இரா.இராகுலன் கவிதைகள் ( அறிமுகப் படைப்பாளி )

[ A+ ] /[ A- ]

images (9)

1)

அச்சுறுத்த

அதிர்ச்சியூட்ட

அலைக்கழிக்க

ஏமாற்ற

முறைத்துக்கொள்ள

தழும்புகள் தர

விலகிச் சென்றிட

திரும்பிச் சேர்ந்திட

இன்னும்

எதுவும் ஏற்படுத்திக் கொள்ள

நமக்கிடையே

நீ

நான்

வேறு யாரும் தேவையில்லை.

2)

உன் பார்வை

உன் கவனம்

உன் எண்ணம்

உன் ஞாபகங்கள்

உன் சொல்

உன் விருப்பம்

உன் பயணம்

உன் ஆயுதங்கள்

உன் நம்பிக்கை

உன் இருதயம்

உன் அன்பு என் பக்கம் இருக்கிறது

மிகக் கடினம் எவருக்கும்

என்னைக் கொல்வது

உன்னைத் தவிர.

3)

அந்த உலகில்

அப்பொழுது எவருமில்லை

என்னையும்

என் நிழலையும் தவிர

இப்பொழுதும்.

4)

அன்பைத் தேடுகிற

அன்பை உருவாக்க

அன்பை வளர்க்க

அன்பைப் பாதுகாக்க

அன்பை முறிக்க

அன்பைத் தர

அன்பைப் பெற

அன்பிற்காய் காத்திருக்கிற

மனத்திற்குள்

ஒரு நூறு

தற்கொலைகள் நிகழ்கின்றன.

5)

கூடுகளற்றும்

ஒரே ஒரு பறவையேனும்

வந்தமராத மரங்களும்

மீண்டும் விருட்சமாகாத

ஒரு மரம் செடி கொடியின்

விதைகளும்

சிறகிருந்தும்

பறக்கத் தெரியாத பறவைகளும்

விளைச்சலிற்கு

உழவே செய்யப்படாத நிலமும்

நினைவுகள் சீர்படுத்தப்படாதவனாயும் இருக்கிறோம்

ஒரு பித்தனும்

ஒரு பிச்சைக்காரனும்

ஒரு நானும்

எப்படியேனும் வாழ்ந்துவிட்டுப் போகிறோம்

எங்களுக்குத் தர நீங்கள் விரும்பும் விரும்பாத

எதையேனும் யாசகமிடுங்கள்

இடாவிடினும் நன்றிகள்.

6)

தருமனைத் துரியோதனனாகவும்

துரியோதனனைத் தருமனாகவும்

பெருந்தவவானை மோகவானாகவும்

வீரனைக் கோழையாகவும்

கோழையை வீர்னாகவும்

ஞானியைப் பித்தனாகவும்

பித்தனை ஞானியாகவும்

கடவுளைச் சாத்தானாகவும்

சாத்தானைக் கடவுளாகவுமாக்கிவிட்டிருந்தது

தனிமையின் வரமும் சாபமும்.

7)

ஒரு உலகம்

எனக்குமெனக்குமிடையில்

இங்கே நானும்

யாருமற்ற என்னுலகும்

ஒரு உலகம்

எனக்குமுனக்குமிடையில்

இங்கே நானும் நீயும்

சிலர் மட்டும் வந்து போகிறார்கள்

சிலரை மட்டும் வரவழைத்துக்கொள்கிறோம்

ஒரு உலகம்

எனக்குமுங்களுக்கிமிடையில்

இங்கே நானும் நீங்களும்

வேறெப்படி வாழ்வது

அங்குமிங்கும் இங்குமங்கும்

அலைந்து திரிந்து தங்கி வாழ்வதைத் தவிர.

8)

மாறுகிறேன்

யாருமில்லை என்னுலகில்

சாத்தானிலிருந்து கடவுளாய்

கடவுளிலிருந்து சாத்தானாய்.

9)

உனைமீறி

எதுவும் செய்ய முடியவில்லை

என்னால்

சிறு சப்தம் எழுப்பவும்

சினப்படவும்

முகம் முறைக்கவும்

ஆயுதங்கள் தூக்கவும்

படை திரட்டவும்

நேராய் யுத்தம் புரியவும்

விலகிச் செல்லவும்

எப்பொழுதும்

சமாதானமாகிவிடுகிறேன் உன்னிடம்.

எனைச் சிறியதாக்கி வைத்திருக்கிறேன்

என்னிடம்

உன்னைப் பெரியதாக்கி வைத்திருக்கிறேன்.

10)

அவர் ஆகாயத்தின்

தெரு சந்து நகரங்களிலும்

உலாவுகிறார்

யாருடனேனும் நட்பு உறவு பூண்டு

அங்கேயே இருப்பிடம் அமைத்துக்

காலம் கழிக்கிறார்

பூமியின் எந்தத் தெரு

சந்து நகரங்களிலும் உலவ முடிவதில்லை

காலியாகிப்போன நெஞ்சுகொண்டு

எவருடனும் நட்பு உறவு பூண்டு

காலம் கழிக்க முடிவதுமில்லை

பூமி வருகிறார்

இருதயத்தின் வெற்றிடம்

குறையும்போது மட்டும்.

11)

நீ எனக்கில்லை

நான் உனக்கில்லை

நீ உனக்குமில்லை

நான் எனக்குமில்லை

யாரும் யாருக்குமில்லை

எதுவும்.

12)

மண்டியிடுகிறேன்

வாய் மூடியிருக்கிறேன்

என் நிழலை ஒப்படைத்திருக்கிறேன்

தொழிலாளியாக இருக்கிறேன்

அடிமையாக வாழ்கிறேன்

என் குரலைத் தாழ்த்துகிறேன்

பொம்மையாக இருக்கிறேன்

ஆணைகளை ஏற்று நடக்கிறேன்

உங்களிடம்

சென்று பாருங்கள்

யாரும் அமர முடியாது

உங்களுக்குச் சமமான

எதிர் இருக்கையில்

என்னைத் தவிர.

13)

கடைசி வெளிச்சம்

கடைசி துளி

கடைசி வழி

கடைசி சுவாசம்

கடைசி ஆயுதம்

கடைசி நொடி

கடைசி நம்பிக்கை

கடைசி விதை

மட்டுமல்ல

என்னுலகின்

கடைசி ஜீவனும் நீ.

14)

என் நாட்களைத் தின்கிறாய்

என் பாதையை மூடுகிறாய்

என் கனவுகளை எரிக்கிறாய்

என் அமைதியில் கல்லெறிகிறாய்

என் சிறகுகளை ஒடிக்கிறாய்

என்னைச் சந்தேகிக்கிறாய்

என்னை அவமானப்படுத்துகிறாய்

என்னை நிர்வாணப்படுத்துகிறாய்

என்னைக் கொல்கிறாய் நீ வாழ

வேறு வழியில்லை என்னிடம்

உன்னைக் கொல்வதைத் தவிர.

15)

நான் புலப்படுவதில்லை

உன் கண்களுக்கு

என் குரல்கள் கேட்பதில்லை

உன் செவிகளுக்கு

என் சுவையறிந்ததில்லை

உன் நா

என் வாசம்

உன்னால் நுகரப்படுவதுமில்லை

நான்

யார் நீயெனக்கு.

•••

Comments are closed.