மறைந்துப்போனவர்களின் நிழல்கள் ( சிறுகதை ) / விநாயக முருகன்

[ A+ ] /[ A- ]

download (10)

 

புதன்கிழமை காலை பதினோரு மணிக்கு எனது அலுவலகத்தில் வேலை செய்த சரவணன் மறைந்துப்போனான். கவனிக்க. இறந்துப்போகவில்லை. காணாமல் போகவில்லை. ஓடிப்போகவில்லை. மறைந்துப்போனான். அவன் மறைந்துப்போன தேதியும், நேரமும் சரியாக தெரியாததால் நாங்கள் எங்கள் மேலதிகாரிகளையும் , மனிதவளக்குழு ஆட்களையும் அழைத்து வைத்து பேசிய கணக்கெடுப்புச் சடங்கு மிகச்சரியாக புதன்கிழமை மதியம் பதினோரு மணிக்கு முடிந்ததால் அந்த நேரத்தையே சரவணன் மறைந்துப்போன நேரமாக அறிவித்தோம். நான் பிறந்த கிராமத்தில் ஒரு வழக்கம் உண்டு. பெண்குழந்தைகள் பிறந்தால் ஜாதகம் எழுத மறந்துவிடுவார்கள் சிலர். பிறகு காலப்போக்கில் அவர்கள் வளர வளர பிறந்த தேதி மட்டும் நினைவில் இருக்கும். நேரம் சரியாக நினைவில் இருக்காது. பிறகு அவர்கள் வளர்ந்து ருதுவானதும் ருதுவான நேரத்தை வைத்து ஜாதகம் எழுதுவார்கள். சொல்லப்போனால் சாஸ்திரப்படி ருதுவான நேரத்தை வைத்து எழுதும் ஜாதகமே குழந்தை பிறந்த நேரத்தை வைத்து எழுதப்படும் ஜாதகத்தை விட விசேஷமானது என்று ஜோதிட வல்லுநனர்கள் சொல்வார்கள். அது போல சரவணன் மறைந்துப் போன நேரத்தை விட நாங்கள் வெளியுலகுக்கு அறிவித்துச்சொன்ன நேரத்தில் எந்த பாதகமும் இல்லை. மறைந்துப்போனவன் மறைந்துப்போனவன்தானே? இனி ஒருபோதும் மீண்டெழ முடியாதவன்தானே? அவன் எந்த நேரத்தில் மறைந்துப் போனால் என்ன?

ஆனால் பிரச்சினை அதுவல்ல. எங்கள் அலுவலகத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்த வின்சென்ட் ராஜூவுக்குதான் இது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பாவம். அவன் கடந்த வருடம்தான் கல்லூரி முடித்துவிட்டு ஆயிரம் கனவுகளுடன் இந்த மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்திருக்கிறான். ஆனால் நாங்கள் எல்லாரும் பத்து பதினைந்து வருடங்களாக இங்கேயே தொடர்ந்து வேலை செய்வதால் எங்களுக்கு இது பெரிய விஷயமாக தெரியவில்லை. எங்கள் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் எங்கள் குழுவை கூட்டி யாரெல்லாம் மறைந்துப்போனார்கள் என்று பட்டியல் எடுப்போம். அதுவொரு வழக்கமான சடங்கு. அப்படி பட்டியல் எடுக்கும்போது இதற்குமுன்பு மறைந்துப்போன ஆட்களைப்பற்றி நினைவுக் கொள்ளத்தக்க (பெரும்பாலும் அப்படி எதுவும் யாருக்கும் இருக்காது) சம்பவங்கள் ஏதாவது இருந்தால் அதை பகிர்ந்துக்கொள்வோம். பிறகு தேநீர், பிஸ்கெட் வரும். அதை சாப்பிட்டுவிட்டு ஏதாவது புதுப்படங்களை பற்றியோ, வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பற்றியோ, ஒரகடம் பக்கத்தில் இருக்கும் வீட்டுமனைகளின் விலை நிலவரங்களை பற்றியோ, பங்குச்சந்தை குறியீட்டு எண் உயர்வு பற்றியோ பேசிவிட்டு மறைந்துப்போனவனுக்கு அரைநிமிடத்துக்கும் குறைவான அளவில் மவுன அஞ்சலி நடத்துவோம். பிறகு அவன் மறைந்துப்போன நேரத்தை வெளியுலகுக்கு அறிவித்துவிட்டு எங்கள் வழக்கமான வேலைகளை கவனிக்கச் சென்றுவிடுவோம்.

புதன்கிழமை காலை பத்தரை மணிக்கு ஆரம்பித்த மறைந்துப்போனவர்களின் கணக்கெடுப்பு சடங்கின்போது ராஜூவையும் அழைத்திருந்தோம். கூட்டம் பதினோரு மணிக்கு முடிந்து எல்லாரும் ரகசிய புத்தகத்தில் கையெழுத்து போட்டுவிட்டு கலைந்து அவரவர் இருக்கைகளுக்கு திரும்பினாலும் அங்கு இன்னமும் பிரமிப்பிலிருந்து மீளாத வின்சென்ட்ராஜூ அமர்ந்திருப்பதை பார்த்தேன். தேநீர்இடைவெளியின்போது அவனை மீண்டும் சந்தித்து ஏன் சோகமாக இருக்கிறாய் என்று விசாரித்தேன்.

“நீங்கள் எல்லாரும் விளையாடுகிறீர்கள் என்று நினைக்கின்றேன். அதெப்படி ஒரு மனிதன் மறைந்துப்போக முடியும். நான் நம்பமாட்டேன். இந்த முட்டாள்தனமான விளையாட்டில் ஏதோ மிகப்பெரிய சதி இருக்கிறது”

“புரியவில்லை. என்ன சதி?”

