தேன்மொழிதாஸ் கவிதைகள்

[ A+ ] /[ A- ]

தேன்மொழிதாஸ்

தேன்மொழிதாஸ்

ஜன்னல் ஓரங்கள் நகரும் வானங்கள்

க பறக்கத் துவங்கும் போதெல்லாம்
நிற் பின்னால் போகிறது
இப்படித்தான் பயணங்களின் ஊடே
ஏதேனும் ஒரு எழுத்து
வலுப்பெற்று மேல் எழும்
குழந்தையின் முதல் எழுத்தோ
குழப்பத்தின் கடைசி எழுத்தோ பின் மாயும்
முன்செல்லும் வாகனத்தில்
Sound Horn எழுத்துக்கு பக்கத்தில் கிளிகள்
கம்மலோசான் என்ற அந்நியமொழி பாடல்
காதில் விழுகிறது
விரைவில் தார்ச்சாலையின் மையவரி தொடரி
குஞ்சம் கட்டிய லாரியில் சிந்தும் மணல்
நதியின் உட்சூடு
இடது கருவிழிக்கும் வலது கருவிழிக்கும்
நடுவில் ஆடும் தொட்டிலில்
சாலையில் சிதைந்த தாயின் உடல்
கண் அடைக்கவிடுவதில்லை
சக்கரங்களை விடவும்
ஆன்மாக்களே வேகமாய் விரையும் தன்மையிலிருக்கிறது
வீட்டுப்பொருட்களோடு கந்தலாக சாய்ந்து போகிறாள் ஒருத்தி
பாட்டில் பிரஷ் பூங்கொத்து போல்
வாகனம் துடைப்பான் விற்கும் சிறுவன்
வார்த்தைகளில் பாசிமணிகளின் வாசம்
திருநங்கைகள் கைநிறைய வளையல்களால் மங்கள ஒலியெழுப்புகிறார்கள்
அவர்கள் பார்வை பிறை நகர்வின் நகல்
புளியம்பூக்களில் ஏலியன்ஸ் முகச்சரிவு
செவ்விளந் தென்னங்குலைகள் முகமூடிகள்
முத்தமிட்டபடி கைநீட்டும் குழந்தை
மனதுக்குள் முத்துக்குவியலை கவிழ்த்துகிறது
சாலைகடக்கும் வெள்ளைப் பட்டாம்பூச்சிக்கு
முக்கோண உயிர் வடிவம்
பாதை திருப்பும் அம்புக்குறி முப்பாட்டி
ஜன்னல் ஓரங்கள் நகரும் வானங்கள்
அறியா மனிதர்கள் உறவில் உருகும் கோள்கள்
இறுக அணைத்தபடி செல்லும் காதலி
காதில் ஏதோ சொல்கிறான் காதலன்
“அறியாதே வந்நு நீ குளிராய் என்னுள்ளில்” என்ற பாடல் எனது காதில் முடிவுறுகிறது
நிற்க

Composed By – Thenmozhi Das
19.10.2017
11.31am

நடுகை

வானத்தில் பாறைகள் அலைகின்றன
தூரத்தில் அங்காளி ஓடிவரும் பாடலோடு
மழையின் ஆணிமுத்துக் கால்களால்
புற்களின் முதுகுகள் வளைகின்றன
சகபாடி விவசாயி
மண்புழுக்களுக்கு தீனி தேடுகிறான்
மருத்துவச்சி குறிசொல்லியாக மாறிவிட்டாள்
அவள் வீதி மக்களுக்கு
குங்குமத்தை நிலம் என்றும் விபூதியை நீர் என்றும் அணியத் தருகிறாள்
மஞ்சளை நெருப்பென்று ஊதி
சந்தனத்தை காற்று என்று பூசுகிறாள்
நிறங்களை சோழிகளாக சுழற்றி
அவள் சொல்லும் வாக்கில் எல்லாம்
நன்றாகவே இருக்கிறது
அவள் வீதி தாண்டினால்
வேம்பின் இலைகள் ஏனோ கத்தியாய் சுழலும்
கேழ்வரகுச் சாலை கேவும்
செங்கரும்புத் தோப்புகள் செஞ்சோறு தெரியுமா
பாடுகளால் செழிக்கும் சன்மபூமி
குருதி வாங்கி குருதி ஊட்டும்
குருட்டு நியாயத்தில் முத்தமிடுகிறேன்
மக்கள்தாயம் எங்கும் முடியவில்லை
தலைச்சுமை புடைக்கும் வார்த்தைகளை
நாத்தாங்கால்களில் இருந்து பிடுங்கி
நஞ்சைக்கு சுமந்து
கழற்சிக் காயளவேனும் கணவன் பற்றிய கசப்புகளை வேரோடு நடுகிறார்கள்
மஞ்சள் சரடுகளில் பொன்னில்லா துயர்
பச்சைப் பாம்புகளாய் சரசரக்கிறது
நடுகை நிலநடுக்கத்தின் மேல் தோல்
வல்லவன் செம்மறிகளை புசிப்பித்து மகிழ்கிறான்
முன்னிரவில் மனைவியின் முந்தானையில் முன்னிற்கும் ஒரு காசு வாழ்வின் மூக்குத்தி
ஆலமரத்தடியில்
ஆடுபுலி ஆட்டம் ஆடும் முப்பாட்டன்
விழுதை
இறந்து மனைவியின் கூந்தல் என்று பாடுகிறான்
ஆடு வெட்டுப்படும் போதெல்லாம்
“ஏம்புள்ள போச்சே” என்று தொடையில் அடித்து விசனப்படுகிறான்
உரசி உரசி விளையாடினாலும் வாழ்வு சமர்
மக்கள்தாயம் எங்கும் முடியவதில்லை
தூக்கணாங்குருவிகளின் மோகம்
மழைக்காலத்தின் துளிகள் ஊடே பொழிகிறது
மகுடிகளாய் பின்னி மடிகளை கழுவும் அவை
வீடுகளை கனாவின் கரியதும்பில் ஏற்றுகின்றன

Composed By – Thenmozhi Das
18.10.2017
4.30am

Comments are closed.