இருமுகம். பென் கிரீன்மேன் என்ற அமெரிக்க எழுத்தாளரின் சிறுகதையின் மொழியாக்கம் / சத்தியப்பிரியன்.

[ A+ ] /[ A- ]

download (32)

ஓர் ஒல்லியான இளம்பெண் பின்னிரவு வேளையில் உங்களைத் தொலைபேசியில் அழைக்கும்போது, உடனே நீங்கள் நாட்காட்டியைப் பார்க்கும்போது, அந்த நாட்காட்டி உங்களுக்குத் திருமணமாக இன்னும் நான்கு நாட்களே இருக்கின்றன என்று கூறும்போது, உங்களுக்கு நிச்சயம் செய்திருக்கும் மணப்பெண் அந்த ஒல்லியான இளம்பெண் இல்லை என்னும்போது, அந்தப் பெண் நீங்கள் இருக்கும் நகரத்தை நோக்கிப் பயணத்தைத் தொடங்கி விட்டாள் என்னும்போது நீங்கள் செய்ய வேண்டிய வேலை கைப்பேசியில் வந்த அழைப்பை நிராகரிப்பதுதான். அழைப்பை நிராகரிக்கவில்லை என்றால் உங்கள் வேலையை நீங்கள் செவ்வனே செய்யவில்லை என்று அர்த்தமாகும். அதற்கு பதில் கைப்பேசியில் வந்த அழைப்பை ஏற்று நீங்கள் அந்த இளம் ஒல்லிப் பெண்ணை நீங்கள் குடியிருக்கும் தளத்திற்கு அழைப்பு விடுத்து, மடமடவென்று ஷவரின் அடியில் நின்று சோப்பு போட்டு குளித்து, கண்ணாடியின் முன் நின்று ஓடிகோலன் அடித்துக் கொண்டு சிகையை ஒருமுறைக்கு இருமுறை சீவிக் கொண்டால் நீங்கள் வேறு ஒரு தில்லுமுல்லு வேலையில் இறங்கப் போவது நிச்சயம்.

அவள் ஒரு சித்திரம் வரைபவள். ஓவியனுக்குப் பெண்பால் எது? பனோஸ் அவளுடன் ஒரு பொதுவான சிநேகிதன் மூலம் நட்பு ஏற்படுத்திக் கொண்டான். அவளுக்கு ஓர் ஆண் சிநேகிதன் இருக்கிறான். வயதுதான் கொஞ்சம் அதிகம். இருபத்திரண்டு வருடங்கள் அவளை விடப் பெரியவன். அவன் முதன் முதலில் ஆவலுடன் பேச சந்தர்ப்பம் கிடைத்தபோது அவளுக்கும் அவள் ஆண் சினேகிதனுக்கும் இருக்கும் வயது வித்தியாசம் கொடுமையானது என்றான். ”கம்போடியாவில் குண்டு போட்டதைப் போல ,’என்று தான் சொன்னதை நகைச்சுவை என்று நம்பி அவன் சிரித்தான். புரிந்ததைப் போலச் சிரித்து அவள் அவனை ஆச்சரியத்தில் மூழ்கடித்தாள். நிகழவிருக்கும் தனது திருமணத்தைப் பற்றிய பேச்சு வந்தது. நிம்மதியாக மூச்சு விடும் அளவிற்கு அவனுக்கிருந்த ஒருவார இடைவெளி குறித்துக் கூறினான். ஆனால் அந்த இடைவெளியை அவன் நல்ல விதமாக பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்று சந்தேகம் கொண்டான். அவள் தனது கைப்பையிலிருந்து ஒரு நீல நிற பால் பேனாவை எடுத்து அவனது கைப்பேசி எண்ணை குறித்துக் கொள்ளத் தொடங்கினாள். அவள் எங்களைக் குறித்துக் கொண்ட விதம் வியப்பூட்டியது. ஒவ்வொரு எண்ணின் ஆங்கிலச் சொல்லின் முதல்எழுத்தைக் குறித்துக் கொண்டாள்.. எட்டு என்றால் eight என்ற ஆங்கில வார்த்தையின் முதல் எழுத்தான E யையும், three என்ற வார்த்தைக்கு th என்ற எழுத்துக்களையும் இது போன்று எல்லா எண்களின் முதல் எழுத்தைக் குறித்துக் கொண்டாள். அவள் எழுதிக் கொண்டதைப் பார்த்ததும் பனோஸ் “அட” என்றான். “Fence Scene” என்பது தான் இருக்கும் குடியிருப்புப் பகுதியின் பெயர் என்றான். அவள் அந்த எண்களைத் தனது வலது கரத்தில் குறித்துக் கொண்டாள்.

