சைலபதியின் நாவலிலிருந்து

[ A+ ] /[ A- ]

சைலபதி

சைலபதி

சைலபதி எழுதிக்கொண்டிருக்கும் நாவலின் ஒரு பகுதி . 2018 சென்னைப் புத்தகக் காட்சிக்கு வெளிவருகிறது
•••

பிரமோத் சட்டையைக் கழற்றித் தன் கேபினில் உலரவைத்துவிட்டு அவசரத்துக்கு வைத்திருக்கும் டி சர்டொன்றைத் தன் அலமாரியில் இருந்து எடுத்துப் போட்டுக்கொண்டான். மின்சாரம் இல்லாததால் ஏசி ஓடவில்லை. ஆனபோதும் அறை அதிக சில்லிட்டிருந்தது. புண்ணியத்திற்குக் காப்பி மேக்கரில் பவர் இருந்தது. ஜென்செட்டாய் இருக்கலாம். வழக்கமான கருப்புக் காப்பியைப் பிடித்துக்கொண்டு அந்த ஹாலின் ஓரத்தின் கண்ணாடி அருகே நகர்ந்து வெளியே சாலையைப் பார்த்தார்ன். சாலை என்ற ஒன்று அங்கு இல்லை. நடுவில் இருக்கும் கான்கிரீட் தடுப்புகள் மறைந்துபோகும் அளவுக்குத் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. நடுவில் உயர்ந்து நிற்கும் விளக்குக் கம்பங்கள் மட்டும் இல்லை என்றால் சாலையின் மய்யத்தைக் கணிக்கமுடியாது. வாகனங்கள் எதுவும் இல்லை. வந்தால் கார்கள்கூட நிச்சயம் நின்றுவிடும். லாரிகள் அல்லது பேருந்துகள் நிறுத்தாமல் ஓட்டமுடிந்தால் கடந்துவிடலாம். ஓரிருவர் வண்டியைத் தள்ளிக்கொண்டு போனார்கள். சற்றுமுன் பிரமோத் தள்ளிக்கொண்டு வந்ததைப் போல.

பிரமோத் காலை ஒன்பதுமணிக்கு சைதாப்பேட்டையில் கிளம்பி மதியம் பன்னிரெண்டு மணிக்கு ராமாபுரம் வந்து சேர்ந்தான். கிண்டியைத் தாண்டியதும் அவனுக்கு மூச்சே முட்டிவிட்டது. நந்தம்பாக்கம் திடல் அருகே ஓடிய ஆற்றின் வேகம் அவனால் சமாளிக்க முடியாதிருந்தது. நடக்கும் மக்கள் ஒருவரை ஒருவர் கரம்பற்றிக்கொண்டுதான் நடந்தார்கள். கொஞ்சம் அசந்தாலும் கீழே தள்ளிவிடும் வேகம். பிரமோத்துக்கு அது மழையில் பெருகும் வெள்ளம் மட்டும் அல்ல என்று தோன்றியது.

இது ஒரு நதியின் வழிதானோ என்று நினைத்தான். வரும் வழியில் இப்படி ஓடிவரும் நதி வழிகள் என்று குறைந்தது மூன்று நான்கு நீர்ப்பாதைகளைச் சொல்லலாம். அப்படியானால் சென்னையில் ஒருகாலத்தில் ஓடிய நதிகள் தான் மொத்தம் எத்தனை. இதெல்லாம் எப்படி தூர்ந்துபோனது. எப்படி மொத்த நிலமும் கட்டிடக் காடுகள் ஆனது. மனிதன் ஏன் நிலங்களின் மேல் இத்தனை பிரியமுள்ளவனாய் இருக்கிறான். இந்தப் பிரபஞ்சத்தில் நீர் விட்டுக்கொடுத்த பிச்சைத் துண்டு அல்லவா இந்த நிலம். அதனுடைய இடத்தில் இருந்துகொண்டே அதன் வழிகளைக் களவாடுவது எப்படி. ஏன் மனிதர்கள் உண்டவீட்டிற்கு இரண்டகம் நினைக்கிறார்கள். ஒரே தாவலில் மொத்த நிலத்தையும் தன் வயிறுக்குள் சுருட்டிக்கொள்ளும் வல்லமை கொண்டதல்லவா நீர். ஆனாலும் மனிதன் நிலத்தை அவ்வளவு மோகிக்கிறான். வலிமையுள்ளவன் கையகப்படுத்துகிறான். வசதியுள்ளவன் அதை வாங்கிக்கொள்கிறான். அதில் தங்களின் பேராசையைக் கட்டி எழுப்புகிறார்கள். பேராசைகள் தான் இந்த நிலமெங்கும் பெரும் கட்டிடங்களாகி விட்டன. பாருங்கள் இந்த நதிகூட அந்தக் கட்டிடங்களில் மோதி அவைகளை ஒன்றும் செய்யாது அதற்கு அண்மையாய் ஓடி இந்த நிலத்தை வாழவும், உழவும், தொழவும், வீழவும் மட்டுமே பயன்படுத்துகிற சனங்களின் குடிசைகளைத் தான் குலைத்து உருட்டிக்கொண்டு போகிறது. அடுக்குமாடிகளின் மீதிருந்து தரையில் நுரைகொப்பளிக்க ஓடும் நதியைப் பார்ப்பது கூட ஓர் அழகான காட்சிதான். ஆனால் அதில் உருண்டு ஓடும் உயிர்களின் உடமைகளின் வழியும் இரத்தம் பற்றி யாருக்கு என்ன கவலை.

