என்னைப் பிரதிபலிக்காத நிழல் – ஜிஃப்ரி ஹாஸன்

[ A+ ] /[ A- ]

images (3)

1. என்னைப் பிரதிபலிக்காத நிழல்

என்னுடன் தொடர்ந்து வராமலே
இடையில் நிற்கிறது நிழல்
நான் நிழலைப் பிரிந்து செல்கிறேன்
நிழல்கள் யாரையும் புண்படுத்துவதில்லை
நிழல்கள் யாராலும் புண்படுவதுமில்லை

நான் ஏறும் போது
நிழல் இறங்கிச் செல்கிறது
நான் தூங்கும் போது
நிழல் விழித்துக் கொண்டிருக்கிறது
நான் பேசிக்கொண்டிருக்கும் போது
நிழல் மௌனமாய் இருக்கிறது
நான் மௌனமாகும் போது
அது பேசத் தொடங்குகிறது

என் நிழல் யாரின் பிரதிபலிப்பு?
என் நிழல் யாரின் குரல்?
என் நிழல் யாரின் எதிர்பார்ப்பு?

என்னை நிழல் பிரதிபலிப்பதில்லை
நான் இப்போது நிழலைப் பிரதிபலிக்கத் தொடங்குகிறேன்

2.புகலிடம்

நான் ஒரு தவளையாக மாறிய போது
இந்த உலகம் எனக்கு ஒரு கிணறாகத் தெரிந்தது
பாய்ந்து வெளியேறி
இனி நான் எங்குதான் செல்வேன்?

********

Comments are closed.