முகங்கள்- ஆட்டையாம்பட்டியும் பம்பாய் டைலரும். / சரவண கணேசன் ( ஆட்டையாம்பட்டி )

[ A+ ] /[ A- ]

ஆட்டையாம்பட்டி முருக்கு

ஆட்டையாம்பட்டி முருக்கு

ஞாயிறு மாலை நானும் என் மகளும் வீட்டிலிருந்து ஒரு சிறு நடைபயிற்சிக்கு சென்ற போது ஆட்டையாம்பட்டி தின சந்தைக்கு திரும்பும் வளைவில் இருந்த முதலியார் சமூக நந்தவன கரும்பலகையில் எழுதியிருந்த செய்தி என்னை திடுக்கிட வைத்தது.

பம்பாய் டைலர் ராஜு 11.11.2017 அன்று இயற்கை எய்தினார். அந்நாரின் இறுதிச் சடங்கு ஞாயிறு 12.11.2017 அவரது இல்லத்தில் நடைபெறும்.

எனக்கு திருமணமான புதிதில் ஆடிப்பண்டிகைக்கு மனைவியின் ஜாக்கெட் தைப்பதற்தாக நானும் மனைவியும் டைலர் வீட்டிற்கு சென்றிருந்தோம். அப்போது அவர் வீட்டில் இல்லை. அவர் மனைவி எங்களை வரவேற்ற போது அந்த வீடு எனக்கு அன்னியமாகப் படவில்லை. வாடகை வீடு. பத்துக்கு பத்து அறை. இரண்டு தையல் இயந்திரங்கள். இரண்டாகப் பிரிக்க வைத்திருந்த ஒரு இரும்ப அலமாரியில் பெண்களின் துணிகள் தைப்பதற்காக காத்திருந்தது. சிறிய கருப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டியில் பழைய தமிழ்ப்படம் ஓடிக்கொண்டிருந்தது. மதியம் வைத்திருந்த கறிக் குழம்பின் மணத்தோடு ஒன்று இரண்டு தட்டு முட்டு சாமான்கள். பார்த்துக்கொண்டிருக்கும் போதே மிதிவண்டியை வாசலில் நிறுத்துகிற சத்தம். தொடர்ந்து ஒல்லியான தேகத்துடன் வெள்ளை வேட்டி சட்டையில் ஒருவர் நுழைந்தார்.

வாம்மா பொண்ணு.. கல்யாணம் நல்லா முடிஞ்சுதா.. வாங்க தம்பி என எனைப் பார்த்து வணங்கினார். மனைவியைப் பார்த்து ஏம்மா மாப்பிள்ளைக்கு ஏதாவது பலகாரம் காப்பி குடுத்தியா.. இதோ என கிளம்பிப் போனாள் அவர் மனைவி.

பிழைப்புக்காக வெளியூர் சென்று பெரும்பாலும் வெறும் கையுடன் சொந்த ஊர் திரும்பி வாழ்க்கையை ஆரம்பிப்பவர்களின் வருத்தமான முகமாக காட்சி அளித்தது அவர் முகம். நான் கோவைத் தமிழில் மிகுந்த மரியாதையுடன் பேசியது அவருக்கு மகிழ்ச்சி அளித்தது அவர் நடவடிக்கையில் காண முடிந்தது. கம்பத்து கடை பக்கோடா மற்றும் காப்பியுடன் முடிந்தது எங்களது சந்திப்பு.

இரண்டாவது முறை அவரை சந்தித்து பேசிக்கொண்டிருந்தது சென்னையிலிருந்து ஒரு பெண்மணி தைப்பதற்;காக 20 ஜாக்கெட் துணியோடு வந்திருந்தார். அண்ணா சென்னையில் பலரிடம் தைத்துப் பார்த்துவிட்டேன். திருப்தி தரவில்லை. ஒரு லேடி டைலர் அளவெடுத்து தைத்தார்¸ ஆனால் நீங்கள் தைப்பதைப்போல ஜாக்கெட்டின் முன் ஸ்டார் அமைப்பு கச்சிதமாக வரவில்லை எனச் சொன்னார். அவர் முகத்தில் உதட்டோரம் வந்த புன்னகையின் கம்பீரம் தெரிந்தது. ஆனால் அன்று என் மனைவிக்கான ஜாக்கெட் ரெடியாகவில்லை. தம்பி அடுத்த வாரம் தைத்து விடுவதாக பொண்ணுகிட்டே சொல்லுங்க என்றார். அவர் மனைவி உடல் நலமில்லாமல் கட்டிலில் படுத்திருந்தார்.