பிரமோத் காப்பியைக் காலிசெய்ததும் கொஞ்சம் ஆசுவாசமடைந்தான். வந்து அவன் இருக்கையில் அமர்ந்துகொண்டான். செல்போனை நோண்டினான். இணையம் வேலை செய்யவில்லை. அலுவலக கம்பியூட்டரிலும் இணையம் வேலைசெய்யவில்லை. ஏன் என்றுகேட்டபோது மோடம் இருக்கும் தளத்தில் உள்ள பேட்டரிகள் ஏற்கனவே செத்துவிட்டன என்றார்கள். அவனுக்கு கொடுமையாக இருந்தது. வீட்டிலேயே இருந்திருக்கலாம். அவ்வப்போது அலைபேசியின் சிக்னல் வரும். அப்பொழுது ஒரு கணம் முகநூலில் ஓடி வெளிவரலாம். அதெல்லாம் இப்பொழுது சர்வ நிச்சயமாய் முடியாது. லாவண்யா இன்று வாழ்த்தியிருப்பாளா. சொன்னதுபோல அவளின் புகைப்படத்தை ஏற்றியிருப்பாளா. அவள் எப்படி இருப்பாள். சரி எப்படி இருந்தால் தான் என்ன அவள் என்னவள் என்று ஆகிவிட்டாள். காதலைச் சொன்னால் என்ன செய்வாள். வெறுப்பாளா, திட்டுவாளா அல்லது என் மூஞ்சிலேயே முழிக்காதே என்று பிளாக் செய்துவிடுவாளா. செய்யட்டுமே எதில் என்ன இருக்கிறது. அது அவள் உரிமை. ஆனால் ஏன் அப்படி எல்லாம் நினைக்க வேண்டும். கொஞ்சம் பாசிட்டிவ் ஆக நினைக்கலாம். அவள் இன்று தன் புகைப்படத்தை வலை ஏற்றினால் அவள் என் காதலை ஏற்பாள் என்று யூக்கிக்கலாம்.

பிரமோத்துக்கு இருப்பே கொள்ளவில்லை. அங்கும் இங்கும் நடந்து பார்த்தான். அலுவலகத்தில் பெரும்பாலானவர்கள் வரவில்லை. வந்த எல்லோருக்கும் ஏனடா வந்தோம் என்கிற மனநிலை தான். பிரமோத ஒருகட்டத்தைல் வெறுப்பாகித் தன் இருக்கையில் அமர்ந்து கொஞ்ச நேரத்தில் உறங்கிவிட்டான். நண்பன் ஒருவன் வந்து தொட்டு எழுப்புகிறபோது மணி மூன்றாகியிருந்தது.

“ஏண்டா இங்க ஒரு போரே நடந்துகிட்டு இருக்கு நீ என்னடான்னா தூங்கிக்கிட்டு இருக்க, கெட் அப் மேன்”

பிரமோத் அதிர்ந்து விழித்தான்.

