சிறுகதை – ‘தேய்ந்த நிலாக்களின் காலம் – நந்தன் ஶ்ரீதரன்

[ A+ ] /[ A- ]

images (20)
காலத்தை விட சிறந்த மருந்தும் இல்லை, வாழ்வை விட சிறந்த ஆசானும் இல்லை என்பார் எனது நண்பர்.. நான் சென்னையை விட சிறந்த ஆசானும் இல்லை என்பேன். வாழ வேண்டும் என நீங்கள் விரும்பிவிட்டால் சென்னை உங்களை தன் இரு கை நிறைய வாரி எடுத்துக் கொண்டுவிடும். கசப்பும், இனிப்பும், துவர்ப்பும், புளிப்புமாக அது உங்களுக்குப் புகட்டும் வாழ்க்கைப் பாடங்களை நீங்கள் வேறெங்கும் கற்றுக் கொள்ள இயலாது. புன்னகை சற்றும் இல்லாத – தடித்த கையையுடைய வாத்தியாரைப் போலதான் அது..

 

நான் இருக்கும் வீட்டுக்கும் ஃப்ளாட் என்றே பெயர். 380 சதுர அடி அறையில் இரு  சுவர்களை ட வடிவில் கட்டி  பெட் ரூம் என பிரித்திருப்பார்கள். சமையல் அறை என்பது உண்மையில்  சமையல் பொந்துதான். கொஞ்சம்  தடித்த பெண்மணியாக இருந்தால்  ஒரு பக்கமாக திரும்பிதான் நடக்க முடியும். சமைக்கும்  இடத்தில் மட்டும் சமைப்பவருக்கும், பாத்திரம் துலக்குபவருக்கும் நிற்க இடம் விடப்பட்டிருக்கும். இருந்தாலும் இருவரில் யாராவது அஜாக்கிரதையாக வேகமாக திரும்பினால் அடுத்தவர் மீது முட்டிக் கொள்ளத்தான் வேண்டும்.

 

ஆயினும் இருபத்து நான்கு மணிநேரமும் கார்ப்பரேஷன் தண்ணீர் வரும் வீடு. தனி  மீட்டர் உண்டு. குடியிருப்பவரே பில் கட்டிக் கொள்ளலாம், எங்கள் வீடு தவிர மீத ஆறு வீடுகளிலும் இருப்பவர்கள் அத்தனை அருமையான மனிதர்கள். சினிமாவில் இருப்பதால் ஷூட்டிங் என்று வந்துவிட்டால் இருபது நாள், ஒரு மாதம் என்று நான் வெளியூர் போய்விடக் கூடிய அபாயம் எப்போதும் உண்டு. அதை அபாயம் என்று என் மனைவியார் சொன்னாலும் நான் பிழைப்பு என்றே சொல்ல வேண்டி இருக்கிறது. இப்பெரும் சென்னை நகரில் ஒரு பெண்மணி தனித்து ஒரு மாதம் இருப்பதென்பது கொஞ்சம் அவர்களது துணிவை சோதிக்கும் விஷயம்தான். ஆனாலும் என் மனைவி கீதாவுக்கு அந்த பிரச்சினை பெரிதாக வந்ததில்லை. நான் வீட்டில் இல்லை எனினும் பக்கத்து வீட்டுக் காரர்கள் எப்போதும் அவளிடம் பேசியபடியோ எதோ விதத்தில் அவளிடம் அவள் தனியாக இல்லை என்பதை உணர்த்தியபடியோ இருப்பார்கள். ஒரு வேளை உடல்நிலை சரியில்லை என்றாலும் பக்கத்து வீட்டுப் பெண்மணி அவரே  ஆட்டோ பிடித்து வந்து கீதாவை ஆஸ்பத்திரி அழைத்து சென்று விடுவார். ஒரு முறை அப்படியும் நடந்திருக்கிறது.

 

அடுக்களை சிறியது என்ற ஒரே காரணத்துக்காக இவ்வளவு  பிரியமான மனிதர்கள் சூழ்ந்த, குறைவான வாடகை உள்ள, ஒரு  நாளும் தண்ணீர் கஷ்டம் வராத இந்த வீட்டை விட்டு போகுமளவு நானோ என் மனைவியோ புத்தி பேதலிக்காதவர்கள் என்பதால்  இன்றளவும் அந்த வீட்டை நேசித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

 

ஏழு குடித்தனங்கள் கொண்ட  எங்கள் அபார்ட்மெண்ட்டில்  எங்கள் ஃபிளாட்டின் சுவரோடு  ஒட்டி இருக்கும் முன் வாசல்  ஃபிளாட்டை மட்டும் அதன் ஓனர்கள் அவர்களது கம்பெனி  கோடவுனாக பயன்படுத்தி வந்தார்கள். திடீரென சென்ற மாதம்  For Sale போர்டு மாட்டி, கண் மூடி திறப்பதற்குள் நம்ப முடியாத விலைக்கு விற்றும் விட்டார்கள். புதிதாக அந்த வீட்டை வாங்கியவர் புகை மண்ட சில யாகங்கள் செய்த கையோடு To Let போர்டு மாட்டி மூன்றாவது நாளே ஒரு குடும்பத்தை குடி வைத்தும் விட்டார்.

 

இந்த கதை கூட அப்படி எக்ஸ்பிரஸ் வேகத்தில் குடி வந்த அந்த குடும்பத்தைப்  பற்றியதுதான்.

 

முதலில் வெறுமனே அந்த குரலை  மட்டும் நீங்கள் கேட்டீர்களானால்  ஒரு எட்டு ஒன்பது வயது சிறுமிதான் பேசுகிறாள் என்று  நினைத்து விடுவீர்கள். அப்படி ஒரு குழந்தைக் குரலுடன், சற்று பருத்த உடலுடன் ஐம்பது பிராயங்களில் ஒரு அம்மாதான்  அந்த குடும்பத் தலைவி. கூடவே  அதே அளவு பருத்த உடலுடன்  தொண்டை கட்டியது போன்ற குரலுடன் முப்பத்தைந்து வயது கொண்ட  மூத்த மகன் இருந்தார். இரண்டு மகள்கள். மூத்தவளுக்கு இருபத்தெட்டு இருககும். ஒரு மாதிரி கோதுமைச் சிவப்பு. குரல் அவளுடைய  அம்மாவை ஒத்து இருந்தது. நல்ல வனப்பான உடல். வனப்பு என்றதும் இந்த சினிமா கதாநாயகிகளின் அளந்தெடுத்துச் செய்த சீரான வனப்பை நினைத்து விடாதீர்கள். இது பிடித்ததை சாப்பிட்டு, பிடித்த நேரத்தில் தூங்கி வாழ்ந்த, கொஞ்சம் கவலையற்ற பெண்ணின் வனப்பு. குண்டு என்று சொல்லிவிடப் போவதற்கு முந்தைய உடல்நிலை. அவளது தங்கைக்கு ஒரு இருபத்து நான்கு இருக்கும். மினுக்கமுள்ள கறுப்பு நிறம். கத்தி மாதிரி கண்கள். அந்த வீட்டிலேயே இளையவளும், இளைத்தவளும் அவள்தான்.