ஏன் மனைவிக்கு அவருக்கும் ஏதோ பிணக்கு நேர்ந்திருக்க வேண்டும். அவள் அவரிடன் கொடுத்த துணிகளை வாங்கி வந்திருந்தாள். ஒரு நாள் காலை நான் நடைப்பயிற்சிக்கு சென்று வந்து கொண்டிருந்த போது ஒரு சைக்கிள் என்னருகே வந்தது. டைலர் அதிலிருந்து இறங்கிய தம்பி பாப்பா போன வாரம் வந்து எங்கிட்டே கொடுத்த துணியை திருப்பி வாங்கிட்டா. கொஞ்சம் சத்தம் போட்டாப்பல. எம் பொண்ணு மாதிரி.. அவளுக்கு முதல் ஜாக்கெட்டிலிருந்து நான் தான் தைக்கிறேன். கொஞ்சம் முடியலையப்பா.. கவலையுடன் சைக்கிள் ஏறிப் போனார்.

சேலம் சுகவனேஸ்வர் கோயில் அருகில் நம்பர் ஒன் ஆக இருக்கும் டைலர் ஒருவரை சந்தித்து¸ பம்பாய் டைலர் தைத்த ஒரு ஜாக்கெட்டைக் காட்டி இது போல தைத்து தரமுடியுமா என்றேன். அவர் அந்தத் துணியில் இருந்த இரட்டைத்தையல் கொண்ட அமைப்பை பார்த்துவிட்டு சார் இதெல்லாம் பொம்பளைங்க தைக்கிற ஜாக்கெட்.

இல்லை இது ஒரு ஆண் டைலர் தைத்தது தான்.

என்ன சார் இவ்வளவு வருசமா ஜாக்கெட் தை;க்கிறேன் எனக்கு தெரியாதா.. காலையிலே பொய் சொல்ல வந்துட்டாங்க.. சார் இது மாதிரியெல்லாம் எங்களால் தைக்க முடியாது. இந்த கட்டிங் ஸ்டைல் அளவு எடுத்து தைச்ச மாதிரி இருக்கு. என்னால் முடியாது. துணியை திரும்பிக் கொடுத்துவிட்டார்.

உடன் வந்த என் மனைவி சிரித்தாள். பம்பாய் டைலர் மாதிரி ஒரு சிறந்த தையற் கலைஞனை காண முடியாது. ஒரு பெண்ணை பார்த்த மாத்திரத்தில் அவளுக்கு சரியாகப் பொருந்துகிற மேலாடையை அவரால் தைக்க முடியும். அவர் அதிகமாக பேசுவது ஏம் பாப்பா கம்மாங்கட்டைய கொஞ்சம் அட்சஸ்ட் செய்தால் சரியா வந்திரும் ஜாக்கெட் என்பார். நானும் சேலத்தில் ஒன்று இரண்டு டைலரிடம் கொடுத்துப் பார்த்தேன் மனைவிக்கு சரியாக அமையவில்லை.

அந்த வருட தீபாவளிக்கு முன்பாக டைலருக்கு இனிப்பு காரம் வாங்கிக் கொண்டு அவரை இல்லத்தில் சந்தித்தேன். இந்த முறை வாடகை வீட்டை மாத்தியிருந்தார். கூடுதலாக மெத்தை தைக்கும் வேலைக்கு செல்ல ஆரம்பித்திருந்தார். அந்த அக்காவின் உடல் நிலையும் மோசமாக இருந்தது. இனிப்பை பெற்றுக் கொண்ட அந்த அக்கா ஏண்ணா.. இப்பெல்லாம் பாப்பா கட்டியிருக்கிற கோயமுத்தூர் புடவை நல்லாயிருக்கு..இந்த தீபாவளிக்கு எனக்கொன்னு வாங்கித்தாங்க என்றார். மிகுந்த சந்தோசமாக இருந்தது. அடுத்த முறை கோவையில் வாங்கிய அவர் சொன்ன வண்ணப்புடவை ஒன்றை பரிசாக தந்தோம். அதன் பிறகு என் மனைவியும் டைலரும் சமாதானம் ஆனார்கள். அடுத்தடுத்து துணி தைப்பதற்காக சென்ற போது அவரிடம் சில முறை நீண்ட நேரம் பேச வாய்ப்பு கிடைத்தது.

