தழல் ( சிறுகதை ) / ஸிந்துஜா

[ A+ ] /[ A- ]

download (12)

“எத்தனை மணிக்கு கிளம்பணும்?” என்று சத்யபாமா ராமநாதனிடம் காபியைக் கொடுத்து விட்டுக் கேட்டாள்.
ராமநாதன் அப்போதுதான் அலுவலகத்திலிருந்து திரும்பியிருந்தான்.

எம்.ஜி. ரோடிலிருந்து கோத்தனூர் வருவதற்குள் அவன் வயது ஐந்து வருஷம் அதிகமாகி விடுகிறது. அப்பா! என்ன ட்ராஃபிக் . கார் ஓட்டும் போது உயிர் போய் உயிர் வருகிறது. வீட்டுக்கு வந்தால் தலையைச் சாய்க்க மாட்டோமா என்று இருக்கிறது. ஆனால் இன்று பார்ட்டிக்குப் போக வேண்டும். பிறந்த நாள் பார்ட்டி. அவனது சிநேகிதன் பாலாவின் மனைவி நித்யாவிற்கு இன்று பிறந்த நாள். நல்ல வேளை. வெளியே காரை எடுத்துக் கொண்டு அலைய வேண்டியதில்லை. அவன் குடியிருக்கும் அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸிலேயே பாலாவின் வீடும் இருக்கிறது.
“ஏழரைக்குன்னு சொன்னான். இன்னிக்கி ராக்கூத்துதான் போ” என்றான் ராமநாதன்.

“ஆமா. குடிக்கறதுல ஒண்ணும் குறைச்சலில்லே. என்னவோ பிடிக்காத மாதிரி ஒரு அலுப்பு குரல். செய்யறதெல்லாம் செஞ்சுட்டு இந்த டிராமா வேறயாக்கும்!” என்று சத்யா அவனைக் கிண்டலுடன் பார்த்தாள். பிறகு “இன்னிக்கி நித்யாவோட முப்பத்தி ரெண்டாவது பிறந்தநாளாம்” என்றாள்..

“முப்பத்தி ரெண்டா? அவளைப் பாத்தா முப்பத்தி ரெண்டு வயசான மாதிரி தெரியலையே!” என்றான் ராம்.
“எப்படி தெரியறது? இருபது? இருபத்தஞ்சு?” என்று அவனைக் கடிந்து கொள்ளுவது போல் பார்த்தாள் சத்யா.
“இல்லை. நாற்பது” என்று கண்களைச் சிமிட்டினான் ராமநாதன்.

சத்யா வாய் விட்டுச் சிரித்தாள். இந்தப் பெண்களை ஏமாற்றுவது மிகவும் எளிது. ஒரு சிறிய பூகம்பத்தைத் தவிர்த்தாகி விட்டது.

“சத்யா என்ன கிஃப்ட் வாங்கி வச்சிருக்கே?”

“போன மாசம் டி மார்ட் போயிருந்தப்போ ஒரு கடையில் வச்சிருந்த கைப்பை ஒண்ணு அவளுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. நேத்தி போய் அதை வாங்கிண்டு வந்தேன்.”
“வாட்ஸ் த டாமேஜ்? ரெண்டாயிரமா? நாலாயிரமா?”
“ரெண்டரை” என்றாள் சத்யபாமா.

“இப்படி கிஃப்ட் கொடுத்தே நான் போண்டி ஆயிடுவேன் போல இருக்கே?” என்றான் ராமநாதன்.
“உங்களுக்கு வரச்சே எப்படி இருக்கு? உங்க போன பர்த்டேக்கு பாலா மூவாயிரம் ரூபாய்க்கு பெர்ஃப்யூம் வாங்கித் தரலே?”

“அவன் கூட ஞாபகம் வச்சிண்டு இருக்க மாட்டான். நீ இருக்கியே …!” என்று எழுந்தான். “நான் போய் குளிச்சிட்டு வரேன்” என்று பாத்ரூம் பக்கம் நகர்ந்து சென்றான்.