 

மூத்தவளுக்கு ஒரு பையன். ‘எம்பேரு கோவிந்தக்கண்ணன்.’  என்று அவனேதான் சொன்னான். (‘டேய் தம்பி. வண்டிய எடுக்கப் போறேன். கொஞ்சம் வழிய விட்டு நில்லு’ என்று நான் சொன்னதற்கான  பதில்தான் அது). நிஜமாகவே குட்டிக் கண்ணன் மாதிரி அத்தனை அழகு. சேட்டை என்றால் பெரும் சேட்டை. என் மனைவி உட்பட  ஃபிளாட்டில் இருக்கும்  அத்தனை பெண்களும் கம்ப்ளெயிண்ட்  பண்ணுமளவுக்கு சேட்டை. நிறுத்தப்  பட்டிருக்கும் எல்லா டூவீலர்களிலுமே ஸ்டிக்கர் நம்பர்தான் ஒட்டி  இருப்பார்கள். தலைவன் நைசாக  நகத்தை வைத்து எல்லா நம்பர்களையும்  பிய்த்து எல்லா வண்டிகளையும் எண்ணற்ற வண்டிகளாக ஒரே  நாளில் செய்து விட்டான். செய்தவன் சும்மா போகக் கூடாதா திட்டுத் திட்டாக எல்லா நம்பர்களையும்  அவர்கள் வீட்டு கதவிலேயே ஒட்டி வைத்து விட்டான்.

 

பொதுப்பணத்தில் மொத்த  அபார்ட்மெண்ட்டையும் பெயிண்ட் செய்து மூன்று மாதம் கூட  முழுதாக ஆகாத நேரத்தில் மாடிப்படி மட்டும் பொது இட சுவர் முழுக்க மூன்றடி உயரத்தில் ஏபிசிடி யையும், ட்ரீயையும், சன்னையும், ஃப்ளவரையும், இன்னபிற இனங்கண்டு பிடிக்க இயலாத உயிரினங்களையும், இனங்கண்டு பிடிக்க இயலாத எதோ ஒன்றால் எழுதி வைத்து விட்டான். அழித்தால் சுவர் இன்னும் கொஞ்சம் கறுப்பாகியது. மெயிண்டனன்ஸ் பார்ப்பவரின் மனமோ ரொம்ப வெறுப்பாகியது. இத்தோடு நிற்காமல் எப்படியோ குடி நீர் பிடிக்கும் அடி பைப்பின் நட்டை கழற்றி ஒரு நாள் அனைவரையும் கதற விட்டான். மற்றொரு நாள் மேல் வீட்டு செளந்தர்யா-அம்மா பாசத்துடன் வளர்த்திருந்த பூச் செடிகளில் இலைகள் அனைத்தையும் சுத்தமாக பறித்துப் போட்டு விட்டான். (பூச் செடிக்கு பூ மட்டும் போதுமே, இலை எதற்கு என்று நினைத்தானோ என்னமோ.) சம்ப்பில் நீர் இருக்கிறதா என்று அளவு பார்க்கும் நீளமான பட்டைக் கம்பை என்ன செய்தான் என்று இன்று வரை அவன் சொல்லவே இல்லை.

 

எங்கள் ஃபிளாட்டில் அனைவரும் சாந்த சொரூபிகளும் அல்ல. அதே நேரம் சண்டைக்கு  தயங்குகிறவர்களும் அல்ல. இருந்தாலும் எல்லாவற்றையும் செய்துவிட்டு மலங்க மலங்க  விழிப்பது அழகான கோவிந்தக்  கண்ணன் என்ற நான்கு வயது குழந்தையல்லவா.. முதலில் ஒவ்வொருவராக அவர்கள்  வீட்டு முன் நின்று புகார் தெரிவிக்க மட்டும் செய்தார்கள். ஆனால் வீட்டை பூட்டிக் கொண்டு அந்த குழந்தையைப் பெற்றவள் குழந்தையை அடித்த அடியைப்  பார்த்து அனைவரும் பயந்து போய் அவன் என்ன செய்தாலும் அவனை மெல்ல அழைத்து ரகசிய  குரலில் ‘இப்புடி எல்லாம்  பண்ணக்கூடாது செல்லம்..’  என்பது மாதிரி அட்வைஸ் செய்வதோடு  நிறுத்திக் கொண்டார்கள்.

 

இது குட்டி கோவிந்த கண்ணன் பற்றிய கதையும் இல்லை என்பதால் நான் இப்போது கோ.க.-வின் சேட்டைகளை  கொஞ்சம் தள்ளி வைக்கதான்  வேண்டி இருக்கிறது.

 

மொத்தம் நாலரை பேர் கொண்ட  அந்த குடும்பம் எங்கள் அபார்ட்மெண்ட்  வாசிகளால் கொஞ்சம் ஜாக்கிரதையாகவேதான் பார்க்கப்பட்டது. பார்க்கப்பட்டது  ஆனால் அணுகப் படவில்லை. சும்மா பார்க்க மட்டும்தான் பட்டது மெல்ல மெல்ல கீதா மூலம் தகவல்கள் கசியத் துவங்கின. அந்த மூத்த பெண் கணவனை விட்டு விட்டு வந்துவிடடாளாம். சகோதரிகள் இருவரும் துணை நடிகைகளாம்.  மூத்த பையன் காஸ்ட்யூமராக சினிமாவிலேயே இருக்கிறானாம்.

 

துணை நடிகை என்ற சொல் அனைத்து  அபார்ட்மெண்ட் வாசிகளையும் (அனைத்து என்று சொன்னதும் நீங்க பாட்டுக்கு கண்டபடி கற்பனை செய்து கொண்டுவிடக் கூடாது. எங்கள் இருவரையும் சேர்த்தே மொத்தம் 19 பேர்தான் இருப்போம். அனைத்து என்பது ஒரு ஃபுளோவுக்காகதான்.) மேலும் உஷார்ப் படுத்தியது. போதாததற்கு அவர்களது வீட்டுக்கு தனி கேட் இருந்ததால் மற்றவர்களுடைய இயல் நிலை வாழ்வில் அவர்கள் குறுக்கிட வேண்டிய அவசியமும் இல்லாமல் போனது.

 

இரண்டு நாட்களுக்கு ஒரு  முறை அல்லது மூன்று நாட்களுக்கு  ஒரு முறை இரவில் அவர்கள்  வீட்டின் அடைத்த ஜன்னல் மற்றும்  கதவுகளுக்குப் பின்னால் இருந்து அக்காளும் தங்கையும்  சண்டை போடும் குரல் கேட்கும். கெட்ட வார்த்தைகள் சர்வ சகஜமாகப் புழங்கும். அதிலும்  நான் எழுதும் மேஜைக்கு வெறும் ஓரடி தொலைவுக்குள் அவர்கள் வீட்டின் அடைக்கப் பட்ட ஜன்னல் வருவதாலும், நான் எழுதி முடித்து உறங்க ரொம்ப தாமதமாகிவிடும் என்பதாலும் அந்த சண்டைகள் அனைத்திலும் நான் மௌன கேட்பாளனாக இருந்தேன். எனது சொந்த ஊரில் நடந்த எத்தனையோ பெண்களின் சண்டைகளை கேட்டவன்தான் நான். அநேகமாக அவற்றில் பயன்படும் சொற்கள் அனைத்தும் எனக்கு அத்துப்படி. அப்படிப்பட்ட எனக்கே அவர்களது சண்டையில் சகோதரிகளின் இடையில் பறக்கும் பல சொற்கள் புதிதாகவும் நானறியாததாகவும் இருந்தன.

