிரேவதி, பூனையைப் போல அலையும் வெளிச்சம், ப – 4) என்னும் தேவதேவனின் குறிப்பும் முக்கியத்துவம் பெறுகிறது. இக்கூற்றுகள் கவிதையின் அழகியலை முழுமையாகப் பருகிக்களிக்க நம்மை வற்புறுத்துகின்றன. அதற்கு வாசகனும் ஒரு விதத்தில் தேடுதல் உணர்வுடைய, கலையை உள்வாங்கிக் கொள்ளக் கூடிய ஒரு கலைஞனாகத் திகழும் பட்சத்திலேயே அது சாத்தியப்படுகின்றது.

அனாரின் எலுமிச்சை நிறப்பூ, கறிவேப்பிலை மரத்தில் அன்பைப் பழகுதல், குடுவையில் நிறையும் இரவு, சந்திரகிரகணத்தின் ஸர்ப்பம், நீலத்தேன் உள்ளிட்ட பல கவிதைகள் மேற்சுட்டிய நிலையில் பாலியல் உணர்வு சார்ந்த கவிதைகளாக அதே நேரத்தில் கவிதைக்கான செய்நேர்த்தியும், உவமை, உருவகம், படிமம் உள்ளிட்ட அழகியல் கூறுகளாலும் நிரம்பிக்கிடப்பவை. மட்டுமல்லாது பெண்ணுடலை, பெண்மொழியை, பெண்உணர்வை வெளிப்படுத்துவதன் மூலம் பெண் அரசியலை, பெண் விடுதலையை அவை பேசுவது முக்கியமானதாகும். இன்றைய பகலின் நிறப்பொலிவை காதல் நிரம்பிய குரலாய் உஷ்ணமடையச் செய்கின்றாய். முற்றிய கதிர்களாய் தலை பூத்த காதலை தங்கக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தேன். நாகப் புள்ளிகளிலிருந்து கிளம்பி வீசியது மணம். மரைகளின் கொம்பு வரிகளை என் தோலில் எழுதுகிறாய். மலை உச்சிகளின் மருத மரங்களைத் தாண்டி வெள்ளைக் காளான்கள் பூத்த வானில் மின்னல் கிளைகளை ஒடித்து வீசி மேக கருஞ்சுவர்களுக்கப்பால் மனோரதிய நிறக் குழைவுகள் சௌந்தரியமாய் மிதக்கும் ஓரிடத்தில் என் உதடுகள் ருசி ஏறி கூவுகிறாய் நீ என் பெயரை என்று கவிதை மனிதனின் உணர்வினை முழுமையாக வெளிப்படுத்துகின்றது.

காதலின் தலை சாய்தலாய் தொடரும் காமத்தின் கதைகளை இங்கு வர்ணனையாய், காட்சிப் படிமமாய் அனார் சித்திரப்படுத்துகின்றார். இக்கவிதையில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு சொற்களும் நவீன கவிஞர்கள் எல்லோரின் பேனாவுக்கும் கிடைத்தற்கரியதாகவே கருதமுடிகின்றது. ஆயினும் அனார் இச்சொற்களை அதிக சிரமம் எடுத்துத் தேடியதற்கான அத்தாட்சிகளையும் காண முடியவில்லை. அது அவருக்கு வானவில்லின் வண்ணங்களாய் இயல்பாகவே காணக்கிடைப்பதை கவிதையினை வாசிக்கின்ற போது நம்மால் எளிதில் உணர முடிகிறது. கவிதை அனாரை உணர்வு சார்ந்து ஆழ்கின்றது.

“கறிவேப்பிலை மரத்தில் அன்பைப் பழகுதல்” குறியீடாக தொழிபடுகின்ற ஒரு மாயாஜாலக் கவிதையாக விளங்குகின்றது. கொழுத்த மழைக்காலத்தின் பிறகு செழித்து அடர்ந்திருக்கும் கறிவேப்பிலை மரத்தினை பார்த்துக் கொண்டிருக்கிறேன் அன்பின் பெருவிருட்சமாக. கறிவேப்பிலையை அவரவர் விருப்பங்களுக்கு ஆய்ந்து செல்கின்றனர். இலைகள் மணமாகவும் ருசியாகவும் இருப்பதில் மகிழ்வுடன் என்று நீளும் இந்த கவிதை பெண்ணை பாலியல் ரீதியில் மட்டும் பயன்படுத்திக் கொள்கின்ற ஆணின் மன உணர்வினை கறிவேப்பிலையை குறியீடாகக் கொண்டு உணர்த்த விழைகின்றது. மேலும் விவரம் அறியாதவர்கள் திருடுகின்றனர். கந்துகளை முறித்து விடுகின்றனர். குருத்து இலைகளை ஆய்கின்றனர். குருத்துக்கள் எளிதில் வாடிவிடக் கூடியன. பேராசை மிக்க வியாபாரி வருகிறான். அவனது தோற்றத்தில் பேச்சில் எச்சரிக்கை இருக்க வேண்டும். எந்த இலையையும் விடாமல் உருவிச்செல்வதே அவனது குறி என்னும் கவிதைமொழியும் பெண்ணிடம் உடல், உணர்வு சார்ந்து நிகழக்கூடிய சுரண்டலை, உறவு, பொருளியல் நிலையில், கையாளும் முறைமை சார்ந்து மாறுபடும் பயன்பாட்டு அணுகுமுறையின் தன்மைகளும் இதனால் பெண் சந்திக்கின்ற சுக துக்கங்களையும் இன்னும் வேறுபட்ட முகங்களையும் கவிதை தெளிவுபட பேசுகின்றது.