“ஒ இந்த அரிய தகவலுக்கு இந்தப் பேனாவைப் பரிசாக அளிக்கிறேன்,”என்று நாடகபாணியில் கூறியவள்,” கவலைப் படாதே இதை வாங்கிக் கொள்ள உன்னுடைய குடியிருப்பிற்கு வருவேன்,”என்றாள்.

அவள் நான் குடியிருக்கும் “Fence Scene “ குடியிருப்புத் தளத்திற்கு வந்தபோது அவன் கண்ணில் முதலில் பட்டது அவள் கரங்களில் அழியாத Fence Scene எழுத்துக்கள்தான். ஆனால் அதற்கும் முன்னால் அவள் கையில் ஓரளவு பெரிய சூட்கேசைச் சுமந்து வருவதைக் கண்டான்.அந்த சூட்கேஸ் அவள் தூக்கி வரும் அளவிற்கு கனமில்லை என்றாலும் மூன்றாவது தளத்தில் இருக்கும் அவனது குடியிருப்புப் பகுதிக்கு மாடிப்படிகளில் சுமந்து வருவதற்கு சற்று பெரிய பெட்டிதான்.

“ நீ இங்கே தங்குவதற்கு வந்தியா? “, என்றவன்,”இதனை என் வருங்கால மனைவி எப்படி எடுத்துக்குவான்னு தெரியலை ,”என்றான்.

அவள் சூட்கேசை கீழே வைத்தாள். அதன் ஜிப்பை அவிழ்த்தாள். பெட்டியின் மேல் மூடியைத் திறந்தாள். பெரிய பெரிய பேப்பர்களில் வெள்ளைக் காகிதங்கள் சுற்றி வைக்கப்பட்டிருந்தன. அவள் அந்தக் காகிதங்களை மடல் அவிழ்த்ததும் உள்ளே வண்ணப் படங்கள் தீட்டப்பட்டிருந்ததைக் கண்டான். அவள் அந்த ஓவியங்களைத் தரையில் விரித்து வைத்தாள். அனைத்து ஓவியங்களும் இயற்கை நிலத் தோற்றம். நீண்ட ஆகாயம், நீண்ட புல் வெளி. ஆகாயத்தில் ஒரு அழகிய பறவை. புல்வெளியின் கீழே ஒரு மனிதனின் சிறிய தோற்றம். மொத்தம் பத்து ஓவியங்கள். பத்து ஓவியங்களும் ஒரே பொருளைக் கொண்டிருப்பினும் ஒவ்வொன்றும் வண்ணத்தில் வேறுபட்டுக் காணப்பட்டன. ஒன்று சிவப்பிலும், இன்னொன்று நீல வண்ணத்த்திலும் மற்றொன்று வெளிர் சாம்பல் நிறத்திலும் என்று பத்து ஓவியங்களும் வெவ்வேறு வர்ணங்களைக் கொண்டு தீட்டப்பட்டிருந்தன.

பனோஸ் அந்த ஓவியங்களைப் பார்த்து அவனுக்கு ஏற்பட்ட குழந்தைமையான சந்தேகங்களைக் கேட்க அவள் தெளிவான பதில்களைக் கூறினாள்.” இந்த ஓவியத்தைப் பார்ப்பவர்களிடம் நான் அந்த மனிதன் பறவையைப் பிடிக்க முயல்வதாகக் கூறுவேன்,”என்றாள்.

“ஆனால் அதைச் சொல்லும்போது எனக்குச் சிரிப்புப் பொத்துக்கும். அந்தப் பறவை ஒன்றும் அறியாத பறவை இல்லை. அதுவும் அந்த மனிதனை நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. அது சர்வ நிச்சயம்,”என்றாள். அவை அனைத்துமே ஒரே காட்சியைப் பார்த்து வரையப்பட்டவையா என்று அவன் கேட்ட கேள்விக்கு அவற்றில் மூன்று படங்கள் மட்டுமே தனது தந்தை வேட்டையில் ஈடுபட்ட புகைப்படம் ஒன்றைப் பார்த்து வரையப்பட்டவை என்றும் மற்ற ஏழு ஓவியங்களையும் அவள் தனது சொந்தக் கற்பனையில் வரைந்ததாகவும் கூறினாள்.

“நான் சின்னப் பொண்ணா இருக்கும்போதே எங்க அப்பா வீட்டை விட்டுப் போயிட்டாரு. அவரு வீட்டில் இருந்த நாளெல்லாம் ஒரே கூச்சலும் கூப்பாடும்தான். அம்மா அதில்தான் வெறுத்துப் போயிருக்கணும். அப்பா போன பிற்பாடு அம்மா சந்தோஷமாவே இருந்தாங்கன்னு சொல்லலாம். அவரு படம் எதுனா கிடைக்குமான்னு சமீபமாத்தான் தேடத் தொடங்கினேன். மூணு படம் கிடைச்சது , மீதி ஏழை என் கற்பனைக்கு விட்டுட்டேன். எந்தப் பெண்ணிற்கும் அவளுடைய தந்தையின் புகைப்படங்கள் பத்துக்கும் அதிகமாக இருப்பது நல்லது.”