ராமநாதன் குளித்து விட்டு வெளியே வரும் போது சத்யா கிளம்பத் தயாராக இருந்தாள். லேசான தலை வாரல், அதை விட லேசாக மையிட்ட கண்கள், பளிச்சென்று நெற்றியில் சிறிய சாந்துப் பொட்டு என்று மிகையற்ற அலங்காரமும், ஒரு காட்டன் புடவையை உடலில் சுற்றிக் கொண்டிருந்த எளிமையும் அவள் வயதைக் குறைத்து
விட்டன. போதாதற்கு வாய் நிறைய மகிழ்ச்சியை இறைக்கும் புன்னகை வேறு.

“உன் கூட வரணுமான்னு இருக்கு” என்றான் ராமநாதன்.
“சரி. வர வாண்டாம்.”

“உன் பக்கத்தில நின்னா யார் இந்த ஓல்ட் மேன்னு எல்லாரும் பார்ட்டில கேப்பா” என்றான் சிரித்தபடி.
“போதும் இந்த டிராமா எல்லாம். நீங்க மார்க்கண்டேயன்தான் எப்பவுமே. இப்ப திருப்தியா?”
“பொண்ணரசி எப்போ பாட்டியாத்துலேர்ந்து வரப் போறாளாம்?” என்று கேட்டபடி ராமநாதன் கிளம்புவதற்குத் தன்னைத் தயார்ப் படுத்திக் கொண்டான்

“ஓ நீங்க அதை இன்னும் கவனிக்கலையா? பார்ட்டிக்கு பூர்ணிமா வந்தே ஆகணும். சின்னக் குழந்தைகளை வச்சு ஒரு புரோகிராம் இருக்குன்னு நித்யா நச்சரிச்சுட்டா. அதனால அம்மா இன்னிக்கு மத்தியானம் பூர்ணிமாவை இங்கே கொண்டு வந்து விட்டுட்டு போனா. உடனே
அந்த குட்டி ராட்சஸி நித்யா ஆத்துக்கு ஓடிப் போயாச்சு” என்றாள் சத்யா. .

“குட் . பொட்டுண்டு இல்லாம வீடே வெறிச்சின்னு இருந்தது இவ்வளவு நாளா” என்றான் ராம்.

“இதுக்கே இப்படி சொல்றேளே. நித்யா எவ்வளவு பாவம்?” என்றாள்

சத்யா வருத்தமான குரலில்.
பாலா நித்யா தம்பதிக்கு இன்னும் ஒரு வாரிசு பிறக்கவில்லை.

நித்யாவுக்கு குழந்தைகள் என்றால் அப்படி ஒரு பிரியம். சத்யா ராமநாதன் இருவரும் வேலைக்குப் போகிறவர்களாக இருந்ததால்
பூர்ணிமா மத்தியானம் ஸ்கூலில் இருந்து வந்ததும் அவளைத் தன்
வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போய் விடுவாள் நித்யா.
“சீக்கிரம் ஒருகுழந்தை அவளுக்குப் பிறந்து விட்டால் நன்றாக இருக்கும்” என்றான் ராம்.

அவர்கள் பாலாவின் வீட்டுக்குக் கிளம்பினார்கள்.

“நித்யா எல்லாம் ரெடியா இருக்கா?” என்று பாலா கேட்டான்.

நித்யா தலையை அசைத்தபடி நெற்றிப் பொட்டைச் சரி செய்து கொண்டாள்.

“இந்தப் புடவைல நீ ரொம்ப அழகா இருக்கே” என்றான்.அவன்.

“நல்லிதான் உங்களுக்கு பொண்டாட்டியா வர லாயக்கு” என்று சிரித்தாள் நித்யா.

“இன்னிக்கு பார்ட்டிக்கு சிவசு மட்டும்தான் வருவான்” என்றான் பாலா.

