மெட்டீரியலிஸ்ட்டுகளின் ஆன்மா ( நெளிக்கோடுகளும், அசையாப் புள்ளிகளும் – 2 ) – பாலசுப்பிரமணியன் பொன்ராஜ்

[ A+ ] /[ A- ]

download (3)

மெட்டீரியலிஸ்ட்டுகளின் ஆன்மா

Just an attention to the activity of the sounds – John Cage

வசந்தத்தின் உள்வெடிப்பை ஓர் அனுபவமாகக் கடத்த முனைகிற இகோர் ஸ்ட்ராவின்ஸ்கியின் “தி ரைட் ஆஃப் ஸ்பிரிங்” இசைக்கோர்வையை ஒரு மெட்டீரியலிஸ்ட் அவருடைய தத்துவார்த்தப் பின்புலத்தோடு எப்படி அணுகுவார் என்று எனக்கு எப்போதுமே ஒரு கேள்வி உண்டு. போர்க்காலங்களின் ஒழுங்கின்மையை உட்பொதிந்ததே வசந்தம் எனும் எண்ணத்தை உருவாக்கக் கூடியது மேற்குறிப்பிட்ட இசைக்கோர்வை.

நவீன இசை தன்னைப் பெருக்கிக் கொள்வதற்காக மின்சாரத்தைப் பயன்படுத்திக் கொண்டது. நம்முடைய இசை நுகர்வே மின் சாதனங்களின் வாயிலாகக் கிடைத்தது. நவீன இசை பாப்புலர் கலாச்சாரத்தின் அங்கமாகவும், அதன் இயங்கு விசைகளில் ஒன்றாகவும் இருக்கிறது. ஓர் இசைத் துணுக்கின் அல்லது விரிவான இசைக்கோர்வைகளில் நிகழும் இயக்கமும், அசைவும், அறுந்து போதலும், தொடர்ச்சியும், இணைப்பும், சுழற்சியும் ஒரு கண்ணியாகச் செயல்படுகிறது. அக்கண்ணியில் நமது பிரக்ஞை அகப்பட்டு மீள முடியாமல் சரணடைந்து, அவ்வாறு உணர்ந்ததும் மீள எத்தனிக்கிறது.

கலாச்சாரம் உருவாக்கி வைத்திருக்கும் எல்லைகளுக்குள்ளாக நின்று இசையைக் கேட்கிற ஒருவருக்கு அந்நியமான ஒலிகளின், வடிவங்களின் மீது பரிச்சயமின்மையால் எழுகிற ஒவ்வாமை இசை கேட்கிற சமயத்தில் நமது பிரக்ஞையின் வாளாகச் செயல்பட்டு நமக்கும் அவ்விசைக்கோர்வைக்குமாக எழும் தற்காலிகப் பிணைப்பை வெட்டிவிடுகிறது. நாம் வெளியேறி விடுகிறோம்.

பிடிவாதமாகவோ, பரிச்சயத்தின் காரணமாகவே நாம் அதனுள் தங்கினால் நமது பிரக்ஞை முதலில் ஓர் உலுக்கலுக்குத் தயாராகி பின்பு அதன் அதிர்வுகளை அனுமதித்தோ அல்லது மறுத்தோ எதிர்வினையாற்றுகிறது. நாம் அதனோடு நேர்மறையாக அல்லது எதிர்மறையான உறவைப் பேணத் துவங்குகிறோம். அமைதி, ஓசை என்கிற இரண்டு எதிர்நிலைகளை உள்ளடக்கிய இசை உணர்வுகளைக் கட்டியெழுப்புவதையும், பிரதிபலிப்பதையுமே நோக்கமாகக் கொண்டதென்ற பொதுமைப்படுத்தல் உண்மையற்றது. மாறாக உணர்வுநிலைகளைக் குலைப்பதையும், சீரற்றுப் போகவும் செய்கிறது.

