பூவிதழ் உமேஷ் கவிதைகள்

[ A+ ] /[ A- ]

download (7)

1. வளர்ச்சி

வெயில் காலத்தில்
செடி வரைந்திருந்தேன்
மழையில் நனைந்துபோன
நோட்டை எடுத்துப் பார்த்தேன்
செடி ~ மரமாகி இருந்தது.

2. நாய்

கதவில் ஒட்டிய படத்திலிருந்து
சிறுவனைப் பார்த்து
குலைத்தபடியே இருந்தது நாய்

ஏன் காகிதத்தின் பின்னால்
சோற்றை வைத்தாய் என்று.

3. மையம்

நண்பா வா…
தொலைந்த சொல் முளைத்திருக்கிறது

நீ வளர்ப்பதாய் சொன்ன பறவை
தண்ணீர் குடிப்பதற்காக
வானத்தை இழுத்து விளையாடுகிறது

நிறத்தின் அடிப்படையில் பார்த்தால்
வானம் காகத்திற்குதான் சொந்தம்
ஆனாலும்
கொக்குகள் பறக்கும் போது
கோலம் போட புள்ளிகளாகின்றன

நேற்று
பருந்துகள் வட்டமிட்டன
ஒரே மையத்திலிருந்து எத்தனை வட்டங்கள்
அதன் மயத்தை “O” என்று குறிக்கலாம்
காணாமல் போனவரின் பிணம் என்றும் குறிக்கலாம்
அப்பா என்றும் குறிக்கலாம் .


4. மணல் லாரிகள் எப்படி செல்லும் ?

நதியை
பூவிலிருந்து உற்பத்தியாவதாய்
வரைந்துகொள்

யாராவது
வண்டுகளின் இறக்கையிலிருந்து
படகு செய்வார்கள்

செல்லமாக பெயரிடு
வறட்சி ~ பசி என்பதைத் தவிர

கால்வாய் வெட்டி
பாறைகள் இல்லாத நிலத்திற்கு
நீர் பாய்ச்சுகிறாயா ?

அதோ ! அந்த மொட்ட பாறையைப் பார்
விதை நெல்லுக்குப் பதிலாக
அங்கிருந்து மூட்டையில் வந்தான் ஒரு விவசாயி

சட்டென ஆற்றின் கரைகளை உயர்த்தாதே
மணல் லாரிகள் எப்படி செல்லும் ?
“தாசில்தாரின் உடம்பை மேடாக்கி ஏறும்” .

***

Comments are closed.