“ஏன் ஜெயாவுக்கு என்ன ஆச்சு?”

“அவளுக்கு நாளைக்கு டிபார்ட்மென்ட் பரிட்சையாம்.அதனால வரமாட்டான்னு சாயந்திரம் சொன்னான். அதை சொல்றப்போ என்ன குஷிங்கறே அவனுக்கு” என்றான் பாலா.

“அப்ப இன்னிக்கு பில்ஸ்னர் இன்னும் ரெண்டு க்ரேட் ஜாஸ்தி வாங்கி போட வேண்டியிருக்கும்” என்று சிரித்தாள் நித்யா.

“அது கரெக்ட்தான். அவ வராததை செலிபிரேட் பண்ணி நானும் நாலு பெக் எக்ஸ்ட்ரா…”

“உதை வாங்கணுமா?” என்று சிரித்தாள் நித்யா.

அதைக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்த ராம் ” ஏன் நீ தினமும் கொடுக்கறதை உன் பிறந்த நாள் அன்னிக்கும் அவனுக்கு குடுக்கணுமா?” என்று கேட்டான்.

“ஓ நீ வேற சப்போர்ட்டுக்கு வந்தாச்சா?” என்று கேட்டபடி நித்யா அவனிடம் ஜெயா வராததைப் பற்றிச் சொன்னாள்.
“நல்லதா போச்சு. சிவசு ஒரு பெக் போடறதுக்குள்ள பத்து வாட்டி எட்டி எட்டி பார்த்துண்டே இருப்பா. போன தடவை அவ அப்படி செஞ்சப்ப ஜோசப் பார்த்தான். அவனால தங்க முடியல. ‘ஆண்ட்டி நீங்களும் ஒரு ஸிப் டேஸ்ட் பண்ணிப் பாருங்க’ன்னான். அவளுக்கு அப்படி ஒரு கோபம் வந்துடுத்து. முறைச்சு பாத்துட்டு போயிட்டா” என்றான் ராம்.

அடுத்த அறையிலிருந்து ஒரே கூச்சலாக வந்து கொண்டிருந்தது. குழந்தைகளின் ஆரவாரம்
“இன்னிக்கு பார்ட்டி குழந்தைகளுக்குன்னு நித்யா சொல்லிட்டா” என்றான் பாலா.
.
“விளையாட்டு சாமான்களை வச்சுண்டு விளையாடுங்கடா பசங்களா என்று எல்லா நண்டுகளையும் போட்டு உள்ளே தள்ளி விட்டிருக்கேன்” என்றாள் நித்யா சத்யாவிடம்.
“பாத்துக்க யாராவது?”

“குமுதக்காவை போட்ருக்கேன்” என்றாள் நித்யா. குமுதக்கா அவள் வீட்டின் சமையல்காரி.

“குட். நன்னா பாத்துப்பா அவ” என்றாள் சத்யா.

பாலா “ஆமாம்.சமையலைவிட நன்னா” என்றான்.

“கொழுப்பு ரொம்ப ஜாஸ்தி” என்று சத்யா அவனைத் திட்டினாள்.

அப்போது வாசலில் சப்தம் கேட்டது. சுரேந்தரும் பூஜாவும் உள்ளே வந்து கொண்டிருந்தார்கள்.

“ஆயியே பாயிஸாப். ஆயியே பஹன்ஜி” என்று பாலா அவர்களை வரவேற்றான்.

“சுரேந்தர், நீ கவலைப் படாமல் உள்ளே வா. இதற்கு மேல் இவனுக்கு ஹிந்தி வராது” என்று ராம் உறுதி கூறினான்.

“ரெண்டு மாதத்துக்கு அப்புறம் இன்னிக்குதான் சாயங்காலத்தைப் பார்க்கறேன்” என்றான் சுரேந்தர்.

அவன்ஒரு பிரபல தனியார் வங்கியில் அதிகாரியாக இருந்தான்.