“நீங்கள் எல்லாரும் ஏதோவோர் உண்மையை மறைக்கின்றீர்கள். மனிதன் இறந்துப் போகத்தானே முடியும்? அல்லது ஓடிப்போவார்கள். அல்லது காணாமல் போவார்கள். அதுதான் உலக நியதி. அதெப்படி மறைந்துப்போக முடியும்? தயவு செய்து சொல்லுங்கள். எனக்கு பைத்தியம் பிடித்துவிடும் போலிருக்கிறது. என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை. சொல்லப்போனால் இரண்டு நாட்களாக தூக்கம் வரவில்லை.சரியாக சாப்பிடவில்லை”

நான் வின்சென்ட்ராஜூவின் முகத்தை பார்த்தேன். கண்கள் சிவந்து முகம் வீங்கியிருந்தது. இரவெல்லாம் கனவிழித்து அலுவலகத்தில் வேலை செய்கிறான் என்று நினைத்திருந்தேன். அது தவறு என்று புரிந்தது. உண்மையில் சரவணன் மறைந்த தகவல் இரண்டு நாட்களாகவே எங்கள் அலுவலகத்துக்குள் சுற்றிக் கொண்டிருந்தது. இருந்தாலும் நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டி எல்லாரும் காத்திருந்தார்கள்.

“இங்க பாரு ராஜூ. நீ இந்த அலுவலகத்துக்கு புதிதாக வேலைக்கு சேர்த்திருப்பதால் இது உனக்கு அதிசயமாக தோன்றலாம். எனக்கும் இங்கு வேலைக்கு சேரும்போது இது ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் பிறகு இது இயல்பானதொரு நிகழ்வென்று உணர்ந்துவிட்டேன். சொல்லப்போனால் இப்போதெல்லாம் மாதம் இரண்டொருவர் இங்கு மறைந்துப்போகாமல் இருந்தால்தான் எனக்கு பதற்றம் அதிகமாகிறது. கைகால்கள் நடுங்க ஆரம்பிக்கிறது”

“நீங்கள் சொல்வது எல்லாம் எதோ பெருங்கனவின் துணுக்கு போல தோன்றுகிறது. அதெப்படி ஆட்கள் மறைந்துப்போகிறார்கள்”

“ஏன் இருக்கமுடியாது? நீ உன் வீட்டில் வைத்த எத்தனையோ பொருட்கள் மறைந்துப் போவதில்லையா? நேற்றுக்கூட நான் ஒரு பச்சைநிற சீப்பை தலை வாரிவிட்டு எங்கேயோ மறந்து வைத்துவிட்டேன். அது மறைந்துவிட்டது. இனி நான் அதை தேடி கண்டுபிடிக்குவரை அது மறைந்துப்போனதுதான். ஒருவேளை என்னால் தேட முடியாமல் கூட போகலாம். அப்படி தேடமுடியாத நிலை வரும்போது நான் அந்த சீப்பை மறந்து விட்டு எனது இயல்பான வேலைக்கு திரும்பிவிடுவேன். அல்லது வேறு சீப்பை வாங்கிவிடுவேன்”

“சீப்பும், சரவணனும் ஒன்றா? அதெப்படி மனிதனை போய் ஒரு ஜடப்பொருளுடன் ஒப்பிட உங்களுக்கு மனம் வருகிறது. இந்த அலுவலகத்தில் வேலை செய்யும் அத்தனை மனிதர்களும் கருணையற்றவர்கள். நீங்கள் எல்லாரும் கொலைகாரர்கள்”

எனக்கு ராஜூ மீது ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்து அவனை அப்படியே பின்னால் இருந்த தூணில் சாய்த்து அடிக்க வேண்டும் போல தோன்றியது. நான் ராஜூவின் மேனேஜர் இல்லை. இருந்திருந்தால் நான் நடந்திருக்கும் விதமே வேறு. அவனும் என்னிடம் இப்படி கேள்விகளை கேட்டுக்கொண்டிருக்க மாட்டான். நான் தேநீர் கோப்பையுடன் ஜன்னலுக்கு வெளியே சாலையில் விரியும் வாகனங்களை பார்த்துக்கொண்டிருந்தேன்.

ராஜூ சொன்னான்: “நீங்கள் சரவணனை தேட முயற்சி செய்திருக்க வேண்டும். இது ஒரு பொறுப்பற்ற செயல்”

“இங்க பாரு ராஜூ. நாங்கள் தேடவில்லை என்று யார் சொன்னது? இந்த அலுவலகத்தில் மாதாமாதம் சிலர் திடீரென மறைந்துவிடுவார்கள். நாங்கள் இரண்டு நாட்கள் காத்திருந்துவிட்டு அவர்களது தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்வோம். எந்த பதிலும் வராத நிலையில் மனிதவளத்துறை ஆட்களிடம் தகவலை தெரிவிப்போம். அவர்கள் மறைந்துப்போன ஆட்கள் இங்கு வேலைக்கு சேரும்போது கொடுத்த ஆவணங்களை சரிபார்ப்பார்கள். பிறகு அந்த ஆவணங்களில் இருக்கும் மறைந்துப்போனவன் வசிக்கும் முகவரிக்கு ஆட்களை அனுப்புவார்கள். பெரும்பாலும் அந்த முகவரியில் மறைந்துப் போனவனுக்கு தொடர்பற்ற வேறு யாரோ வசித்துக்கொண்டிருப்பார்கள். நீயே சொல் இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்? எங்கள் மீது தவறு என்ன இருக்க முடியும்?”