ஆரம்பத்தில் பெற்றோர்களுடன் சேலத்தில் வசித்துவந்த அவர் சின்னச் சின்ன வேலைகளை செய்து வந்திருக்கிறார். எதிலும் நீதி நேர்மை என உரிமையைப் பெறுவதற்காக சண்;டைக்கு செல்லும் தன் மகன் போக்கிரி ஆகிவிடுவானோ எனப் பயந்த பெற்றோர் திருமணம் செய்திருந்த அவரை வேலைக்காக பம்பாய்க்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். பம்பாய் சென்ற அவர் மனதுக்கு பிடிக்காத வேலை செய்ய பிடிக்காமல் பாலிவுட் துணை நடிகைகளுக்கு ஜாக்கெட் தைப்பவரிடம் உதவியாளராக 15 வருடங்களுக்கு மேலாக வேலை பாத்திருக்கிறார். சம்பாதித்ததை எல்லாம் தன் அன்பு மனைவியுடன் சந்தோசமாக வாழ்ந்திருக்கிறார். சேமிப்பு இல்லாத வெள்ளேந்தியான வாழ்க்கை. பிறகு பம்பாயில் வாழப்பிடிக்காமல் ஆட்டையாம்பட்டி வந்து டைலர் தொழிலை ஆரம்பிக்க அவருடன் ஒட்டிக்கொண்டது பம்பாய் டைலர்.

மனைவியின் உடல் நலம் கெட கெட அவரின் மனம் உடைந்து கவனம் மாறியது. முன்னைப் போல் அவரால் உட்கார்ந்து தைக்க முடியவில்லை. மருந்துகள் வாங்கும் பொருட்டு தைப்பதற்கு முன்பாகவே கூலியை வாங்க ஆரம்பித்தார். ஆனால் குறித்த நேரத்தில் தைக்க முடியவில்லை. தீபாவளிக்கு கொடுத்த துணியை பொங்கலுக்கு கூட தர முடியவில்லை. ஆனால் பள்ளி செல்லும் சிறுவர்களுக்கான சட்டை டிராயரை உடனே தைத்து தருவதை உடனிருந்து பார்த்திருக்கிறேன். குழந்தைகள் இல்லை. மனைவியே உலகம் என வாழ்ந்தவருக்கு மனைவி மரணத்ததை நோக்கி பயணிப்பதைக் கண்டு மிகுந்த கவலை அடைந்தார். வெண்ணந்தூர் அரசு மருத்துவமனை வைத்தியம். பெரும்பாலும் இலவம் பஞ்சு மெத்தை அடைக்கும் வேலை. தையல் இயந்திரங்கள் பழுது பார்க்கும் வேலை என எளிதாக பணம் சாம்பாரிக்கும் வேலைக்கு ஓடினார்.

மனைவியின் உடல் நலம் மிகவும் மோசமாக ஒரு நாள் அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்பூலன்சில் எடுத்துச் சென்றார். ஒரு நாள் முழுக்க படுக்கை தராமல் வரண்டாவில் கீழேயே போட்டு வைத்திருந்திருக்கிறார்கள். கோபமடைந்த டைலர் கூட்டமாக இருந்த நோயாளிகளைத் தாண்டி தலைமை மருத்துவரைப் பார்த்து சத்தமாக நியாயம் கேட்டிருக்கிறார். சிங்கமாக கர்ஜித்த அவரது குரல் அவரின் இளமைக் காலத்து நண்பர்களை திரட்டிக் கொடுத்திருக்கிறது. மனைவிக்கு சரியான சிகிச்சை கிடைத்து வீடு திரும்பினார். ஆனால் கொஞ்ச நாள் கூட வாழவில்லை. மனைவி மரணம் அடைந்தார்.

