மனுநீதிச் சோழனும், கெளசல்யாவின் நீதியுணர்வும் ஆன்மா ( நெளிக்கோடுகளும், அசையாப் புள்ளிகளும் – 3 ) – பாலசுப்பிரமணியன் பொன்ராஜ்

[ A+ ] /[ A- ]

கௌசல்யா சங்கர்

கௌசல்யா சங்கர்

ஒரு “கலாச்சாரக்” குற்றமான சாதிக்கலப்புத் திருமணத்தின் விளைவாக நிகழ்த்தப்பட்ட கொலை எனும் சட்ட ரீதியான குற்றத்திற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு ஒன்று நம்முள் குடிகொண்டிருக்கும் நீதியைக் குறித்த கருத்துக்களை வெளிக் கொணர்ந்திருக்கிறது.

கொலையுண்டது, ஒரு பெண் அவளது சுய விருப்பால் தேர்ந்தெடுத்துக் கொண்ட கணவன், தீர்ப்பில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருப்பது அவளுடைய தந்தை. சட்டத்தின் மொழியில் கொல்லப்பட்டவர், கொலை செய்தவர் என்று மட்டுமே பிரித்துச் சொல்லப்படும் இவ்விருவரும் ஒரு பெண்ணின் மீது அளவற்ற அதிகாரம் செலுத்தத் தக்கவர்கள் என்று சமூகத்தால் அனுமதிக்கப்பட்டவர்கள்.

அப்பெண் அவளுடைய தந்தையின் விருப்பத்திற்கு எதிராக வேறொரு ஆணை அதுவும் படிநிலையில் தன்னுடைய சாதிக்குக் கீழே வைக்கப்பட்டிருக்கும் ஒரு சாதியைச் சேர்ந்த ஆணைத் தேர்ந்தது கொலை செய்யப்படத்தக்க ஒரு மீறலாகப் பார்த்த அவளுடைய தந்தை, அவர்கள் இழைத்த குற்றத்திற்கு தண்டனையை வழங்கிவிட்டார். நீதியமைப்பின் கண்களில் வராமல் இத்“தண்டனை” வழங்கப்பட்டிருந்தால் அவளுடைய தந்தை, மகளின் கணவனைக் கொன்ற குற்றவுணர்வின் கனம் சிறிதளவு கூட தன் மீது ஏற்றாமல், மகிழ்ந்திருப்பார்.

ஆனால் சாதி ஒழுங்கைக் குலைத்ததனால் எழுந்த தனிப்பட்ட அவமானத்திற்குப் பதிலடியாக, பொதுவாக ஒரு கொலையின் பின்னணியிலுள்ள மறைமுகச் செய்தியை சமூகத்திற்கு உரக்கச் சொல்லும் விதமாக, பகல் வெளிச்சத்தில் அவருடைய தீர்ப்பை ஒரு கொலையின் மூலமாக எழுதினார். கலாச்சாரக் குற்றத்திற்கான அந்தத் தண்டனை ஒரு Spectacle. வழங்கப்பட்ட இந்தத் தண்டனையை எண்ணி மகிழ்ந்த தனிப்பட்ட குடும்பங்களும், திரண்டிருக்கும் ஒரு சில சமூக அமைப்புகளும் இருந்திருக்கும்.

கலாச்சாரத்தின் அடிப்படையில் குற்றத்திற்காக வழங்கப்பட்ட ஒரு தண்டனை, சட்டத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட வேண்டிய குற்றமாகிறது. அதற்கான தீர்ப்பு வெளியான தருணத்தில் இத்தீர்ப்பில் வழங்கப்பட்ட அதிகபட்ச தண்டனையான தூக்கு, பெரும்பாலான தனிப்பட்ட குடும்பங்களுக்கும், ஒரு சில சமூக அமைப்புகளுக்கும் அதிர்ச்சியூட்டியிருக்கும்.

இத்தீர்ப்பில் வேறு எவரையும் விட, கொல்லப்பட்டவரின் மனைவியான கெளசல்யா ஒரு தனிச்சிறப்பான கவனத்தைப் பெறுகிறார். நீதிக்கான போராட்டத்தில் கொல்லப்பட்டவரின் சார்பாக நின்ற அப்பெண், அவளுடைய தந்தைக்கு எதிராக நின்றவள் மட்டுமல்ல சாதி அமைப்பிற்கு எதிராகவும் நின்றிருக்கிறாள். இதில் அவளுடைய தந்தை சாதி அமைப்பின் ஒரு பிரதிநிதிதான். இந்தத் தெளிவே தீர்ப்பை வரவேற்ற அப்பெண்ணிடமிருக்கிறது. இப்படி ஒரு நிலை அதாவது தன்னுடைய கணவன் கொல்லப்பட்டு, அவளுடைய தந்தைக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட நெருக்கடி வருமென்று அவளுடைய திருமணத்திற்கு முன்பே ஏதாவதொரு வழியில் எதிர்காலம் காட்டப்பட்டிருந்தால் அவள் நிச்சயமாக காதலையே துறந்திருப்பாள். ஆனால் இன்றோ நிகழ்வுகள் அனைத்துமே ஒரு சமூகத்தின் பார்வைக்கும், சிந்தனைக்கும் வழங்கப்பட்டவை.

