Respect வும் Reunion வும் – இந்தியாவும் பாகிஸ்தானும்- இரு காணொளிகளின் அலசலில்…… / மேமன்கவி

[ A+ ] /[ A- ]

 

download (21)

 

இன்றைய உலகச் சூழலை தகவல்களின் யுகம் என்று சொல்லப்படுவதுண்டு. இதனை இன்னும் ஆழமாகச் சொல்வது என்றால் இது ஊடகங்களின் யுகம் என்று சொல்வது கூட பிழையாகாது.

அவ்வாறான ஓரு செல்வாக்குமிக்க, தாக்கபூர்மான, ஊடகமாக இணையம் இன்று பயன்படுகிறது. இத்தகைய வெகுசனத் தொடர்ப்பாடல் துறையான இணையம், அதற்கு முன்னால், தோன்றிய உலகை சுருக்கி விட்ட, பலமிக்க தொடர்பாடல் துறைகளையும், முறைமைகளையும் பலவற்றை பின் தள்ளியும், அவை தம்மை உள் வாங்கியும், இன்று உலகை இன்னும் நுண்ணிய முறையில் சுருக்கி விட்டது எனலாம். அதே வேளை உலக மனிதச் சமூகத்தை ஒன்றிணைக்கும் முயற்சிக்கும் இணையம் இன்று சிறப்பாக பயன்படக்கூடியாதாக இருக்கிறது.

1947ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலனிய ஆட்சியிருந்த இந்தியா சுதந்திரம் பெற்ற வேளை, பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்ட இந்திய நிலப்பிரிவிருந்து முஸ்லிம்களுக்கென இரு துண்டங்களாக பாகிஸ்தான் என்ற பேரில் ஒரு சுதந்திர நாடு வாங்கப்பட்ட பொழுது, ஏற்பட்ட கலவரங்களில் லட்சக் கணக்கான இரு சமூக மக்கள் பலியாகினர்.; இது இந்திய உபகண்ட வரலாற்றில் இரத்தக்கறை படிந்த வரலாறு ஆகும். அத்தோடு லட்சக் கணக்காண மக்கள் கட்;டாய இடப்பெயர்வுக்கு ஆளாகியினர். அந்த வகையில் இந்தியாவிலிருந்த முஸ்லிம்கள்; பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தான் பகுதியிலிருந்த இந்துக்கள் இந்தியாவுக்கும் விரட்டப்பட்டு பலாத்காரமாக இடப்பெயர்வுக்கு ஆளாக்கப்பட்டனர், International Business Times என்ற பத்திரிகை குறிப்பிடுவது போல, ‘மனித குல வரலாற்றில் பலாத்காரமாக மேற்கொள்ளப்பட்ட மிக பெரிய இடப்பெயர்வுகளில் ஒன்றாக’ உலக வரலாற்றில் பதிவாகி இருக்கிறது.

அன்றைய நாள் தொடக்கம் இந்தியா-பாகிஸ்தான்; இரு நாடுகளிடையே தீராத பகை தொடர்ந்த ஒன்றாக இருக்கிறது. இப்பகைக்கு காரணம் இந்திய உபகண்டத்தின் சமூக அரசியல் வரலாறு முதற்கொண்டு, பிரிட்டிஷ் காலனியத்தின் மிக நுண்ணிய பண்பான, பிரித்தாளும் தந்திர உபாயமும் காரணமாக இருந்தன.(நவகாலனிய யுகத்தில் அதை சிறந்த முறையில் கையாண்டு அதிகாரத்தை தாக்க வைப்பதில் பலர் வெற்றி அடைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் கவனிக்கதக்கது)

இந்தியாவில் மழை வீழ்ச்சி குறைவு, உணவுப் பொருட்களின் தட்டுபாடு, கட்டவிழ்க்கப்படும் பயங்கரவாதம் (இந்திய சினிமாகளில் பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்படுபவர்கள் எல்லோருமே முஸ்லிம்களாகவும், அவர்கள் எல்லோரும் பாகிஸ்தானிலிருந்து வருபவர்களாவும் சித்திரிக்கும் போக்கு) போன்ற எந்தவொரு பாதகமான விடயத்திற்கும் பாகிஸ்தான் தான் காரணம் என்ற மாதிரியான எண்ணத்தை இந்திய அரசு வளர்த்து வந்திருக்கும் சூழலிலும்,