சில சமயங்களில் எவ்வித உணர்வையும் எழுப்பாமல் (கலாச்சாரத்தைக் கருத்தில் கொள்ளாமலே) வெறுமனே கடந்து போகிறது. External ஆக ஓர் இசைக்கோர்வையை நாம் வெளியேதான் நிற்கிறோம் என்கிற உணர்வோடு அணுகுவதற்கும் உள்ளிருந்து (Internal) அதனை நம்மீது வினையாற்றிக் கடந்து போவதற்கு அனுமதிப்பதற்கும் உள்ள இடைவெளியே குறிப்பிட்ட இசை நமக்கு விருப்பமானதாகவும், விருப்பமற்றதாகப் போவதற்கான காரணமாக இருக்கிறது. நமது அனுபவக் குவியலின் ஒரு கண்ணாடியை அணிந்து கொண்டு, அறிவின் துலாக்கோல்களைக் கையிலெடுத்து ஓர் இசைக்கோர்வையோடு நம்மைப் பிணைத்துக் கொள்ளத் துவங்கினால் நாம் எப்போதுமே இசைக்கு அந்நியமானவர்களாகும் சாத்தியமும் உண்டு.

முதலில் நாம் ஞாபகத்தையும், அறிவையும் ரத்து செய்துவிட்டு இசையை அணுகினால் அதன் மூலச்சாரத்தை நெருங்கிவிட முடியுமென்று நம்புகிறேன். ஆனால் நமது பிரக்ஞையே ஞாபகத்தாலும், அறிவாலும் கட்டமைக்கப்பட்டிருக்க நம்மால் “மெய் மறந்து” போகின்ற நிலையை எட்ட முடிவதில்லை. அதனையும் மீறி நம்மை அந்நிலையை எட்டச் செய்வதே ஒரு மிகச்சிறந்த இசையாக உள்ளது. அது கலாச்சாரங்களின் இடைவெளிகளை இல்லாததாக்கி எல்லைகளால் பிரிவுபடாத ஓர் உலகில் நம்மை நிறுத்துகிறது.

நாம் கேட்கும் திறனுள்ள ஓர் உயிரியாக ஒலி உடலின் பல்வேறு அசைவுகளைப் “பார்க்கிறோம்”. இதுவெல்லாம் பழைய அணுகுமுறையாக இருக்கலாம். ஆனால் ஒருவித கலாச்சாரத் தாழ்வுமனப்பான்மையுள்ள நமக்கு உலகளாவிய இசையை அணுகுவதில், நிகழ்ந்துள்ள மாற்றங்களை, செலுத்தப்பட்டுள்ள சிந்தனைகளை உள்வாங்கிக் கொள்வதிலுள்ள சிக்கல்கள் நம்மை மேலும் அதனின்று விலக்கி வைக்கின்றன. மாறாக சிறிய அனுபவமே நமது கலாச்சாரத்திலுள்ள இசை குறித்து போதாமையுணர்வையும், கல்விப்புலத்திலுள்ள பற்றாக்குறையையும் வெளிப்படுத்துவதாக அமைகிறது.

இதன் பக்கவிளைவு நமது கலாச்சாரத்திலுள்ள இசையிலிருந்து நாம் தள்ளிப் போவதோடு உலகளாவிய இசையையும் வியப்பின் காரணமாக தூரத்தில் வைக்கிறோம். இந்த இரட்டை விலகல் நம்மை எங்கேயும் ஒட்டாதவர்களாக்கிவிடுகிறது. கால்களும் இல்லாமல் சிறகும் இல்லாமல். ஒவ்வொரு காலகட்டமும் குறிப்பிட்ட இசை ஒலிகளை தனது தனிச்சிறப்பான அடையாளமாக உருவாக்குகிறது.

அப்படித்தான் மேற்கு இசையை அதன் நாகரிகத்தின் நகர்வோடு இணைத்து புதுப்புது வடிவங்களை ஒன்றை மறுத்தோ அல்லது அதனைத் தொடர்ந்தோ பிறப்பிக்கிறது. நாம் தேங்கிக்கிடப்பதாக உணர்வதை சினிமா இசை சரி செய்துவிடுகிறதென்றாலும், சினிமா இசை ஒரு முழுமையான இசை அனுபவமல்ல.

ஜாஸ் அல்லது சிம்பொனி?