ராஜூவுக்கு குழப்பமாக இருந்தது.

“அதெப்படி சாத்தியமாகும்? இது உண்மையில் என்னை குழப்புகிறது. அப்படி என்றால் மறைந்துப் போனவர்கள் எல்லாருமே இங்கு போலி வசிப்பிட முகவரியை கொடுத்து வேலைக்கு சேர்ந்தவர்களா?”

“அப்படி சொல்ல முடியாது. ஏனெனில் ஒவ்வொரு பணியாளரையும் தேர்வு செய்வதில் மனிதவளத்துறை ஆட்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள். சிறு துல்லியப்பிசகு கூட அவர்கள் மீது கரும்புள்ளியை விழ வைத்து அவர்களது வேலைக்கே ஆபத்தாக முடிந்துவிடும். யாருமே தங்கள் வேலையை இழக்க விரும்புவதில்லை இல்லையா? எனவே ஒவ்வொரு பணியாளரும் இங்கு வேலைக்கு சேரும்போது நாங்கள் அவர்களது முகவரியை சரிபார்த்து வீட்டுக்கு ஆட்களை அனுப்பி அவர்கள் உண்மையில் அங்கு வசிக்கின்றார்களா என்று சரிபார்த்த பிறகே அவர்களை பணியில் சேர்த்துக்கொள்வோம். சொல்லப்போனால் அவர்கள் முன்பு வேலை செய்த நிறுவனங்களில், முன்பு படித்த பள்ளிகளில், முன்பு படித்த கல்லூரிகளில் ஏன் தேவைப்பட்டால் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள காவல்நிலையங்களில் கூட விசாரிப்போம். அவர்களை பற்றிய தெளிவான உறுதியான நம்பத்தக்க தகவல்கள் வந்தபிறகுதான் அவர்களை பணிக்கு அமர்த்துகின்றோம்”

“அப்படி என்றால் அவர்கள் எல்லாரும் எப்படி திடீரென மறைந்துவிடுகிறார்கள்? மறைந்துப்போனவனின் சொந்தக்காரர்கள் தேட மாட்டார்களா?”

“நான் அறிந்தவரை அப்படி யாரும் தேடியதில்லை. அப்படி தேடினாலும் ஒன்றிரண்டு பேர்களே இங்கு அலுவலகத்துக்கு வந்து விசாரிப்பார்கள்”

“அவர்கள் எல்லாம் யார்?”

“எல்லாரும் பெரும்பாலும் மறைந்துப்போனவனின் காதலிகள் அல்லது மனைவியாக இருப்பார்கள். சில நேரம் மறைந்துப்போனவனுக்கு கடன் கொடுத்த ஆட்களும் அவர்களை தேடி இங்கு வருவதுண்டு. மறைந்துப்போனவன் இந்த நிறுவனத்தில் வேலை செய்துக்கொண்டிருப்பதாக சொல்லி அவர்கள் வங்கியில் கடன் வாங்கியிருப்பான். ஆனால் அதற்கு நமது நிறுவனம் பொறுப்பேற்க முடியாது அல்லவா? எனவே நாங்கள் அவர்கள் தெளிவாக சொல்லிவிடுவோம். எங்களிடம் இருக்கும் மறைந்துப்போனவனின் கணக்குப் புத்தகத்தை எடுத்துக் காட்டி ஐயா. நீங்கள் கடன் கொடுத்த ஆள் இந்த நாள் இந்த மணிக்கு மறைந்துவிட்டான். தயவு செய்து இனி அவனை தேடி இங்கே வராதீர்கள் என்று சொல்லிவிடுவோம்”

“சரி. அவனது மனைவி அல்லது காதலி இங்கே வந்தாலும் அதைதான் சொல்வீர்களா?”

“கண்டிப்பாக”

“அவர்கள் உங்கள் மீது வழக்கு எதுவும் போடமாட்டார்களா?”

“எதற்கு போடவேண்டும்? அவர்கள் ஒன்றும் நமது அலுவலகத்துக்கு வந்து காணாமல் போகவில்லையே. நம்மிடம் ஆதாரங்கள் உள்ளனவே. அவர்கள் வேலைக்கு வரும் போது கண்காணிப்பு கேமராவில் பதிவான நேரம் இருக்கும். பிறகு வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிச்செல்லும்போது கண்காணிப்பு கேமராவில் நேரம் பதிவாகி இருக்கும். இரண்டையும் அவர்களிடம் காட்டுவோம். அவர்கள் பேசாமல் திரும்பிச் சென்று விடுவார்கள். மீறி பிரச்சினை செய்தால் நமது நிறுவனத்தின் நற்பெயரை குலைக்க முயற்சி செய்தததாக சொல்லி அவர்கள் மீது நாம்தான் வழக்கு தொடுக்க வேண்டி இருக்கும்”

“சரி. அவர்கள் காவல்நிலையம் சென்று புகார் கொடுக்க மாட்டார்களா? அவர்கள் மறைந்துப்போனவனை தேடி கண்டுப்பிடித்து கொடுப்பார்களே”

எனக்கு வின்செட்ராஜூவின் அறியாமையை நினைத்து சிரிப்புதான் வந்தது.