“வாட் ஹாப்பெண்ட் பையா”

“நல்லா கேளு, நம்ம கம்பெனிக்குப் பின்னாடி இருக்கிற ஏரியா பையாஸ் எல்லாம் சேர்ந்து நம்ம கம்பெனி சுவத்த இடைச்சுட்டாங்க பையா. சோ தண்ணி உள்ள ஒரு ஆறாட்டாம் ஓடிக்கிட்டு இருக்கு வந்து பாரு”

பிரமோத் எழுந்து வந்தான். நண்பன் காட்டிய இடம் பில்டிங் இருந்த இடத்திலிருந்து கொஞ்சம் தொலைவில் குறைந்தது ஒரு 500 மீட்டர் தொலைவில் தண்ணீர் சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. தூரத்தில் இருந்து பார்க்க ஒரு பெரிய நீரோடை போல இருந்தது. பிரமோத்துக்கு உறக்கம் கலைந்து உற்சாகம் தொற்றிக்கொண்டது. கடகடவென்று கீழே இறங்கி ஓடினான். படிக்கட்டுக்கள் வழுக்கின. ஆனாலும் நில்லாமல் ஓடித் தரைத் தளம் வந்தான். அங்கு ஒரே பதட்டமாக இருந்தது. செக்யூரிட்டிகள் கூட்டமாகக் கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள். மழை வெழுத்து வாங்கிக்கொண்டிருந்தது. நனைவதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் கட்டிடத்துக்குப் பின்பக்கமாக நடந்தான். குறைந்தது அரைக் கிலோமீட்டருக்கும் மேலான தொலைவில் சுவர் எழுந்து நின்றது. சுவரின் ஒரு பகுதி உடைக்கப்பட்டு ஒரு பெரிய துளை உருவாக்கப்பட்டிருந்தது. அந்தத் துளையின் ஊடாக நீர் பாய்ந்து வந்துகொண்டிருந்தது.

சென்னையில் தரிசனம் தரும் மற்றுமொரு நதி. சென்னையில் பார்க்குமிட மெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கிறதே இந்த நதிகள். அடைபட்ட பாட்டிலின் மூடியைத் திறந்ததும் வெளியேறிப் பெருத்து நிற்கும் பூதம் இந்த நதிகள். சின்ன சீசாவுக்குள் எப்படி இவ்வளவு பூதங்கள். மந்திரக்காரனின் கட்டுகள் அவிழ்ந்துகொண்ட பிசாசுகளின் வேகம் இந்த நீரின் பாய்ச்சலில் இருக்கிறது. இது தனக்கு எதிர்ப்படுகிறவனில் நல்லவன் கெட்டவன் எல்லாம் பார்க்காமல் அறைந்து இழுத்துச் செல்கிறது.

பிரமோத் இந்த முறை ‘மா கங்கா’ என வில்லை. இது ‘மா’ தான் ஆனால் தன் மார்பினை ஊட்டி உயிர்காக்கும் ‘கங்கா’ இல்லை. தன் ஆங்கார ரூபத்தில் நாவினை நீட்டிக்காட்டி குருதி கேட்கும் மாகாளி. இதைக் கண்டு, தொழுது கொள்வதுபோலவே கொஞ்சம் அஞ்சவும் தான் வேண்டியிருக்கிறது.

பிரமோத் நடப்பதை நிறுத்திக்கொண்டான்.

அங்கு ஒரு செக்யூரிட்டி வந்துகொண்டிருந்தான்.

“கியா குவா பையா, கூ டிட் திஸ்”

“சார், தெர்ல சார், பின்னாடி ஏரியா ஜனங்கோன்றாங்க, அவங்க ஊட்டுக்குள்ளாற தண்ணி பூந்துகிச்சுன்னு சுவத்த இடிச்சிட்டுக்கிறாங்க. விசாரிச்சாத்தான் தெரியும்”

“ஒகே, ஒகே, யூ பிரம் தட் ஏரியா?”

“நோ, சார் , நான் இன்னும் தூரம்.” என்றான் படபடப்பாக.

“ஹரே பையா கூல், ஐ ஜஸ்ட் ஆஸ்கிடு. வாட் இஸ் யுவர் நேம்”

“கோபால் சார்” என்று வெட்கத்தோடு சொல்லிவிட்டு நகர்ந்தான்.

*

தண்ணீர் ஓட்டத்தை எல்லோரும் கவனிக்க ஆரம்பித்தார்கள். சுவர் வழி ஓடும் நீர் ஒன்றும் கொஞ்சம் குறைந்திருந்தது. சலசலக்கும் சிறு ஓடை அவ்வளவுதான். மழை மீண்டும் பிடித்துக்கொண்டது. இப்பொழுதும் அது அப்படியே ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் பிரச்சனை வேறு திசையில் இருந்து வந்தது.