‘பின்பு
அதே மரம்
அவனே வியந்து மிரளும் அளவுக்கு
துளிர்த்து அடர்ந்து செழித்துவிடும்
எதையுமே இழக்காத மாதிரி
கறிவேப்பிலை மரக்கந்துகளில்
சிறுகுருவிகள் அசைந்து விளையாடின
இலைகளுக்குள் புகுந்து மறைந்து
தாவித்தாவி ஏதோவெல்லாம் பேசின
மரத்தின் ஒளிரும் முகம்
பளிச்சிடும் பிரகாசம்
வேறு ஒரு போதுமே காண முடியா
புது அழகுடன் இருந்தது” (பெருங்கடல் போடுகிறேன், ப-48)

கவிதையில் பாலியல், புணர்ச்சி உள்ளிட்ட எந்த சொல்லுமே இடம்பெறச் செய்யாமல், முற்றிலும் நுட்பமான குறியீட்டு சொற்களின் மூலம் வாசகனை கண்டடையச் செய்கின்ற இந்த கவிதையை ஒரு சிறந்த கவிஞனால் மட்டுமே உருவாக்க முடியும். “இனி அவன்” திரைப்படம் குறித்து பேசும் ஷோபாசக்தி ‘யாழ்ப்பாணத்தைக் களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படத்தில் ஓர் இராணுவத்தினனைக் கூடக் காண முடியவில்லையே என்ற கேள்வி எனக்கும் முதலிலிருந்தது. ஆனால் படம் முடிந்த போது படத்தின் ஒவ்வொரு சட்டகத்திற்குள்ளும் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரின் பிரசன்னம் இருப்பதை நான் உணர்ந்தேன். தணிக்கை விதிகள் கேவலம் சட்ட வல்லுநர்களால் உருவாக்கப்படுபவை. ஓர் அசல் கலைஞனால் தனது நுட்பமான சித்துக்கள் மூலம் அந்த விதிகளை நொறுக்கிப் போட முடியும்” என்பார். (முப்பது நிறச்சொல், பக் – 15,16) அந்த சித்து வேலையினையே உருவம், உணர்வு, படிமம், கருத்தியல் என்னும் அழகியல் பொருட்களின் மூலம் அனார் தம் கவிதைகளில் விரித்துச் செல்கின்றார்.

‘கனவுகளின் பாளைகளில் சேரும்
கள் என
பொங்கும் இவ்விரவை
நீ கொஞ்சமும்
நான் கொஞ்சமும்
குடுவையில் பிடிக்கலாம்
நிறையும் வரை” (பெருங்கடல் போடுகிறேன், ப – 54)

அனாரின் கவிதை குறித்து பேசும் சேரன் ‘இருட்டைத் தின்று வளரும் கனவுகளும், இரத்தக் குறிப்புகளும் அளவற்ற பதற்றமும் சூழ வாழ்க்கை நகர்கிறது. அந்த வாழ்க்கையும் அது தொற்ற வைக்கின்ற சிக்கலான ஆனால் நுண்ணிய உணர்வுகளைத் தன்னுடைய ஆத்மாவின் சந்தம் பிசகாது உயிரூற்றிப் புதிய கவிதைப் படிமங்களாகச் செதுக்குகிறார் அனார்” (பெருங்கடல் போடுகிறேன், ப – 13) என்று குறிப்பிடுகின்றார். ஆக அனாரின் கவிதைகள் பெண்விடுதலையை பிற பெண் கவிஞர்களிடமிருந்து சில புதிய போக்குகளோடு முன்னெடுக்கின்றார் என்றே சொல்ல வேண்டும்.

••••

Comments are closed.