நாகொல்லாகொட தர்மசிறி பெனடிக்ட் / அவர்கள் நம் அயல் மனிதர்கள் 15 / எம்.ரிஷான் ஷெரீப்

[ A+ ] /[ A- ]

நாகொல்லாகொட தர்மசிறி பெனடிக்ட்

நாகொல்லாகொட தர்மசிறி பெனடிக்ட்

பத்திக் கட்டுரைத் தொடர்

பாரேன் அம்மா எனக்குப் புற்றுநோயாம்…!

கருங்கற்பாறை இரும்பையொத்த
உறுதியான உடலை எனக்குத் தந்து
இளகிய மனதை ஏன் தந்தாய் தாயே எனக்கு
மனைவியின் நேசம் நாணற் பாயை
உதறித் தள்ளிச் சென்ற நள்ளிரவில்
அழுதழுது தலையணையில்
விழிநீர் தேக்கியது நீதான் அம்மா

ஆகவேதான் தனித்திருக்கிறேன் நான் இன்று
நிழல் மாத்திரமே அருகிலிருக்கிறது
மனைவியும் விட்டுச் சென்றுவிட்டாள் என்பதனால்
தாமாக மூடிக் கொள்கின்றன விழிகள்
பெண்களைக் கண்டதும்

நள்ளிரவில் உன் கல்லறையருகில் வந்து
உன்னைத் தேடுகிறேன் எனது தாயே
நிலைத்திருக்கும் உன் உருவம் தவிர
யாருடைய உருவப்படமும் இல்லை
இவ் வெற்றுப் பாக்கெட்டில்

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு
அருகில்தான் இப்போதிருக்கிறேன் அம்மா
ஜீவிதம் முடிய வெகுதூரமில்லை இன்னும்
புற்றுநோயாம் என நுரையீரலே சொல்கையில்
தனிமையைப் போக்கவென சாம்பலாக்கிய
அப் புகைப்பழக்கம் மறக்கடிக்க விடுவதில்லை அம்மா
உனது புதைகுழியில் இடமுண்டல்லவா
விரைவாக வருகிறேன் அம்மா
உன் மடியில் சுருண்டு படுத்திருக்க

நான் வாழ்க்கை கொடுத்த அநேகம் பேர் இன்று
ராஜ வாழ்க்கை வாழ்வது குறித்து மகிழ்ச்சி அம்மா
நீ கட்டளையிட்டபடியே
ஏழைகளுக்காக கவிதைகள் எழுதி எழுதியே
கடமையை நிறைவேற்றி விட்டேன் எனது தாயே
நான் மரணிக்கும் நாளின்
சவப்பெட்டிக்கான பணம் கொடுத்தது
கவிதை எழுதியென்றால் இல்லை அம்மா

******
ஆகவே என்னை நேசித்த தோழமைகளே
எனக்கு விடைபெற அனுமதியுண்டோ
நான் இல்லாத வெறுமையை உணர்வீரோ
இதன் பிறகு கவிதைகள்
இல்லையென்றாலும் அழமாட்டீர்கள்தானே
தொலைதூர வானில் அந்த ஒற்றை ஏழை நட்சத்திரம்
தென்படுகிறதல்லவா உங்களுக்கு
ஐயோ அது நான்தான்
அதைப் பார்த்து எச்சில் உமிழ மாட்டீர்கள்தானே

எங்கு புதைப்பார்களோ தெரியாது
புதைகுழியைத் தேடி
கண்டுபிடிக்கவும் முடியாமல் போகும்
தொப்புள்கொடியை அறுத்த நாள் முதல்
துயரத்தை மாத்திரமே அனுபவித்திருப்பதனால்
சிரேஷ்ட கவிஞர்களே
வேண்டாம் மலர்வடங்கள் எனது நெஞ்சின் மீது
சுமையாக அவை அழுத்தும் என்னை

எப்போதும் உங்கள் இதயங்களை
முத்தமிட்டேன் நான்
ஏழை இளம் கவியென்பதனால் அது
உங்களுக்குத் தெரிந்திருக்காது
இப்போது எனது தனிமைக்கென
என்னிடம் வந்திருக்கும் புற்றுக் கன்னியே
நான் உன்னைத் துரத்த மாட்டேன்

நாகொல்லாகொட தர்மசிறி பெனடிக்ட் எழுதிய கவிதை இது. ஒரே கவிதையில் மறைந்த அம்மா குறித்த ஏக்கம், விட்டுப் போன மனைவி தந்து சென்ற தனிமை, சிரேஷ்ட கவிஞர்களால் கவனிக்கப்படாத ஏழைக் கவிஞர், அவருக்கு மரணத்தைக் கொண்டு வந்திருக்கும் புற்றுநோய் என பல விடயங்களையும் குறிக்கும் இச் சிறந்த கவிதையை எழுதியிருக்கும் தர்மசிறி பெனடிக்டை ஒரு சுத்திகரிப்புத் தொழிலாளியாக, ஒரு ஏழைக் கூலித் தொழிலாளியாக நீங்கள் எல்லோருமே பார்த்திருப்பீர்கள்.

ஆமாம். அதுதான் அவர். சொந்தமாக ஒரு இருப்பிடமற்று தெருவோரத்தில் படுத்துறங்கும் அக் கவிஞர் சிங்கள மொழியில் ஆயிரக்கணக்கான கவிதைகள் எழுதியிருக்கிறார். எல்லாமே ஏழை மக்களின் துயரத்தைப் பாடுபவை. ஏழைகளுக்காகப் பேசுபவை.


குடை திருத்துபவர்கள், சப்பாத்து தைப்பவர்கள், மரமேறுபவர்கள், சுத்திகரிப்புத் தொழிலாளிகள், யாசகர்கள் என எல்லோருமே நாம் தினந்தோறும் காணும் நம் அயலில் இருப்பவர்கள்தான். அவர்களுக்குள்ளும் ஒரு இதயம் இருக்கிறது என்பதையும், அந்த இதயத்திலும் இயற்கை, இலக்கியம் குறித்த ஈடுபாடுகளும் நேசமும் இருக்கக் கூடும் என்பதையும் எத்தனை பேர் எண்ணிப் பார்த்திருக்கிறோம்? அவ்வாறானவர்கள் குறித்து எண்ணத் தூண்டுகிறதல்லவா இந்தக் கவிதை.

ஆமாம். வறுமையிலும் இலக்கியம் படைக்கும் இவர்கள்தான் எம் மக்கள். நம் அயல் மனிதர்கள்.

- எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com

Comments are closed.