தொலைகாட்சியை இயக்கி அதன் ஒலி அளவைக் குறைத்தனர். கைப்பேசியில் பிட்சா ஆர்டர் பண்ணினார்கள். அறையின் நடுவில் இருந்த நாற்காலியில் அவனைப் பார்த்து உட்கார்ந்து கொண்டவள் அன்று அவளது ஃபிளாட்டில் சுடுதண்ணீர் வரவில்லை என்பதால் தான் அன்று குளிக்காத சேதியைக் கூறினாள். பனோஸ் அவள் இஷடப்பட்டால் அந்த வீட்டுக் குளிப்பறையைப் பயன்படுத்திக் கொள்ளச் சொன்னான். அவள் எழுந்து நடமாடத் தொடங்கியவள் ராக்குகளில் அடுக்கி வைத்திருந்த புத்தகளின் மீது தனது விரலால் கோடு போட்டபடிச் சென்றாள்.

“எல்லாம் வாராற்றுப் புத்தகங்கள்,”என்றாள்.

“என்னுடையவை அல்ல,’என்று பனோஸ் பதில் கூறினான்.

“ஓ , பரவாயில்லை, எனக்கு வரலாற்று நூல்கள் என்றால் இஷ்டம்”

அவள் இறுக்கமான லெக்கின்சும் அதை விட இறுக்கமான டி ஷர்டும் அணிந்திருந்தாள். அந்த அப்பார்ட்மெண்டில் இருக்கும் பெண்களை விட இவள்தான் அதிகம் எலும்பும் தோலுமாக இருப்பவள் என்று தோன்றியது. ஒல்லிக்குச்சி. அவள் டி சார்டின் உள்ளே பிரேசியர் அணிந்து கொண்டிருக்கவில்லை. இவளுக்குப் போட்டியாக மேலும் இரண்டு பெண்கள் அந்த அபார்ட்மெண்டில் பிரேசியர் அணியாமல் குலுங்கித் திரிகின்றனர். அவர்களில் ஒருவத்தி கூட அவன் வருங்கால மனைவி இல்லை. அவனது வருங்கால மனைவி பிரேசியர் அணியும் பழக்கம் உடையவள். அவர்களது இந்த மூன்று வருட நெருக்கமான உறவில் அவன் அவளது பிரேசியரின் கொக்கிகளைக் கழற்றும்போதெல்லாம் நிம்மதியாக மூச்சு விடுவது வழக்கம். அந்த வரலாற்று நூல்கள் எல்லாம் அவளுடையவை.

அந்த ஒல்லிப் பெண் பனோஸ் அருகில் வந்து நின்றாள். ஏதோ ஒரு பிரச்சனை குறித்து உறுதியாகப் பேசத் தயாரானவள் போலக் கால்களை ஊன்றி நின்று கொண்டிருந்தாள்.

“நல்லது,’ என்று தொண்டையைக் கனைத்துகுள் கொண்டே பனோஸ், “ இங்கு நாமிருக்கிறோம்,” என்றான்.

“நாம் இங்கே இருக்கிறோம். இதிலென்ன சந்தேகம்?,”என்றால் ஒல்லிப்பெண் அலட்சியமாக.

“ நீ சொல்வதில்தான் அது சொல்லப்படும் விதம் அமைகிறது,” என்றவன் தொடர்ந்து, “ இங்கு நாமிருக்கிறோம் என்பது நாம் இங்கே இருக்கிறோம் என்று கூறுவதை விட அழுத்தம் நிறைந்தது,”.

“நாம அப்படிதானா? அழுத்தத்துடனா ?,”என்று கேட்டவள்,” இது குறித்து விவாதிக்க எனக்குக் கூடுதலாக மது தேவையாக உள்ளது,” என்று கூறியவள் கையிலிருந்தக் கண்ணாடிக் குவளையை ஒருமுறை சுழற்றப் போக உள்ளே இருந்த மதுத்துளிகள் அவள் அணிந்திருந்த டி சார்டின் மேலே தெறித்தது.

“ச்சை “அவள் சிணுங்கினாள்.

“என்னிடம் வேற டி ஷர்ட் இருக்கு,”என்றான் பனோஸ்.

“இல்லை இதனை நான் கழற்றிக் விடுகிறேன்,”என்று கூறி விட்டுக் கழற்றினாள்.