மழையில் சாலையில் ஓடும் நீரின் அளவு அதிகமாகி அது இப்பொழுது வாசல் வழியாக உள்ளே நுழைந்துகொண்டிருந்தது. வாசல் வரைதான் உயரம். அதைக் கடந்துவிட்டால் பள்ளம். குதிக்கும் தண்ணீருக்கு அதைவிட வேறு என்ன வேண்டும். நீர் வேக வேகமாக ஓடி வந்து வளாகத்துக்குள் பரவிப் படர்ந்தது. சில நிமிடங்களில் அது வேகமெடுத்து கட்டிடத்து அருகில் பெருகியது. துறத்தும் பகைக்குத் தப்ப புதிய வழிகளைக் கண்டுபிடிக்கும் கள்வனின் அவசரம் அதில் இருந்தது. கட்டிடத்தின் முன்புறமாக சறுக்குகளில் தொடங்கும் கீழ்த்தளப் பார்க்கிங் ஏரியாவினைக் கண்டுகொண்டு அதனுள் பாயத் தொடங்கியது.

ஒரு நீண்ட சருக்கிற்குப் பின் முதல் கீழ்த்தளம் அதனில் இருந்து வளைந்து மற்றுமொரு சருக்கினைத் தொடர்ந்து விரியும் அடுத்த தளம். அதனின்றும் வளைந்து இறங்கி ஓடும் சருக்கு நிற்கும் இடம் மூன்றாம் கீழ்த்தளம். முதல் கீழ்த் தளத்தில் இரு சக்கர வாகனங்கள் நிற்கும். இன்று அதிகம் இல்லை. ஒன்றிரண்டு. தண்ணீர் ஓடும் வேகத்தில் சரிவில் பாய்வதுபோக மீதம் அத்தளத்திலும் பாய்ந்து மேடான பகுதிகளில் நிற்கத் தொடங்கியது. ஆனாலும் பெரும்பாலான நீர் மூன்றாம் கீழ்த்தளம் பி3 யை நிறைக்கத் தொடங்கியது. ஏற்கனவே நான்கில் மூன்று நின்று போக ஒரே ஜென்செட் ஓடிக் கொண்டிருந்தது. அது வெளியேற்றும் நீரின் வேகத்தை விட வந்து சேரும் நீரின் வேகம் மிகையாக இருந்தது. பி3 இல் இருந்த கார்களில் சில விலையுயர்ந்த கார்கள். சில நிறுவனங்களின் எம். டி போன்றவர்களின் கார்கள். தேவைக்கு மட்டுமே அவை எடுக்கப்படும். நீர் மட்டம் இப்பொழுது டயரை மூழ்கடித்துவிட்டது. உடனடியாக மற்ற ஜென்செட்களும் ஓடவில்லை என்றால் நிச்சயம் அவை சீக்கிரம் மூழ்கிவிடலாம்.

கோபாலுக்கு ஒரு யோசனை தோன்றியது. அங்கிருந்த வேன் ஒன்றிலிருந்து டீசலை எடுத்துப் பயன்படுத்தலாம் என்றான். எல்லோருக்கும் அப்படி ஒரு மகிழ்ச்சி. முதலில் வேனில் இருந்து ஒரு கேன் டீசலை எடுத்தார்கள். இப்பொழுது மற்றுமொரு ஜென்செட் வேலை செய்தது. இதே யோசனையைக் கார்களுக்கும் பயன்படுத்தினால் என்ன என்று தோன்ற ஊழியர்களை அழைத்துவர இருக்கும் டீசல்கார்கள் ஒன்றிரண்டு அங்கு இருந்தது. அதிலிருந்தும் டீசலை எடுத்து மீதமிருந்த ஜென்செட்டையும் ஓடவிட்டார்கள். நான்கு ஜென்செட்களும் சேர்ந்து மழைக்கு சவால் விட்டுக்கொண்டிருந்தன. மழை பெய்து தண்ணீர் வந்துகொண்டிருந்த போதும் மூழ்கியிருந்த டயர்கள் தெரிய ஆரம்பித்தன. இன்னும் கொஞ்ச நேரத்தில் நிலைமை கட்டுக்குள் வந்துவிடும் போல இருந்தது.

