யெஹுடா அமிச்சாய் கவிதைகள் – தமிழில்: ராஜேஷ் சுப்ரமணியன்

[ A+ ] /[ A- ]

download (33)

1.

கடவுளின் தலைவிதி

இப்பொழுது
கடவுளின் தலைவிதி,
மரங்கள், கற்கள், சூரியன் மற்றும் நிலவு
ஆகியவற்றை வழிபடுவதை அவர்கள் நிறுத்திவிட்டு
கடவுளை வழிபடத் தொடங்கியபொழுது
அவற்றிற்கு நேர்ந்த விதியே.

இருப்பினும் அவர் நம்முடன்
தொடர்ந்து இருக்கும் கட்டாயத்திற்குத்
தள்ளப்பட்டிருக்கிறார்;
கற்கள், சூரியன், நிலவு மற்றும்
நட்சத்திரங்களைப் போலவே.

2.

பரிதாபமான விஷயம்.

உன்னுடையத் தொடைகளை
என்னுடைய இடையிலிருந்து
அவர்கள் வெட்டி எடுத்தார்கள்.
என்னைப் பொறுத்தவரை
அவர்கள் எல்லோரும்
அறுவை சிகிச்சை நிபுணர்கள்.
அவர்கள் அனைவருமே.

அவர்கள்
நம் இருவரையும்
ஒருவரிடமிருந்து மற்றவரைப்
பிரித்தெடுத்தார்கள்.

என்னைப் பொறுத்தவரை
அவர்கள் அனைவருமே பொறியாளர்கள்.
அவர்கள் அனைவருமே.

பரிதாபப்படத்தக்க விஷயம் தான்.
நாம் அந்த அளவிற்கு அருமையான ,
விரும்பத்தக்க ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு.
ஒரு மனிதன் மற்றும் அவன் மனைவியைக் கொண்டு
அமைக்கப்பட்ட ஒரு விமானம்.
இறக்கைகள் மற்றும் அனைத்துடனும்.
பூமியிலிருந்து சற்றே உயரத்தில்
நாம் சுற்றிக்கொண்டிருந்தோம்.

கொஞ்ச தூரம் பறக்கவும் செய்தோம்.

3.

எனது அம்மா ஒரு முறை சொன்னாள்

எனது அம்மா ஒரு முறை சொன்னாள்
அறையில் பூக்களுடன் உறங்க வேண்டாம் என்று.
அப்போதிலிருந்து நான்
பூக்களுடன் உறங்குவதில்லை.
நான் தனியாகவே உறங்குகிறேன், அவை இல்லாமல்.

நிறைய பூக்கள் இருந்தன.
இருப்பினும் போதிய அவகாசம்
என்னிடம் இருந்ததில்லை.
நான் நேசிக்கும் மனிதர்கள்
எனது வாழ்விலிருந்துத் தம்மை வெளியே வெளியே
தள்ளிக்கொண்டே போகிறார்கள் -
படகுகள் கரையிலிருந்து விலகி விலகிச் செல்வது போல.

என்னுடைய அம்மா சொன்னாள்
பூக்களுடன் உறங்க வேண்டாமென்று.
நீ தூங்க மாட்டாய்.
நீ தூங்க மாட்டாய் , என்னுடைய குழந்தைப் பருவத்தின் தாய்.

பள்ளிக்கு என்னை இழுத்துச் செல்லும்பொழுது
நான் மறுத்து, இறுகப் பற்றிக்கொண்ட
மாடிப் படிக்கட்டின் கைப்பிடிகள்
எப்பொழுதோ எரிக்கப்பட்டு விட்டன.
ஆனாலும், இறுகப் பற்றிக்கொண்ட
எனது கைகள்,
இன்னும் இறுகப் பற்றியவாறே இருக்கின்றன.

***********************

(குறிப்பு: யெஹுடா அமிச்சாய் – Yehuda Amichai- (1924-2000) இஸ்ரேலிய நவீனக் கவிஞர். ஹீப்ரு மொழியில் எழுதுபவர். உலக அளவில் புகழ் பெற்றவர்.

Comments are closed.