கதையின் ஆன்மாவைத் தவற விடுதல் – பாகம் 12 – திரைக்கதை சில குறிப்புகள். / B.R.மகாதேவன்

[ A+ ] /[ A- ]

download

அத்தியாயம் 12

உங்கள் கதை, அதாவது நாயகன் யார்..? அவனுடைய இலக்கு என்ன..? அதற்குத் தடைகள் எப்படி, யாரால் வருகின்றன என்ற இந்த மூன்று அம்சங்களும் தீர்மானமாகிவிட்டால் அடுத்ததாக நீங்கள் செய்ய வேண்டியது ஆராய்ச்சி. கதை நிகழும் இடம், காலம் ஆகியவற்றுக்கு ஏற்ப மனிதர்கள் என்னவிதமான உடை அணிந்திருந்தார்கள், என்னவிதமான பொருட்களைப் பயன்படுத்தினார்கள் என்பது போன்ற இரண்டாம் நிலை தரவுகளைச் சேகரிக்க மட்டுமல்லாமல் திரைக்கதைக்கும்  ஆராய்ச்சி பெரும் பங்காற்றமுடியும்.

ஒருவர் தன் மகனுடைய படிப்புக்காக மிகவும் சிரமப்பட்டு படிக்க வைப்பதாக ஒரு கதை நிகழ்வு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவர் கிராமத்தில் இருக்கும் விவசாயி என்றால்  விதை நெல்லை விற்றுப் படிக்க வைப்பதாகக் காட்டலாம். ஒரு விவசாயிக்கு விதை நெல் மிகவும் முக்கியமானது. புனிதமானது. ஆனால், தன் மகனுடைய படிப்பை அதைவிட உயர்வாகக் கருதுகிறான் என்று காட்ட அந்த சித்திரிப்பு உதவும். ஒரு நகர்ப்புற உயர் வர்க்க பெண் தன் மகனுடையை படிப்புக்காகத் தன்னுடைய கணினித்துறை வேலையை ராஜினாமா செய்துவிட்டு தன் மகன் படிக்கும் பள்ளியிலேயே ஆசிரியராகச் சேருகிறார் என்பது அந்த வர்க்கத்து நபரின் அக்கறையைச் சித்திரிக்க உதவும். இவையெல்லாம் ஒருவகையில் அந்தக் கதாபாத்திரத்தின் உலகுக்குள் நாம் சென்று கற்பனையாக உருவாக்கும் கதை நிகழ்வுகள்.இந்த நிகழ்வுகள் எந்த அளவுக்கு மண்ணில் கால் ஊன்றியதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அவை கதைக்கு வலு சேர்க்கும். அதற்கு கதை நிகழும் இடம், காலம், அந்த மனிதர்களின் வாழ்க்கை முறை குறித்த விரிவான ஆராய்ச்சி அவசியம்.

உங்கள் கதை கிராமத்தில் நடப்பதாக இருந்தால் பஞ்சாயத்து காட்சி அதில் கட்டாயம் இடம்பெற வேண்டியிருக்கும். நீங்களே கற்பனையாக ஒரு வழக்கை உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால், கிராமத்துக்குச் சென்று அங்கு பஞ்சாயத்து நடக்கும் விதத்தைப் பார்த்தும் முன்பு நடந்த சுவாரசியமான வழக்குகள் பற்றிய தகவல்களைச் சேகரித்தும் கொண்டால் உங்கள் திரைக்கதைக்கு நம்பகத்தன்மையும் சுவாரசியமும் அதிகரிக்கும்.

உதாரணமாக, கிராமத்தில் ஒரு விழாவில் நகை திருடு போய்விடுகிறது. விழாவுக்கு வந்த வெளியூர்க்காரர்களையோ உள்ளூர்க்காரர்களையோ யாரையும் சந்தேகப்படமுடியாது. அதே நேரம் அவர்களில் ஒருவர்தான் நகையை எடுக்கவும் செய்திருக்கிறார்.  வழக்கு ஊர் பெரியவரிடம் வருகிறது. அவர் சமயோசிதமாக பிரச்னையைத் தீர்க்கிறார். ஊரை விட்டு யாரும் போகக்கூடாது என்று முதலில் உத்தரவிடுகிறார். அனைத்து வீடுகளுக்கும் ஒரு சாணி உருண்டையைக் கொடுத்தனுப்புகிறார். திருடிய வீட்டுக்காரன் நகையை அந்த சாணி உருண்டைக்குள் வைத்து அனுப்பிவிடுங்கள், மன்னித்துவிடுகிறேன் என்று சொல்கிறார். அனைத்து வீட்டில் இருந்து சேகரிக்கப்படும் சாணி உருண்டையை ஊர் நடுவே ஒரு பெரிய அண்டாவில் தண்ணீரை ஊற்றி க் கரைக்கிறார். கரைத்து முடித்துக் கைகளால் துழாவிப் பார்த்தால் நகை தட்டுப்படுகிறது. களவு கொடுத்தவரிடம் அந்த நகையைக் கொடுத்து இனிமேல் கவனமாக இருக்கும்படிச் சொல்லி அனுப்புகிறார். யாரையும் சந்தேகப்படாமல் துப்பு துலக்கப்படுகிறது. திருடனுக்கும் திருந்த ஒரு வாய்ப்பு கொடுத்ததுபோலவும் ஆகிறது. சோ தர்மன்  எழுதிய நாவலில் இந்தக் கதை இடம்பெற்றிருக்கிறது. அவர் எழுதியிருக்கவில்லையென்றால் இந்த விஷயத்தை நீங்கள் அந்த கிராமத்துக்குச் சென்று ஆராய்ச்சியில் ஈடுபடுவதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.