 

அவை என் காதுகள் மட்டும்  அறிந்த சண்டைகள்தான் என நான் நினைத்திருக்க, மெல்ல மெல்ல  கீதா அவர்கள் ரொம்ப மோசமான வார்த்தைகளோடு சண்டை போடுகிறார்கள்  என்பதையும், டீசண்ட்டான குடித்தனங்கள்  இருக்கும் அபார்ட்மெண்டில்  இவர்கள் வந்திருப்பது குறித்த  மற்ற குடித்தனக்காரர்களின  புலம்பல்கள் பற்றியும்  என் காதுக்கு கொண்டு வந்தாள். நான், ‘அது அவங்க வீடு. அந்த சுவர்களுக்குள்ள அவங்க  என்ன செஞ்சாலும் அதை நாம் தட்டிக் கேக்க முடியாது. தட்டி கேக்கவும் கூடாது. அது அவங்களோட சுதந்திரத்தை பாதிக்கிற விஷயம். தவிர, நம்ம வீட்டுல நாம சண்டை போட்டதே  இல்லையா..? மேல் வீட்டுல அவங்க  போடாத சத்தத்தையா இவங்க  போடுறாங்க..? குறைஞ்ச பட்சம் இவங்க கதவு, ஜன்னல் எல்லாத்தையும்  சாத்தி வச்சிக்கிட்டு சண்டை  போடுறாங்க இல்லையா..? அதனால  செளந்தர்யா-அம்மாவைவிட இவங்க  டீசண்ட்டானவங்கன்னுதான் எனக்கு தோணுது. நீயும் மத்தவங்க மாதிரி பேச ஆரம்பிக்க வேண்டாம்.’ என்று சொன்னேன். இருந்தாலும் கீதாவுக்கு அவர்கள் பயன்படுத்தும் கெட்ட வார்த்தைகளை மன்னிக்க முடியவில்லை. அவளது சிறு வயதிலிருந்து அந்த மாதிரியான வார்த்தைகளை அவள் கேட்பதிலிருந்து தவிர்த்தே வளர்த்திருந்தார்கள் அவளது பெற்றோர்..

 

கீதாவை சமாதானப் படுத்தினேனானாலும்  என் மனதில் அவர்களது அந்த பின்னிரவு நேர கொடும் வார்த்தை சண்டை என்னை உறுத்திக்  கொண்டேதான் இருந்தது. அடைத்த கதவுகளையும் தாண்டி ஒரு  கெட்ட வாசம் போல பீரிடும் அந்த வார்த்தைகள் அந்த வீட்டில் குட்டியாக வளைய வந்து கொண்டிருக்கும் குட்டி கோவிந்த கண்ணனை எந்த அளவு பாதிக்கும் என்ற பதற்றம்  என் மனதில் இருந்தபடியேதான்  இருந்தது. என்றாவது ஒரு நாள் அவர்களிடம் என் வருத்தத்தைக் கொட்டி விட வேண்டும் என்றே  நான் நினைத்திருந்தேன்..

 

பின்னொரு நாள் சகோதரிகளில்  மூத்தவள், கீதா வேலைக்குப் போயிருந்த பொழுதொன்றில் என் வீட்டுக்கதவருகில்  வந்து, ‘நீங்க ரைட்டர்ன்னு  சொன்னாங்களே சார்..’ என்றாள்.

 

நான் லேசாக திடுக்கிட்டாலும், எனது வாசிக்கும் கண்ணாடியைக்  கழற்றி வைத்தபடி, ‘ஆமாம்ப்பா. என்ன விஷயம்..?’ என்றேன்.

 

‘நானும் என் தங்கச்சியும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டு  சார். நீங்க எழுதுற ப்ராஜெக்ட்டுல  எதாவது சான்ஸ் இருந்தா சொல்லுங்க. மேனேஜர் நம்பர் இருந்தா  கூட குடுங்க. நானே பேசிக்குறேன்..’  என்றாள்.

 

நான் நிதானமாக, ‘இப்ப நான் எழுதிக்கிட்டு இருக்குற ப்ராஜெக்ட்டுல என்னால ஆர்ட்டிஸ்ட்  செலக்‌ஷன்ல தலையிட முடியாது. ஏன்னா நான் வெறும் ரைட்டர்தான். அதே மாதிரி மேனேஜர் நம்பரை நான் தர முடியாது. அது ஏன்னு  உங்களுக்கே தெரியும். இதைத்  தாண்டி உங்க உருவத்துக்கு ஏத்த மாதிரி கேரக்டர் வந்துச்சுன்னா  நானே டைரக்டர்கிட்ட சொல்லி உங்களை கூப்புடச் சொல்றேன்..’  என்றேன்.

 

‘அப்ப என்னோட செல் நம்பரை தரவா சார்..?’ என்றாள் அவள்.

 

‘தேவையில்ல. வாய்ப்பு வந்தா  இதோ அடுத்த வீடுதானே உங்களோடது.. நானே கூப்புடுறேன்.’ என்றேன்.. அவள் புன்னகையுடன் போனாள்.

 

ஆயினும் எங்கள் அபார்ட்மெண்ட்  ஆட்கள் அவர்களைப் பற்றிப்  பேசுவது அதிகமானது. மெல்ல அவர்கள் வீட்டுக்கு இளவயது பையன்கள் வந்து பகலெல்லாம் அரட்டை அடிப்பது விமரிசனத்துக்கு உள்ளானது. கீதாவிடம் பையனோ, பெண்ணோ.. அரட்டை அடிப்பது தப்பா என்ற கேள்வி கேட்டு எங்கள் வீட்டு புகைச்சலை நான் அடக்கினேன்.

 

அது மறைவதற்குள், இரு சகோதரிகளும் நேரம் கெட்ட நேரத்தில் இரவில் வெளியே போய்விட்டு அதிகாலை வந்து இறங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு கிளம்பியது. நான் கீதாவுக்கு துணை நடிகைகளின் வேலை பற்றியும் சினிமாவில் அவர்கள் எவ்வளவு மோசமாக நடத்தப் படுகிறார்கள் என்பது பற்றியும், ஷூட்டிங் முடிந்தபின் அவர்கள் எவ்வளவு தாமதமாக விடுவிக்கப்படுவார்கள் என்பது பற்றியும் பொறுமையாக விளக்க வேண்டி வந்தது.

 

அவர்களது இருப்பை அந்த கட்டிடத்தின் முன் பக்கம் முளைத்து விட்ட ஒரு அருவெறுக்கத்தக்க புண்ணைப் போல பார்க்கத்  துவங்கினார்கள் எங்கள் அபார்ட்மெண்ட்  வாசிகள். என்னிடம் சொல்லாவிட்டாலும் கீதாவின் மனநிலையும் அதுதான் என்பது எனக்குத் தெரிந்தே இருந்தது. கோவிந்த கண்ணன் மட்டும் அவளுக்கான விதிவிலக்கு. பெரிதாக கூப்பிட்டு கொஞ்சுவதில்லை எனினும் அவனைப் பார்த்ததும் முகம் அப்படியே ஒரு பழம் கனிவதைப் போல மென்மையுறுவதை நீங்கள் கண்கூடாக காண முடியும்.

