பெஷாராவின் டைரி / ஆதிரையின் கதசாமி – மனக்கண்ணோடும் கதை

[ A+ ] /[ A- ]

download (10)

குழந்தைகளிடம் கதை சொல்ல ஒரு புத்தகம் என்ற முகவரியோடு வந்திறங்குகிறது ஆதிரையின் கதசாமி.

சிறுமியாக தோற்றம் தரும் ஆதிரையின் பேச்சும் முதல் அறிமுகமும் இவள் சாதாரணமான சிறுமி அல்ல என்ற உணர்வை வாசகனின் மனதில் ஏற்படுத்தி விடுகின்றது. ‘யாரும் சொல்லாத கதை’ என்ற கூற்றுடன் தொடரும் காற்றின் கதை. பார்வையிலும் குரலிலும் தெளிவுடன் கூடிய நிதானம்,

வயதுக்கு ஒவ்வாத அதீத அறிவு, கதை கேட்பவர்களின் புலன்களை மகுடியின் இசை கேட்ட நாகம் போல் மெய்மறக்கச் செய்தவாறு புரிதலும் தேடலும் கொண்ட மனவாசலை மட்டும் விரியத் திறக்க வைக்கும் ஆற்றல்,

அடுத்தடுத்து சங்கிலித் தொடர் போல் பின்னலிட்டு செல்லும் கதையில் வாசகனையும் மனவெளியின் விந்தையான உலகத்திற்கு உடன்கொண்டு செல்லும் லாவகம் ஆதிரைக்கே உரிய முத்தான முத்திரை என்று சொல்லலாம்.

மனிதன் பிறந்து வளர்ந்து பெரியவனாகி முதுமை அடைந்தாலும் நிறைவற்ற தேடலில் ஒருவித பரபரப்பான ஓட்டத்தில்தான் வசிக்கின்றான். நின்று நிதானித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் கணங்கள் மிகவும் சொற்பமானவை.

நிஜத்தின் பெருவெளியை உள்வாங்கிக் கொண்டு, கற்பனை உலகில் கால் பதித்திருப்பதையே கவனத்தில் கொள்ளாதவாறு தன்னை மறந்த உற்சாக நிலையில் வாசகனை பல்வேறு தளங்களில் ஆதிரையின் துணையுடன் கூட்டிக்கொண்டு செல்கிறார் ஆசிரியர் க.வை.பழனிசாமி.

ஆதிரையின் கைபிடித்து அவள் காட்டும் கற்பனையான அற்புத உலகத்திற்குள் பயணித்து, எல்லைகளற்ற பிரபஞ்சத்தின் உள் ஒளிரும் காணக் கிடைக்காத காட்சிகளை உருவகப்படுத்தி வாசக மனதை சந்தோஷக் கடலில் மென்அலைகளின் மேல் மிதக்கும் தோணியாக மாற்றி விடுகிறார் இவர்.

பல்லாயிரம் மொழிகளுக்கிடையில் புதிதாக உருபெறும் கதைமொழி ,மானுடம் தாண்டி இயற்கையுடனும் அதனையும் மீறிய படைப்புச் சக்தியுடனும் எளிதாக உரையாடக்கூடிய விதத்திலும் புரிந்து கொள்ள உதவும் வகையிலும் அமைந்துள்ளது.

கதைப்பழம் ருசிப்பது ஆசிரியராக இருந்தாலும் வாசகனும் அதன் மணத்திலும் சுவையிலும் திளைத்துப் போகிறான். குழந்தைகள் கதையில் வருவதாலேயே விநாயகரும் அவரின் வாகனமாக உடன் உலாவரும் சுண்டெலியும் மனதைக் கொள்ளை கொள்ளும்.

விநாயகர் சுறுசுறுப்பான குறும்புகளுடன் சுண்டலுக்காக ஏங்குவதும், பசியுடன் தெருக்களில் நடை பயில்வதும் சகமனிதனைப் போல் மக்களுக்கிடையில் உரையாடுவதும், குழந்தைகளின் கையால் உணவை வாங்கி உண்பதும் எனப் பல புதிர்களுக்கு இடையில் கதை நகரும் போது, ஆவலுடனும் எதிர்பார்ப்புகளுடனும் வாசக மனமும் அடுத்தடுத்துவரும் நிகழ்வுகளின் தொடரில் கவனம் கொள்கின்றது.