“இப்படி வந்து உட்காரு,”என்றான். அவள் படுக்கையில் அவன் அருகில் வந்து அமர்ந்தாள். இருவரும் டிவி பார்த்தனர். டிவியில் wwf மாதிரி ஏதோ ஒரு மாமிச மல்யுத்தம் நடைபெற்றது. நிகழ்ச்சியின் நடுவில் ஸ்வீடன் தேசத்து கட்டு மஸ்தான மனிதன் ஒருவன் ஒரே மூச்சில் தனது தோளில் ஒரு காரைத் தூக்கி நிறுத்தினான். “கெட்டநாத்தம் வருது என்னிடம்,”என்றாள் தன் கக்கத்தை முகர்ந்தபடி. பனோஸ் கண்களை மூடி நாற்றம் வருகிறதா என்று சோதித்தான். அவள் சொன்னது சரிதான். இளம் கருப்பு நிற மலர் மலர்வதைப் போன்ற நாற்றம் அடித்தது. அவள் அவன் சட்டைப் பொத்தான்களைக் கழற்றி அவனுடைய வெற்று மார்பில் சாய்ந்து கொண்டாள்.

“எங்கப்பாவைப் பற்றி என்னை யோசிக்க வச்சுட்ட ,” என்றாள்.

“நானா?,” என்றவன், “எப்படி?,”என்றான்.

“அதுக்கு ரொம்ப சிரமம் எடுத்துக்காத”

“உன்னுடைய த்வனி எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கலை ,”

“” தெரியும், உனக்கு நான் பேசுவது பிடிக்காதுன்னு தெரியும்,”என்றவள் , “யாருக்கும் பிடிக்காது,” அவன் தோள்களை அழுத்திப் பற்றினாள். “எங்கப்பா என்ன பண்ணினார் தெரியுமா? ஓடிப்போனதைத் தவிர ?,”என்றாள்.

“வேற என்ன? வேட்டையா?,”

“வேட்டை, அது இல்லை. அவர் ஜீவிதத்திற்கு என்ன பண்ணினார் தெரியுமான்னு கேட்டேன். படிச்சது வக்கீலுக்கு. ஆனால் நான் பிறப்பதற்கு ஒரு வருஷம் முன்னாடி அவர் என்னோட கொள்ளு தாத்தாவின் சுய சரிதம் எழுதும் வேலையில் இறங்கினார். எங்க தாத்தா ஆங்கில அரசாங்கத்தில் உளவுத்துறை அதிகாரியாக இருந்தார். அவரது வேலையே ரகசியக் குறியீடுகளின் புதிரை அவிழ்ப்பதுதான். ஜிம்மர்மேன் தந்தி பத்தி நீ கேள்வி பட்டிருக்கியா,” என்றாள்.

பனோஸ் தெரியாது என்று தலையாட்டினான். அவள் உடனே விளக்கத் தொடங்கவில்லை. அவன் தனது விரல்களை அவள் நாபியின் அருகில் வருடியபடி இன்னும் சற்றுக் கீழிறங்கி அவள் உள்ளாடையின் எலாஸ்டிக்கினுள் நுழைந்தான்.

“என்னன்னு சொல்லு”, என்றான் பனோஸ்.

சிறிது நேரம் சென்ற பின்னர்,”என்ன சொல்லணும்?,’ என்றாள்.

‘ஏதோ தந்தியைப் பற்றிக் கூறினாயே, அதைப் பற்றி சொல்லு,”.

“ஓ ,”இதழ் குவித்த அவள் ,”நிஜமாவே உனக்கு அதைப் பற்றி தெரிஞ்சுக்க ஆர்வம் இருக்கா?,’ என்றாள்.

பனோஸ் தலையசைத்து விட்டு விரல்களால் மேலும் கீழிறங்கினான்.

“உன்னைப் பார்த்தால் ஆர்வம் உடையவன் போலத்தான் தெரிகிறது”

“நிஜம்மா, “என்றவன், “சொல்லு அதைப்ப் பற்றி உனக்குத் தெரிஞ்சதைச் சொல்லு”

“நல்லது,” என்று தொடங்கியவள் , “ இந்தத் தந்தியை ஜெர்மன் தேசத்து வெளிநாட்டு செயலர் மெக்சிகோவில் இருந்த ஜெர்மன் தூதருக்கு அனுப்பிய தந்தி. அந்தத் தந்தியில் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியைத் தாக்க திட்டமிட்டிருந்த மெக்சிகோவிற்கு ஜெர்மனி ஆதரவு அளிப்பதாக ரகசியத் தகவல் இருந்தது. எனது கொள்ளு தாத்தாவுடன் சேர்ந்து ஆங்கில அரசு தந்தியின் மர்மக் குறியீட்டை அவிழ்த்தது. அமெரிக்க அதிபர் வில்சன் ஜெர்மனியை எதிர்க்க படைகளைக் கொண்டு நிறுத்தினார். அதன் பிறகு சில நாட்களில் முதலாம் உலகப் போர் தொடங்கியது,”

“இந்த வரலாற்று நூல்கள் என்னுடையவை இல்லை என்றாலும் எனக்கும் ஓரளவு உலக வரலாறு தெரியும்,”என்றான் பனோஸ்.