தம்பி புண்ணியம் செஞ்சவ முன்னாடி போயிட்டா. விரக்தியில் பேசினார். அவரைப் போல் மனைவியை நேசித்தவரைப் பார்க்க முடியாது. அன்னியோன்யமான தம்பதிகள். மாரியம்மன் கோவிலுக்கு முன் இருந்த சிற்றுண்டிச் சாலையில் இட்லி அவரின் பெரும்பாலான உணவாக இருந்தது. ஒரு முறை வீட்டிலிருந்து பிரியாணி கொடுத்தோம். மகிந்தார். அதற்க்குப்பிறகு என் மனைவிக்கு சில ஜாக்கெட் தெய்த்துக் கொடுத்தார். வீடு தேடி வந்து துணியை வாங்கிக் கொண்டு பேசிச் செல்வார். தனியாக கவலையுடன் இருப்பவனை மதுக்கடை போல அணைத்துக்கொள்வார் யாருமில்லை. மதுக்கடைக்கு வாடிக்கையாளர் ஆனார். துணி தைக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்து போனார்கள்.

ஓவியர் ஐPவா இரண்டாவது முறை ஆட்டையாம்பட்டிக்கு வந்த போது டைலரை சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால் அவர் மெத்தை தைக்கும் சென்று விட்டாக சொன்னார்கள். பம்பாய் குறித்து 20 வருட அனுபவமும் நிறைய தகவல்களும் அவரிடம் இருந்தது. வர்தா பாய் வரதராஜ் முதலியார் ஆட்களுடன் வேலையை செய்திருக்கிறார். எப்போது சென்றாலும் வயிறு நிறைய உணவும் கைநிறைய பணமும் தருவார் என பம்பாய் நாயகனைப் பற்றி கூறியிருக்கிறார். ஆட்டையாம்பட்டி மாமுண்டியை சேர்ந்த ஒருவர் கூட பம்பாயில் சிறப்பாக வாழ்கிறார் எனச் சொல்லியிருக்கிறார்.

டைலரின் வாடிக்கையாளர் பெரியவர் முன்னாள் சொசைட்டி செயலாளரை கேட்ட போது.. சார் 15 நாளா உடம்பு சரியில்லாம இருந்தான். நான் கூட போய் பார்த்தேன். தொண்டை¸ உணவுக் குழாய்¸ வயிறு எல்லாம் ஒரே எரிச்சலா இருக்குன்னான். ஓவரா பீடி குடிப்பாப்பல. அவ்வளவுதாண்ணா இனி தையல் வேலை பார்க்க முடியாதுன்னு சன்னமா பேசினான். அப்புறம் செத்துப் போயிட்டான்னு சேதி வந்திச்சு. அருமையான டைலர் சார். எனக்கு சட்டை தைக்க குடுத்த ஓரே நாளு உடனே தைச்சு குடுத்துருவான். என்ன கொஞ்சம் லொல்லு பேசுவான். ஜாக்கெட் அருமையான தைப்பான் சார். இனி ஆட்டையாம்பட்டி பொம்பளைக்கு ஜாக்கெட் தைக்க நல்ல டைலர் இல்லை.

அவர் லொல்லு என்று சொன்னது டைலரிடம் இருந்த உரிமைக்காக போராடும் போர்க்குணம் தான். தையல் கலைஞன் என்றாலும் அவர் உரிமையை ஒரு நாளும் விட்டுக் கொடுக்கமாட்டார். தைக்க முடியலை இப்ப என்னாங்குறே வேண்டாம்னா இந்தா துணி எடுத்துப்போங்க. .பல் இளிக்கும் வேலை ஒரு நாளும் அவரிடம் இல்லை. பொது இடங்களில் சாதரண மனிதர்களின் உரிமைக்கு குரல் கொடுக்கும் நபராகவே வாழ்ந்தார்.

நியாய விலைக்கடைக்கு ஒட்டிய ஒரு சிறு சந்தில் அவர் வீட்டு வாசலில் சைக்கிள் இருந்தால் அவர் உள்ளே தைத்துக்கொண்டு இருப்பார். இன்று சைக்கிள் இருக்கிறது அவர் இல்லை. பம்பாய் டைலர் ராஜூவின் மரணச் செய்தியை ஒரு நாள் முன்பு பார்த்திருந்தால் தம்பி என அன்போடு அழைத்தவரின் முகத்தை கடைசியாக ஓரு முறை பார்த்திருக்கலாம். அடித்தட்டு மக்களின் உரிமைக்காக தைரியமாக குரல் கொடுத்த ஒரு தையல் கலைஞரை ஆட்டையாம்பட்டி இழந்திருக்கிறது.

••••

Comments are closed.