“வேலைக்கு சேந்ததிலேர்ந்து வேலையே பாக்காத ஆட்களை இந்த ரெண்டு மாசத்தில பிழிஞ்சு எடுத்து வேலை பாக்க வச்சது மோடியோட பெரிய அச்சீவ்மெண்டுதான்” என்று பாலா சிரித்தான்.

சுரேந்தர் பொய்க் கோபத்துடன் அவனை முறைத்துப் பார்த்தான்.

அப்போது வாசலிலிருந்து “ஹாய்!” என்று குரல் கேட்டது.
“சிவசு கமின்” என்று பாலா கூப்பிட்டான்.

ஒல்லியாக உயரமாக அரைக்கால் டிராயரும் டி ஷர்ட்டும் அணிந்த இளைஞன் சிரித்தபடி வந்தான் அவர்களைப் பார்த்துக் கையசைத்தபடி.

“போன வாரம் கார்த்தாலே நீ லன்ச் பாக்ஸ் சீட்டுக் கட்டு டின்னர் பெட் ஷீட்டு போர்வை தலகாணி போன் சார்ஜர்னு எல்லாத்தையும் கட்டி எடுத்துண்டு போயிண்டிருந்தையே” என்று கேட்டான் ராம்.

“அதே ஏன் கேக்கற? பேங்க்ல போயி ஐநூறு ரூபா ஆயிரம் ரூபா நோட்டை மாத்தறதுக்கு கியூல நிக்கப் போனேன்” என்றான் சிவசு.

மற்றவர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

சுரேந்தர் “நேத்திக்கு ஆபிஸ்ல ஒருத்தன் என் ரூமுக்குள்ளே வந்தான். ‘சார் நான் என் மனைவி பேர்ல பேங்க்ல அஞ்சு லட்சம் டிபாசிட் போட்டால் போதுமா இல்லே அதுக்கு மேலே போடணுமான்னு கேட்டான் .எதுக்கய்யான்னு கேட்டேன். இல்ல இன்கம்டாக்ஸ்ல அவளை கூட்டிக்கிட்டு போகத்தான்றான்.”

நித்யா சீரியஸாக “ஜோக்ஸ் அபார்ட் இந்த பணமதிப்புக் குறைவு வேண்டுமானால் கொஞ்ச நாளைக்கு சிரமங்களை தரலாம். ஆனால் எதிர்காலத்துக்கு இது சரியான முறையில் நடைமுறைப் படுத்தப் பட்டால் நம்மைப் போன்ற சாதாரண ஜனங்களுக்கு உபயோக
மாகத்தான் இருக்கப் போகிறது என்று எனக்குத் தோன்றுகிறது” என்றாள் ஆங்கிலத்தில்.

சிவசு பலமாகக் கை தட்டினான். “வெல் செட். பிரதமர் ஆபிஸ்லேர்ந்து கேக்கற மாதிரி இருக்கு. கங்கிராட்ஸ் நித்யா” என்றவன் “ஆனா நீ என்ன சாதாரண ஜனம்னு கூப்பிட்டதுதான் எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலே” என்றான்.

“எனக்கும் அது மனத்தாங்கல்தான்” என்று ராம் சொன்னான். தொடர்ந்து ” பாலா என் துக்கத்தை குறைக்க ஒரு பாட்டில ஓப்பன் பண்ணு” என்றான்.

அப்போது வாசலிலிருந்து ஒரு சிறுவன் ஓடி வந்தான்.
“ஐயோ கழுத்தறுப்பு வந்துட்டானே” என்றான் சிவசு.
வரும் போதே வாசலில் வைத்திருந்த பூச்சட்டிகளைக் காலால் உதைத்துக் கொண்டே வந்தான். ஒரு சட்டி பலம் தாளாது சரிந்து விழுந்தது.

“காலை ஓடிச்சு கைல குடுத்தாதான் புத்தி வரும் நாய்க்கு” என்று சிவசு கோபத்துடன் எழுந்தான்.