 

அந்த பெண்களைப் பொறுத்த  வரை எனக்கு எந்த மனபிம்பங்களும் இல்லை. ஒரு வேளை அனைவரும் சொல்வதைப் போல அவர்கள் பாலியல் தொழிலில் இருந்திருந்தாலும், பொதுவாக பாலியல் சார்ந்த எனது கொள்கைகளும் வேறு வகையானது என்பதால் அவர்கள் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. ஆகவே அந்த பெண்கள் எப்போதாவது என்னை எதிர் கொண்டு புன்னகைக்கும்போது பதில் புன்னகை தருபவனாகவே நான் இருந்தேன். அவர்கள் வீட்டில் மோட்டாரை ஆன் செய்துவிட்டு டேங்க் நிரம்பி வழியத் துவங்கினாலும் ஆஃப் செய்வதில்லை என்பது மாதிரியான குற்றச்சாட்டுகளுக்கு நான்தான் அந்த பெண்களை அழைத்து, மோட்டார் சுவிட்ச் போட்டால் போட்டவர்கள்தான் ஆஃப் செய்ய வேண்டும் என்று பொறுமையாக சொன்னேன். இது தவிர அவர்கள் குப்பையை வீட்டுக்கு முன்பாகவே போட்டு விடுகிறார்கள். மற்றவர்கள் வீட்டு துணியுலர்த்தும் கொடியில் தங்கள் துணிகளை காயப் போட்டு விடுகிறார்கள் என்பன மாதிரியான குற்றச்சாட்டுகளுக்கும் நானே தூது போக வேண்டி இருந்தது. காலப் போக்கில் அந்தப் பெண்களை நோக்கி புன்னகையோடு நான் போனேன் என்றாலே அது அவர்கள் செய்த எதோ தப்பை எடுத்துக் காட்டதான் என்று அவர்களே நம்பத் துவங்கி விட்டார்கள். அது உண்மையும் கூட.

 

இடையிடையில் பக்கத்து வீட்டு குழந்தைகளுக்கு நான் சாக்லேட் வாங்கி வரும்போது கோவிந்த  கண்ணனுக்கும் வாங்கிவர ஆரம்பித்தேன். அவர்கள் அம்மாவுக்கு கரண்ட் பில் கட்ட மறந்து ஃபீஸ்கட்டையை ஈபி காரர்கள் பிடுங்கிக் கொண்டு போய்விட்டால் எங்கே போய் கம்ப்ளெயின்ட் கொடுக்க வேண்டும், மெடிக்கல் ஷாப்புக்கு எந்த வழியில் போக வேண்டும் என்பது மாதிரியான சிறு சிறு வழிகாட்டல்களையும் செய்தேன். அதற்கே அவர்கள் வீட்டில் என்னை எதோ பெரிய நாட்டாமையைப் பார்ப்பது போல பார்த்து அனைவரும் குட்மார்னிங் எல்லாம் சொல்லத் துவங்கி விட்டார்கள்.

 

இதற்கிடையே ஒரு நாள் கீதா என்னிடம் ஆவலாக வந்து, தணிந்த குரலில், ‘அந்த கோட்டிக் கிழம் அவங்க வீட்டுப் பக்கமே சுத்திக்கிட்டு இருக்கு. என்னென்ன நடக்கப் போகுதோ..’ என்று  பதறிவிட்டுப் போனாள்.

 

கோட்டிக் கிழம் என்று  அனைத்துப் பெண்களாலும்  அழைக்கப்படும் அந்த கிழவர் எங்கள் எதிர் வீட்டுக்காரர். அதை வீடு என்பதை விட பாதி பங்களா என்றே சொல்ல வேண்டும். இரண்டு கார்கள் வைத்திருக்கிறார்கள். சமைக்க ஒருவர், வீடு சுத்தப்படுத்த  ஒருவர், துணி துவைக்க ஒருவர், பாத்திரம் கழுவ ஒருவர் என்று  நான்கு வேலைக்காரப் பெண்கள்  அந்த வீட்டிற்காக வேலை செய்தார்கள். நகரின் மிகப் பிரபலமான பள்ளியில்தான்  அந்த வீட்டு பையன் படித்தான். (தகவல்கள் உபயம், எங்கள் வேலைக்காரப்  பெண்மணி வாயிலாக கீதா) பணம் அவர்கள் வீட்டின் வாயில் விளக்கைப் போல மின்னியபடி இருக்கும். எதோ ஃபேக்டரி வைத்திருக்கிறார்கள் போல.                                                                                           

 

இதில் இந்த கோட்டிக் கிழவர்தான் அந்த வீட்டின் மூத்த கிழவர். ஃபேக்டரி, பணம் எல்லாம் அவர் சம்பாதித்து மகனுக்கு கொடைத்ததுதான்  போல. வயதாகிவிட்டது. நடை தளர்ந்து விட்டது என்பதால் அவர்களது மகன் பொறுப்புகளை தான் எடுத்துக்  கொண்டு தந்தையை ஓய்வெடுக்க விட்டுவிட்டான்.

 

தலைவன் ஓய்வெடுத்தால்  பரவாயில்லை. எங்க ஏரியா பெண்களின்  உயிரை எடுத்துக் கொண்டு இருந்தார். அவரது லீலைகளை  பேசும்முன் தலைவனுடைய தோற்றத்தைப்  பற்றி உங்களுக்கு சொல்ல  வேண்டும். இன்னும் நான்கு இஞ்ச் உயரம் குறைவாக  இருந்திருந்தால் குள்ளம்  என்று சொல்லி இருப்போம். தலைவன் தக்கி முக்கி ஐந்தடி உயரம் வளர்ந்து விட்டார். நரைத்த தலை. ரொம்ப இல்லாட்டியும்  ஒரு செல்ல தொந்தி வைத்திருந்தார். தோல் நிறம் மட்டும் அப்படி ஒரு தங்க கலர். சுண்டினால் ரத்தம், சதை, எலும்பு எல்லாம்  தெறிக்கக்கூடிய ஒரு நிறம். தாடி மீசையற்ற மழித்த முகத்தில் எப்போதும் துலங்கும் ஒரு புன்னகை. ஏறு நெற்றியில் எந்நேரமும் திருநீறும், அதனடுவில் குங்குமமும் துலங்கும். கதர் சட்டை அல்லது கதரில் பனியன் மாதிரி ஒன்றை போட்டிருப்பார். வேட்டியும் கதர் வேட்டிதான்.

 

மொத்தத்தில் அவரை முதன்முறையாக யார் பார்த்தாலும் சட்டென்று  மரியாதையாக எழுந்து நின்றுவிடுவார்கள். கொஞ்சம் எளிய மனிதர்களாக இருந்தால் அவர் சொன்ன வேலையை யோசிக்காமல் செய்து விடுவார்கள். ஏற்றாற் போல அவரது குரலும்  நாம் கொஞ்சம் உற்றுக் கேட்காவிட்டால் வார்த்தைகளைத் தவற விட்டுவிடுவோமோ என்று பதட்டப்பட வைக்கும் மென்மையான பதவிசோடு இருக்கும். மொத்தத்தில் அறியாதவராக இருந்தாலும் அவருடன் பேசும்போது கை தானாக மார்புக்கு குறுக்கே கட்டிக் கொள்ளும். (நான் இதை  கண்கூடாகவே பார்த்திருக்கிறேன்.) அப்படி ஒரு மரியாதையால்  செய்யப்பட்ட உருவம் அவர்.

 

முதன் முதலில் இந்த வீட்டுக்கு நான் குடி வந்தபோது தன் வீட்டு வாசலில் நின்று, நான் பொருட்கள் இறக்குவதைப் பார்த்தபடி இருந்தார். ஒரு கனமான பொருளை நான் சுமந்து கொண்டு  டெம்ப்போவில் இருந்து இறங்குகையில் ஒற்றை கையசைவில் என்னை வா என சைகை செய்தார். நான் அவரது உருவத்தில் இருந்த கௌரவத்துக்காக புன்னகைத்து, ‘வெயிட் அதிகமா இருக்கு. வச்சிட்டு வந்துர்றேனே..’ என்றேன். அவர் மறுபடியும் தலையசைத்து பிடிவாதமாக வா என்று கையசைக்கவும், ஒரு வேளை காது கேட்காது போல என நினைத்து பொருளை சுமந்தபடியே அவரிடம் போனேன்.

