வா.மு. கோமு கவிதை

[ A+ ] /[ A- ]

 

970303_131520640376301_1391790504_n

அன்பு நண்பனுக்கு…

 

முதலைக் குட்டிகளை சாக்குப்பை ஒன்றில்

போட்டு கூவிக்கூவி ஒருவன்

விற்றுக்கொண்டு நம் தெருவில்

வந்த நாள் அன்றுதான் நிரந்தரமாய்

நீ இந்த ஊரைவிட்டு சென்றிருந்தாய்!

இப்படியிருக்க உன் நல விசாரிப்பு

கடிதம் நேற்று மதியமாகத்தான் கிடைத்தது.

உன் பிரிவின் துயரில் ஊரார்

நாளொரு மேனியும் பொழுதொரு

வண்ணமுமாக அல்லலுறுகிறார்கள்.

நகரத்திலிருந்து வெள்ளை அரைக்குட்டை

பாவடையணிந்த தாதி ஒருத்தி

தினமும் ஊருக்குள் யமாஹாவில்

வந்து மாத்திரை வில்லைகளும், டானிக் பாட்டில்களும்

தந்து போகிறாள். – உனது பிரிவால்

கொள்ளை நோய் பீடித்து மிகவும்

அல்லலுறுகிறவன் பிலால் தான்.

நாட்களை எண்ணிக்கொண்டு

நரம்புக் கட்டிலில் கிடந்தழுகிறான்.

ஷகிலா உன்னைப்பற்றி என்னிடம்

எதுவும் விசாரிக்கவில்லை.

அவள் இப்போது ஷாகிப்போடு

காதலைப் புதுப்பித்துக் கொண்டாள்….

என்ற வதந்தி பரவியிருக்கிறது.

உன் அம்மா ஒருநாள்

வானொலியில் பெற்றகடன்

தீர்ந்தது பற்றி அழகுற பேசினார்..

கூடவே எதிர்நீச்சலில் புதிய பாடல்

ஒன்றை ஒலிபரப்பச் சொன்னார்.

அத நாங்கள் கூடி நின்று கேட்டு

மகிழ்ச்சிக்கடலில் திழைத்தோம்.

உன் வீட்டினுள் நீ சென்ற பிறகு

எலிகள் குடிவந்துவிட்டன என்று

உன் தங்கை மும்தாஜ்

மளிகை ஜாமான் வாங்க நான்

போகையில் வழிமறித்து கூறினாள்.

அதனால் அவள் இப்போது

Stayfree உபயோகிப்பதில்லை என்றாள்.

உயிர்மை இந்தமாதம்

தாமதமாக வந்து சேர்ந்தது…அது

தோழரை தற்கொலைக்கு

தூண்டுவதாக வேறு சொன்னான்.

உனது சினேகிதர்கள் போர்ஹே,

மார்குவஸ், அம்ருதா பிரீதம், ஜெனே

எல்லாருமே என் புத்தக அடுக்கில் தூங்குகிறார்கள்.

முதலைக்குட்டிகளை சாக்குப்பையிலிட்டு

விற்பனை செய்ய யாரேனும் வரும் நாளில் நீ வருவாய் என்று

உன் தந்தை காத்திருக்கிறார்.

துட்டு அனுப்ப இயலுமா? என்று

எனப் போன்ற ஒட்டுண்ணியிடம்

வெட்கம் இல்லாமல் கேட்டிருக்கிறாய்.

நீ என்னிடம் எதிர்பார்ப்பது அதிகம்

உனக்கே தெரியும் எனது

காதலியின் திருமண பரிசாக

ஏற்கனவே ஒரு விரையை

பரிசளித்தவன் நான் என்று!

என்னிடம் இன்னும் ஒன்றே ஒன்றுதான்

பாக்கியிருக்கிறது…இருந்தும்

உனக்கு உதவ ஆசைதான்.

தூக்கிட்டு செத்துப்போ! அல்லது

ரயிலின் குறுக்கே விழு!

••••

Leave a Reply