பயணம் / ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

[ A+ ] /[ A- ]

CnPJUrfVUAAFhBi

காட்சி – 1

தன் உருப்பெருக்கிக் கண்களை யுருட்டியுருட்டி யென்னைத்
தீவிரமாய்க் கண்காணித்துக்கொண்டிருந்தாள்.
மொத்தமா யென்னை ஒரு பொட்டலத்தில் மடித்துக் கட்டும் விருப்பத்தில்
என் ஒவ்வொரு அசைவையும் ஆனமட்டும் அலசியலசி
அவளுடைய தொலைக்காட்சிப்பெட்டி தந்துகொண்டிருந்த
இலவச சோப்புகளெல்லாம் கரைந்துபோய்க்கொண்டிருந்தன.
அத்தனை அகலமாய் விழிகளை விரித்தால் எதுவும் தப்பாது என்று என்னவொரு அபத்தமான நம்பிக்கை.
ஊடுகதிர்களுக்குத் தப்பியதொரு ரத்தக்கட்டி யுள்ளே எங்கேனும் ஒட்டிக்கொண்டிருக்கலாம்….
அங்கங்கே சில நரம்புகள் வெட்டுப்பட்டுக் கிடக்கலாம்…
என் கடந்தகாலத்தின் துண்டுதுணுக்குகள் மூளையின் எப்பக்கக் கிடங்கில்
குவிந்திருக்கின்றன தெரியுமா?
என் உடலெங்கும் பாய்ந்துகொண்டிருக்கும் குருதியின் எத்தனை விகிதம்
என் வருங்காலம் என்று பிரித்துக்காட்ட இயலுமா?
என் மூச்சுக்காற்றில் மண்டிக்கிடக்கும் மொழியா வார்த்தைகளைக்
கணக்கிட்டுக் கூற முடியுமா…?
மனிதர்களைப் பண்டங்களாய் நிறுத்துப்பார்ப்பதை நிறுத்தினால்
எத்தனை நன்றாயிருக்கும்…..
என்றால், இவர்களுக்கு என்றாவது புரியுமா….?

காட்சி – 2
குறைந்தபட்சம் மூன்று பெண்களை மணந்து
முப்பது பெண்களைப் புணர்ந்தால்
ஒப்பிலா பேராண்மை லபிக்கும் என்பது
வழிவழியாய் வரும் ஐதிகம்.
நாத்திகவாதிகளிலும் பலருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானது.
இலக்கை யடைவதற்கென்று
வகுத்துரைக்கப்பட்ட விதிமுறைகள் ஒரு சில இருந்தாலும்கூட
அவரவர் இயல்பாற்றலுக்கேற்பஅவரவர்களே உருவாக்கிக்கொள்வதே
நீடித்த வெற்றிக்கு உத்தரவாதமளிப்பது.
அனுபவசாலிகளைப் பார்த்துக் கற்றுக்கொள்ளவேண்டிய
dos &don’ts உண்டுதான்.
மறுமுனைப் பெண்ணைப் பொறுத்தும் உத்திகளைத்
தகவமைத்துக்கொள்வது உத்தமம்.
முத்திரை வாசகங்களுக்கா பஞ்சம்?
அன்பிலார் என்பிலார் என்று அள்ளியிறைத்த பின்பும் மிஞ்சும்.
கொஞ்சம் கடவுள் கொஞ்சம் மிருகமானவர்கள்
இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்
மணக்கவேண்டிய மூன்றாவது மனைவியையும்
புணரவேண்டிய முப்பதாவது பெண்ணையும்.

காட்சி – 3
போனபோதெல்லாம்
பாரளந்தான் தாளை தரிசிப்பதொன்றே
ஆனபெரும் பயனாய் பக்தன்…
அவன் உடல்பொருள் ஆவியான பெருமானுக்கோ
ஆயிரங்கோடி வேலைகள்;
ஆறாயிரங்கோடி பக்தர்கள்
கூவிக்கூவியழைத்தாலும் கேளாத் தொலைவிலான
பள்ளிகொண்டானின்
பல்லாயிரங்கோடி பக்தர்களில்
ஒரேயொரு பக்தகோடியின் அன்பு
கடலில் கரைத்த பெருங்காயமாய்…..

•••

கிழக்கே போகும் ரயிலின் கடைசிப்பெட்டியின் பின்பக்கம்
அவளுக்கெனக் கிறுக்கல்கள் அனுப்பப்பட்டுக்கொண்டிருந்தன.
கதிரவன் உதயமானதும் கட்டுச்சோறுடன் கிளம்பிவிடுவாள்.
குதியாட்டம்தான் போகும்வழியெல்லாம்.
அந்தச் சாக்கட்டி எழுத்துக்களைக் கண்ணாரக் கண்டுகண்டு
புத்துயிர்த்துக்கொண்டிருந்ததொரு பொற்காலம்.
சில நாட்கள் கிறுக்கல்கள் இருக்காது.
‘காற்றின் வேகத்தில் எழுத்துக்கள் கலைந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம்’
என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொள்வாள்.
காலம் செல்லச் செல்ல
கிழக்கே போகும் ரயில்கள் எல்லாமா, ஒரு குறிப்பிட்ட ரயிலா
என்ற குழப்பம் ஏற்பட்டது.
மேற்கே போகும் ரயிலின் நடுப்பெட்டியின் ஏதேனுமொரு ஜன்னலின் கீழே
கிறுக்கல்கள் மறதியாய் எழுதப்பட்டுவிடக்கூடுமோ
என்ற கேள்வியெழுந்தது.
தெற்கே போகும் ரயிலில் எழுதிவைத்தால் என்ன
என்று திரும்பும் வழியில் துணைக்கு வரும் ஆறிடம் கேட்கத்தொடங்கினாள்.
காலதாமதமாக வருகிறதோ ரயில் என்ற எண்ணத்தில்
கால்கடுக்கக் காத்திருக்கத் தொடங்கினாள்.
ஒருவேளை வரவேண்டிய நேரத்திற்கு முன்பாகவே வந்துபோய்விட்டதோ என்று
கண்ணெட்டாத் தொலைவு வரை இருப்புப்பாதைகளைத் துருவினாள்…..

அன்று வந்தபோது
தண்டவாளம் மீது ஆகாயவிமானமொன்று நின்றுகொண்டிருந்தது.
ஆச்சரியத்தில் கண்கள் அரைக்கணம் விரிந்தாலும்
கிழக்கே போகும் ரயிலைக் காணாத துக்கம் குளங்கட்டியது.
கிறுக்கல்களைப் பற்றிய நினைப்பேயில்லாமல்
நெஞ்சில் கனக்கும் ரயிலுக்கான இழப்பை உணர்ந்த கணம்
திசைகளற்றுப் போயின!
சுற்றிலும் எங்கு பார்த்தாலும் சூர்யோதயம்!
அந்த ஆகாயவிமானம் அவளை வட்டமடித்து வந்துநின்று
உருமாறியது ரயிலாய்!

Comments are closed.