ரொமாண்டிசிசம், எதிர்காலவாதம், கன்ஸ்ட்ரக்டிவிசம் ஆகியவற்றின் காலம் ஓடி முடிந்தும், ஜாஸ் அல்லது சிம்பொனி? என்கிற கேள்விகள் விவாதிக்கப்பட்டும், பிரம்மாண்டத்திற்கான மேனியாவின் பின்விளைவாக கலைஞர்களின் பிரக்ஞை இடதுசாரி சூத்திரங்களிலிருந்து விலகி அரசியல், சமூக காரணங்களுக்காக எளிமையாக்கம், பாப்புலிசம், நாட்டாரியலைத் தேர்ந்து கொண்டதென்று ஸ்ட்ராவின்ஸ்கி இரண்டாம் உலகப்போரின் துவக்க வருடங்களில் சொன்னார்.

அவருடைய உரையில் குறிப்பிட்ட அதிகாரப்பூர்வ சோவியத் இதழொன்றில் வெளியான ஒரு கருத்து இப்படியிருக்கிறது:

Here we have the “Symphony of Socialism”. It begins with the Largo of the masses working underground, an Accellerando corresponds to the subway systmem; the Allegro in its turn symbolizes gigantic factory machinery and its victory over nature. The Adagio represents the synthesis of Soviet culture, science, and art. The Scherzo reflects the atheletic life of the happy inhabitants of the Union. As for the Finale, it is the image of the gratitude and the enthusiasm of the masses.

ஸ்ட்ராவின்ஸ்கி இதை ஒரு ஜோக் என்று புறம் தள்ளுவதோடு “A complete disorientation in the recognition of the fundamental values of life”, என்கிறார். கம்யூனிச பரிசோதனை ஒரு புதிய மனிதப் பிரக்ஞையை எழுப்ப முனைந்ததன் அடையாளமே மேற்சொன்ன பரிந்துரை.

ஒரு வகையில் கம்யூனிஸ்ட்டுகள் மனிதப் பிரக்ஞையைத் திரட்டி, அவர்கள் வெட்டிய வாய்க்கால்களின் வழியாக பாய்ச்சி விடமுடியுமென்று நம்பியதன் விளைவே மனித இனத்தின் மாபெரும் பரிசோதனை. நாஜிக்களின் இசைக் கருத்தாக்கங்களையும் வாசிக்க வேண்டும். அவை இதனை விட இன்னும் நகைச்சுவையாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

இசையை அரசியல், சமூகவியல் ரீதியாகவும் அணுகுவதற்கான வாய்ப்புகளை இசை வடிவங்களின் தோற்றமும், வளர்ச்சியும் உருவாக்கியிருப்பதை ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவை ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தினால் வார்க்கப்பட்ட பிரக்ஞையின் வெளிப்பாட்டு விளைவு என்று பார்ப்பதற்கு இருக்கும் வாய்ப்பை நாம் அவ்வளவு எளிதாக ஒதுக்கிட விட முடியாது. ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு தடை செய்யப்பட்டதாக இசைக்கருவிகளும், நிகழ்த்தலும் இருக்க விலக்கம் ஒரு சமூக, அரசியல் பிரச்சனையாகி விடுகிறது.

நவீன இசையை நவீனத்துவத்தைப் புரிந்து கொள்ள ஒரு கருவியாகப் பயன்படுத்தியவர் தியோடர் அடொர்னோ (Theodor Adorno) எனச் சொல்லப்பட்டதுண்டு. அவருடைய Towards a New Manifesto எனும் உரையாடல் நூலில் இப்படிச் சொல்கிறார்: வேகத்தை அனுபவிப்பதென்பது வேலையை அனுபவிப்பதற்கான பதிலியாக இருக்கிறது.

இசையை அனுபவிப்பதென்பது எதற்குப் பதிலியாக இருக்கிறதென்பதை அவ்வளவு எளிதாக விளக்கி விட முடியாது. ஒருவேளை மெட்டீரியலிஸ்ட்டுகளான நம்முடைய ஆன்மாவுக்கான ஏக்கத்தினால் உண்டான வெற்றிடத்தை நிரப்புவதாகவும் இருக்கலாம்.

மதம் மட்டுமல்ல இசையும் இதயமற்ற உலகத்தின் இதயமாக இருக்கிறது.

****

Comments are closed.