*

பிரமோத் பேசாமல் வீட்டுக்கு நடந்தே போய்விடலாமா என்று நினைத்தான். ஆனால் அது அத்தனை பாதுகாப்பானதல்ல என்றும் தோன்றியது. அலுவலகக் கேண்டீனில் கடும் டீயும் பிரெட் சாண்விட்சும் தவிர வேறு கிடைக்கவில்லை. டோஸ்ட் செய்யாத மென்னையைப் பிடிக்கும் காய்ந்த் சாண்விட்சுகள். ஆனாலும் பசிக்கு வேறு என்ன செய்வது. அதைத் தின்று பசியாறினான். மீண்டும் கேபின் திரும்பியபோது இருட்டியிருந்தது. அலுவலகத்தில் இருந்து வெளியில் பார்க்க எதுவும் தெரியவில்லை. குளிர்காய்ச்சல் காரணுக்கு காதுவரைக்கும் மூடிவிடுவதைப்போல இருள் நகரத்தை மூடிவிட்டிருந்தது. நேரம் தெரிந்து கொள்ள முடியாத இருள். அலுவலகத்திலும் ஒரு தளத்திற்கு ஒன்றிரண்டு விளக்குகளுக்கு மேல் இல்லை.

வெளியே மழை நன்கு பிடித்துக்கொண்டதும் பிரமோத்திற்குள் மீண்டும் லாவண்யாவின் நினைவுகள் தூற ஆரம்பித்தன. ஒரு ஜடம் போல உறைந்துபோயிருந்த மொபலை மீண்டும் உருட்டிக்கொண்டான். அது நாடிபிடித்துப் பார்ப்பதைப்போல அதில் எண்களை அமுக்கினான். நோ நெட்வொர்க் என்றது. அட போங்கடா என்றிருந்தது. கேபினின் தடுப்பை எட்டி உதைத்தான். கால் வலித்தது. அதை அப்பொழுது உள்ளே வந்த நண்பன் ஒருவன் பார்த்துவிட்டான்.

“ஹரே தும் ஹியா கர்ரே, என்னப்பா ஆச்சு, வாட் இஸ்யுவர் பிராபளம்”

பிரமோத்துக்கு நாணமாக இருந்தது. சிரித்தான்.

“நத்திங் யார், அதான் பிராபளம். இதோ திஸ் மொபல், நோ சிக்னல், நோ இண்டெர்நெட், ஐ நீடு டொ டாக்டு சீ சம் மெசேஜ். பட் குட்நாட். டெல் மீ கோபம் வராதா”

“அட இதுதானா உன் பிரச்சனை. மீ டூ ஹடு டு மேக் அ கால். ஐ வெண்ட் பேஸ்மெண்ட் 1, தேர் ஒன்லி சர்வர் ரூம். ஸ்டில் தெ மோடம் சர்வர் ஸ் வொர்க்கிங். இட் ஹஸ் அ யூனிக் பேட்டரி. பட் தெ டிரான்ஸ்மீட்டர் டோண்ட் ஹவ் கரெண்ட். அரௌண்ட் 10 மீட்டர்ஸ் நெட் இச் வொர்க்கிங். மீ டு மேட் அ வாட்சப்கால். வொய் டோண்ட் யு கோ அண்ட் ட்ரை யுவர் லக்” (இதுதான் உன் பிரச்சனையா. எனக்குக் கூட ஒரு கால் பண்ண வேண்டியிருந்தது. கீழ்த்தளம் ஒன்றிற்குப் போனேன். அங்குதான் சர்வர் உள்ளது. உனக்குத் தெரியுமா, இப்பொழுதும் சர்வர் வேலை செய்கிறது. அதற்கென்று நீடித்துளைக்கும் பேட்டரியோடு பொருத்தப் பட்டிருக்கிறது. அதனோடு இணையும் டிரான்ஸ்மீட்டர் செயல்படத்தான் மின் இணைப்பு இல்லை. அதனால் சர்வரைச் சுற்றி பத்துமீட்டருக்கு இன்னும் இணையம் வேலைசெய்கிறது. நான் வீட்டுக்கு வாட்சப் கால் பேசிவிட்டுத்தான் வருகிறேன். வேண்டுமானால் நீ ஒன்று செய். நீ போய் உன் அதிர்ஷ்டத்தை சோதித்துத்தான் பாரேன்)

பிரமோத் பரபரத்தான், “ரியலி, ஓ ஷிட். யூ ஷுட் கவ் டோல்ட் மீ எர்லியர்” என்று சொல்லிவிட்டு கீழ்த்தளம் நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றான்.

*

“ஹலோ, ஆதி கேசவன் நான் பேசுறது கேக்குதா, எங்க இருகீங்க, உங்க போன் ரொம்ப நேரமாப் போகவேயில்லை, ஹலோ ஹலோ”

“டிஜே, கேக்குது டிஜே, இங்க செம மழை. அதோட சத்தம் தான் அதிகமா இருக்கு. நான் செம்பரம்பாக்கத்துல இருந்து கிளம்பி ரொம்ப நேரமாச்சு. நான் இப்போ பட்டாமிராம்ல இருக்கேன்.”