“அந்த ரகசியக் குறியீடு கிரிப்டோக்ராம் வகையைச் சேர்ந்தது. நாங்கள் அந்தத் தந்தியின் ஒரு பகுதியை டிகோட் பண்ணினோம். ஜெர்மன் தேசத்து முக்கிய உளவாளிகளில் ஒருவனான வில்ஹெல்ம் வாஸ்மஸ் என்பவன் டிகோட் விளக்க புத்தகம் ஒன்றை ஈரான் தேசத்தில் ஒரு வருடம் முன்னர்தான் தொலைத்திருந்தான். எங்கள் கையில் அந்தப் புத்தகம் சிக்கியது. பிறகு என்ன? நாங்கள் அதனைக் கொண்டு ஜிம்மர்மேன் தந்தியின் புதிர் வாசகத்தை டிகோட்செய்து மெக்சிகோ, ஜெர்மனி முயற்சியில் மண் அள்ளிப் போட்டோம்.”

“நீங்கள்?”

இப்போது அவளுக்கு அவனுடைய த்வனி பிடிக்கவில்லை. “ஆம் நாங்கள் ஆங்கிலேயர்கள். என் கொள்ளுத் தாத்தா எல்லோரும்தான்,’என்றாள். டிவியில் மல்யுத்தம் முடிந்து மோட்டார் சைக்கிள் பந்தயம் காட்டப்பட்டது. அவள் கழிப்பறை செல்வதற்காக எழ எத்தனித்தாள். கழிப்பறை சென்று விட்டு வந்தவள் தனது ஓவியங்களை மீண்டும் சூட்கேஸில் எடுத்து வைத்துக் கொள்ள ஆரம்பித்தாள்.

“இது என்ன வர்ணம் என்று சொல்” என்றாள் ஒரு கான்வாசை விரித்து வைத்தபடி..

“நீலம்;”

“அப்படின்னா இது?’

“ இதுவும் நீலம்தான்”

“இது பைத்தியக்காரத்தனமாக இல்லை? இரண்டு வெவ்வேறு நிறங்களுக்கு ஒரே பெயர். இந்த ஒரு விஷயத்திற்கே ஓவியம் கத்துக்க போகலாம். ஒவ்வொரு வண்ணமும் ஒவ்வொரு புதிர் மொழி.”

“ஆமாம்,”என்று கூறியவன்,” அந்த டிகோட் கதையை முழுவதும் சொல்லு,”என்றான்.

“அதான் சொல்லிட்டேனே. அவ்வளவுதான். நான் வண்ணங்களுக்குத் தாவியாச்சு. உன் பாத்ரூம் நீல வண்ணத்தில் இருப்பது கேவலமாக இருக்கு”

“என் பாத்ரூம் கலரை நான் தேர்வு செய்யவில்லை”

“அந்த நிறம் உன்னைப் பிரதிபலிக்கவில்லை. சரி எப்போ உன் திருமணம்?,”

“வரும் ஞாயிறன்று. “ பனோஸ் கூறினான்.” வினோதமான உணர்வுதான் இப்போ எனக்கு. என்னவோ திருமணத்திற்குப் பல கோடி யுகங்கள் இருப்பது போன்ற உணர்ச்சி. முதன் முறை நடக்கவிருக்கும் நிகழ்வு என்பதால் நான் கொஞ்சம் இழுத்து மூச்சு விட்டுக் கொள்ள விரும்பறேன் “

“ மூச்சு விட்டுக்கிட்டுதான் இருக்கே இல்லை?,’

“ எப்பவும் நல்லா மூச்சு விட்டது கிடையாது.”

“என்னிடமிருந்து வரும் கெட்ட வாடை காரணமா?”

“ காரணம் அதுவல்ல. என்னிடம் கெட்ட வாடை அடித்தால் நான் என்ன மாதிரியான தகவலைக் கொடுப்பேன் என்பதை நினைத்ததால் கூட இருக்கலாம். ஒரு வேளை அப்போது என்னுடைய உண்மையான உணர்வுகள் வெளிப்படலாம்.”

“உண்மையான உணர்வுகள்… எவை அந்த உண்மையான உணர்வுகள்? நான் இங்கிருப்பதற்கும் அந்த உணர்வுகளுக்கும் தொடர்பு இருப்பதாக வைத்துக் கொள்கிறேன்”

இதனைக் கூறும்போது அவள் தனது முகவாயைச் சற்று மேலே தூக்கி வைத்துக் கொண்டாள். வார்த்தைகள் மோவாயின் மேல் பகுதியிலருந்து வருவதைப் போலத் தோன்றியது.