“யார் அவர்களா? நாங்களாவது மறைந்துப்போனவனின் வீட்டுக்கு ஆட்களை அனுப்பி தேடுகிறோம். பிறகு அவனுக்கு தெரிந்த நண்பர்களிடம் விசாரித்து எந்த தகவல்களும் கிடைக்காமல் போகும் பட்சத்தில்தான் அவன் மறைந்துவிட்டான் என்று வெளியுலகுக்கு அறிவிக்கிறோம். ஆனால் பெரும்பாலும் காவல்துறை ஆட்கள் அவனை தேட குறைந்தப்பட்ச முயற்சி கூட எடுக்க மாட்டார்கள். நாங்கள் இரண்டு மூன்று நாட்கள் தேடிய பிறகே மறைந்துவிட்டான் என்று அறிவிப்போம். ஆனால் அவர்கள் மறுநாளே மறைந்துவிட்டான் என்று சொல்லிவிடுவார்கள். சொல்லப் போனால் அவர்களிடமும் எங்களிடம் இருப்பது போலவே மறைந்துப்போன பட்டியல் இருக்கும்.அவர்களிடமும் ரகசிய கணக்குபுத்தகம் இருக்கும்”

“நீங்கள் சொல்வதை என்னால் நம்பமுடியவில்லை”

“வேண்டுமானால் நீ வசிக்கும் பகுதியில் இருக்கும் காவல்நிலையம் சென்று பார். உனக்கே தெரியும். அங்கு இருக்கும் ரகசிய கணக்குப்புத்தகத்தில் ஒவ்வொரு வருடமும் மறைந்துப்போனவர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கிறதென்று”

ராஜூ கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும்போது முன்பு எப்போதோ எனக்கு மனிதவளத்துறை அதிகாரி சொன்ன விளக்கம் நினைவுக்கு வந்தது. உண்மையில் மறைந்துப்போனவர்களின் மறைவு நேரத்தை கண்டுபிடித்து வெளியுலகுக்கு அறிவிப்பது எங்கள் வேலை அல்ல. காரணம் அவர்கள் எல்லாரும் எங்கள் அலுவலக வளாகத்தினுள் மறைந்துப்போகவில்லை. வெளியில்தான் மறைந்துவிடுவார்கள். ஆனால் ஒவ்வொரு வருடமும் மறைந்துப்போவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்ததால் அரசாங்கம் ஒரு சட்டம் கொண்டு வந்தது. இனி யாராவது மறைந்துப்போனால் அவர்கள் பணியாற்றும் அலுவலகங்களோ அல்லது மாணவர்களாக இருந்தால் அவர்கள் படிக்கும் பள்ளி,கல்லூரிகளோ மறைவுநேரத்தை அறிவித்துக்கொள்ளலாம். அவர்களுக்கு அந்த உரிமை தரப்பட்டுள்ளது. மற்றப்படி உள்நாட்டில் நடக்கும் இனப்படுகொலைகள், மதக்கலவரங்கள், எல்லைப்புற இராணுவ தாக்குதல்கள், கனிம வளங்கள் மிக்க அடர்காட்டில் வாழும் பழங்குடி மக்கள், சிறுபான்மை மக்கள், போலீஸ் என்கவுண்டர்கள், சிறைச்சாலை கைதிகள் போன்ற விஷயங்களில் மறைந்துப்போனவர்களின் மறைவுநேரத்தை வெளியுலகுக்கு அறிவிக்க வேண்டிய கடமை அரசுக்கு மட்டுமே உண்டு. அந்த வேலையை இராணுவ அதிகாரிகள், உள்துறை அமைச்சர்கள், காவல்துறை, மதகுருமார்கள் பார்த்துக் கொள்வார்கள். பொதுமக்கள் மறைந்துப்போனால் அரசு கவனித்துக்கொள்ளும். தனியார் நிறுவனங்கள் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம் என்று அரசு பத்தாண்டுகளுக்கு முன்பே அறிவித்திருந்தது உண்மையில் எங்கள் வயிற்றில் பாலை வார்த்தது.

வின்செட் பிறகேதும் சொல்லவில்லை. நாங்கள் அமைதியாக எங்கள் இருக்கைக்கு திரும்பி வேலைகளில் மூழ்கினோம். அடுத்தடுத்து வந்த நாட்களில் வின்சென்ட் இயல்புக்கு மீறிய பதற்றத்துடன் இருப்பதை கவனித்தேன். அவனால் முன்பு போல அலுவலக வேலையில் மனமொன்றி இருக்க முடியாததையும், அலுவலக உணவகத்தில் அமர்ந்திருக்கும் அழகான இளம் பெண்களை ரசிக்க முடியாமல் எதையோ வெறித்தப்படியே தனியாக அமர்ந்திருப்பதையும் பார்க்க எனக்கு சங்கடமாக இருந்தது. கண்டிப்பாக மறைந்துப்போனவர்களை பற்றி நான் சொல்ல தகவல்கள்தான் அவனை இப்படி அலைக்கழித்துள்ளன என்று எனக்கு தெரிந்தது. இருந்தாலும் அதுதானே உண்மை. எவ்வளவுநாள்தான் உண்மைகளை மறைப்பது? நான் சொல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் அவனுக்கு உண்மைகள் தெரியத்தானே போகிறது? நான் சொல்லாவிட்டாலும் வேறு யாராவது அவனுக்கு சொல்லத்தானே போகிறார்கள் என்றும் எனக்கு பட்டது. எனவே என்னுடைய சங்கடம் அர்த்தமற்றது என்று எனக்கு நானே சமாதானம் செய்துக்கொண்டேன். காலப்போக்கில் இது அவனுக்கு பழகிவிடும் என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். ஏனெனில் நானே அப்படித்தானே சமாதானம் ஆனேன்.