“என்ன ஆச்சு, எப்போ செம்பரம்பாக்கதுல இருந்து கிளம்பினீங்க, அங்க என்ன நிலவரம்”

“சார், எதுவும் சொல்றதுகில்ல சார், நாம பயந்தமாதிரி இல்லை இல்லை அதைவிட மோசமா எல்லாம் நடக்குது. மொத்தம் அஞ்சு ஷட்ட்ரையும் முழுசா திறந்தாச்சு. விநாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறுது”

“என்ன சொல்றீங்க ஜீ, 30 ஆயிரமா? கொஞ்சம் முன்னாடி வரைக்கும் இருபதாயிரம் தான சொன்னாங்க. இப்போ ஏன் அவ்வளவு திறக்கிறாங்க?”

“சார் இதுவே குறைவுதான். மொத்த ஷட்டரையும் திறந்தாச்சு. இதுக்குமேல அதிகமா வெளியேத்த முடியல. ஆனா வர்ற அளவு அதுக்கும் மேல இருக்கு. ஒரு நிமிஷம் நிறுத்தினாக்கூட ஏரி தாங்காது. அதனால வேற வழியே இல்லாம இதச் செஞ்சுட்டாங்க. சுத்துப்பட்டு எல்லாம் பேய்மழை. பூண்டி வேற நிரம்பி அந்த தண்ணீவேற இங்கதான் வருது. இது இல்லாம நந்திவரம், மணிமங்கலம் பெருங்களத்தூர் நு சுத்துப்பட்டு ஏரி எல்லாம் நிறைஞ்சிடுச்சு. இப்போ அந்தத் தண்ணி செம்பரம்பாக்கம் தண்ணி எல்லாம் சேர்ந்து ஊருக்குள்ள வந்துகிட்டு இருக்கு சார். என்ன நடக்குமோ”

“இன்னும் எவ்ளோ நேரத்துல அவ்ளோ வெள்ளம் வரும் ஆதி”

“தெர்ல சார், திருநீர்மலை, குன்றத்தூருக்கு இப்பவே வந்திருக்கும். அப்படியே குளத்தூர் மனப்பாக்கம் வர இன்னும் அரை அவர் ஆகலாம் சார். சார், உங்க வீட்டாண்ட எல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்லையே”

“அதெல்லாம் இல்ல ஆதி, நீங்க சேஃபா இருங்க. நான் முடிஞ்சா நெட்வொர்க் கிடைச்சா திரும்பக் கூப்பிடுறேன்”

“சரி சார். ஒரு விசயம், மழை எப்ப சார் நிக்கும்?”

“தெரியல ஆதி சார், இப்போ இருக்கிற நிலமையப்பார்த்தா இன்னும் ரெண்டு நாளைக்கு கனமழை இருக்கிற மாதிரித்தான் இருக்கு. அப்படிப் பெஞ்சா நிலமை இன்னுமே மோசமா இருக்கும்”

“உலகத்துல எங்க பொளைக்க முடியலைன்னாலும் இந்த ஊருக்கு வந்தாக்காப் பொளைச்சுக்கலாம் சார். அப்படி எத்தினியோ ஜனம் வந்து வாழ்ந்திருக்கு. அதுல எதுனா புண்ணியம் இருந்தா இந்த ஊரு திரும்ப சரியாகும்.. பாக்கலாம். சரி சார். நான் வைக்கிறேன்”

*

மழை குறைவாக இருந்தபோதும் வாசலில் ஓடும் நீரும் கீழ்த்தளத்துக்குள் நுழையும் நீரும் அதிகமாகிக் கொண்டே யிருந்தது. செக்யூரிட்டிகள் ஓடி ஓடி ஏதோ வேலை செய்துகொண்டிருந்தார்கள்.

