மாலதி மைத்ரி கவிதைகள்

[ A+ ] /[ A- ]

மாலதி மைத்ரி

மாலதி மைத்ரி


தாயம்

பறவைகள் அடையும்

பழமரத்தின் அசைவு ஒடுங்கி

கைரேகை மறையும் பொழுதில்

வரட்சியில் வயிறு நிரம்பா

கால்நடைகளின் கண்கள் போல

மங்கிக்கிடக்கின்றன நட்சத்திரங்கள்

அவரவர் அடுப்பில் அன்றைய உழைப்பு

கொதிக்கும் வேளை

அறுக்கப்பட்ட கழுத்திலிருந்து

வடிந்து தோய்ந்த குருதியென

சில்லிடும் துர்மரணச் செய்தி

வந்தடைகிறது சேரிக்கு

எரியும் பச்சைப் பனையாய்

வெடிப்பும் சடசடப்பும் தெறிக்க

தன் மகளை

தேடிச் சலித்தவளின் ஓலம்

சுள்ளிக்காட்டுத் தீயாய் பரவுகிறது

சீழென வடியும் நிலவின் கீழே

சன்னதம் கொண்ட பேரலைகள்

பாறையை உடைக்கும் ஆங்காரமென

மார்பில் அறைகிறது

அவளின் கரங்கள்

கதிரவனும் கால் நனைக்க

அஞ்சும் பாழும் கிணற்றில்

கூழும் எலும்புமாய்

அள்ளப்படும் மகள்

வற்றா நல் ஊற்றும்

வற்றி வெடிக்க அழுது தீர்க்கும்

நீதியற்ற சனம்

எதிர் எழவு விழுந்தவுடன்

கார்கால மேகத்தின் அடிவயிறென

குளிர்ந்திருந்தாள் அம்மை.

சிலிக்கான் கடவுள்

குலம் கோத்திரம் சாதி மதம்

இனம் மொழி நிறம் வயது

நட்சத்திரம் சடங்கு

சம்பிரதாயம் வேண்டாது

வரதட்சணைக் கேட்காது

போதவில்லையென

மண்ணெண்ணையால் கொளுத்தாது

ஜட்டித் துவைக்க வைக்காது

அம்மாவின் கைமணம் கூடலையென

முகத்தில் தட்டெறியாது

மலடியெனத் துரத்தாது

ஆயிரம் காலத்துப் பயிரென்று

முளைக்குச்சியில் பிணைத்துவிட்டு

அடுத்த வீடு மேயாது

வாய் திறக்க முடியாது

உச்சம் உனக்கு மட்டுதானாயென்று

வாழ்நாள் உத்திரவாதம்

சிலிக்கான் தேவர்கள் ஆன்லைன்

தள்ளுபடியில் அணிவகுத்து வருகிறார்கள்

பனிரெண்டு அங்குல நீளத்தில்

முயங்கும் தானியங்கிகள்

விசைக் கட்டுப்பாட்டு பொத்தானுடன்

உச்சம் உங்கள் விரல் நுனியில்

கண்கண்ட தெய்வங்கள் கைப்பிடியில்.

download (1)

மரங்கொத்தி நாக்கு

நீல நெய்தல் பூவென

பூத்திருந்தது ஆழி

கடும் வேனில் காலத்தில்

கடற்தொழிலாளிக் கரையேற்றிய

கட்டுமரத்தின் அடியில்

அடம்பன் கொடி நசுங்கிய நெடியுடன்

துவங்கியது நமது கூடல்

சிறு சங்கொலியென

அலைகளுக்கிடையான ஓய்வில் சீறுகிறது

உன்னிலிருந்து எழும் மூச்சு

சவுக்குக் காட்டின் ஊசியிலை மெத்தை

உன்னைத் தாங்க

முதிர்ந்த பச்சையுடலை நெடும் வாக்கில்

மரங்கொத்தியெனக் கடைந்து

வலிய விசையால்

காமத்தின் பெரும்படகை

செலுத்துகிறேன் மகாசமூத்திரத்தில்

பாய்மரம் சிறகு விரிகிறது

நிலவை மறைக்க.

ஆறாம் திணை

விரல் நுனியில் இன்பங்கள்
கடை விரிக்கப்பட்ட உலகில்
விலைப்பொருள் தேடும் பெண்
தொடுத்திரையைத் தடவத் தடவ
குவிகிறது முயங்கும் அம்மண உடல்கள்
ஆறடி கரணைகள் திரண்ட ஜிம் பாடி
சிக்ஸ் பேக் மிக நீண்ட குறி
ஆண் பெண் உடலை
அங்குலங்களின் இடைவெளிக்குள்
சிறைப்படுத்தியவன் இப்புவியில் தோன்றிய
முதல் சாத்தானாக இருக்கக் கூடும்
இச்சாத்தான்கள் பெற்றுப் போட்ட
குட்டிச்சாத்தான்கள் கனவுக்காளை எனும்
வணிகப் பெயருடன் மின்னணுத் திரையில்
உலவுகிறார்கள் விலை பட்டையுடன்

துரோகமிழைக்கப்பட்ட மனைவி
ஆண்மையற்றவனை மணந்தவள்
புணர்ச்சியில் ஆர்வமற்றவனின் துணைவி
துணைவனைப் பிரிந்தவள்
விவாகரத்தானவள்
திருமண வயதைக் கடந்தவள்
கணவனுடன் திருப்தியடையாதவள்
அலுப்புட்டும் ஒரேவித கலவியை வெறுப்பவள்
விளையாட்டாய் வித்தியாசமாய் போகத்தை
விரும்பும் போக்கிரிகள்
விடா முயற்சியில் அவரவருக்கான
கடவுளைக் கண்டறிந்து விடுகிறார்கள்
இறுதியில்.

****

Comments are closed.