 

‘என்ன வேலைல இருக்கேள்..?’  என்றார்.

 

எனக்கா கை கடுத்துக் கொண்டிருந்ததால்  கொஞ்சம் சத்தமாக, ‘சினிமால அசிஸ்டண்ட் டைரக்டர். இது  ரொம்ப வெயிட்டா இருக்கு. வச்சிட்டு வந்துறவா..?’  என்று கேட்டேன்.

 

‘என்னத்துக்கு கத்தறேள். எனக்கு காது நன்னா கேக்கும். அசிஸ்டண்ட் டைரக்டர்ன்னா என்னென்ன படம் ஒர்க் பண்றேள்..?’  என்றார்.

 

எனக்கு புசு புசுவென்று கோபம் மேலெழும்பியபடி இருக்க, ‘காது கேக்குமா..? நான் இந்த வீட்டுக்குதான் குடி வர்றேன். இன்னும் கொஞ்ச நாளுக்கு இங்கதான் இருப்பேன். பொருளை எல்லாம் இறக்கி வச்சிட்டு  வர்றேன். பேசுவோம்..’ என்றபடி  திரும்பியவனை தோளில் தட்டி

 

‘இந்த ஃபிளாட்டுக்கு யாரோ பிராமின்தானே குடிவர்றதா சொன்னா.. உங்களப் பாத்தா பிராமின் மாதிரி தெரியலையே. எதாச்சும்  பொய் சொல்லி குடி வர்றேளா..?’  என்றார்.

 

எனக்குள் கோபம், ஒரு இரும்பு, தணலில் பழுப்பது போல பழுத்தது : ‘நான் பொய் சொல்லலையே.. நான் …………………. (அருந்ததியர் சாதியை சொல்லி) இந்த சாதிய சொல்லித்தானே குடி வந்திருக்கேன்.. வீட்டுல ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்னிக்கறி, ஏன் முட்டை கூட சமைக்க மாட்டோம். ப்யூர் வெஜிட்டேரியன்..’ என்று சொல்லிவிட்டு என் தோளில் தொட்ட கையை அவர் அருவெறுப்பாகப் பார்ப்பதை ரசித்தபடி பொருளைச் சுமந்து கொண்டு வீட்டுக்குள் போனேன்.

 

குடி வந்து கொஞ்ச நாளில் அவரது லீலைகள் கொஞ்சம்  கொஞ்சமாக தெரியத் துவங்கின. யாராவது சாலையில் கொஞ்சம்  வாளிப்பான பெண்கள் போகும்போது தலைவன் எதிரில் வந்தால்  சட்டென தனது வேட்டியை அவிழ்த்து  ஒரு உதறு உதறி மறுபடி கட்டுவார். என்ன.. உள்ளே ஜட்டி, அண்ட்ராயர், கோவணம் என்று எந்த வஸ்துவும்  அணிந்திருக்க மாட்டார். பெண்கள்  திடுக்கிடுவதைப் பார்ப்பதே  அவருக்கு பெரிய திருப்தி.

 

புதிதாய் குடிவந்த குடும்பங்களில் கொஞ்சம் பயந்த மாதிரி பெண்களோ  அல்லது இவரது புன்னகைப்  பேச்சில் மரியாதை வைக்கும் பெண்களோ இருந்துவிட்டால்  போதும். அந்த வீட்டு ஆண்களிடம்  ரொம்ப கருணையோடு பேசுவார். அவரது தோற்றம், வீடு, கார்களைப்  பார்க்கும் ஆண் மரியாதையாகப் பேசுவான். மெல்ல மெல்ல  சுவாதீனமாக அவர்கள் வீட்டோடு நெருங்கும் தலைவன் ஆண் இல்லாத நேரத்தில் கூட வீட்டுக்குள் சுவாதீனமாக போய்வரத் துவங்குவான். மெல்ல பேச்சுக்கு இடையில், ‘உன்னோட செஸ்ட் ரொம்ப சூப்பரா  இருக்கு.. உன் புருஷனுக்கு  இது புடிக்குமா இல்லை இதை  கண்டுக்கவே மாட்டானா..?’ என்றுதான்  துவங்குவார்.

 

திடுக்கிடும் அந்தப் பெண் சுதாரித்துக் கொண்டால்தான் உண்டு. பெரிசுதானே என்ற நினைத்து கொஞ்சமாக பதில் சொன்னால் கூட போச்சு. தலைவனின் பேச்சு ஆபாசத்தின் அடுத்த எல்லையைத்  தொடும்.

 

வந்த இரண்டாவது நாளே அடுத்த தெருவில் ஒரு பெண் கையில் விளக்குமாற்றை வைத்துக் கொண்டு தலைவனை கிழி கிழி என்று கிழித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அந்தப் பெண், இவ்வளவு வயதான ஒருவரை அடித்தால் செத்துப் போய்விட்டால் என்ன செய்வது என்ற தயக்கத்தில் ஓங்கிய விளக்குமாறு இறங்காமலிருக்க, வார்த்தைகளை பொழிந்து கொண்டு இருந்தாள். நடந்து கடந்த சிறு தருணத்தில் அந்தப் பெண்மணியின் வசைகளில் இருந்து நான் அந்த கிழவனாரின் லீலைகளைப் புரிந்து கொள்ள முடிந்தது.

 

அதற்குப் பின் பல பல சம்பவங்கள். அந்த கிழத்தின் தொல்லைகளுக்கு  பயந்து எங்கள் தெருவையே தவிர்த்து  கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர்  சுற்றி வேலைக்குப் போய் வரும்  ஒரு வேலைக்காரச் சிறுமி, சாணி கிடைககாததால் தெரு மண்ணை  தண்ணீரில் கரைத்து கிழவனின் தலைவழி ஊற்றிய ஒரு கர்ப்பிணிப்  பெண், இன்னும் உடல் குலையாமல்  இருந்த 50 வயதுப் பெண்ணின் அழுகை.. அனைத்தையும் பார்த்தபின் தலைவன் மேல் இருந்த எனது மரியாதை பன்மடங்கு பெருகிப் போனது.

 

ஒரு நாள் கீதா தெருவில் நடக்கையில் வழிமறித்த தலைவன், ‘நீ  எந்த ஸ்கூல்ல வேலை பாக்குறம்மா..? பாத்தா …………. பொண்ணு மாதிரியே தெரியலையே.. லவ் மேரேஜா..?’  என்று கேட்டிருக்கிறார்.

 

அவள் ஏற்கெனவே என் மூலம்  தலைவனைப் பற்றி கேள்விப் பட்டிருந்ததால், ‘நான் எந்த சாதியா இருந்தா உங்களுக்கு என்ன..? இந்த மாதிரியெல்லாம் வழில பேசினா எனக்குப் புடிக்காது. கோவத்துல என்ன பண்ணுவேன்னே  தெரியாது..’ என்று தன்  நடுக்கத்தை காட்டிக் கொள்ளாமல்  நானும் ரவுடிதான் என்று  நிரூபித்து விட்டு வந்து இரண்டு நாள் என்னிடம் அவளது பெருமையை சொல்லிச் சொல்லி மாய்ந்து போனாள். தலைவனும் அவள் ரெளடிதான் என நம்பி அதற்கப்புறம் அவளிடம் பெரிதாக எதுவும் தொல்லை செய்யவில்லை.