தீர்ப்பை ஒரு கொலைக்கு வழங்கப்பட்ட தண்டனை என்பதையும் கடந்து சாதி ஆணவத்திற்குக் கிடைத்த ஓர் அடி என்று பார்க்கும் தனிப்பட்டவர்களும், சமூக அமைப்புகளும் இருக்கின்றன. இத்தீர்ப்பால் சாதி ஆணவக் கொலைகள் குறையும் என்றால் அது அதிகபட்ச எதிர்ப்பார்ப்பு மட்டுமே. இருப்பினும் இந்தத் தீர்ப்பு நீதியுணர்வின் பால் வழங்கபட்டது மட்டுமல்ல, ஒரு ஜனநாயக அமைப்பில் தனிமனிதர் ஒருவருக்கு இருக்கும் விருப்பத் தேர்வெனும் அடிப்படை உரிமைக்கான ஆதரவும் கூட.

ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் எழுந்த குரல்களில் மிக முக்கியமானது ஒரு பெண்ணைப் பெற்று வளர்த்த தந்தைக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை அப்பெண்ணே வரவேற்பதா என்பதே.

நீதி குறித்த சிந்தனைகளை நமக்குக் கட்டியமைத்த தொன்மங்களில் இரண்டை இங்கே ஆராயலாம். ஒன்று கொல்லப்பட்ட பசுவிற்காக தன்னுடைய மகனை தேர்க்காலில் ஏற்றிக் கொன்ற மனுநீதிச் சோழன். இன்னொன்று தன்னுடைய மகனை கர்த்தரின் மீதிருக்கும் பக்தியைக் காட்டுவதற்காக கொலை செய்யத் துணிந்த ஆப்ரகாமினுடையது.

download (16)
அதிகபட்ச நீதியென்பதற்கு உதாரணமாகச் சொல்லப்படும் மனுநீதிச் சோழனின் கதையைக் கேட்கும் ஒருவரும், மரண தண்டனை வழங்கப்பட்ட மனுநீதிச் சோழனுடைய மகனின் மரணத்திற்காக வருத்தப்பட மாட்டார்கள். நீதி கேட்டது பசு என்பதனால் கூட அத்தண்டனை வழங்கப்பட்டிருக்கலாம். கொல்லப்பட்டது ஒரு பன்றியின் குட்டியாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என இப்போது ஊகிப்பது பதிலற்ற ஒன்று. ஆனால் நாம் அக்கதையில் காப்பாற்றப்பட்ட நீதியை எண்ணியும், நீதி வழுவாது தீர்ப்பளித்த மனுநீதிச் சோழன் எனும் தந்தையைக் குறித்து பெருமிதமும் அடைகிறோம்.

ஆபிரகாம் அவனுடைய மகனை பலியிடத் துணிகிறார். இறுதியில் அவன் கழுத்து வெட்டப்படுவதிலிருந்து தவிர்க்கப்பட்டாலும் அதன் பிறகு ஆபிரகாமிற்கு குற்ற உணர்வோ, அவனுடைய மகனிற்கு தன்னுடைய தந்தையே அவனைக் கொல்லத் துணிந்தது தண்டனைக்கு உரியதென்ற கேள்வியோ எழுவதில்லை. குழந்தைகளைப் பலியிடும் உரிமையை இயற்கையாகவே பெற்றோர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதனையே இக்கதை சொல்கிறது. எண்ணற்ற பெண் சிசுக் கொலைகளைச் செய்த பெற்றோர்களை நம்மால் நீதியுணர்வால் அணுக முடியாது. கலாச்சாரப் பின்புலத்தில்தான் அணுகுகின்றோம். ஆகையால் அவர்கள் பிள்ளைகளுக்கு எதிராகச் செய்யும் குற்றங்களுக்கு இயற்கையாகவே ஒரு நிரந்தர தண்டனை விலக்கைப் பெற்று விடுகிறார்கள்.

இதன் நீட்சியாகவே பாப்புலர் தளத்தில் தங்கப்பதக்கம் திரைப்படத்தின் கதாபாத்திரமான செளத்ரி, அவருடைய மகன் கதாபாத்திரத்தைக் கொன்றதை நம்மால் கேள்வி கேட்காமல் வர முடிகிறது. செளத்ரி வெறும் தந்தையாக மட்டுமல்ல நீதிக்காகப் போராடுகிற ஒரு போலீஸ்காரரும் கூட. அவர் நீதியைத் தான் காக்க வேண்டியிருக்கிறது.

கெளசல்யாவை எடுத்துக் கொள்வோம், தூக்கு தண்டனை வழங்கப்பட்டது அவளுடைய தந்தையாக இருந்தாலும் அவள் இத்தீர்ப்பை நீதியின் பொருட்டு வரவேற்றிருக்கிறாள் என்பதே இதன் முக்கியத்துவமும், மேற்சொன்ன தொன்மங்களுக்கு ஒரு தலைகீழ் நிகராகவும் இருக்கிறது.

மனுநீதிச் சோழன் கன்றுக்குட்டியின் பொருட்டு தன்னுடைய மகனைக் கொன்றதை நீதியுணர்விற்கான உதாரணமாகச் சொல்லிப் பழகிவிட்ட நமக்கு, இன்னொரு தந்தையின் மகனும், தன்னுடைய கணவனுமான ஒரு மனிதன் கொல்லப்பட்டதற்கான தீர்ப்பில் நீதி உணர்வைக் கண்ட ஒரு மகளை ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை?.

••••

Comments are closed.