இந்தியாவில் முஸ்லிம் தாக்கப்படுவதும், பாகிஸ்தானிலும், பாகிஸ்தானிலிருந்து பிரிந்து உருவாகிய பங்காதேஷ்த்திலும் இந்துக்கள் தாக்கப்படும் ஒரு சூழலிலும்,

இணையஉலகில் வெளியிடுப்பட்டுள்ள இரு குறுங்காணொளிகள்(Videos)உலக கவனத்தை ஈர்த்திருக்கின்றன.

ஓன்று 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட மாதம் வெளியிட்டப்பட்ட பாகிஸ்தான் பல்கலைக்கழக மாணவர்களின்; முயற்சியாக Taha Kirmani எனும் இளம் திரைப்பட இயக்குனர் இயக்கிய Respect எனும் குறுங்காணொளி.

அடுத்து இன்றைய இணைய உலகில் மிகவும் பேசப்படும் Google இந்தியப் பிரிவுக்காக 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் Ogilvy & Mather India எனும் இந்திய நிறுவனம் தயாரித்து Amit Sharma வின் இயக்கியத்தில் உருவாகி வெளியாகியிருக்கும் Reunion எனும் குறுஙகாணொளி.

முதலில் இவ்வரிரு காணொளிகள் மேற்குறித்த இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை சம்பந்தமான பிரச்சினையை எவ்வாறு முன் வைத்துள்ளன என்பதை பார்ப்போம்.

Respect

பாகிஸ்தானில் வசிக்கும் முதியவர் தனது பேரனிடம், 1947 ஆம் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் தான் இந்தியாவிலுள்ள லுத்தியானா எனும் இடத்தில் வாழ்ந்ததாகவும், அங்கு தனக்கு Raj Dev எனும் சிறிது வயதில் முதலே நெருக்கமான நண்பர் இருந்ததாகவும், அவருக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு தான்தான் Aman Dev என்று பெயர் வைத்ததாகவும், அவனை டாக்டராக படிக்க வைப்பேன் என தனது நண்பன் Raj Dev தனக்கு வாக்களித்தாகவும் கூறி, 1947 ஆம் பிரிவின் போது பாகிஸ்தானுக்கு வந்த ரயிலில் தன்னை கண்ணீர் மல்க வழி அனுப்பியதாகவும,; இப்பொழுது அவர் என்ன செய்கிறாரோ?, எங்கு இருக்கிறாரோ? என்ற ஏக்கத்தை வெளியிடுகிறார். இதனை கேட்ட அவரது பேரன் இணையத்தில் Google, Google Map, Twitter, Facebook Email இப்படியான பல வழிகளில் தாத்தா சொன்ன இந்திய நண்பர் Raj Dev யின் வசிப்பிடத்தை அறிந்துக் கொள்வதோடு, அவரது டாக்டராக பணிபுரியும் அவரது மகன் Aman Dev வுடன் தொடர்ப்பினை ஏற்படுத்தி இரு நண்பர்களை இணையத்தில் Skype வுழியாக தொடர்பினை ஏற்படுத்தி பிரிந்து போன இரு நண்பர்களை நீண்ட காலத்திற்கு பின் காணவும், பேசவும் வைக்கிறான். அச்சந்திப்பு பாகிஸ்தான் நண்பருக்கும் இந்திய நண்பருகும் ஓர் இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.