கதை என்று தனித்து ஏதுமில்லை; குழந்தைகளைப் பொறுத்த மட்டும் வாழும் உலகமே கதைதான் என்னும் ஆசிரியர் கூற்று மிகவும் இயல்பாய் ஒத்துப் போகும் உண்மை. ஆதிரை அறிமுகப்படுத்தும் கதசாமி ,தொடுகையில் மட்டுமின்றி இயல்பிலும் மென்மையான தன்மை கொண்ட மிருதுவான ஓசை எழுப்பும் ஆடு.

கையில் ஏந்திய கணத்தில் மனம் முழுவதும் பெரும் ஒளிச்சுடராக மின்ன வைக்கும்அதிசயம் புரிவதும், கதைமரமும், பிரபஞ்சங்களை உருவாக்கும் சக்தி கொண்ட மலர்களும் பிரமிப்பின் உச்சத்தில் வாசகனை நிறுத்துகின்றன.

கதசாமியின் கோயில், அவ்வப்போது ஆதிரையின் அருகமர்ந்து கொள்ளும் முயல்கள் மற்றும் ஆதிரையின் குரலோசை சலனமற்றவெளியில் அமைதியான நிலையில் பயணிப்பது என ஒவ்வொரு கால கட்டமும் கதையின் நகர்வு அற்புதமானதாக உள்ளது.

கடவுளின் தனிமையும் கோபமும், தன்னை அறியும் முயற்சியில் ஈடுபடுதலும், சோம்பல் முறிக்கையில் விரியும் உலகமும், நடக்கநடக்க தோன்றும் ஆனந்தமும், சூனியவெளியும், கடவுளின் மனசும், தனிமை பற்றிய வலியும் குழந்தைக்கே உரித்தான பிரத்தியேக மனநிலையில் விவரிக்கப்படும் விதம் அழகு அழகு.

நடந்து செல்கையில் விரியும் உலகில் குதித்தும், இங்கும் அங்கும் ஓடியும் மகிழும் கடவுளின் நிலையை வாசகனைப் போலவே ஒவ்வோர் குழந்தையும் படித்துப் பார்த்து பரவசத்துடன் ரசிக்க வேண்டிய நிலை.

இன்றைய கால கட்ட வாழ்க்கை முறையில், அடுக்குமாடி குடியிருப்புகளின் வீட்டமைப்பும், சிறிய இல்லம் அழகிய இல்லம் என்னும் வாழ்க்கை விதிகளும், பெருகிவரும் ஜனத்தொகையினர் அனைவரும் வசிக்கக் கட்டப்படும் வீட்டமைப்புகளும், மிகவும் குறுகலான இடவசதி பெற்றிருப்பதனால் குழந்தைகள் ஓடி விளையாடவும் நடந்து அநுபவிக்கவும் இடமில்லை.

அந்தக் காலத்தில் எட்டு மாதமானால் எட்டடி எடுத்து வைக்கும் தன் செல்லம் நடைபயில நடைவண்டி என்றொரு விளையாட்டு சாதனம் இருந்தது. கீழ்புறம் முக்கோண வடிவத்தில் மூன்று சக்கரங்களுடனும் மேற்புறம் சதுரவடிவத்தில் குழந்தை விழுந்து விடாமல் தத்தித்தத்தி நிதானமாகவும் கால்களுக்கு வலுவூட்டும் வகையிலும் நடைபயில உதவும்.

சீராக நடைபயில மிகவும் உதவிகரமான ஓர் உபகரணாகும் அது. இடுப்பில் மேகலை அணிந்து வெளிக்காற்று உடலை வருட சுதந்திரமாக சுவாசித்து பரந்து விரிந்த முற்றத்தில் நடந்து மகிழ்ந்த குழந்தை,

இன்று ’வாக்கர்’ எனப்படும் நான்கு சக்கர வட்ட வடிவ தட்டில் அமர்ந்து மின் விசிறியின் சுழற்சியில் வீசும் காற்றில், வேகத்தின் துணையுடன் ஓடுகின்றது வரவேற்பறையும் உணவறையும் ஒன்றாக வடிவமைக்கப்பட்ட சிறிய அறையின் மேஜை நாற்காலிகளுக்கு இடையில்.

நடந்து ஓடி மகிழ வேண்டிய வயதில் தொலைக்காட்சி பெட்டியின் ஆதிக்கமும், பாடத்திட்டங்களின் வடிவமைப்பினால் உருவான டியூஷன் சென்டர்களிலும் அதன் பொழுது கழிகின்றது.

கதையில் வரும் கடவுள் கொடுத்து வைத்தவர்.

அபூர்வ சக்திகளின் பிறப்பான கடவுளை ஓர் சராசரி மன நிலையில் சந்திக்கும் வாசகன் ஆச்சரியத்தில் தன்னை மறந்து போகின்றான். மதங்களைக் கடந்த கடவுள், மானுட மனதில் அன்பின் விதை மட்டும் தூவி பூரிப்படைகிறார். .