பத்து பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் இங்கு வேலைக்கு சேரும்போது மறைந்துப் போனவர்களை பற்றிய தகவல்களை கேள்விபட்டபோது நான் கூட இப்போதிருக்கும் வின்சென்ட் ராஜூவின் மனநிலையில்தான் இருந்தேன். எனது சின்ன வயதில் அம்மா அடிக்கடி சொல்வார். வீட்டின் பூஜையறையில் இருக்கும் கற்பூரத்தை சுற்றியிருக்கும் நெகிழி காகிதத்தை பிரித்தால் உடனே அந்த கற்பூரத்தை ஏற்றி விட வேண்டும். இல்லாவிட்டால் அது காற்றில் கரைந்துவிடும். எனக்கு அது புதிர்கதைகளில் எழுதீவுகளுக்கு மேலே மாயக்கம்பளத்தில் பறந்துக்கொண்டிருக்கும் இளவரசன் திடீரென மறைந்துப்போவது போல சுவாரசியம் நிறைந்த மர்மமுடிச்சு போல தோன்றியதுண்டு. ஒருநாள் ஏதோ தவறுதலாக அப்படி பேப்பர் பிரித்த கற்பூரத்தை அறையில் வைத்துவிட்டு திரும்பி வந்து பார்த்தல் கற்பூரம் அங்கு இல்லை. கற்பூரத்தின் மணம் மட்டும் அறையெங்கும் உழன்றுக்கொண்டிருந்தது. அம்மா வந்து திட்டினார். அபப்வே சொன்னேன் இல்லையா? கற்பூரம் ஒருவித ரசாயனப்பொருள் என்றும் அது விரைவில் காற்றில் மறைந்து காணாமல் போய்விடுமென்றும் அடுத்த சில வருடங்களில் எங்கள் பள்ளியில் ரசாயன பாடம் எடுத்த ஆசிரியர் சொன்னதும்தான் புரிந்தது. சிலவகை ரசாயன பொருட்களுக்கு காற்றில் உருகி கரைந்து மாயமாய் மறைந்துவிடும் தன்மை உண்டு. உதாரணம் உப்பை திறந்து வைக்க கூடாது. அது உருகி தண்ணீராக உருகிவிடும். பெருங்காயம் கூட ஐஸ்கட்டி போல கரைந்துவிடும். சில நாட்கள் கழித்து வந்து பார்த்தால் அவை முன்னர் இருந்த இடத்தில் எதுவும் இருக்காது.

எல்லாம் சரிதான். ஆனால் மனிதர்கள் எப்படி மறைந்துப்போவார்கள். விளையாடாதீங்க என்று சிரித்துக்கொண்டே எங்கள் மனிதவளத்துறை பிரிவில் வேலை செய்பவரிடம் கேட்டேன். அவருக்கு எனது பதில் கோபமூட்டியிருக்க வேண்டும். என்னை அவரது அறைக்கு அழைத்துச்சென்று பெரிய ரகசிய கணக்குப்புத்தகமொன்றை காட்டினார். அதில் அதுவரை எங்கள் அலுவலகத்தில் மறைந்துப்போனவர்களின் பெயர்கள், புகைப்படங்கள் அவர்களது முகவரிகள் தவிர என்று அலுவலகத்துக்கு இறுதியாக வந்தார்கள் அவர்கள் மறைந்துப்போனதாக எங்கள் அலுவலகத்தால் வெளிஉலகத்துக்கு அறிவிக்கப்பட்ட தேதி எல்லாம் இருந்தன. எனக்கு பிரச்சினையின் தீவிரம் புரிந்தது. அது போன்றதொரு ரகசிய கணக்குப்புத்தகம் எங்கள் அலுவலகத்தில் மட்டுமல்ல மற்ற அலுவலகங்களில் ஏன் உலகெங்கும் இருக்கும் ஒவ்வொரு அலுவலகங்களிலும் பராமாரிக்கப்படுவது தெரிந்தது. இவர்கள் எல்லாரும் ஏன் மறைந்துப்போகிறார்கள்? அந்த கணக்குப் புத்தகத்தை மீண்டும் பார்த்தேன். அதில் சில அழகான இளம்பெண்களும் இருந்தார்கள். இவர்கள் எல்லாரும் எங்கு போனார்கள்? ஒருவேளை வீட்டுக்கு சொல்லாமல் ஊரைவிட்டு ஓடிப்போனவர்களாக என்று சந்தேகம் வந்தது. மனிதவளத்துறை அதிகாரியிடம் கேட்டேன்.

“இவர்கள் ஓடிப்போயிருக்கலாம் இல்லையா? ஆனால் ஏன் மறைந்துப்போனவர்கள் என்று சொல்கின்றீர்கள்?”

“இறந்துப்போனவர்களால் மீண்டும் திரும்பி வரவே முடியாது. ஆனால் ஓடிப்போனவர்கள் அல்லது காணாமல் போனவர்கள் என்றாவது ஒருநாள் திரும்பி வரும் சாத்தியக்கூறுகள் உள்ளன. என்றாவது ஒருநாள் அவர்கள் கண்டுப்பிடிக்கபடக்கூடும் சாத்தியங்கள் அதிகம். இந்த இரண்டிலும் சேராத இன்னொரு பிரிவை நாங்கள் மறைந்துப்போனவர்கள் என்று சொல்வோம்”

“அப்படி பெயரிட்டு அழைப்பதில் என்ன விசேஷம்?”