 

இதற்கப்புறம் ஒரு நாள் எங்கள் பக்கத்து வீட்டுக்கு – இரண்டு பெண்கள் இப்போது வந்திருக்கிறார்களே அது எங்கள் முன்புறத்து வீடு. நான் சொல்வது எங்கள் பக்கத்து வீடு.- ஓர் இளம் ஜோடி குடிவந்தார்கள். அந்த இளம் மனைவியிடம் இந்த ஃப்ளாட்டில் என்ன என்ன நியதி என்று விவரித்த கீதா, கோட்டிக் கிழத்தைப் பற்றி மறக்காமல் சொன்னதும் இல்லாமல் கோட்டிக் கிழவனை அடையாளம் காட்டியும் வைத்திருந்தாள் போல.

 

தலைவன் நான் வீட்டில் இல்லாத ஒரு நாளாகவும், பக்கத்து வீட்டில் அந்த பெண்ணின் கணவன் இல்லாத நாளாகவும் பார்த்து கதவைத் தட்டி இருக்கிறார். அந்தப் பெண் கதவைத் திறந்ததும் கிட்டத்தட்ட தள்ளிக்கொண்டு கதவைத் திறந்து வீட்டுக்குள் போயிருக்கிறார். கீதா சொன்ன தகவல்களால் பீதியுற்றிருந்த அந்தப் பெண் (எங்க ஊர்ப் பக்கத்துக்காரி) என்ன செய்வது என தெரியாமல் திகைத்திருக்கிறாள். தலைவன், ‘குடிக்க கொஞ்சம் தண்ணி குடும்மா..’ என்று கேட்டிருக்கிறான்.

 

இவள் பயந்து போய், ‘எங்க  வீட்ல குடி தண்ணி இல்ல. பக்கத்து வீட்டுல வாங்கிட்டு வர்றேன்.’ என்று தப்பித்து  ஓடி வந்து  கீதாவிடம்  நடப்பதை சொல்லி இருக்கிறாள். எங்கள் வீட்டு கைப்புள்ளைக்கு வந்ததே ஒரு கோபம். கையில் விளக்குமாற்றுடன் அந்தப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டுக்குப் போயிருக்கிறாள். ‘இங்க எந்த வீட்டுலயும்  தண்ணி தர்றதில்ல.. வீட்டுல  ஆம்பிளைங்க இல்லாத நேரத்துல யாரு வந்தாலும் அவங்கள அடிச்சிதான்  விரட்டுவோம். வீட்டைக் கூட்டணும். வெளில போறீங்களா..? இல்ல விளக்குமாத்தால                      வெளில அனுப்பவா..?’ என்று கேட்டிருக்கிறாள்.

 

ஏமாந்துபோன மிஸ்டர் காதல்  கிழவரசன், அந்த பெண்ணிடம், ‘வீட்டுக்கு வந்த பெரியவங்ககிட்ட இப்புடித்தான் நடந்துக்கணும்ன்னு  உங்க அப்பாம்மா சொல்லிக் குடுத்திருக்காங்களா..?’  என்று பொங்கி இருக்கிறார்.

 

அந்தப் பெண், கீதா இருக்கிற தைரியத்தில், ‘வீட்டுல ஆளு  இல்லாத நேரத்துல                                                                     இப்புடி வந்து பேசுனா செருப்பால அடிச்சு விரட்டுன்னுதான் சொல்லிக் குடுத்துருக்காங்க தாத்தா.. நீங்களா கிளம்புறீங்களா இல்ல..’ என்ற தயங்கவும் தலைவன் கடுப்புடன் எழுந்து சென்றிருக்கிறான். எங்கள் கீதாவுக்கு பெருமை தாங்கவில்லை. ‘அந்த கோட்டிக்கிழவனை எப்புடி விரட்டுனேன் தெரியுமா..?’ என்று இன்றுவரை கிட்டத்தட்ட ஐந்து வருடமாக பேசிக் கொண்டுதான் இருக்கிறாள்.

 

அப்பேர்ப்பட்ட கோட்டிக் கிழவனைத்தான் புதிதாக வந்தவர்கள் வீட்டுப் பக்கம் சுற்றுவதாக கீதா என்னிடம் சொன்னாள்.

 

எங்கள் அபார்ட்மெண்ட்வாசிகளுக்கு இது சுவாரசியமான விஷயமாகப்  போயிற்று. அந்த பெண்கள் மோசமானவர்கள். இந்தக் கிழம் படு மோசமானது. அவர்களது கூட்டணி என்னவாக இருக்கும் என்பதே அவர்களது ஆவலாதியாக இருந்தது.

 

நம்ம கோட்டிக் கிழவன் அந்த சகோதரியரின் வாசல் கேட்டைப் பிடித்து நின்றபடி பேசுவதும், சகோதரிகளின் அம்மா, அண்ணன் உட்பட அனைவரும் அவரிடம்  பணிவாகப் பேசுவதுமாக கொஞ்ச  நாட்கள் கடந்தன.

 

எங்கள் அபபார்ட்மெண்ட்வாசிகளோ, கீதாவோ அல்லது உள்ளாழத்தில் நானோ எதிர்பார்த்தபடி எந்த சம்பவமும் நடக்கவில்லை. கேட்டைப் பிடித்தபடி நின்றிருந்த  மிஸ்டர் காமக் காதலர் கேட்டைத் தாண்டி அந்த வீட்டிற்குள் அனுமதிக்கப்படவே இல்லை. ஒரு தரம் அந்த கேட்டருகில்  நின்றபடி தலைவன் ஒரு நூறு ரூபாய் கட்டை எண்ணியபடி பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்பவும் தலைவன் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

 

இப்படியாக எங்கள் கனவுகளையும்  எதிர்பார்ப்புகளையும் நொறுக்கியபடி இரு தரப்பினரும் விளையாடிக் கொண்டிருந்த ஒரு நாளில், நான் தம்மடிப்பதற்காக எங்கள் வீட்டை விட்டு வெளியேறி எங்கள் தெரு முக்கில் நின்று புகைத்துக் கொண்டிருந்தேன். நம்ம காதல்  கிழவரசன் மெல்ல என்னருகில் வந்து நின்றார். கிட்டத்தட்ட  பல வருடங்களுக்குப் பின் அவருக்கு என்னருகில் வந்து  நிற்கும் தைரியம் வந்திருந்தது.

 

நான் திருமபி என்ன.. என்பது போல பார்த்தேன்.

 

கிழவர், ‘உங்க முன் வீட்டுல  பிராஸ்ட்டிட்யூஷன் நடக்குதே. உங்களுக்குத் தெரியுமா-,’  என்றார்.

 

அஃப் கோர்ஸ் எனக்கு சுர்ரென்று மண்டைக்கு ஏறியது. அவர் மீது எனக்கிருந்த கோபத்தில்  அவர் வெறுமனே ரெண்டும் ரெண்டும் நாலு என்று சொல்லியிருந்தாலும் எனக்கு சுர்ரென்று ஏறியிருக்கும்தான். இருந்தாலும் பிராஸ்ட்டிட்யூஷன் பற்றி யார் பேசுவது என்ற கோபம்தான் முதலில் வந்தது.

 

‘அப்புடியா சார்..? எங்க..? எந்த வீட்டுல நடக்குது சார்..?’ என்றேன் நான்.