கதசாமியும் கடவுளும் சந்திப்பதன் மூலம் மானுடம் பிறக்கின்றது. கதசாமிக்கு மானுட வரவில் அப்படியொன்றும் ஆர்வமில்லை எனினும், கடவுளின் ஆவலைத் தடை செய்யவில்லை. உருவங்களின் கோட்பாடுகளுக்குள் பிடிபடாத கடவுள் மிகவும் வித்தியாசமானவராக உள்ளார்.

வெளியில் ஓர் உலகம் இருப்பதான தோற்றத்தைக் கோவில்மரம், பூ, இலை என்று காண்பித்து பின் அனைத்தும் உள் இருப்பதாகக் காட்டும் ஆதிரையின் கூற்றில் ஓர் பெரும் உண்மை ஒளிந்திருப்பது நிதர்சனமாகத் தெரிகின்றது.

எப்போதும் மனித மனம், எதுவாக இருந்தாலும் வெளியில் நடப்பதாக ஓர் மாயையில் உழலும். நன்கு கவனித்துப் பார்த்தால் அனைத்தும் அகத்தில் இருப்பது புரியும். இத்தகு புரிதலுக்கு ஓர் நெடும் பயணம் சிரத்தையுடன் அறிந்தும் அறியாத வழியில் அதன் பாதையிலேயே தம்மை பயணப்பட அநுமதிக்குங்கால் வாழ்க்கையின் இரகசியங்கள் தாமாகவே தம்மை கட்டவிழ்த்துக் கொள்ளும்.

இது சிருக்ஷ்டியின் விந்தை. ஒரு சிலருக்கு முள்பாதையின் மீது நடப்பதாகத் தோன்றும், சிலருக்கு கனவில் மிதப்பது போன்று வாழ்க்கை தன்னிலை அறிதலை புரிய வைக்கும்.

ஓர் சரடில் கோர்க்கப்பட்ட வாசமிகு மலர்கள் வெளிப்பார்வைக்கு பூச்சரமாக தெரிந்தாலும், உண்மையில் சரடின் பலத்தில்தான் அவை ஒருங்கிணைந்து உள்ளன. அது போலவே புறத்தில் இயல்பாக சுழலுவது போல் தோற்றம் தரும் வாழ்க்கை, நிஜத்தில் அகத்தின் தாத்பரியமான தன்னிலை அறிதலில் தான் நிறைவு தருகின்றது.

இக்கதையின் ஒவ்வொரு கால கட்டத்திலும், கற்பனைகளின் ஊடே ஓர் அற்புத உலகத்தில் பயணிப்பது போல் காட்டப்பட்டிருந்தாலும், உள் இழையோடும் நாதமாக அகவெளிப் பயணத்தின் குறிப்புகள்தான் அழகிலும் அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மாயையின் திரையை விலக்கி நிதர்சனத்தை புரியவைக்கும் கலையைத் தான் சிறுமியின் உருவில் வந்து இறுதியில் காணாமல் போகும் ஆதிரை செய்கின்றாள்.

கதையில் வரும் மனோரஞ்சிதக் கண்ணாடியில் தெரியும் மாற்றங்கள், சுதிபாட்டியின் வீட்டிற்குள் இருக்கும் முழு பிரபஞ்சத்தை தனக்குள் அடக்கிய அறை, பூக்களின் உலகம், காற்றால் மூடப்பட்ட அதன் அறையைத் திறக்க உதவும் வண்ணத்துப்பூச்சிகளிடம் இருக்கும் காணமுடியாத சாவி, கதசாமியின் பிள்ளை ஆதியின் அறிமுகம், பூக்களைப் பார்த்தாலே மனதில் பொங்கும் சந்தோஷத்திற்கு அதன் வண்ணங்கள்தான் காரணம் என்ற புரிதலை ஆதிரை உணர்த்தும் முறை இப்படி மாயஉலகு பல்வேறு தளங்களில் விரிகிறது.

இனியா என்னும் பொம்மையின் மூலம் வனாவின் உள்மனநிலை வாயிலாக குழந்தைகளுக்கு பொம்மைகளிடம் இருக்கும் அதீத அன்பை விளக்குகிறது கதசாமியின் கருணை.

பொம்மைகள் குழந்தைகளின் வாழ்க்கையில் அறிமுகமாகும் முதல் தோழமை உலகம். தன் உள் மனதின் உணர்வுகளை முதன் முதலில் பொம்மைகளிடம்தான் குழந்தைகள் பகிர்ந்து கொள்கின்றன.