“ஏன் குழந்தையைப் போட்டு திட்டறே?” என்ற நித்யா சிறுவனைப் பார்த்து “வாடா குட்டி சிவசு” என்று இரண்டு கைகளையும் விரித்து அவனைக் கூப்பிட்டாள்.

அவன் அதைச் சட்டை செய்யாது சத்யா அருகில் சென்று “பூர்ணி எங்க?” என்று கேட்டான்.

“ஓ உன் கேர்ள் ஃப்ரெண்ட பாக்க ஓடி வந்தியா சதீஷ் ” என்று நித்யா சிரித்தாள்.

“அவ ஒண்ணும் ஃப்ரெண்ட் இல்ல” என்றான் சதீஷ் விறைப்பாக.

“பின்ன?” என்று சத்யா கேட்டாள்.

“எனிமி. என்னோட எனிமி” என்றான் சதீஷ்.

“சீ நாயே” என்று திட்டினான் சிவசு.

“ஏண்டா செல்லம் அப்பிடி சொல்றே ” என்று சத்யா சிறுவனிடம் கேட்டாள்.

“சாயங்காலம் நான் அவகிட்ட கொஞ்சூண்டு கிட்கேட் கேட்டேன்.எனக்கு குடுக்காம அவளே எல்லாத்தையும் சாப்பிட்டுட்டா. ஐ ஹேட் ஹர்” என்றான்.

“அவ்வளவுதானா? நான் ஃபாரின் சாக்லேட் வச்சிருக்கேன். வயலட் கலர்ல, ரோஸ் கலர்ல. உனக்கு வேணுமா?” என்று நித்யா கேட்டாள்.

சதீஷ் கண்களை அகல விரித்துக் கொண்டு தலையைப் பலமாக ஆட்டினான். “இப்பவே குடுப்பியா?” என்று கேட்டான்.

“கொடுக்கறேன். ஆனா நீ பூர்ணி உன்னோட ஃப்ரெண்ட்னு சொல்லணும்.

“அவ எப்பவுமே எனக்கு ஃப்ரெண்டுதான்” என்றான் அவன்.
“அட காவாலிப் பயலே!” என்றான் சிவசு.

எல்லோரும் சிரித்தார்கள்.

“உள்ளே போகலாம் வா” என்று அவனை இழுத்துக் கொண்டு சத்யாவும் நித்யாவும் உள்ளே சென்றார்கள்.

“ஜெயாவும் வந்திருக்கலாம்” என்றான் பாலா.

“நான் கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்கறது உனக்கு பிடிக்கலேங்கறே” என்றான் சிவசு.

பாலா அவன் தோளைத் தன் கையால் அழுத்தினான்
அப்போது குழந்தைகளை விளையாடுவதற்கு முன்னேயே அனுப்பி விட்ட தாய்மார்கள் கும்பலாக வந்தார்கள்.அவர்களுக்கு முன்னால் ஒரே பேச்சு சத்தமும் சிரிப்பு சத்தமும் வந்தன.

சத்தம் கேட்டு நித்யா உள்ளேயிருந்து வெளியே வந்தாள்.
“நித்யா யூ ஆர் லுக்கிங் ப்ரெட்டி”என்று மிஸஸ் ரோஸி பாராட்டினாள்.

“இன்னிக்கு எல்லா பொய்களும் அனுமதிக்கப்படும்” என்றான் பாலா

ரோஸி அவனைப் பார்வையால் துச்சமாக எறிந்தபடி நித்யாவின் கைகளைக் குலுக்கி “ஹேப்பி பர்த் டே” என்றாள்.

“தாங்க்ஸ்” என்று நித்யா புன்னகை செய்தாள். “டோன்ட் டேக் ஹிம் சீரியஸ்லி.”

“ஆமாம். ரொம்ப பொறாமை பிடிச்ச ஜன்மம்” என்று பாலாவைப் பார்த்துச் சிரித்தாள் ரோஸி.