Reunion

இன்றைய பாகிஸ்தானிலுள்ள லாகூரில்; பிறந்து வளர்ந்த இந்தியா-பாகிஸ்தான் பிரிவின் பொழுது, இந்தியா டில்லிக்கு இடப்பெயர்ந்த Baldev Mehra எனும் பெரியவர், அவரது பேத்திக்கு, இரு சிறுவர்கள் ஒன்றாக நிற்கும் ஒரு பழைய புகைப்படத்தை காட்டி, இது தனது சிறுவயது படம் என்றும், அப்படத்தில் தன்னுடன் இருக்கும் சிறுவன் தனது பால்ய கால நண்பன் யூசுப் என்று அடையாளம் காட்டி, யூசுப்பும் தானும் சிறு வயதில் நெருக்கமான நண்பர்கள் என்றும், அந்த காலத்தில்; தாங்கள் பட்டங்கள் விட்டதும், யூசுப்பின் குடும்பத்தினரின் மிட்டாய் கடையில் Jhajariyas எனும் மிட்டாயை திருடிச் சாப்பிட்டதாகவும் என ஏக்கத்துடன் பழைய நினைவுகளை பேத்தியிடம் மீட்டுகிறார். தன் நண்பர் யூசுப்பை பிரிந்து 60 வருடங்கள் ஆகி விட்டது எனவும், இனி என்று அவனை காண்போம் என்றலாம் தன் ஏக்கத்தை வெளியிடுகிறார். அதனை புரிந்து கொண்டு அவரது பேத்தி தன் கையடக்க கணனியின்; இணையத் தொடர்பில் கூகுள் தேடுபொறி மூலம் தாத்தா கூறிய லாகூர், அங்கு தயாரிக்கப்படும் Jhajariyas எனும் மிட்டாய், அம்மிட்டாய் விற்கும் தெரு, அத்தெருவில் அமைந்துள்ள யூசுப்பின் Fazal Sweets எனும் மிட்டாய் கடை, அக்கடைக்காக முகநூலில் உருவாக்கப்பட்ட பக்கம், அக்கடையின் தொலைபேசி இலக்கம் போன்ற சகல விபரங்களை கூகுள் தேடுபொறி வழியாக பெற்றுக் கொண்டு, தொடர்புக் கொள்கிறாள். மறுமுனையில் லாகூரில் அக்கடையில் பணியாற்றும் யூசுப்பின் பேரனுடன் பேசி, யூசுப்புடனும் கதைத்து அவரது நண்பரான தனது தாத்தா பற்றியும் கதைத்து, அவரை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுகிறாள். அவளது அழைப்பை ஏற்றுக் கொண்டு, யூசுப்பின் பேரன் அவரை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடு செய்கிறான்;. இந்தியாவில் அவனது தாத்தாவின் நண்பர் இருக்கும்; டில்லியயை பற்றிய விபரம், அதன் காலநிலை, இந்தியாவுக்கு செல்வதற்கான விசா பெறும் வழிமுறை, போன்ற விபரங்களை அவனும் கூகுள் தேடுபொறி மூலம் அறிந்து அவரை இந்தியா அழைத்து வருகிறான். டில்லியில் விமான நிலையத்திற்கு அவர்கள் வரும் விமானத்தின் நேரத்தை கூகுள் தேடுபொறி மூலம் பேத்தி அறிந்து கொண்டு, அவர்களை தாத்தாவிடம் அழைத்து வருகிறாள். நீண்ட காலத்தால் பிரிந்து போன இரு நண்பர்கள் சந்திக்கிறார்கள். அச்சந்திப்பு டில்லி நண்பருக்கு ஓர் இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.

download (20)

