கார்ல் சான்ட்பர்க் கவிதைகள் / தமிழில் : சமயவேல்

[ A+ ] /[ A- ]

கார்ல் சான்ட்பர்க்

கார்ல் சான்ட்பர்க்

கார்ல் சான்ட்பர்க் கவிதைகள்

தமிழில்: சமயவேல்

சட்டை

எனக்கு ஞாபகம் இருக்கிறது உன் பின்னால் ஓடி காற்றில் படபடக்கும்

உனது சட்டையைத் துரத்திப் பிடித்தது.

பல நாட்களுக்கு முன்பு ஒருமுறை நான் ஒரு டம்ளர் நிறைய எதையோ குடித்தேன்

அந்த பானத்தின் மேல் உனது படம் நழுவி விழுந்து நடுங்கியது

மறுபடியும் அது வேறு யாரும் அல்ல, ஒரு கவலையற்ற பெண்ணின் ரீங்கரித்துப் பாடும்

குரலில் நான் உன்னைத்தான் கேட்டேன்.

ஒரு இரவில் நான் ப்ரிய நண்பர்களோடு உட்கார்ந்து கதையளக்கையில்

குளிர்காயும் நெருப்பில் செஞ்ஜுவாலைகள் அவைகளுக்கே சொந்தமான மொழியில்

ஒரு பரந்த வெள்ளை விண்மீன்களோடு சடசடத்து உரையாடின:

அவலட்சணமான தள்ளாடும் நிழல்களில்

பதுங்கிச் சிரித்துக் கொண்டிருந்தது நீ தான்.

ஞாபகார்த்தத்தின் உடைந்த பதில்கள் என்னை அனுமதிக்கட்டும் நீ உயிருடன் இருப்பதை அறிய

வெறிபிடித்த நகரத்தின் தள்ளுமுள்ளுக்குள் ஏதோ ஒரு இடத்தில்

ஒரு வாசலுக்குப் பின்னால் ஒரு மாய முகத்தை நீட்டியவாறு.

அல்லது ஒரு ஓக்மரக் கிளைகளின் வளைவின் அடியில் மௌனமாகக் காத்திருக்கும்

பாசிபடர்ந்த இலைகளின் ஒரு குவியலுக்குக் கீழ் எப்போதும் போல தயாராக இருப்பாய்

மீண்டும் வெளியே ஓட, உனது படபடக்கும் சட்டையைப் பிடிக்க நான் துரத்தும் போது.

௦௦௦௦௦௦

வெடி வைப்பவர்

ஒரு ஜெர்மன் உணவகத்தில் இரவுச் சாப்பாட்டில் இறைச்சித் துண்டுகள் வெங்காயங்கள்

சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு வெடி வைப்பவருடன் நான் உட்கார்ந்தேன்.

அவர் சிரித்தார் கதைகள் கூறினார் அவரது மனைவி, அவரது குழந்தைகள், மற்றும்

உழைப்பின் விளைவு மற்றும் உழைப்பாளர் வர்க்கம் பற்றி.

ஒரு செழிப்பான, சிவப்பு ரத்தத்தால் ஆன பொருள் என வாழ்க்கையை அறிந்த

ஒரு அசைக்க முடியாத மனிதரின் சிரிப்பாக அது இருந்தது.

ஆமாம், அவரது சிரிப்பு, சாம்பற் பறவைகள் தங்களது றெக்கைகளால் ஒரு புயல் மழையின் ஊடே

இடித்துப் பறந்து ஒலித்த களிப்பின் மகிமையால் நிரம்பிய கூவல்.

தேசத்தின் எதிரி என அவர் பெயர் பல செய்தித்தாள்களில் வந்தன மற்றும் அவருக்கு

தேவாலயத்தார்கள், பள்ளிகள் நடத்துவோர் தங்களது கதவுகளைத் திறந்து வைத்தார்கள்.

இறைச்சித் துண்டு மற்றும் வெங்காயங்கள் ஊடே ஒரு வெடி வைப்பவராக அவரது

ஆழமான பகல்களையும் இரவுகளையும் பற்றி அவர் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

நான் மட்டுமே நினைவு கொள்கிறேன் அவரை ஒரு வாழ்வின் காதலராக,

குழந்தைகளை நேசிப்பவராக, எல்லா சுதந்திரமான, கவலையற்ற சிரிப்புகளையும்

எங்கும் நேசிக்கும் ஒருவராக-சிவப்பு இதயங்கள் மற்றும் உலகம் முழவதிலும் உள்ள

சிவப்பு ரத்தத்தை நேசிப்பவராக.

மூடுபனி

மூடுபனி வருகிறது

குட்டிப்பூனையின் பாதங்களில்.

பின்னங்கால்களை ஊன்றி உட்கார்ந்து

அது மௌனமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது

துறைமுகம் மற்றும் நகரத்தின் மேல்

பிறகு நகர்ந்து செல்கிறது.

௦௦௦௦௦௦

சிரிக்கும் சோளம்

அங்கே ஓர் உயரிய கம்பீரமான மடத்தனம் இருந்தது

முந்தாநாள் மஞ்சள் சோளத்தில்.

மற்றும் நாளை மறுநாள் மஞ்சள் சோளத்தில்

அங்கு உயரிய கம்பீரமான மடத்தனம் இருக்கும்.

பிந்திய கோடையில் பழுத்துவிட்டன கதிர்கள்

ஒரு வெற்றிச் சிரிப்புடன் வாருங்கள்,

ஓர் உயரிய வெற்றிச் சிரிப்புடன் வாருங்கள்.

நீண்டவால் கரும்பறவைகள் கரகரப்பானவை.

சிறிய கரும்பறவைகளில் ஒன்று ஒரு சோளத்தட்டையில் கீச்சிடுகிறது

மற்றும் அதன் தோளில் ஒரு செம்புள்ளி

என் வாழ்க்கையில் நான் ஓர்போதும் கேட்டதில்லை அதன் பெயரை.

கதிர்களில் சில வெடிக்கின்றன.

உட்புறம் ஒரு வெண்சாறு செய்யும் வேலை.

சோளப்பட்டு படர்கிறது நுனியில், தொங்கி ஆடுகிறது காற்றில்.

எப்போதும்—வேறு எந்த வழியிலும் ஒருபோதும் தெரியாது எனக்கு—

கூடிப் பேசுகின்றன காற்றும் சோளமும் விஷயங்களை.

மற்றும் மழையும் சோளமும் சூரியனும் சோளமும்

ஒன்றுகூடிப் பேசுகின்றன விஷயங்களை.

சாலையின் மேல் இருக்கிறது தோட்ட வீடு.

பக்கவாட்டில் வெள்ளை மற்றும் ஒரு குருட்டாம் பச்சை தளர்ந்து தொட்டிலாடும்.

சோளம் நசுக்கப்படும் வரை அது மாறாதிருக்காது.

விஷயங்களைக் கூடிப் பேசுகிறார்கள் விவசாயியும் அவனது மனைவியும்.

oooo

Comments are closed.