“ஓடிபோனவர்கள் எல்லோரும் எங்கோ ஏதோவோர் இடத்தில் உயிரோடு இருக்கக்கூடும். அல்லது இறந்தும் கூட போயிருக்கலாம். ஆனால் மறைந்துப்போனவர்களை நாங்கள்தான் அதிகாரப்பூர்வமாக அவர்கள் மறைந்து விட்டார்கள் என்று வெளியுலகுக்கு அறிவிக்கிறோம். சொல்லப்போனால் மறைந்துப் போனவர்களின் இறுதி வடிவ நிலையை நாங்கள்தான் தீர்மானிக்கிறோம்”

கற்பூரம்,நாப்தலின் போன்று மனிதர்களும் எப்படி மறைந்துப்போகிறார்கள்? அது சாத்தியம்தானா என்ற என் கேள்விக்கு ஏன் மனித உடல் மறைந்து போகக்கூடாது? என்ற விடையே எல்லாரிடமிருந்தும் பதிலாக வந்தது. ரசாயன பொருட்களை கற்பூரம்,நாப்தலின் உருண்டைகள் மறைந்துப்போவதை காற்று தீர்மானிப்பது போல மறைந்துப்போன மனிதர்களை தீர்மானிக்கும் அதிகாரம் மனிதர்களிடமே இருப்பதை நினைத்து எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. கற்பூரம் காற்றில் கரைந்தாலும் அதன் நறுமணம் சிலமணி நேரம் அங்குதானே சுற்றிக்கொண்டிருக்கும்? அது போல மறைந்துப்போனவர்களின் நிழல்களும் கூட சில நாட்கள் அவர்கள் முன்னர் வேலை பார்த்த இடங்களில், அவர்கள் நடமாடிய உணவகத்தில் அல்லது அவர்கள் வாழ்ந்த வீடுகளில் அல்லது அவர்கள் மனைவி,காதலிகளிடம சுற்றிக்கொண்டிருக்குமென்று தோன்றியது. பிறகு ஒருநாள் அதுவும் மறைந்துப்போகும். எப்படி சாலையில் அடிப்பட்ட நாய்களின் மீதேறிச்செல்லும் வாகனங்களின் சக்கரங்கள் அந்த சடலத்தை உருக்குலைத்து சதைத்துணுக்குகளாக காற்றில் பறக்கவிட்டு சாலையில் துடைத்துவைக்கிறதோ அப்படி காலம் மறைந்துப்போனவர்களின் நிழல்களை துடைத்துவிடுகிறது.

உண்மையில் மறைந்துப்போனவர்களை பற்றி எங்களுக்கு இருந்த ஒரே கவலை அவர்கள் மறைந்துப்போன நாளது வரை அவர்கள் வேலைப்பார்த்த ஊதியத்தை யாரிடம் சமர்ப்பித்து என்பதுதான். அவர்கள் சேமிப்பு வங்கியில் இருக்கும் பணத்தை யாரிடம் கொடுப்பது என்பதுதான் வங்கிகளின் கவலை. மறைந்துப் போனவர்களின் சட்டைகளை என்ன செய்வது என்று அவன் வசித்த முன்னாள் அறைத் தோழர்கள் கவலைப்பட்டார்கள். ஆனால் அந்த கவலைகளும் ஒருநாள் மறைந்துப்போகுமென்று அவர்கள் எல்லாரும் திடமாக நம்பியதால் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. எனது கவலை எல்லாம் மறைந்துப்போனவர்களை பற்றியல்ல. வின்சென்ட் ராஜூவை பற்றித்தான். அவனுக்கு இப்போதெல்லாம் அடிக்கடி கவனச்சிதைவுடன், உடல்நலக்குறைவும் ஏற்பட்டது. அடிக்கடி அலுவலகத்துக்கு விடுமுறை எடுத்து வீட்டுக்குள் முடங்க ஆரம்பித்தான். ஒருவேளை தன்னையும் இவர்கள் என்றாவது மறைந்துப்போனவர்களின் பட்டியலில் சேர்த்துவிடுவார்களோ என்று அவன் பயந்திருக்கலாம்.

அவனை எப்படி தேற்றுவது என்று குழம்பியிருந்தேன். காலம் தேற்றுமா அல்லது நான்தான் ஏதாவது செய்து அவனை தேற்ற வேண்டுமா என்று குழம்பிக் கொண்டிருந்தேன். நம்பிக்கைக்கும், நம்பிக்கையின்மைக்கும் இடையே ஊசாலடுவதை போன்ற கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த உலகில் எல்லாரும் ஏதோ ஒருவகையில் கடவுள் இல்லை என்று நம்புகிறோம். ஆனால் சில விநாடிகளாவது கடவுள் பற்றி சிந்திக்கிறோம். கற்பு பற்றி பேசுகிறோம். பிறகு ஓடிப்போன காதலியை நினைத்து ஏதாவது ஒரு தருணத்தில் கரமைதுனம் செய்கிறோம். எல்லாவித தர்க்கங்களையும் மீறவே மனது துடிக்கிறது. ஆனால் மீண்டும் மீண்டும் யாராவது ஒருத்தர் ஒழுக்கம்,விழுமியங்கள்,அறம் என்று சொல்லி நமது கால்களை வாரி கீழே இழுக்கிறார்கள். நியதிகளுக்கும், உணர்சிகளுக்கும் இடையேத்தானே ஊசலாடுகிறோம். மறைந்துப்போனவர்களை பற்றிய அத்தனை கதைகளையும் நாங்கள் தீவிரமாக நம்புகிறோம். அதனால் எங்களுக்கு அவ்வளவாக மனசஞ்சலங்கள் இல்லை. மறைந்துப்போனவர்களை பற்றிய கதைகளை நம்பாமல் போனாலும் சஞ்சலங்கள் இருக்காது. ஆனால் வின்சென்ட் ராஜூ இடையில் ஊசலாடிக் கொண்டிருந்தான். அது கிட்டத்தட்ட பத்து பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் எனக்கு ஏற்பட்டிருந்த மனநிலை. இன்னமும் ராஜூவுக்கு எப்படி மனிதர்கள் காற்றில் மறைந்துப்போவார்கள் என்பதுதான் புதிராக இருந்திருக்கக்கூடும். நீங்கள் அதீதப்புனைவுகளை சொல்லி என்னை குழப்புகின்றீர்கள் என்று சொல்லும் அவன் என்னை பற்றிய தப்பபிப்ராயத்தை கொண்டிருக்கலாமென்றும் அதை நீக்குவது எனது கடமையென்றும் தீவிரமாக நம்பினேன்.