மேற்படி இரு காணொளிகளை காணும் பொழுது, கூகுள் நிறுவனத்தின் இந்திய பிரிவு காலத்தால் முன்னுக்கு வந்த பாகிஸ்தானிய குறுங்காணொளியான Respect யின் கதையை அப்படியே தலைக்கீழாக புரட்டி தனதாக்கிக் கொண்டதாக என தெரிகிறது. இதனையிட்டு Deference.pk எனும் இணையக் குழுமத்தில் இது அப்பட்டாமான திருட்டு என பேசப்பட்டது ஆனால் கூகுள் ஆதரவாளர்கள் சிலரால் ஓரே நேரத்தில் ஒரே மாதியான சிந்தனைகள பலருக்கும்; தோன்றலாம் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால் இன்றைய இணைய உலகில் மிக பிரபலமான ஒரு நிறுவனமாக கூகுள் திகழ்கிறது. அது வழங்காத சேவைகளே இல்லை என்று சொல்லாம். இணையத்தின் தோற்றம் காலம் முதல் முன்னணி-முன்னோடி நிறுவனங்களாக திகழ்ந்த பல நிறுவனங்களின் சாதனைகளை முறியடித்து விட்ட ஒரு நிறுவனமாக கூகுள் இன்று இயங்கிக் கொண்டிருக்கிறது. அது மின்னஞ்சல்(Gmail), மொழிபெயர்ப்பு (Translate),தேடுபொறி (Searchengine), காலநிலை (Weather), வரைப்படம் (Map), என்ற வகையிலான நூற்றுக்கணக்கானச் சேவைகளை வழங்கி, இணையப் பாவனையாளர்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறது. அதிலும் அதன் தேடுபொறியானது, இன்று இணையப் பாவனையாளர்களிடையே மிக பிரசித்தம் பெற்ற ஒரு தேடுபொறியாக முன்னணி வகிக்கிறது. இணையத்தளத்தில் எதையும் தேடி அறிய வேண்டுமா அதற்கு கூகுள் தேடுபொறி சரியான மார்க்கம் என்ற நிலை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு ஒரு வருடத்திற்கு முன்னதாக இந்த நிறுவனம் வழங்கி வரும் பல சேவைகளை பற்றியும் பிரஸ்தாபித்திருக்கும் மேற்படி பாகிஸ்தானிய காணொளியான Respect பற்றி தெரியாமல் இருந்ததா? என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

ஆனாலும் Reunion இணையத்தில் இருக்கும் காணொளிகளின் தொகுப்புத் தளமான You Tube யில் மட்டும் அது இணைக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குள் ஒரு கோடியே 10 லட்சத்திற்கு மேலான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு இருப்பதோடு, நூற்றுக்கணக்கான உணர்ச்சிவசப்பட்ட, கண்ணீர் மல்கிய கருத்திடல்கள் இதற்கு முன் வைக்கப்பட்டுள்ளன. அதேவேளை பாகிஸ்தானிய காணொளி Respect யை அதே You Tube யில் 8000 அளவான தொகையினரே பார்வையிட்டு இருப்பதோடு, குறைந்த அளவான கருத்திடல்களே அதற்கு வந்து இருக்கின்றன என்பதோடு, கூகுளின் Reunion பிரபல்யம் அடைந்த பின்தான் மேற்குறித்த பாகிஸ்தானிய காணொளியான Respect பற்றி தெரிய வந்துள்ளது என்பதும் மறப்பதற்கில்லை.

இவ்விரு காணொளிகளை பற்றி கருத்து தெரிவித்திருக்கும் இந்தியாவின் The Times of india பத்திரிகை நிறுவனமும் பாகிஸதானிலுள்ள Jang Group னும் ஊடக நிறுவனமும் இணைந்து, இந்தியா–பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிடையை சுமூக உறவு வளர்தெடுத்தலை முக்கிய நோக்கமாக கொண்டு உருவாக்கியுள்ள கூட்டு அமைப்பான Aman ki asha (சமானத்திற்கான நம்பிக்கை) எனும் அமைப்பின் உத்தியோகபூர்வமான பத்திரிகையான Aman ki asha வின் ஆசிரியரும், பாகிஸ்தானிய பெண் திரைப்பட இயக்குனரும், மனித உரிமை செயறபாட்டாளருமான Bena Sarwar அவர்கள் பின வருமாறு கூறுகிறார்.