ஒருசிலர் வளர்ந்து பெரியவர்கள் ஆனாலும், அவர்களின் வாழ்க்கையில் பொம்மைகள் முக்கிய பங்கு வகிக்கும் பல வித தோற்றங்களில் பல்லாயிரம் வண்ணங்களில் ஜீவனில்லாவிட்டாலும், உயிரோட்டமான சிரிப்புடன் பார்த்ததுமே உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பொம்மைகள்.

மரணமற்ற தேவதைகளை நினைவூட்டும் தங்கமீன்களின் அறிமுகம், ஒளியாய் மாறும் கதசாமி, நிலவின் ஒளியின் பூரண ஆக்ரமிப்பு, இவை அனைத்தும் குழந்தைகளை மனம் மகிழச் செய்யும் ஒப்பற்ற அற்புதங்களின் விளையாட்டுத் திடல்போல் தோன்றினாலும், கற்பனை சக்திக்கு அப்பாற்பட்ட ஓர் அழகிய கனவுலகம் இது.

கனவுலகத்தை நனவுபடுத்திக் காட்டும் அழகான கதைப் புத்தகம். ஆங்கிலமொழி கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கற்பனைசக்தி நிரம்பிய ”ஆலிசின் அற்புத உலகம்’ ’’’தம்புலினா’’, ’’சிந்தெரெல்லா’ எனப் பலவகை புத்தகங்கள் வாசிக்கக் கிடைக்கின்றன.

தமிழ் பாரம்பரிய வாழ்வில் தத்தம் பாட்டிமார்கள் அல்லது நெருங்கிய உறவுமுறைகளிடம் மட்டுமே வாய்வழிக் கதைகள் கேட்கும் பாக்கியம் உண்டு. அதுவும் இப்போது வழக்கு முறையில் இருந்து மறைந்து வரும்போது இதுபோன்ற கதைகள் மிகவும் பயனுள்ளதாக வருங்கால குழந்தைகளுக்கும் அமையும்.

கதைகள் கேட்டு வளரும் குழந்தை மிகவும் ஆரோக்கியமான மனநிலையில் வளரும். கதைகளில் அன்பும், பண்பும், வீரமும், பிறரை மன்னிக்கும் குணமும், தைரியமும், பரந்த மனநோக்கும், தெய்வீக சிந்தனையும், நல்லது கெட்டது எது என யோசித்து செயல்படும் அபார அறிவுத் திறனும், உண்ணும்போதும் உறங்கும்போதும் கேள்வி வாயிலாக அக்காலத்தில் புகட்டப்பட்டது.

இன்றைய பரபரப்பான வாழ்வில் பெரும்பாலான வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டிதான் அவ்வேலையை செய்கிறது. மின்சாரத்தால் இயங்கும் இயந்திரம் அதி வேகமான இயந்திர வாழ்க்கை நிலையையை நிஜ வாழ்க்கையாக பிரதிபலித்துக் காட்டும். விளைவு இப்போதைய தலைமுறைகளிடம் இருக்கும் ஒட்டுறவற்ற தன்மை.

புதியன தோன்றிக் கொண்டிருத்தலும், பழையன தாமாகவே உதிர்ந்து கொண்டிருத்தலும், படிப்படியாக வாழ்க்கையின் ஒவ்வொரு தளத்திலும் மாறுதல்களைச் சுமந்தபடி முன்னேறுதலின் முக்கியப் பங்காக உள்ளது. வளரும் குழந்தைகளின் மனநிலையை தெளிவாக படம் பிடித்துக் காட்டும் நிலையிலும் உள்ளது இக்கதையின் வடிவமைப்பு.

எனினும் சுதிபாட்டியின் அன்பும் அரவணைப்பும் இன்றைய கால கட்ட வாழ்க்கையில் வளரும் பிஞ்சுமனங்களுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. சுதிபாட்டியின் மலர் போன்ற உள்ளம், மென்மையான இயல்புகளால் குழந்தைகள் மனதை கவரும் விதம் மேன்மையான தன்மைகளுடன் குழந்தைகள் வளர உதவும்.

ஆதிரையின் கதசாமி ,குழந்தைகள் உலகை வித்தியாசமாகக் காட்டுவது போல் பெரியவர்களின் அகக்கண்ணை திறக்கும் ஓர் அரிய முயற்சி.

காலச்சுவட்டின் நேர்த்தியான வடிவமைப்பிற்கு பாராட்டுக்கள்.

பெஷாரா

(ஆதிரையின் கதசாமி – க.வை. பழனிசாமி

காலச்சுவடு பதிப்பகம் வெளியீடு )

Comments are closed.