பெண்கள் அனைவரும் குழந்தைகள் இருந்த அறைக்குச் சென்றார்கள். ஆண்கள் ஹாலில் இருந்து எழுந்து பக்கவாட்டில் இருந்த ‘பா’ரை நோக்கிச் சென்றார்கள்.

குழந்தைகள் அறையில் ஒரே கூச்சலும் கும்மாளமுமாக இருந்தது. குறைந்தது பதினைந்து பேராவது இருக்கக் கூடும். ஆனால் சப்தம் என்னவோ இருநூறு பேர் இருப்பது போல் எழுந்து வந்தது.
நித்யா வெவ்வேறு வயதுக் குழந்தைகளுக்கான விளையாட்டுச் சாமான்களையும் புத்தகங்களையும் பரப்பி வைத்திருந்தாள். அவர்கள் சாப்பிடுவதற்கு என்று வைத்திருந்த தட்டுக்களில் இருந்தவை பாதி
தரையில் கிடந்தன. சுரேந்தரின் பெண் குழந்தை தரையில் படுத்துத் தூங்கி விட்டது.அறைக்குள் வந்த தத்தம் பெற்றோரைப்பார்த்த தருணத்தில் ‘அம்மா’ என்று புடவைத் தலைப்பைப் பிடித்துக் கொள்ள குழந்தைகள் ஓடி வந்தன. ஒரு மூலையில் சிவசுவின் பிள்ளை சதீஷ் ரோஸியின் பையன் மைக்கேலின் சட்டையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தான்.

“டேய் வாலு, விடுடா அவனை” என்று குமுதக்கா அவனிடம் ஓடினாள்.

“என்னோட சாக்லேட் கவர குடுக்கச் சொல்லு”என்றான் சதீஷ்.

“இல்ல அது என்னுது” என்றான் மைக்கேல்.

குமுதக்கா மைக்கேலை சதீஷின் பிடியிலிருந்து விடுவித்தாள். சதீஷ் சண்டையில் மைக்கேலின் கையைப் பிராண்டியிருந்ததில் வரி வரியாய் சிவப்புக் கோடுக்கள் தெரிந்தன.

“ராட்சஸனா இருக்கியேடா ” என்று குமுதக்கா கையை ஓங்கினாள்.

சதீஷ் கொஞ்சம் கூட நகராமல் அவளை முறைத்துப் பார்த்துக் கொண்டு நின்றான்.

“என்ன கலாட்டா?”என்று கேட்டுக் கொண்டே நித்யா அங்கே வந்தாள்.

“பாருங்கம்மா. சண்டை போட்டு இந்த பிள்ளை கையில ரத்தம் வர மாதிரி பிராண்டி இருக்கான்” என்று மைக்கேலின் கையைக் காட்டினாள் குமுதக்கா.

“சதீஷ் ஏண்டா இப்படி பண்ணினே?” என்று குரலை உயர்த்திக் கேட்டாள்.

“என்னோட சாக்லேட் பேப்பர வச்சுண்டு தர மாட்டேன்னான்.
அதுக்குதான் அவனை கிள்ளினேன்” என்றான் சதீஷ்.

“உங்க அப்பாவைக் கூப்பிட்டாதான் நீ வழிக்கு வருவே” என்றாள் நித்யா.

இவ்வளவு நேரம் இருந்த திமிர்ச்சியும் முறைப்பும் சட்டென்று அடங்கி குறுகி நின்றான் சதீஷ்.

.”மைக்கேல்ட்ட ஸாரி சொல்லு” என்றாள் நித்யா.
அவன் ஒன்றும் சொல்லாமல் நின்றான்.

“உங்க அப்பாகிட்ட..” என்று நித்யா ஆரம்பித்ததும் “போய் சொல்லிக்கோ. இனிமே உங்க வீட்டுக்கு நா வரமாட்டேன்” என்று கத்தியபடி ஓடினான்.