அன்று வழக்கம்போல அலுவலகத்துக்கு சென்றபோது நான் பார்த்த ஒரு செய்தி என்னை மிகவும் நம்பிக்கை கொள்ள வைத்தது. சொல்லப்போனால் எங்களைப் போன்று உலகெங்கும் ரகசிய கணக்குப்புத்தகங்களை வைத்திருப்பவர்களை அவர்களது மனதின் மூலையில் இருக்கும் கொஞ்சமேனும் உறுத்தல்களை (அப்படி உண்மையில் இருந்தால்) கூட எங்களிடமிருந்து காணாமல் போக வைத்தது. பிணைப்புகள் விடுப்பட்ட சுதந்திர படகுகள் போல நாங்கள் சந்தோஷ அலைகளினூடாக பறந்து சென்றோம்.

நான் வின்சென்ட் ராஜூ இருக்கைக்கு சென்றிருந்தேன். இருண்டிருந்த முகத்துடனும், ரத்தம் வற்றிய உடலுடனும் சோகையாக ஆர்வமற்று அவனுக்கு தரப்பட்ட ஏதோ வேலையை ஒரு இயந்திரம் போல செய்துக்கொண்டிருந்தான். அவனது கணிப்பொறியில் உலகச்செய்தி இணையதளத்தை பார்க்கச்சொன்னேன். மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனாவின் தலைநகர் பீஜிங்குக்கு 239 பயணிகளுடன் புறப்பட்டுச்சென்ற MH370 என்ற விமானம் காணாமல் போயிருந்தது. எங்கள் அலுவலகமே பரபரப்பாக இருந்தது. விமானத்தில் பயணம் செய்த ஆட்களின் கதி என்னவென்று தெரியவில்லை. கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதா என்றும் தெரியவில்லை. விமானம் கடலில் விழுந்துவிட்டது என்றும், தீவிரவாதிகள் கடத்திச்சென்றுவிட்டார்கள் என்றும் வழக்கம்போல ஊகக்கதைகள் கிளம்பின. கடலில் விழுந்துவிட்டதாக சொன்ன விமானத்தின் சிறுதுண்டை கூட யாரும் கண்டுப்பிடிக்கவில்லை. எந்த தீவிரவாத இயக்கமும் நாங்கள்தான் விமானத்தை கடத்திச்சென்றோம் என்று பொறுப்பேற்கவில்லை. உலகெங்கும் இருக்கும் துப்பறியும் நிறுவனங்கள், கடற்படை,விமானப்படை வீரர்கள் எல்லாம் ஒருவாரம் தேடிப்பார்த்துவிட்டு எந்த முயற்சியும் பலனிக்காமல் விமானம் மறைந்துவிட்டது என்று வெளியுலகுக்கு அறிவித்திருந்தார்கள்.

ராஜூவிடம் பெருமையாக அந்தச்செய்தியை சுட்டிக்காட்டி சொன்னேன்.

“இப்போதாவது எங்களை நம்புகிறாயா? உன்னிடம் கொஞ்சம் தனியாக பேசவேண்டும். தேநீர் அருந்த போகலாமா?”

நாங்கள் இருவரும் தேநீர் எடுத்துக்கொண்டு அலுவலகத்தின் மொட்டை மாடிக்கு சென்றோம். மாலை நேரம் எனபதால் மேகங்கள் திரண்டு எந்நேரமும் மழைப்பொழியும் சாத்தியக்கூறுகளை தூரத்தில் வெட்டிக்கொண்டிருந்த மின்னல்கள் காட்டிக்கொடுத்தன. வானத்தில் பறவைகள் வேகமாக கூடுகளுக்கு திரும்பிக்கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.

“இப்போதாவது நம்புகிறாயா? அவ்வளவு பெரிய விமானம் மறைந்துப்போனதென்று உலகம் ஒத்துக்கொண்டார்கள். நாளை அல்லது நாளை மறுநாள் எல்லாம் இயல்புப்படி திரும்பிவிடும். அவரவர் வேலைகளை கவனிக்கச் சென்று விடுவார்கள்”

“எப்படி அவ்வளவு பெரிய விமானம் மறைந்துப்போனது?”

“தெரியவில்லை. மறைந்துப்போனதுதான் முக்கியம். அதுவும் அந்நாட்டு அரசாங்கமே மறைவுநேரத்தை அறிவித்துள்ளது. ஆட்களும் கூடவே மறைந்துவிட்டார்கள். பொருட்கள் மறைந்துப்போவதை போல மனிதர்களும் மறைந்துப்போவதை இப்போதாவது நீ நம்பித்தான் ஆகவேண்டும். இந்த அலுவலகம் மட்டுமல்ல. உலகெங்கும் இருக்கும் பல அலுவலகங்களில், பள்ளிகளில், கல்லூரிகளில், ஏன் கோவில்களில் கூட மனிதர்கள் மறைந்துக்கொண்டே இருக்கிறார்கள். மனிதர்கள் இறப்பது எவ்வளவு இயல்போ அத விட இயல்பிலும் இயல்பு மனிதர்கள் மறைந்துப்போவது. பல பக்தி இதிகாச கதைகளில் மனிதர்கள் மறைந்து இறைவனோடு கலந்துப்போகும் கதைகளை நீ கேட்டதேயில்லையா? ஏன் சில வரலாற்று நாயகர்கள் மறைந்துப்போனதில்லையா? நமது அலுவலகத்தில் மட்டுமல்ல உலகெங்கும் ரகசிய கணக்குப்புத்தகங்கள் உள்ளன. அந்த புத்தகங்களை பராமரிப்பவர்களே மறைந்துப்போனவர்களை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியுலகுக்கு சொல்கிறார்கள்”