பிரமோத் படிக்கட்டுகள் வழியாக தரைத் தளத்தில் இறங்கி உள்வழியாக பி 1க்கு நடந்தான். இறங்கிவரும் படிக்கட்டுகளுக்குப் பின்னால் சர்வர் ரூம் இருந்தது. அவன் போவதை யாரும் பார்க்கவில்லை. அவர்களுக்கு அதிக வேலை இருந்தது. பிரமோத் கடைசிப் படிக்கட்டில் நின்றபடி அந்தத் தளத்தைப் பார்த்தான். எல்லா வாகனங்களின் டயரும் நீரின் பாதி மூழ்கியிருந்தது. எட்டி சர்வர் ரூமைப் பார்த்தான். சர்வரில் பச்சை விளக்கு எரிந்துகொண்டிருந்தது. தன் மொபலை எடுத்து வைஃபை ஆன் செய்தான். சில நிமிடப் போராட்டங்களில் கனெக்ட் ஆனது. முகநூலைத் திறந்தான். திறந்தால், வாவ். லாவண்யா அவளின் புகைப்படத்தை பதிவிட்டிருந்தாள். அவள் அத்தனை அழகாய் இருந்தாள். இன்று வலையேற்றுவதற்காகவே அவள் இந்தப் படத்தை எடுத்திருக்கவேண்டும். அவள் கண்களுக்குக் கீழ் சிறு சுருக்கத்தில் சிரிப்பு ஒன்றும் நன்கு மொழுமொழுவென்று புசுபுசுத்திருந்த கன்னங்களில் ஒரு வெட்கமும் படர்ந்திருந்தது.

“ஹுர்ரே” பிரமோத் கத்தினான். கால் செய்ய முயன்றான் போகவில்லை. சிக்னல் இருக்கும் நேரத்தில் எதாவது செய்யவேண்டும் என்று தோன்றியது. அவளுக்குத் தனிச் செய்தி ஒன்றை டைப் செய்தான்.

Pramod Pramod : Lavanya, your profile pic.is awesome. Past three days here heavy rain. So No Internet. Even today rain got worst. Almost I came by swim to office. Y I came you know, becase I need internet. My office has Uninterrepted internet. Y I need net? Because I need to chat with you. OMG, I saw your pic. And becme crazy about you. I take this pic. as my birthday gift. And I am going to tell you one thing, Even if you didn’t uploaded ur pic, I will be telling the thing. Now I cant resist my self from tell that . That is I LOVE YOU lavanya. Bye

டைப் செய்து அனுப்பிவிட்டு மொபலையே பார்த்துக்கொண்டு நின்றான். ஏதேனும் பதில் வருமா என்று எதிர்பார்த்தான். ஆனால் சிக்னல் நிலைகொள்ளாமல் துடித்தது. சில நிமிடங்கள் அங்கேயே நின்று பார்க்கலாம் என்று யோசித்தான். அவன் யோசித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே சறுக்கல் வழியாக பெரும் திரளாக தண்ணீர் இறங்கத் தொடங்கியது.

அடக் கடவுளே இது என்ன? எங்கிருந்து வருகிறது இந்த நீர்? மதகு ஒன்றைத் திறந்தார்ப்போலத் தண்ணீர் நுரைத்துக்கொண்டு உள்ளே நுழைகிறது. ஒர் நிமிடத்தில் உட்புகுந்த நீர் வேகவேகமாக ஓடி பி3 ஐ நிறைந்தது. பி3 இல் இருந்து பெரும் சத்தம் கேட்கிறது. பிரமோத் செய்வதறியாது திகைத்தான். கீழிருந்து ‘ஐய்யோ’ என்ற சத்தம் எழுந்தது. அந்தச் சத்தத்தில் பிரமோத்தின் உடல் ஒரு கணம் நடுங்கியது. அவன் தன் மன வலிமையனைத்தையும் திரட்டிக்கொண்டு படியிலிருந்து இறங்கி அந்தத் தளத்தின் மையத்துக்கு வருகிறான். அந்தத் தளத்திலேயே தண்ணீர் கால் முட்டிவரை சேர்ந்துவிட்டது. ஆனால் பெரும்பான்மை நீர் கீழ்நோக்கிதான் ஓடியது. அங்கிருந்த செக்யூரிட்டிகள் ஓடி மேலே வந்தார்கள். அவர்களில் யாரோ ஒருவர்தான் அந்தச் சத்தத்தை எழுப்பியிருக்க வேண்டும்.

