ஆதி பார்த்தீபன் கவிதைகள்

[ A+ ] /[ A- ]

download

புரிபடாத அட்சரக்கோடு

நம்மைப்போல குழந்தைகள் விளையாடிக்களைத்த பிளாஸ்டிக் சொற்கள்

வாயில் ஒட்டியதன் பின்னர் படபடத்து கழன்றுபோகும்

நேசம்-

பூமியின் கடைசித்தரிப்பிடத்தில் படடம் ஒன்றை ஏற்றி விட பிரயாசை கொண்டோம்

வாழ்வின் அனைத்து சொற்களையும் சேமித்து கிடைக்கும்

வரலாற்று ஆவணத்தைப்போல சில நாட்கள்

சொற்களை ஏற்றத்தயாராகும் அச்சியந்திரமாய் இன்னொன்று

பின் சில சொற்கள் வெயிலில் உலர்திக் காயவிடப்பதோ

பெருமழையில் நீர்த்துப்போயோ இருக்கலாம்

காலம் திரும்பாது அழு

பால்யகாலத்தில் காமம் பற்றி கதைத்து விடுதல் எத்தனை பிரயோசமானது

இளமையில் ஞானியாதலை பற்றி சிந்திக்க ஏதுமானதாய் இருக்கும்

காலம் திரும்பாது சிரி அல்லது சிரித்தலை அழுதலை பற்றி

சிந்தித்துக்கொண்டிரு- தனிமை

முறிந்த பேனா முனையைபோல எதையும் சொல்லாமலே முடிந்து விடலாம்

வாழ்தலும் சாவதும் கொண்டாட்டத்தில் இருப்பதும்..

2.

முதலாவது தேநீரை உன்னுடன் சேர்ந்து அருந்தவில்லை

இறுதி தேநீரையும் கூட

இடையில் இருக்கும் பல்லாயிருக்கணக்கான தேநீருக்குள்ளும் தான் இத்தனை

தத்துவச்சிக்கல்கள்.

ஏதாவது ஒரு கதை ஒவ்வொரு தேநீருக்குள்ளும் சாத்தியமாகின்றது,

எதாவது ஒரு காமம் நிரம்பிய குழப்பம்

முடிவில் ஒரு முத்தம் சாத்தியமாகின்றது, வாழ்தலின் உன்னத நிலையிலோ

காதலின் மௌனமான வெளியிலோ அருந்திக் கொண்டிருக்கும்

தேநீர் எதுவுமில்லை

கணத்தில் கரைந்து போகும் உணர்வுகளுக்காய் பகிர்ந்து கொண்டதே அதிகம் அதிகம்

உடலின் இறுக்கத்தை ஒரு முத்தம் கொண்டு அல்லது தேநீர் கொண்டு தளர்த்திக்கொள்ளலாம் எனும் போது

ஒரு தேநீரையோ அல்லது தகுந்த உதடுகளையோ சுவைப்பதில் தவறில்லை

அதனால் தான் – நண்பா

வாழ்தலுக்கும் சாவுக்குமிடையே பல்லாயிரக்கணக்கான தேநீரும் சில நூறு

பெண்களும் இருக்கின்றனர்.

••••

-ஆதி பார்த்தீபன் (2017)

Comments are closed.