கூகுளின் அவ்;விளம்பர காணொளி உணர்ச்சிகரமான சிறந்தொரு குறுந்திரைப்படமாக வெளிப்பட்டுள்ளது என்றும,; இக்குறுந்திரைப்படத்தை பற்றி பேசும் பொழுது ஒரு வருடத்திற்கு முன்னதாக பாகிஸ்தானில் Taha Kirmani எனும் இளம் திரைப்பட இயக்குனர் இயக்கிய Respect எனும் குறுங்காணொளி பற்றியும் நாம் பேசியே ஆகவேண்டும் என்றுகிறார். மேலும் அவர் இவ்விரு காணொளிகள், முன் வைக்க நினைத்துள்ள செய்தியினை தாக்கபூர்வமான முறையிலும், உணர்ச்சிபூர்வமான முறையிலும்,; சினிமா மொழி வழியாகவும், Reunion முன் வைப்பதில் அடைந்த வெற்றியினை, Respect (அதில் வரும் பாகிஸ்தானிலுள்ள தாத்தா வேடத்தில் இளைஞர் ஒருவரை நடிக்க வைத்தமை போன்ற குறைப்பாடுகளின் காரணமாக) அடையவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறார். ஆனாலும் பாகிஸ்தான் காணொளியான Respect இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளில் நிலவும் இன்றைய யதார்த்தத்தை சித்திரிப்பதில் மிக சரியாக வெளிப்பட்டுள்ளது என்றுகிறார்.

அதாவது கூகுள் விளம்பரத்தில் பாகிஸ்தானில் உள்ள முதியவரின் பேரன் கூகுள் தேடுபொறி மூலம் இந்திய விசா பெறும் முறைமையை கூகுள் மூலம் அறிந்து கொள்வதாக வருகிறது. ஆனால் பாகிஸ்தானிய காணொளியில் பாகிஸ்தானிய நண்பரின் பேரன் அவரது தாத்தாவின் இந்திய நண்பரை பற்றி இணையத்தில் பல வழிகளில் அறிந்து கொண்டு, தனது தாத்தாவை இந்தியாவிலுள்ள அவரது நண்பருடன் இணையத்தில் இன்று வெளிநாட்டிலுள்ளவர்களுடன் தொடர்பு கொள்ள, எல்லோரும் பயன்படுத்தும் Skype மூலம் தொடர்புப்படுத்தி வைக்கிறார் என்று முடித்திருப்பது இன்றை நிலையில் யதார்த்தமாக இருக்கிறது என்றுகிறார்.

ஏனெனில் இற்றை வரை எத்தனை’யோ பேசசு வார்த்தைகள், ஒப்பந்தங்கள் மூலம், பரஸ்பர நிலையில் இரு நாடுகளுக்கு விஜயம் செய்ய தேவைப்படும் விசா பெறுவதில் இரண்டு நாடுகளிலும் காணப்படும் நெருக்குவரம், காலதாமதம், நெருக்கடி, போன்றவை இல்லாது செய்ய முயற்சிகள் நடந்திருப்பினும், அம்முயற்சிகள் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், அப்பிரச்சினை இன்னும் தொடரும் ஒரு சூழலில, இந்திய-பாகிஸ்தானிய சாமானிய பிரஜைகள் இந்தியாவுக்கோ, பாகிஸ்தானுக்கோ போக தேவையான விசாவை கூகுள் விளம்பர காணொளி சித்திரிப்பது போல் வெறுமனே கூகுள் செய்து பெற்று கொள்வது நடைமுறை சாத்தியமிலாத ஒன்று என்ற நிலையில், பாகிஸ்தான் காணொளியான Respect யில்; Skype மூலம் தொடர்புப்படுத்தல் என்பதாக முன் வைப்பது யதார்த்தமானது என்றுகிறார் Bena Sarwar.