ஓடும் போது வலது பக்கம் இருந்த கட்டிலில் மோதி நிலை தடுமாறினான். சாய்ந்து கட்டிலை ஒட்டியிருந்த டீபாயின் மீது விழுந்தான். டீபாயின் மேல் வைத்திருந்த ஷான்டெலியர் விளக்கு பலத்த சப்தத்துடன் கீழே விழுந்தது.

“ஐயையோ!” என்று பதறியபடி நித்யா ஓடினாள்.

அதற்குள் கீழே விழுந்த சதீஷ் எழுந்து நின்று விட்டான்.அவனுக்கு அடி எதுவும் படவில்லை என்று தெரிந்தது. நித்யா விளக்கருகே சென்றாள். அது திருத்த முடியாத அளவுக்கு நடுவில் இரண்டாகப் பிளந்திருந்தது. சுற்றி வர கண்ணாடித் துகள்கள் இறைந்து கிடந்தன. அந்த ஷான்டெலியர் விளக்கு அவளுடைய பாட்டி ஜெய்ப்பூரில் வாங்கி வைத்திருந்தது. பின்னர் அது அவளுடைய அம்மாவிடம் இருந்து விட்டு அவள் கைக்கு வந்திருந்தது. ஒன்பது பிரகாசமான விளக்குகளை ஏந்தி நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் செம்பும் வெள்ளியும் கொண்டு செய்யப்பட்டிருந்த அழகிய விளக்கு.

அதை ஆறு மாதத்திற்கு ஒரு முறை வேலையாட்களை வைத்து கீழிறக்கி துடைத்து மெருகேற்றிய பின் ஹாலில் கொண்டு வந்து மாட்டுவாள். நேற்றுக் கீழிறக்கியது இப்போது சேதமடைந்து விட்டது.

நித்யாவால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சதீஷ் கையைக் கட்டிக் கொண்டு நின்றது அவள் கோபத்தை இன்னும் அதிகரித்தது.அவனைப் பிடித்து இழுத்து ‘பளாரெ’ன்று கன்னத்தில் அறைந்தாள். “எப்பப் பாரு சண்டை! திமிர் பிடிச்ச ராஸ்கல். இப்போ உடைஞ்சு போச்சே யார்ரா வந்து குடுப்பா?” என்று காதைத் திருகினாள். சதீஷின் கன்னமும் காதும் சிவந்து விட்டன. அழுது கொண்டே வெளியில் ஓடினான்.

சத்தம் கேட்டு கூட்டம் கூ டி விட்டது. ‘பாரி’ல் இருந்த ஆண்களும் அங்கே வந்து சேர்ந்தார்கள். உடைந்த விளக்கைப் பார்த்து பாலா திகைத்து நின்று விட்டான். அவன் அருகே நின்ற சிவசுவிடம் சதீஷினால்தான் இந்தக் களேபரம் எல்லாம் என்று யாரோ சொன்னார்கள்..

நித்யாவின் கண்கள்கலங்கி விட்டன. சிவசு அவள் பக்கத்தில் வந்து “நித்யா ஐம் வெரி ஸாரி நித்யா” என்று இறைஞ்சினான். அவன் எதோ குற்றம் செய்து விட்டது போல் குறுகி நின்றான். ராமநாதன் சிவசுவின் அருகில் வந்து தோளைப் பிடித்து இழுத்துக் கொண்டு சற்று நகர்ந்து போனான். மிக விலை உயர்ந்த பழங்காலப் பொருள் என்றும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும் சதீஷ் ரொம்பப் பொல்லாதவன் என்றும் பலர் முணுமுணுத்தவாறே அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டிருந்தார்கள்.
பாலா குமுதம்மாவைக் கூப்பிட்டு குழந்தைகள் அனைவரையும் கண்ணாடித் தூள்கள் எதுவும் படாதபடி ஜாக்கிரதையாக அந்த
அறையை விட்டு வெளியே கூப்பிட்டுக் கொண்டு போகச்
சொன்னான். நித்யா சிலை மாதிரி இருந்த இடத்தைவிட்டு நகராமல் நின்றாள்.