“இருமுகம்’

“இருமுகம் என்பது இரண்டு உணர்வுகள் சங்கமிக்கும் இடம். ஆனால் என் கேள்வி அந்த இரண்டு உணர்வுகள் எவை என்பதுதான்.”

“ஆனந்தம், பயம்: சுகம், துக்கம்; சந்தோஷம், வெறுப்பு ;சரி, தவறு”

“தவறு ?”.

“ ஆமாம் வெளிப்படையான தவறு.ஒருவேளை இது சரியான தேர்வா கூட இல்லாமல் இருக்கலாம். உலகம் முழுவதும் கோடிக் கணக்கில் நேசிப்பதற்கு ஜனங்கள் இருக்கும்போது நான் ஒன்றே ஒன்றை மட்டும் தேர்வு செய்வது எப்படி சரியாகும்? நான் முட்டாள் ஆகிவிடக் கூடாது இல்லியா? நான் அடுத்தவர்களைச் சந்தித்திருக்கிறேன். இன்னும் வேறு சிலரை சந்திக்க இருக்கிறேன். எஸ்கிமோக்களைப் பற்றி என்ன நினைக்கிறாய்?”

“எஸ்கிமோக்களா? இப்போ என்ன அவங்களுக்கு?”

“ இல்லை ஃபின்கள் அதுவும் இல்லை என்றால் மலாய் மக்கள் இன்னும் இது போல நான் கேள்வியே பட்டிராத மக்கள் இவர்கள் மத்தியில் நான் ஒருவேளை இருமுகம் இல்லாமல் இருக்கலாம். நீ உன் ஆண் சிநேகிதனிடம் அவனுக்கு இருமுகம் இருக்கிறதா அப்படின்னு கேட்டிருக்கியா?,”

“ அவன் ஒரு குறுங்கதை. அவன் வயசானவன். பருமனானவன். உன்னை மாதிரி தாடி வச்சிருப்பான். என்னோட ஓவிய காட்சிசாலைக்கு அவன்தான் மாசா மாசம் வாடகை கொடுக்கறான். அவனிடம் இருப்பது … என்ன சொல்ல இரக்கத்துடன் கூடிய வெறுப்பு. வந்தது மாதிரியே தந்திரமா காணமல் போய்விடும்.”

அவனது சட்டைக்குள் தனது கரம் ஒன்றை நுழைத்து அவனது கால்களுடன் தனது கால்களைப் பின்னிக் கொண்டாள்.

“என்னை முத்தமிடுவாயா?.”

“நிச்சயமா. ஆனால் அதுக்கு மேல போவேனான்னு தெரியலை. எனக்கும் போக ஆசைதான் ஆனால் பாரு …”என்றான் பனோஸ்.

“இதுதான் இருமுகம் என்று சொல்லலாம் ”

அவர்கள் முத்தமிட்டுக் கொண்டதும் அவள் தனது லெக்கின்சை மேலும் கீழே இறக்கினாள். அவள் உள்ளாடை எதுவும் அணிந்து கொண்டிருக்கவில்லை. “உன் கரங்களால் இங்கே தொடு,”என்றாள் கண்களைச் சிமிட்டியபடி.

“ நீ வற்புறுத்துவதால்,”என்ற பனோஸ் ,” எனக்குப் போதும்னு தோணினால் நான் என் செயலை நிறுத்திக் கொள்வேன்,”என்றான்.

“ரொம்ப ஐஸ் வைக்காதே,’என்று அவள் கண்களைச் சுருக்கியபடி கூறினாள்.

“நான் என்ன சொல்ல வர்றேன்னா தண்ணியடிச்சிட்டு வண்டி ஓட்டும் கார் டிரைவர் வண்டி அவன் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகப் பெருமையடித்துக் கொள்வதைப் போல இந்தச் செயல் இருக்கிறது”

ஓ. இதுவும் நீ பண்ணும் முகஸ்துதியோ என்னவோ தெரியாது. உனக்கு என்ன வேணுமோ அல்லது வேண்டாமோ நீதான் முடிவு எடுக்கணும். உனது மணித்துளிகள் அளந்து வைக்கப்பட்டிருக்கின்றன. மறந்துடாதே. ராஜாங்க ரகசியங்கள் பலவற்றை உனக்குச் சொல்லியிருக்கேன். விடிவதற்கு ரொம்ப நேரமில்லை. நான் கிளம்பணும்,”என்றாள். ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து அமர்ந்திருந்தனர். அவள் தொலைகாட்சியில் ஓடிக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் பந்தயத்தைப் பார்ப்பதாக பாவனை செய்து கொண்டிருந்தாள்.