 

‘உங்க முன் வீட்டுலதான்  சார். அக்காளும், தங்கச்சியும் சும்மா சுத்தி சுத்தி தே……………………………….தனம் பண்ணுறாளுக..’

 

எப்போதும் கோபத்தின் போது எனக்கு புன்னகை முதலில்  வரும். நான் புன்னகையோடு, ‘ஆமா சார்.. நான் கூட கேள்விப்பட்டே,ன். நிறைய ……………………………….. மகன்கள்  அவங்க வீட்டுக்கே வந்து  கூப்புடுறானுக போல. வாங்க  சார். ரெண்டு பேரும் போயி அவங்ககிட்ட யாராரோட அவங்களுக்கு தொடர்பு  இருக்கு.. எந்த எந்த………………………….. அவங்களை படுக்கைக்கு கூப்புட்டான்னு கேட்டு இனனைக்கு நைட்டே கிளம்பி  ஒவ்வொருத்தனா போட்டுத் தள்ளலாம்.. போலாமா..?’ என்று கேட்டதும்  தலைவன் நவதுவாரங்களையும் பொத்திக் கொண்டு போனான்.

 

உண்மையில் அவர் போனபிறகும் எனக்குள் இருந்த ஆத்திரம் அடங்காமலே இருந்தது.. அவரை நிராகரித்ததற்காக அல்லது அவர்களை வழிக்கு கொண்டு வர அல்லது மாட்டிவிட அவர் அனைத்து சாதுரியங்களையும் கையாள்கிறார். வெட்கம் மானம் பார்க்காமல் என்னுடனே அவர் கூட்டு வைக்க முயல்கிறார் என்பது எனக்கு எவ்வளவு கேவலம் என்பதை என்னால் உண்மையில் இப்போது சொல்ல முடியவில்லை.

 

கீதாவிடம் கோட்டிக் கிழவனின் சாதுரியங்கள் உட்பட நடந்ததைச்  சொன்னேன். அன்றுதான் முதல்  முறையாக அந்தப் பெண்களைப்பற்றிப் பேசியபோது அவளது முகம்  கனிந்ததைக் கண்டேன். விழுமியங்கள், மண்ணு, மத்தாங்காய் என்று  எது இருந்தாலும் பெண்ணின் துயரை இன்னொரு பெண் அறியும்போது, துயரோ மகிழ்வோ.. அவள் கனிந்துதான் போகிறாள்.. அந்த இரவு நாங்களிருவரும் மிகக் குழைந்து போயிருந்தோம்..

 

பின் வந்த நாட்கள் இறுக்கம் சூழ்ந்தவையாகவே இருந்தன. அபார்ட்மெண்ட்  வாசிகள் சகோதரிகள் இருவருக்கும் கடும் முகத்தையே காட்டியபடி இருந்தனர். கோட்டிக் கிழவன் அந்தப் பெண்களின் வீட்டுக்கு வரும் இளைஞர்களைப் பார்த்து பேசியிருப்பார் போல. அந்த இளைஞர்கள் அவர்களது வீட்டுக்கு வருவதை நிறுத்தி விட்டார்கள். சகோதரிகளின் சண்டை கூட நின்று போய் அவர்கள் வீட்டில் அனைவரது முகங்களும் இறுகிப் போயே தென்படத் துவங்கின.

 

யாராக இருந்தால் என்ன.. எப்படியாக  இருந்தால் என்ன.. அவரவர் வாழ்வை அவரவர் வாழ்வதை யார் தடுக்க வேண்டும், யாருக்கு தடுக்க உரிமை இருக்கிறது என்ற எனது உள்மன சூழுரைகள் உடைந்து  அழுகத் துவங்கின.

 

வாழ்வு சற்றே கனத்துதான் போனது. கோவிந்த கண்ணன் கூட  சேட்டைகள் செய்யாத, வலிதரும் அமைதியோடே இருக்கத் துவங்கியிருந்தான்.

 

பொழுதுகள் சற்றே கனத்து, நாட்கள் கனத்து, இரவுகள்  கனத்து ஒரு கடுமையான மௌனம்  எங்கள் அபார்ட்மெண்டில்  குடியேறியது. வெளியே போ என்று  அந்த குடும்பத்தைப் பார்த்து ஊளையிட்டுக் கொண்டிருந்தது  அந்த மெளனம்.

 

மாட்டோம் என்று தங்கள் மௌனத்தாலேயே பதிலிறுத்துக்  கொண்டிருந்தார்கள் அவர்கள்.

 

*********

 

சென்னையில் நன்கு குளிரும் இரவுகள் அபூர்வம். அதிலும் இந்த வருடத்தின் குளிர் ரொம்ப அற்புதம். வழக்கம்போல கீதா தூங்கியிருந்தாள். நான் என் வேலைகளை முடிக்க ஒரு மணி ஆயிருந்தது.

 

இரவையும் பனியையும் அனுபவித்தபடி அந்த நாளின் கடைசி சிகரெட்டைப் புகைக்கலாம் என்று வீட்டை விட்டு வெளியேறி சற்று தொலைவில் சென்று நின்று சிகரெட்டைப் பற்றவைத்தேன்.

 

திட்டுத் திட்டு மேகங்கள் தவிர வேறேதும் இடையூறில்லாத தேய்பிறை நிலா தென்பட்டது.

 

எழுதி முடித்த காட்சிகளை  அசைபோட்டபடி நிதானமாக புகைத்தபடி நின்றேன்.

 

ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து இளையவள் இறங்கினாள். அவளைப் பார்த்தும் சட்டென்று  உஷாரானேன். முன்பெல்லாம் நான் வீட்டுக்குள்ளேயே புகைப்பவனாக  இருந்தேன். கீதா ஒரு முறை இடைவிடாமல் இருமத் துவங்கியபோதுதான் விழித்தேன். அன்றிலிருந்து  தெருவோரம் நின்றுதான் புகைக்கிறேன். இளையவளைப் பார்த்ததும்  நான் சட்டென்று விலகிச்  சென்று புகைப்பதைத் தொடர்ந்தேன், எங்கள் ஃப்ளாட்டில் இருக்கும்  பெண்கள் யார் வந்தாலும்  நான் சிகரெட்டை மறைப்பதோ அல்லது தள்ளி நின்று புகைப்பதோ  வழக்கம்தான். எல்லாப் பெண்களும்  கீதாவைப் போலதானே..

 

ஆட்டோ கிளம்பிப் போய்விட்டது. உள்ளிருந்து இளையவள் இறங்கும்போதே கொஞ்சம் தள்ளாடினாள். ஆட்டோ  போனதும் தன்னை ஸ்டெடி செய்து கொள்பவள் போல சற்றே தயங்கி நின்றாள்.

 

‘ரைட்டர் சார்.. நான் உங்களை டிஸ்டர்ப் பண்ணலையே..?’  என்று அவள் திடுமென கேட்டபோது  எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. நிச்சயம் அவள் வேறு யாரிடமும்  பேசியிருக்க முடியாது. அந்த தெருவில் நானும் அவளும்தான் இருந்தோம்..

 

‘என்னம்மா..?’ என்று சந்தேகமாகக்  கேட்டேன்.

 

தலைவி கொஞ்சம் தள்ளாட்டத்துடன்  அருகில் வந்தாள். ‘இந்த  நிலைமைல உங்ககிட்ட பேசுறதுக்கு  கொஞ்சம் வருத்தமாத்தான் இருக்கு. ஆனா எங்கப்பா உங்கள  மாதிரி இருந்தா நல்லா இருக்கும்ன்னு  நான் பல நாள் யோசிச்சிருக்கேன்..’  என்றாள்.