பிரமோத் ஒரு கைப்பிடிச்சுவர் அருகே போய் கீழே எட்டிப் பார்த்தான். சுருள் போல் இறங்கிய அந்தப் படிக்கட்டுகளின் ஊடாக கீழ்த் தளங்களைப் பார்க்க முடிந்தது. கீழ்த்தளம் பார்க்கக் குளம் போல் இருந்தது. ஒரு கார்கள் அதில் மிதந்தன. அப்படியானால் தண்ணீர் அந்தத் தளத்தை மூழ்கடித்துவிட்டது.. இன்னும் எஞ்சியிருப்பது பி2 தான். அங்கிருந்து சில செக்யூரிட்டிகள் ஏறிவர முயன்றார்கள். அவர்களில் சிலரால் கீழ் நோக்கிவரும் நீரின் எதிர் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் அலறியபடி கீழேயே விழுந்தனர். அதிலும் ஓரிருவர் சுவர்களைப் பற்றிக்கொண்டே மேலே வந்தனர். பிரமோத் அவர்கள் இன்னும் கொஞ்சம் மேலே ஏறிவந்தால் கைகொடுத்து அவர்களைத் தூக்கிவிடத் தயாரானான். அந்த செக்யூரிட்டிகளில் முன்னால் வந்தவன் மதியம் பார்த்தவன்.

“ப்ரோ, கம் சேஃப், கம் சேஃப் அண்ட் பாஸ்ட்”

அவர்கள் சர்வ ஜாக்கிரதையாக சுவரில் முதுகை ஒட்டிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்துகொண்டிருந்தார்கள். இன்னும் சில அடிகளில் அவர்கள் பி1 இ கால் வைத்துவிடலாம். தண்ணீர் இப்பொழுது இன்னும் வேகமாகப் பாய்கிறது. கால்கள் சறுக்குகின்றன. நகராமல் நிலைத்து நிற்கிறார்கள். பின்பு மெதுவாக அடி எடுத்துவைக்கிறார்கள். இப்பொழுது பிரமோத்திற்கே நிற்க சிரமமாக இருந்தது. ஆனாலும் அங்கிருந்து நகர்ந்து படிக்கட்டுவரைப் போக மனமில்லை. இதோ ஒரு நிமிடம் அவர்கல் மேலே வந்துவிடக் கூடும்.

பிரமோத் தன் கைகளைத் தேய்த்து அதைக் காயவைத்துக்கொண்டு காத்திருந்தான். இன்னும் நாலைந்து அடிகள் போதும், அவர்கள் மேலே வர. பிரமோத்திற்குக் கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

“கமான் ப்ரோ கம் குயிக்”

அவன் சொல்லிமுடித்த கணத்தில் அணை உடைந்ததுபோல ஓர் வெள்ளம் உள் நுழைந்தது. சறுக்கும் தளத்தின் மேற்கூரையும் நிறையும்படிக்கும் இருந்தது வெள்ளம். எங்கிருந்து வந்தது, எங்கு போகிறது. பிரமோத் பார்த்துக்கொண்டே இருந்த விநாடிகளில் அது உள் நுழைந்தது. அவர்கள் பி1 ல் கால்வைத்தார்கள். பிரமோத் அவர்களைப் பற்றி தரைக்கு இழுத்தான். அப்பொழுது பாய்ந்த அந்தப் பெருவெள்ளம் தளத்தில் இருந்த சில வாகனங்களைப் புரட்டித் தூக்கி அடித்தது. அதில் ஒன்று பிரமோத் மேல் விழுந்தது. அதில் அவன் நிலைகுலைந்து கீழே விழுந்தான். அவனோடு சேர்ந்து அந்த செக்யூரிட்டிகளும் வீழ்ந்தார்கள். பிரமோத் பற்றிக்கொள்ள எதையாவது தரையில் தேடினான். எதுவும் அகப்படவில்லை. அதற்குள் வெள்ளம் அவர்களை மூன்றாம் கீழ்தளத்துக்குக் கொண்டுபோய்விட்டது. பிரமோத் ஹெல்ப் என்று கத்த வாய் திறந்தான். அதற்குள் வெள்ளம் அவனை மூழ்கடித்தது. திறந்த வாய்க்குள் நீர் புகுந்தது. அவன் மார்புக்கூட்டுக்குள் நீர் நிறைவதை அவன் உணர்ந்தான். கண்களுக்கு எதுவும் தெரியவில்லை அடுத்து என்ன என்பதை அவன் அந்த நொடியில் உணர்ந்தான். உடல் உதறியது அவன் கண்களை மூடிக்கொண்டான். கண்களுக்குள் சந்தனப்பொட்டுடன் சிரிக்கும் லாவண்யா வந்தாள். அந்த நினைவில் அவன் நெகிழ்ந்த கணத்தில் அவன் மூழ்கிக்கொண்டிருந்த நீர் மட்டத்துக்கு மேலாக சில நீர்க்குமிழிகள் எழும்பின.

••••

Comments are closed.