அந்த வகையில் பாகிஸ்தானிய குறுந்திரைப்படமான Respect யில் அதிக வேகத்திலான காட்சி மாற்றம் (இந்த வேகம் ஒருவகையில் இணையத் தேடலின் வேகத்திற்கு குறியீடாக முன் வைக்க இயக்குனர் நினைத்திருக்கக் கூடும்.) ஆனால் இந்த வேகம் காட்சிகளை புரிந்து கொள்ளுதல் என்பதற்கு தடையாக இருக்கின்றது. முடிவில் யதார்த்தத்தை முன் வைத்தாலும், Bena Sarwar கூறியது போல், தாத்தாவாக ஒரு இளைஞனை நடிக்க வைத்திருப்பது, மற்றும் Skype யில் பழைய நண்பர்கள் ஒருவரை ஒருவர் எதிர்ப்பாராத விதமாக காணும் பொழுது ஏற்படும் இன்ப அதிர்ச்சியை எந்த விதமான முக பாவங்ளையும் வெளிக் காட்டாது வெறுமனே உறைந்து போகுதல் போன்ற குறைகளின் காரணமாக, அது சொல்ல நினைத்த செய்தியை உணர்ச்சிகரமாகவும் தாக்கபூர்வமாகவும் அதனால் முன் வைக்க முடியவில்லை. ஆனாலும் பரலாக பார்க்க-பேசப்படாவிடினும் அது பேசியிருக்கும் செய்திக்கான முன்னோடித் தன்மையும் அதனை யதார்த்தபூர்வமான முறையில் இளம் இயக்குனரான Taha Kirmani பேசி இருப்பது போன்றவையின் காரணமாகவும்;, இக்காணொளி கவனத்திற்குரிய ஓரு காணொளி என்பது மறுப்பதற்கில்லை.

அடுத்து கூகுள் தந்திருக்கும் Reunion யை எடுத்து கொண்டோமானால், சிறந்த ஒளிப்பதிவு, பாத்திரங்கள் ஏற்று நடித்திருக்கும் நடிகர்களின் நடிப்பு, முதியவர்களாக முதியவர்களையே நடிக்க வைத்திருப்பது, அவர்கள் வெளிப்படுத்தும் முகபாவங்கள், வசன வெளிப்பாடு, படத்தொகுப்பு போன்றவைகளின் காரணமாக கூகுள் நிறுவனத்திற்கான ஒரு விளம்பர காணொளியினை மிக சிறந்த குறுந்திரைப்;படமாக மாற்றி இருப்பதோடு, ஒரு விளம்பர காணொளியினால் உணர்ச்சிவசப்பட (பிரிவுத்துயர்) வைக்கவும் முடியும் என்பதையும்; இக்காணொளி நிருபித்து இருக்கிறது. இந்த பெருமை பாகிஸ்தானிய குறுங்காணொளியான Respect யின் கதையை அப்படியே தலைக்கீழாக புரட்டி தந்திருக்கும் குறையை மீறியும், சினிமா மொழியினை நன்றாக புரிந்து வைத்திருக்கும் இக்காணொளியின் இயக்குனர் Amit Sharma வையே சாரும்.

கூகுளின்; காணொளியான Reunion பற்றி தனது வலைப்பதிவு ஒன்றில் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க பத்தி எழுத்தாளரும் படைப்பாளியுமான Dan Lyons அக்காணொளி, இந்திய பாகிஸ்தான் பிரிவினை பொழுது, பாகிஸ்தானிலிருந்து விரட்டப்பட்டு பலவந்தமாக இந்தியாவில் குடியேற்றப்பட்ட பல்லாயிரக்கணக்கான இந்துக்களில் ஒருவர் என்று கூகுள் காணொளி வரும் டில்லியில் இருக்கும் தாத்தாவை பற்றி குறிப்பிடுகிறார். ஆனால் அதே மாதிரி இந்தியாவிருந்து விரட்டப்பட்டு பாகிஸ்தானுக்கு பலவந்தமாக குடியேற்றப்பட்ட பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களையும் கூகுளின் அக்குறுந்திரைப்படம் நினைவுப்படுத்துகிறது என்பதை Dan Lyons சொல்ல தவறி இருப்பதோடு, இந்தியாவிருந்து விரட்டப்பட்டு பாகிஸ்தானுக்கு பலவந்தமாக குடியேற்றப்பட்ட பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களில் ஒருவரை பற்றி பேசும், ஒரு வருடத்திற்கு முன்னே வந்திருக்கும் பாகிஸ்தானிய காணொளியான Respect பற்றி அறியாது இருக்கிறார். Reunion பற்றி பேசவந்தவர் இதே கூகுளை விரிவாக பயன்படுத்தி இருந்தால் பாகிஸ்தானிய காணொளியான Respect பற்றி அவர் அறிந்து இருப்பார்.

