ஷமீலா யூசுப் அலி கவிதைகள் ( இலங்கை )

[ A+ ] /[ A- ]

download (2)


இலை மனசு

காலம் உறைந்த ஒரு தெருமுக்கில் கவ்வாலி
உயிரைத்திரளாக்கி ஊதும் ஓதல்
இலை மஞ்சள் சிவப்பாகி காற்றுக்கு அள்ளுப்படும் மனசு
ஒரு நிலையில் இல்லை நான்

குவிந்த சிறு மலையாய் குந்தியிருக்கும் வேலைகள்
குவியாத கவனத்தின் தலைதடவிச் சொன்னேன்
அது அலைந்து திரிகிறது…

வேண்டாம் என்பதையெல்லாம் வேண்டும் என்கிறது.
எங்கோ இழுக்கும் கயிற்றுக்கு
இங்கு ஆடித் தவிக்கிறது.

ஏழு பூட்டுக்கள் போட்ட அறைக்குள்
அடைந்திருந்த விஸ்டீரியாப் பூவிதழ்.
ஆயிரம் விரல்களாய் தென்றல் உள் நுழைந்து விட்டது.
சுவர்க்கத்தின் ஜவ்வாது நறுமணம் நழுவுகின்றது.

எப்படி நுழைந்தது என்று மீண்டும் மீண்டும்
கேட்கிறேன்.
அரைத்த சந்தனத்தை அள்ளி யாரோ
என் கன்னத்தில் தடவுகிறார்கள்.
பதிலில்லை

குளிர்கிறதென் கணுக்கால் பச்சை நரம்பு

சுவர்க்கத்துப் பச்சை அடர் நீலம்

செந்தீப் பிளம்பு அந்தி பரபரக்கும்
ஒரு முன் இளவேனில் நாளின் விளிம்பு

உருகிய சொக்லேட் நிறச் சப்பாத்துக்கள்
கடக்கும் செவ்வகக்கல் பதித்த சாலைகள்

மஞ்சள் குளிர் மல்லிகைக் கொடி பிணைந்த
ஊதா வில்லோ மரத்தினடியில்
புறா அளவில்
ஒரு மெக்பைக் குருவி

அடர் நீலம் சுவர்க்கத்துப் பச்சை
குழைத்துச் செய்த கழுத்து.

மண் முளைத்த புல் தரையில்
எல்லாப் பதட்டங்களிலிருந்தும் விலகி…
அது எதையோ தேடுகிறது.

அவை
அதிகாலையில் தொலைத்த பாடல்களாக அல்லது
இரவுக்கான நட்சத்திரங்களாக
அல்லது
அது போன்ற ஏதோவொன்றாக இருக்கலாம்.

மனசைக் கழற்றி வீடு திரும்புகிறேன்.

அகன்று இருளும் வானம்
ராட்சத வாகனங்களால் அதிரும் பழங்காலப் பாலம்
இரவுப் பூச்சிகளின் கீதங்களால் நிரம்பியிருக்கும் ஓடை…

சலசலத்தோடும் தண்ணீரின் பெருக்கெடுப்பில்
சலனங்களின்றி உட்கார்ந்திருக்கிறது.
ஒரு வெளிச்சம்.

அதே சுவர்க்கத்துப் பச்சை அடர் நீலக் கழுத்தில்
சாஸ்வதமாய் ஒரு வாத்து.

அது உட்கார்ந்திருந்த கல் பூவாய்க்கனிந்திருக்க
அதன் பார்வை
கோடை மழையின் வர்ஷிப்பினையும்
குளிர்காய்ச்சலில் நிலாப் பருகுதலையும்
ஒருசேர ஞாபகப்படுத்திற்று.

2017 March 17th

யாரும் ஜன்னல்கள் வாங்கவில்லை

ஜன்னல்கள் சுமந்து

களைத்தவனின்

தெரு நீண்டு கொண்டே சென்றது

யாரும் ஜன்னல்கள் வாங்கவில்லை

பாடசாலையொன்றில்

பழஞ்சுவரொன்றில் தூசுபடிந்த ஜன்னல்கள்

சாத்தி வைக்கப்பட்டிருந்தன

ஜன்னல்கள் வேண்டுமாவென

அவன்

மீண்டும் மீண்டும்

கூவிக் கொண்டிருந்தான்.