வெளியே இருந்த பெண்கள் குழந்தைகளுக்கு தின்பண்டங்
களையும் ஜூஸ்களையும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
கடையை கட்டி அனுப்பி விட்டால் போதும் போல இருந்தது தாய்மார்களுக்கு.

பத்து நிமிஷம் கழிந்திருக்கும்..வாசலிலிருந்து சத்தம் கேட்டது. எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். ஜெயா இரைந்து கொண்டே ஆவேசமாக வந்தாள்.

“எங்கே அவ அந்த நித்யா?” என்று கத்தினாள். அவள் கையில் சதீஷ் சிறைப்பட்டிருந்தான்.

சிவசு “ஜெயா, என்ன ஆச்சு உனக்கு? எதுக்கு இப்பிடி பைத்தியம் மாதிரி கத்திண்டு வரே ?’ என்று அவளருகே சென்றான்.
அவள் அவனை எரித்து விடுவது போலப் பார்த்தாள்.
“ஏய் நித்யா எங்கேடி ஒளிஞ்சிண்டு இருக்கே? என் குழந்தையை போட்டுஅடிச்சு கொன்னுட்டு?” என்று வெறி பிடித்தவள் போலக் கூச்சலிட்டாள்.

பாலாவுக்கு கோபம் தலைக்கேறியது. அவன் வாயைத் திறக்கும் முன் நித்யா அறையிலிருந்து வெளியே வந்தாள்.
அவளை பார்த்ததும் ஜெயா “நீ வேணும்னா பெரிய பணக்காரியா இருக்கலாம். என் பிள்ளையை போட்டு அடிக்க உனக்கு என்ன உரிமை இருக்கு? நாங்க என்ன நாதியத்து கிடக்கமா? பாரு குழந்தையை.கன்னமும் காதும் எப்படி செவந்திருக்குன்னு? கொஞ்சம் தவறி உன் அடி பட்டிருந்தா செவிடாயிருப்பான் .நீ யாரு அவன் மேலே கை வைக்க?” என்று திட்டினாள்.

“ஏய் ஜெயா நடந்தது என்னன்னு தெரியாம நீ கண்டபடி பேசாதே” என்று அவளை சிவசு அடக்க முயன்றான்.
“என்ன நடந்தா என்ன? இவ யாரு என் பிள்ளை மேல கை வக்கிறதுக்கு? முன்ன பின்ன பெத்திருந்தா தெரியும். மலட்டு முண்டம்” என்றாள் ஜெயா.

எல்லோரும் திடுக்கிட்டு அவளைப் பார்த்தார்கள். சிவசு அவள் மீது பாய்ந்து அவள் வாயை ஓங்கிக் குத்தினான். ரத்தம் அவள் வாயிலிருந்து கொப்புளித்தது. வலி பொறுக்க முடியாமல் அவள் ‘ஓ’வென்று கத்தினாள். பாலா விரைந்து சென்று சிவசுவைத் தடுத்துக் கட்டிக் கொண்டான்.

இவ்வளவு நேரமாக சந்திரனின் குளிர்ச்சியையும்,அருவியின் இரைச்சலையும் பூக்களின் மலர்ச்சியையும் தென்றலின் இனிமையையும் நட்சத்திரங்களின் மௌனத்தையும் கொண்டிருந்த சூழலை பெரும் தீயொன்று கிளம்பி கபளீகரம் செய்வது போல் ராமநாதனுக்குத் தோன்றிற்று. தீக் கங்குகளின் ஜுவாலையிலிருந்து தப்பித்து ஓடி விட முடியாதா என்று வியர்த்தான். .

வாயை ஒரு கையால் மூடிக் கொண்டு நித்யா உள்ளே ஓடினாள். அன்று அதற்குப் பிறகு அவளை யாரும் பார்க்கவில்லை.

•••

Comments are closed.