ஆனாலும் இக்குறைகளுக்கு அப்பாலும், Dan Lyons மேற்படி கருத்தாடலில் முன் வைத்திருக்கும் பல முக்கியமான விடயங்கள் இக்காணொளியை இன்னொரு வாசிப்புக்கு உட்படுத்துகிறது என்பதும் மறுப்பதற்கில்லை.

Dan Lyons Reunion எனும் இக்குறுந்திரைப்படம் மூலம் கூகுள் நிறுவனம் என்ன சாதிக்க நினைக்கிறது? என்ற கேள்வி ஒன்றினை எழுப்புகிறார். பன்னாட்டு நிறுவனங்கள், தனிநபர்கள் பற்றிய தரவுகளை, அவர் தம் உணர்வுகளையும் பல்வேறு வழிகளில் கூகுள் மாதிரியான நிறுவனங்கள் வழியாகவும், தெரிந்து கொண்டு, அவை தம்மை தம் நலனுக்காக பயன்படுத்தி கொண்டிருக்கும் சூழலில், கூகுள் நிறுவனம் தம் வழியிலான தனிநபர்களின் தரவுகளை அவர்கள் தம்மை ஒன்றிணைக்கும் வகையில் பயன்படுத்தி இருக்கிறது என்பதை கூகுளின்; இக்குறுங்;திரைப்படம் நிருப்பிக்கிறது என்ற வகையில் இதுவொரு பாராட்டதக்க முயற்சி என்றுகிறார்.

அத்தோடு பெரும் நிறுவனங்கள் தமது உற்பத்திகளுக்கான விளம்பரங்களை கதை ஒன்றினை சொல்லும்; வகையில் வெளியிட்டாலும், ஒரு சில நிறுவனங்களே அம்முறைமையில் வெற்றி அடைகின்றன. அந்த வகையில் ஒரு விளம்பரத்தை இத்துணை உணர்ச்சிபூர்வமாகவும் கலைத்துவமாகவும் எடுக்க முடியும் என்பதை எடுத்து காட்டி இருப்பதன் மூலம், கூகுள் நிறுவனம்;; இக்காணொளி மூலம் சந்தைப்படுத்தல் துறையில் ஒரு புதிய தளத்தை எட்டியிருக்கிறது என்றுகிறார் Dan Lyons.

அடுத்து இக்குறுந்திரைப்படத்தை பற்றி Dan Lyons முன் வைத்திருக்கும் இன்னுமொரு கருத்து நம் கவனத்தை ஈர்க்கிறது. அதாவது இன்றைய இளைய தலைமுறையினர், உலகம் இன்று மதங்களாலும், இனங்களாலும் பிரிந்து கிடக்கும் நிலையில் (நாம் இவையோடு எல்லைகளாலும் இன்னபிற பேதங்களாலும் என்று சேர்த்து கொள்ளலாம்); அப்பேதங்களையும் பிரிவுகளையும் மறந்து, தேச-வர்த்தமான எல்லைகளை கடந்து, உலகை ஒன்றிணைக்க அவர் தம் மூத்தவர்கள் அறிந்திருராத மொழியை நன்றாக கையாளுகிறார்கள்(அறிவியல்; தொழில் நுட்ப அறிவினையே Dan Lyons மொழி என்றுகிறார்);என்பதை இக்குறுந்திரைப்படத்தில் அவ்விரு தேசத்து தாத்தாகளின் உணர்வுபூர்வமான தேவைகளை ஏக்கங்களை அறிந்து, அவ்விருவர்களின் பேத்தியும் பேரனும் கூகுள் தேடுபொறி மற்றும் இன்னபிற இணைய வழிமுறைகளை பயன்படுத்தி நிவர்த்தி செய்கிறார்கள் என்பதன் மூலம் எடுத்து காட்டப்படுகிறது என்பார் Dan Lyons.. இதே மாதிரியான ஒரு கருத்தினையே பாகிஸ்தானிய காணொளியான Respect பற்றி கருத்துக்களை முன் வைக்கும் வேளை Bena Sarwar வும் கூறுகிறார்.