வெளியில் வானம் தனது வண்ணத்தை மாற்றத் தொடங்கி விட்டது. கருமையிலிருந்து சற்று வெளுத்த கருமைக்கு. ஆகாயத்தில் நீலத்தின் சாயல் கொஞ்சம் கூட கிடையாது. “அதோ ஆகாயத்தில் ஒரு பறவை பறக்கிறது. இரவு நேரங்களில் அபூர்வமாகக் கண்ணில் தென்படும் பறவை அது” என்றான்.

“மனிதன் பறவையைப் பார்க்கிறான். ,’ என்றவள், ”அது நிச்சயம் என்பதை மறுப்பதற்கில்லை,” என்று கூறினாள்.

அவள் தனது கரங்களில் பறவை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி பிறகு தனது தோள்களை எவ்வளவு அகலம் விரிக்க முடியுமோ அவ்வளவு அளவு விரித்து அந்தப் பறவையைப் பறக்க விடுவது போல பாவனை செய்தாள். அவளது மெலிந்த தோற்றம் அவள் காட்டிய பாவனையில் வலி மிகுந்த மதம் தொடர்பான தகவல் மறைந்திருப்பதைக் காட்டியது. அவனுடைய எண்ணங்களுக்கு எட்டாத ஒன்றின் மீதான முறையீடாக அது தோன்றியது.

“அப்படியே பின்னால் திருப்பி உன் தலையை என் மீது வை”, என்றவள் அப்படி அவன் வைத்ததும் அவன் கழுத்தில் ஒரு வெட்டு வெட்டி அவன் கால்சராயின் பொத்தான்களை அவிழ்த்தாள். அவன் வயிற்று மேட்டில் விரல்களால் வட்டமிட்டாள். அவள் செய்கையில் ஒரு கட்டுப்பாடு இருந்தது. கேட்டுப் பெறுவதையும் விட அவள் ஆடைகளைக் கழற்றுவது அத்தனை சுலபமான செயலாகத் தோன்றியது. கேட்டுப் பெறுவதையும் விட சில நேரங்களில் சில விஷயங்கள் மிக எளிதாகக் கிடைத்து விடுகின்றன.

காலை ஏழு மணிக்கு அவள் கிளம்ப ஆயத்தமானாள். அவளுடைய டி ஷர்ட் படுக்கை மேல் கிடந்தது. பனோஸ் தனது சட்டை பொத்தான்களை அணிந்து கொண்டான்.

“நல்லது , இதைச் செய்வதற்கு வழி உண்டா? “என்று கேட்டான். ஒளிவுமறைவு எதையும் அவன் எதிர்பார்த்து இதனைச் சொல்லவில்லை. அவளை அவன் விடிவதற்கு முன்னர் காலை மூன்று மணிக்கே அந்தக் குடியிருப்புப் பகுதியிலிருந்து அனுப்பி விட எண்ணியிருந்தான். இப்போது அந்த அப்பார்ட்மென்ட் மனிதர்கள் விழித்துக் கொண்டிருப்பார்கள். அங்கிருப்பவர்கள் அவனது வருங்கால மனைவியை நன்கு தெரியும். இந்தக் காலை நேரத்தில் அவனுடைய குடியிருப்பிலிருந்து வெளியேறும் இந்த ஒல்லிப்பெண் குறித்து சந்தேகம் எழாமல் போகாது.

“நான் கீழ போய் இந்தக் குப்பையை போட்டுட்டு வர்றேன். பாதையில் யாருமில்லைன்னா நான் பஸ்ஸரை ஒருமுறை அழுத்துவேன். நீ எவ்வளவு சீக்கிரம் வெளியேறி வரமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடு. கதவை சாத்திட்டு வந்தாப் போதும் அது தானே பூட்டிக் கொள்ளும் வசதியுடைய கதவு”, என்றான்.

“ஓகே , உன்னோட குப்பைக் கூடையோட என்னோட சூட்கேஸையும் தூக்கிட்டு போக முடியுமா? அப்போதான் என்னால மூணு மாடிப்படிகளில் தள்ளாடாம இறங்க முடியும்,” என்றாள்.

“ஏதோ உளவாடப் போவது போலிருக்கு,”என்றான் பனோஸ்.