 

அப்பா என்ற வார்த்தை என்னை  கொஞ்சம் திகைக்க வைத்தாலும் அவளது நிலைமை என்னை கவலை கொள்ளவே வைத்தது. ஏற்கெனவே அவர்களது பெயர் நன்றாக கெட்டுப் போயிருந்தது. அந்த இரவின் இருளில் எத்தனை ஜன்னல்கள் அவளையும் என்னையும் பார்த்தபடி இருக்குமோ தெரியாது என்பதால் அவளது தள்ளாட்டத்தை எப்படியாவது நிறுத்தினால் போதும் என்று நான் நினைத்தேன்.

 

‘நான் சொல்ற அப்பான்றது வயசு இல்ல சார். அன்பு. உங்க அன்பு கூட பெரிசில்ல  சார். ஆனா மேடத்தோட அன்பு  இருக்குதே.. (மேடம் என்று  கீதாவை சொல்கிறாள் என்று  பொருள் கொள்க) அது அற்புதம் சார். எங்களை அவங்களுக்குப்  பிடிக்காது. ஆனா கோவிந்த  கிருஷ்ணன் நாங்க வீட்டுக்கு வர்றதுக்கு  முன்னாடி ஸ்கூல் விட்டு வந்தா அவங்கதான்  சார் அவனுக்கு துணையா நிப்பாங்க..’ (இது நான் கேள்விப்படுகிற முதல் தகவலாக இருந்தாலும் கீதாவுக்கு ஏன் கோவிந்த கிருஷ்ணன் அல்லது எந்தவொரு குழந்தையையும் பிடித்திருக்கிறது என்று அவளிடம் என்னால் சொல்ல முடியாது.)

 

‘லவ்ன்றது அட்வெர்டைஸ்மெண்ட்  இல்ல சார். அது மழை மாதிரி. பூ மாதிரி. யாருக்கு பெய்யுறோம்ன்னு பிளான் பண்ணாம பெய்யுறதும், யாருக்காக பூக்குறோம்ன்னு சொல்லாம பூக்குறதும்தான்..’  என்றவள் அந்த தெருவோர சுவரில்  சாய்ந்து நின்று கொண்டாள். நான் என்ன பேச?

 

‘கோவிந்த் மேல மேடம் காட்டுன  அன்பு மட்டுமில்ல. உங்க ஸ்மைல் கூட எங்களுக்கு ரொம்ப புடிக்கும். உங்களுக்கு தெரியாது சார். உலகத்துலயே ரொம்ப இரக்கமுள்ள பிச்சை ஸ்மைல்தான். நீங்க  எங்களுக்கு ஸ்மைல் போட்டீங்க..’

 

எனக்கு தொண்டைக்குள் ஏதோ  நகர்ந்தது.

 

‘போறோம் சார். நாளை மறுநாள்  வீட்டை காலி பண்ணிக்கிட்டுப்  போறோம். யாரையும் டிஸ்ரப்  பண்ணாம.. யாருக்கும் சிக்கல்  இல்லாம போறோம். இதுக்கு மேல  இங்க இருந்தா அது தப்பு  சார்..’

 

என்று அவள் சொன்னதும் உள்ளே  புசு புசுவென கோபம் புறப்பட்டது. ‘என்ன..? அந்த கிழட்டுப்பய  உங்ககிட்ட தப்பா நடந்துக்கிட்டானா..? சொல்லும்மா. நாளைக்கு அவனை எப்புடி கவனிக்கணுமோ அப்புடி  கவனிச்சிறலாம்..’ என்றேன்.

 

அவள் ஒரு கருணைப் புன்னகையை  என் மீது எறிந்தாள்..

 

‘அந்த தாத்தா மாதிரி ஐநூத்தி  நாப்பத்தெட்டு பேரை நான் சமாளிப்பேன் சார். ஆனா  பிரதர் மாதிரி நினைக்கிறவங்க  படுக்க கூப்ட்டா என்ன சார் செய்யுறது..?’

 

நான் அயர்ந்து நின்றேன். ‘வேற யாராவது உன்கிட்ட தப்பா  நடந்துக்கிட்டாங்களாம்மா..?’

 

அவள் மறுபடியும் கருணைப்புன்னகைத்தாள் : ‘யாரானாலும் சமாளிச்சிருவேன்  சார். அந்த தைரியமும் கோவமும்  எங்கிட்ட இருக்கு. மேல் வீட்டு சௌந்தர்யா அப்பா கேக்குறாரு சார்.. உன் ரேட்டு எவ்வளவு.. அதை விட அதிகமா தர்றேன். ஒன் நைட்டு வான்னு..’ சட்டென கண்ணீர் திரள்கிறது.

 

எனக்கும் கண்ணீர் திரளும்போலதான் இருக்கிறது.

 

எங்கள் அபார்ட்மெண்டை  சுட்டிக் காட்டி, ‘யாருக்குமே  எங்களை பிடிக்காது சார். ஆனா  என்னன்னு தெரியல. எங்க எல்லாருக்கும்  உங்க எல்லாரையும் ரொம்ப  புடிக்குது சார். அம்பது வீட்டுக்கு மேல மாறிட்டோம். ஆனாலும்  எங்கள கௌரவமா நடத்துனது  நீங்களும் நீங்க எல்லாரும்தான்  சார்.. மூஞ்சிய திருப்பிக்கிட்டாலும் நீங்க எல்லாரும் எங்களை அக்செப்ட் பண்ணிக்கிட்டீங்க சார் .. திடீர்ன்னு சௌந்தர்யா  அப்பா வந்து கேட்டதும், பிரதர் வந்து கேட்டது மாதிரி இருந்திச்சு சார்..’ திரளும்  அழுகையை கட்டுப்படுத்த  கேவலமாக முயன்றாள் – நானும் அவளுக்கு சற்றும் குறையாமல் முயன்றேன்.

 

‘தப்பா நினைச்சிக்காதீங்க  சார். இதுக்குப் பேரும் பிரியம்தான். குட் பை சார்..’ என்று சொல்லிவிட்டுப் போனாள்.

 

உறைபனிக் கட்டியில் இறக்கப்பட்டது  போல என் மனம் அப்படியே திகைத்து நின்றது. வழக்கம்  போல இரவு, சூழ நின்றபடிதான் இருந்தது. பனி மௌனமாக பெய்தபடி இருக்க எனது சிகரெட் அணைந்து  போய் இருந்தது.

 

உள்ளிருந்து புறப்பட்ட  வெக்காளத்தை என்னால் தாங்க  முடியாதது போலதான் இருந்தது. அவள் போன திசையைப் பார்த்தபடி அடுத்த சிகரெட்டைப் பற்ற வைத்தேன்.

 

நிமிர்ந்து பார்க்க, மார்கழி  மாதத்துப் பிறை நிலா பைத்தியம்  மாதிரி அங்கே இருந்து என்னைப்  பார்த்தபடி இருந்தது.. ஒரு  திட்டு மேகமொன்று வேகமாக, அதன் ஒளி எல்லைக்குள் கடந்து போனது.

 

எனக்குப் பார்க்க அந்தப் பிறை நிலாதான் மேகத்தை விட்டு விலகி, தூர தூரமாக தொலை தூரமாக பயணப்பட்டுப் போவது போல  தெரிந்தது..

 

********

Comments are closed.