அலுவலகத்துக்குச் செல்லும் எலிகள்

கால்களில் சக்கரங்களைக் கட்டிக் கொண்டிருந்தன.

தெருவோரத்தில் ஒரு கலாநிதி

யன்னல்கள் என்றால் என்னவென்று

கேட்டுக்கொண்டிருந்தார்.

அடுப்பங்கரையில் வெந்து கொண்டிருந்த

பெண்களின் பயந்த கண்கள்

ஜன்னல்காரன் மேல் படர்ந்து திரும்பின.

ஜன்னல்கள் நரகத்தின் சாபவாயில்

மதகுரு உபதேசித்துக் கொண்டிருந்தார்.

குழந்தை ஜன்னல்களுக்குள்ளால்

இறங்கப் போனது.

அதன் தாய் ஓவென்றலறினாள்.

திடுக்குற்று உறைந்தன பிஞ்சுக் கால்கள்.

மூடிய அறைகளுக்குள்

புகைத்துக் கொண்டிருந்த கவிஞர்களின்

தலைமாட்டில் தொங்கியது

ஜன்னலின் புகைப்படம்.

மூடிய ஜன்னல்களில்

வர்ணங் குழைத்துக் கொண்டிருந்தான்

ஒவியன்

ஜன்னல்காரன்

குரலை எலி கத்தரித்திருந்தது…

ஆனால்

யன்னல்களை எவரும்

வாங்கவில்லை

2016 November 17th

சிறகுகள் அற்ற மெளனம் அல்லது மயானம்

மெளனம்

டமஸ்க் ரோஜாவின் மென்மணமாய்

வீடெங்கும் விரவிக்கிடக்கிறது.

அது

எனக்கு மிகப் பிடித்த புத்தகம்.

நான் குறைவற்றணியும் வெண்ணிற ஆடை

அலையும் மேகமும் மழைக்குருவியும்

பார்க்க நிச்சலனமாய்

விழியிரண்டும் ஜன்னல் தாண்டி

வெகுதூரம் சிறகடித்துப் பறக்கின்றன.

ஊதாவும் வெண்மையும் ஊடோடிய

கண்ணாடிக் கோலிகளாய்

நகர்ந்தோடி அகமெங்கும் விழுந்துருளும்

சிரிப்பு மட்டும் விதிவிலக்கு.

இரைச்சல் காகமாகிக் கரையும்

துண்டுப் பூமிகளிலிருந்து என்னைக் கழற்ற

ஸென் இசையின்

காற்றிலாடும் மெல்லிய நூலேணியில்

தொத்திக் கொள்வேன்!

அதிகாலை ஹூத் ஹூத் பறவையின்

தியானம்

என் பஜ்ருத் தொழுகையைத்

தூக்கி வரும்.

எனக்குப் பிடித்த ரோஜாக்களையெல்லாம்

நிலம் கிளர்த்திப் பிடுங்கிப் போகிறது

………………….

சிறகுகளோ ஊடலின் பாடல்களோ அற்ற

உன்

மெளனம்.

2017 March 6th

நிலவை அருந்துதல்

தீப்பிடித்தெரியும் பெர்ச் மரங்களின்

கால்களுக்கிடையே

கடுஞ்சிவப்பாய் சூரியக் கடிகாரம்.

நான் வீடு திரும்புகிறேன்.

என் விரல்களிலிந்து சிறகடிக்கின்றன புறாக்கள்.

மஞ்சளும் வெள்ளையுமாயொன்று

மணிகள் கோர்த்த மாடப்புறாவொன்று

கண்களின் ஓரத்தில் நீலம் தீட்டியதொன்று

நிறங்களற்ற ஒளியாய் சமைந்த அரூபப் புறாவொன்று

பூச்சுப் பூசாத

என் நுனிவிரல் நடனத்தில் எடையிழந்த காற்றாய்

சிறகுகள் தவழ்கின்றன.

ஆலைகளின் கண்ணாடிச் சட்டங்களுக்குள்

கிளிகள் உட்கார்ந்திருக்கும்

கூண்டுகள்.

நீலச் சீல் குத்தப்பட்ட

சாம்பல் நிறக் கிளிகள்.