அத்தோடு Bena Sarwar அதே கருத்தாடலில் பிறிதொரு இடத்தில் தனது சக பத்திரிகையாளரும் பள்ளித் தோழருமான Mazhar Zaidi (இவரும் ஒரு திரைப்பட இயக்குனர்) 2004 ஆம் ஆண்டில் லண்டன் பிபிஸி உருதுச் சேவையுடன் இணைந்து, காலனியம் விட்டுச் சென்ற, பின்-காலனிய சூழல் வரை இன்னும் இந்தியா-பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடையிலான தீராதப் பிரச்சினையாக இருக்கும் காஷ்மீர் பிரதேசத்தில் பாகிஸ்தான் வசமுள்ள Muzaffarbad நகரிலும், இந்தியா வசமுள்ள Srinagar நகரிலும், காஷ்மீர் பிரிவினையால,; பல வருடங்களால் பிரிந்த குடும்பத்தினரை வலைத்தள, மற்றும் பிபிஸி யின் காணொளி தொடுப்புக்கள் மூலம் ஒன்றிணைக்கும் முயற்சி ஒன்றில் ஈடுபட்டதையும் எடுத்துக் காட்டுகிறார்.

மேலும் இக்காணொளிகளை பற்றி கருத்துக்களை வெளிப்படுத்திய இந்தியா- பாகிஸ்தான்; சார்ந்தவர்களில் மூத்தவர்கள் இக்காணொளிகள் தமது கதையையும், இளையவர்களில் பலர் இவை தம் குடும்பத்தின் மூத்த அங்கத்தினரின் கதைகளையும் பேசுகின்றன என்றும் கூறியுள்ளார்கள். அத்தோடு, இக்காணொளியை(Reunion) பற்றி கருத்துக்கள் முன் வைத்த உலகளாவிய ரீதியான ஊடகங்கள், இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு தேச அரசியல்வாதிகளால் சாதிக்க முடியாததை, 2-3 நிமிடத்திற்குள் மட்டுமே ஒடுகின்ற இக்காணொளி;கள் சாதாரண மக்களின் மத்தியில் சாதிக்க முனைகின்றன என்ற அர்த்தத்தில் கருத்துக்களை முன் வைத்துள்ளன.

மேற்கூறிய கூற்றை ஆமோதிக்கும் வகையில், Reunion சம்பந்தமாக கூகுள் நிறுவனத்தினருடன் தொடர்பு கொண்ட Dan Lyons..விடம் கூகுள் நிறுவன அதிகாரி ஒருவரும், இக்காணொளி இந்தியா பாகிஸ்தான் பிரதேசத்தில் மட்டுமல்ல, உலகளாவிய ரீதியாகவும் பிரிந்தவர்கள் ஒன்றுக் கூடுதல் பற்றியும் பேசுகின்ற அகத்துண்டுதலை ஏற்படுத்தி இருக்கிறது என்பதற்கு, அக்காணொளிக்கான பின்னுட்டல்களில் பலரால் முன் வைக்கப்படும் பிரிந்தவர்கள் ஒன்றுக்கூடுதல் சம்பந்தமான கதைகள் எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது என குறிப்பிட்டதாக Dan Lyons கூறுகிறார்

.மொத்தத்தில் நாடுகள், அரசுகள், சமூகங்கள், மத்தியில் காணப்படும் பேதங்கள், முரண்பாடுகள், சந்தேகங்கள், சுமூகமற்ற நிலை, போன்றவைகளை கடந்து, சாதாரண மக்கள் மத்தியில் காணப்படும் மனிதநேயம் உறவுநிலை போன்றவை என்றும் மாறாதவை என்பதை இக்காணொளிகள் பாறைச் சாற்றுகின்றன எனலாம்.

Respect காணொளிக்கான தொடுப்பு

Reunion காணொளிக்கான தொடுப்பு

Comments are closed.