“இதெல்லாம் ஒண்ணும் உளவு வேலை இல்லை. நான் உனக்கு அது பத்தி நிறைய வேற கதைகள் சொல்றேன்”

பனோஸ் அவளை கலைச் சிற்றுண்டிக்கு அழைத்துச் சென்றானா? அழைத்துச் செல்லவில்லை என்றால் அது அவனுடைய முரட்டுத்தனத்தைக் காட்டிக் கொடுத்துவிடும். அவளை ஒரு சிற்றுண்டிச் சாலைக்கு அழைத்துச் சென்றான். ஆனால் சாப்பிட்டதற்கான பில்லை அவன் கட்டவில்லை. அது கிட்டத்தட்ட திட்டமிட்டு செய்யப்படும் சதிச்ச்செயல் போலாகி விடும்.. அடுத்தவர் உணர்ச்சிகளைக் காலில் போட்டு மிதிப்பவன் என்ற பிம்பத்தை அவனுக்கு வாங்கிக் கொடுத்து விடும். இவற்றை எல்லாம் மீறி அப்போது அவனுக்குப் பசி இல்லை, அதீதமாக தாகம் மட்டும் எடுக்கவே பெரிய டின்னில் குளிர்பானம் வாங்கி ஒரே மடக்கில் குடித்து முடித்தான். அவள் ஒரு காப்பி ஷாப்பில் நின்று ஒரு பெரிய டோஸ்ட் செய்யப்பட்ட பிரடை வாங்கிச் சாப்பிட்டாள். அந்த ரொட்டியைக் கடித்துச் சாப்பிட்டபோது அவள் தாடையின் ஓரங்களில் வெண்ணெய் வழிந்தது. கன்னங்களில் வெண்ணெய்த் தீற்று. ஆகாயம் நீல வர்ணத்தில் பிரகாசித்தது. அந்தக் கணத்தில் குறிப்பிட்ட அந்தத் தருணத்தில் அவன் அவளை மீண்டும் தனது குடியிருப்பிற்கு அழைத்துச் சென்று அவன் செய்யத் தவறிய தவறுகளைச் செய்ய நினைத்தான். உடனே அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு,”நீ உன்னுடைய பால் பேனாவைத் திரும்ப எடுத்துக் கொள்ள மறந்துட்ட,’ என்றான்.

“நீயே வச்சுக்கோ. என் ஞாபகார்த்தமா. ஊர் பேர் தெரியாத ஒருவரை நினைவில் வச்சுக்க இது சிறந்த வழியா இருக்கும். அதை வைத்து நீ எழுதும்போது நான் கண்ணுக்குத் தெரியாத மை போல தாள்களில் கரைவேன். நீ எழுதும் செய்தியின் கீழே கண்ணுக்குப் புலப்படாத செய்தியாக வழிவேன்.”

“நீ சொல்றதுக்கு என்ன அர்த்தம்?,”.

“உனக்குப் புரியாது.”, என்றவள்,” அது இனூக்டியூட் (Iniktiyut) ”, என்றாள்.

“அப்படின்னா?,” என்றான்.

“போய்ப்பாரு. உன்னிடம்தான் ஏராளமான புத்தகங்கள் இருக்கே. நான்தான் பார்த்தேனே. நான் கிளம்பறேன்”.

“பார்க்கலாம்,”என்றான் பனோஸ்.

“பார்க்கலாம் ஒருவேளை பார்க்காமலும் போகலாம்”

“நல்லது . Fence Scene அபார்ட்மென்டில் உனது பொழுது நல்லா போயிருக்கும்னு நினைக்கிறேன்,”என்றான் அவன்.

“நீ ஒரு முட்டாள்,”என்றவள் அவனை நெருங்கி விடைபெறும் முகமாக முத்தமிட அருகில் வந்தபோது அவன் மீண்டும் அந்த கருநிற மலரின் வாசத்தை முகர்ந்தான். அவன் மீண்டும் தனது குடியிருப்பிற்குச் சென்று அவசர அவசரமாகப் புத்தகங்களைப் புரட்டினான். ஒரு புத்தகத்தின் அட்டவணையில் ஜிம்மெர்மேன் தந்தி என்றிருந்ததைப் பார்த்து அந்தப் புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினான். அவனுக்கு எதுவும் விளங்கவில்லை. ஒருவேளை அவர்கள் அதனை இனூக்டியூட் மொழியில் கூட எழுதப்பட்டிருக்கலாம்.உள்ளே புத்தகத்தில் பக்க அடையாள அட்டையில் அவனது மனைவி அவளது பெயரைக் கையொப்பமிட்டிருந்தாள் . மனைவி, கிட்டத்தட்ட அப்படிதான். அந்தப் புத்தகத்தைப் பொறியை டப்பென்று மூடுவது போல மூடினான். ஒன்று அவன் இருமுகம் பொறியில் மாட்ட வேண்டும், அல்லது அதனைக் கொல்ல வேண்டும். மூன்று நாட்கள் சென்றதும் அவன் மனைவி தனது பெயரை மீண்டும் ஒருமுறை திருமணப் பத்திரத்தில் அவனுக்கு நன்கு விளங்கக் கூடிய பத்தியின் கீழ் கையொப்பமிட்டாள். பேனாவின் மையும் ஆகாயமும் நீல வண்ணத்தில் இருந்தன.

••••

Comments are closed.