இறுதியில் தரப்படும் கொய்யாப் பாதிக்காய்

இறந்து கொண்டிருந்தன.

அவை இப்போது கூண்டுகளிருந்து

வீடு திரும்பக் கூடும்…

நாளை மீண்டும் அடைபடுவதற்காக…

குளிர்கின்ற பனிக்காலம்

கோப்பி வாசம் ஒரு தட்டில் நிலாவை

ஏந்தி வந்தது.

கிளிகள் அயர்ச்சியில்

உறங்கிக் கொண்டிருந்தன.

நான் அவற்றின் விரல்களை

நோக்கினேன்

என் விரல் போன்றல்லாது

அவை உள்நோக்கி வளைந்திருந்தன.

நான்

நிலவை அருந்தத் தொடங்கினேன்.

பூனைகளின் கண்கள்

உடல் கருத்த பச்சைக் கண் பூனை

ஜன்னலூடு சிந்தி வழியும் ஞாபகங்களை

மிதித்துக் கடக்கிறது.

பூனைகளின் கண்கள்

மர்மக் கிணறுகள்

பயமூட்டுகின்றன

எப்போதுமே சொல்ல முடியாத ஏதோவொன்றை

தேக்கி வைத்திருக்கின்றதாய்

தோன்றுகின்றன.

சுருள் புகையாய் உள்ளிருந்தெழும்

என் சிறகுகளையெல்லாம்

அவை

சேகரித்துக் கொண்டேயிருக்கின்றன.

போகின்ற இடமெங்கும்

கருநீலமாய்

பழுப்பும் சாம்பலுமாய்

இளவேனில் மாலை நிறமாய்

பூனைகளின் கண்கள்

இறைந்து கிடக்கின்றன.

பூனைகளின் கண்களூடு

அமானுஷ்ய உலகங்கள் விரிகின்றன.

நான்

இன்னும் ஊன்றிப் பார்க்கத் துவங்குகின்றேன்.

பச்சைக்கும் மஞ்சளுக்கும் இடையில்

பதினொரு முறை உடை மாற்றுகின்றதென்

விழிகள்….

வெற்றாக பூனைக் கண்ணி

என்கிறார்கள்

பூனைக் கண்ணுடையவர்களுக்கும்

பூனைகளின் கண்களுக்குள்

புதைத்திருக்கும் ஆழ்கடலுக்கும்

சம்பந்தகளேயில்லை,

சில நிறப்பிரிகைகளைத் தவிர

பாதைகள் இறக்கும்

முட்டுச் சந்துகளில் திகைத்து நின்று விடுகிறேன்.

மச்சு வீடுகளின் இருள் மண்டிய ஓரங்களிலிருந்தோ…

உடைந்திருக்கும் தெருக் குழாயடியிலிருந்தோ…

நிறுத்தி வைத்திருக்கும் வாகனங்களின்

வெதுவெதுப்பான அடிப்பகுதியிலிருந்தோ…

எங்கிருந்தாவது ஒரு சோடி பூனைக் கண்கள்

முகிழ்த்து ஒளி உமிழ்கின்றன.

தெருக்களின் நீட்சியை உறுதி செய்த படி.

நான் மீண்டும் நடக்கத் துவங்கின்றேன்.

2016 November 13th

ஓரங்குலமும் அசையேன்

என்
பேனாவை நிலத்தில்குத்திஉடை!!!

என்
மடிக்கணணியைபிடுங்கி
ஓங்கி நிலத்தில்அடி!!!

என்
குரல்வளையை
உன் விரலிடுக்கில்நசுக்கு!!!

துப்பாக்கியைத்
தொண்டைக்குள்குத்து!

அநீதிக்கெதிராய் கொதிதெழுந்தவர்களின்
சடலங்களைக்காட்டு….

என்னை
சின்னாபின்னப்படுத்து….

என் குடும்பத்தை
இகழ்….

என்
பாதையைபெயர்த்து எடு…

நான் வாழும்
குடிசைக்கு
நெருப்பு வை

என்
சோற்றில்
நஞ்சு வை

என் எழுத்துக்களில்
காறித்துப்பு

உன்
எதேச்சதிகாரத்துக்கெதிராக

ஓரங்குலமும் அசையேன்

•••

2009

Comments are closed.