ராஜூ கண்களில் இருந்த சோகை சற்று மறைந்தது போலவும் அவன் என் பேச்சை ஆர்வமாக கேட்டுக்கொண்டிருப்பது போலவும் தோன்றியது. நான் எனது பேச்சை நிறுத்திவிட்டு வானத்தில் எங்கள் தலைக்கு மேலே பறந்துக்கொண்டிருந்த பறவையை காட்டினேன்.

“அதைப்பார். சற்று நேரத்தில் மறைந்துவிடும்”

நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அது வடகிழக்காக ஏதோவோர் தடத்தில் சென்று மறைந்தது.

“இப்போது நீ சற்று நேரம் வானத்தில் வேறு திசையை பார்த்துவிட்டு அல்லது கீழே உனது இருக்கைக்கு சென்று திரும்பிவந்து மீண்டும் வானத்தை பார்த்து அந்த பறவை வானத்தில் பறந்துப்போன தடத்தை சரியாக குறித்து சொல்ல முடியுமா?”

‘அதெப்படி முடியும்? அதென்ன தரையில் நடக்கும் விலங்கா? காலடித்தடங்களை விட்டுச்செல்ல?”

“சரியாக சொன்னாய். மறைந்துப்போனவர்கள் ஒருவகையில் பறவைகளை போன்றவர்கள். மறைந்துப் போனவர்களின் தடங்கள் ரகசியங்கள் நிறைந்தது. மறைந்துப்போனவர்களின் நிழல்கள் அவர்களை போன்றே மர்மம் கலந்த விசித்திரமும், புதிர்த்தன்மையும் நிறைந்தவை. மறைந்துப் போனவர்களின் நிழல்களை விரட்டிக்கொண்டுச்செல்வது உனக்கு நல்லதல்ல. அது உன்னை நிம்மதியிழக்க வைக்கும். சொல்லப்போனால் அந்த பறவை தன்னுடன் எப்படி தனது தடத்தையும் கொண்டுச்சென்றதோ அதுபோலத்தான் மறைந்துப்போனவர்களும் தங்கள் நிழலை தங்களுடன் எடுத்துச்செல்கிறார்கள். ஆனால் நாம்தான் அவர்களது நிழல்கள் இங்கேயே சுற்றிக்கொண்டிருப்பதாக நினைத்து சஞ்சலமடைகிறோம். மறைந்து போனவர்களின் நிழலை நினைத்து அதிகம் அலட்டிக்கொள்ளாதே. அது உன்னை தீவிர மனச்சிதைவுக்கு உள்ளாக்க நேரிடும்”

ராஜூவுக்கு இப்போது ஓரளவு என் மீது நம்பிக்கை வந்தது போல தெரிந்தது. நான் அவனிடம் சொன்னேன்.

“ஒரு பறவை மறைந்துப்போவதை போன்றுதான் ஒரு விமானம் மறைந்துப்போவதும். அவ்வளவு பெரிய விமானம் மறைந்துப்போவதை எப்படி நாம் ஏற்றுக்கொண்டோமே அதுபோலத்தான் இங்கு மனிதர்கள் மறைந்துப்போவதும்”

“ஆம் இப்போது நான் ஏற்றுக்கொள்கிறேன். ஒரு பறவை மறைந்துப் போவதில் ஏற்படும் பதற்றம் ஒரு விமானம் மறைந்துப்போவதை விட குறைவுதான். சொல்லப்போனால் பறவை மறைந்துப்போவதை நாம் நம்பமாட்டோம். ஆனால் விமானம் மறைந்துப்போவதை நம்ப ஆரம்பித்துள்ளோம்”

நாங்கள் இருவரும் மெல்ல தலையசைத்து புன்னகை செய்துக்கொண்டோம். காலி தேநீர் கோப்பையை குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு எங்கள் இருக்கைக்கு சென்றோம். அடுத்தடுத்து வந்த நாட்களில் அப்படியொரு விமானம் இருந்ததையையும் அதில் பயணம் செய்த 239 பயணிகள் மறைந்துப்போனதையும் உலகம் மறந்துவிட்டது. எப்படி நாங்கள் சரவணனையும், அவனுக்கு முன்னரும், பின்னரும் மறைந்துப்போன இன்னபிற நண்பர்களை மறந்துப்போனோமோ அதைவிட சுலபமாக. வின்செட் ராஜூ உற்சாகமாக அவனது வேலைகளை கவனிக்க ஆரம்பித்திருந்தான். இப்போதெல்லாம் ஒவ்வொரு மாதமும் நடக்கும் மறைந்துப் போனவர்களை பற்றிய அறிவித்தல் கூட்டங்களில் ராஜூவும் கலந்துக் கொள்கிறான். மறைந்துப்போனவர்களை பற்றிய ரகசிய கணக்குப்புத்தகத்தை பராமரிக்கும் எங்களுள் ஒருவனாக அவனும் மாறியிருந்தான்.

Comments are closed.