கீதாரி நாவலில் ஆடு மேய்ப்பவர்களின் வாழ்க்கை முறை மிகத் துல்லியமாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. திருமண நேரத்தில் மாப்பிளைக்கு வரமுடியாத சூழல் ஏற்பட்டால் ஆடு மேய்க்க அவர் பயன்படுத்தும் கம்பை கணவனுடைய இடத்தில் வைத்து அவனுடைய தங்கையோ அக்காவோ தாலி கட்டி பெண்ணை மணமுடிக்கும் நிகழ்வு விவரிக்கப்படுகிறது. இன்னொரு இடத்தில் அண்ணன் எதிர்பாராமல் இறந்ததும் தம்பியைக் கூப்பிட்டு அண்ணியைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்வாõர்கள். கணவன் இறந்ததும் பெண்ணை விதவையாக மூலையில் முடக்காமல் இருப்பது குறித்து பெருமைப்படலாம். அல்லது தெய்வமாக மதிக்க வேண்டிய அண்ணியையே திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறார்களே என்று விமர்சிக்கலாம். கதையில் நீங்கள் இந்த நிகழ்வை எப்படி வேண்டுமென்றாலும் இடம்பெறச் செய்ய முடியும். ஆனால், இப்படி ஒரு நிகழ்வு சகஜம்தான் என்பது உங்களுக்குத் தெரியவேண்டுமென்றால் ஒன்று நீங்கள் இந்த நாவலைப் படித்திருக்கவேண்டும். அல்லது இந்த சம்பவம் நிகழ்ந்த கிராமத்தில் வசித்திருக்கவேண்டும். அல்லது நாலு பேரிடம் பேசிப் பார்த்திருக்கவேண்டும். இப்படியான ஆராய்ச்சிகளே உங்கள் கதையை மண்ணில் வேரூன்றச் செய்யும். சர்வதேசத் தரம் என்பது இப்படியான பிராந்திய நுட்பங்கள் உங்கள் படைப்பில்  இடம்பெறுவதில்தான் இருக்கிறது.

கதை எதை மையமாகக் கொண்டதோ அது தொடர்பான நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், திரைப்படங்கள், ஆவணப்படங்கள் இவற்றைப் பார்ப்பது/படிப்பது மிகவும் அவசியம். கதை சமகால நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது என்றால் கதை நிகழும் இடத்துக்குச் சென்று அங்கு பலரைச் சந்தித்து பேசிப் பார்த்து முடிந்தவரை தகவல்களைச் சேகரித்துக்கொள்ளவேண்டும். கூடுதல் தகவல்கள் இருந்தால் எளிதாக, சுவாரசியமாகக் கதையை வளர்த்தெடுக்க முடியும்.

அதிலும் குறிப்பாக வரலாற்றுக் கதைகள் திரைப்படமாகஎடுக்கப்படுகிறதென்றால், விரிவான ஆராய்ச்சி மிகவும் அவசியம். கற்பனைக் குதிரையின் பாய்ச்சலுக்குக் கலையில் நிச்சயம் இடம் உண்டு. என்றாலும் உண்மையின் புல்வெளியில்தான் அது பாய்ந்தோடவேண்டும். அப்போதுதான் வரலாறாக அது ஆக முடியும். தமிழில் இதுவரை எடுக்கப்பட்ட படங்களிலேயே தமிழ் மக்களால் அதிகமும் விரும்பப்பட்ட வரலாற்றுப் படம் என்று பார்த்தால் வீர பாண்டிய கட்டபொம்மனைச் சொல்லலாம். கிருஷ்ண பரமாத்மாஇன்று கண் முன் தோன்றினால் கூட ராமாராவின் சாயலில் இல்லையென்றால் ஆந்திராக்காரர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றுசொல்வார்கள். அதுபோல் அதே திராவிட ரத்தம் ஓடும்நாம் நம் பங்குக்கு வீர பாண்டிய கட்டபொம்மன் நாளை எழுந்துவந்தால் அவர் சிவாஜி சாயலில் இல்லையென்றால் அவரை ஏற்றுக்கொள்ளமாட்டோம். அந்தக் கதாபாத்திரங்களை இந்தத் திரையுலக நாயகர்கள் அந்த அளவுக்கு அச்சு அசலாகப் பிரதியெடுத்திருக்கிறார்கள் என்று இதற்கு அர்த்தமல்ல. இவை நமது பாமரத்தனமான கலை ரசனையின் எடுத்துக்காட்டுகள் மட்டுமே.

வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் எப்படி ஒரு வரலாற்றுப் படம் எடுக்கக்கூடாது என்பதற்கான அழுத்தமான உதாரணம். படத்தின் ஒவ்வொரு பிரேமும் அந்த வகையில் ஒரு பாடம். மிகை என்பது எந்த அளவுக்கு கலையைச் சீர்குலைக்க முடியும் என்பதற்கான நல்ல உதாரணம். குறைந்தபட்ச ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டிருந்தால்கூட இந்தப் படம் நிச்சயம் இதைவிட மேலானதாக இருந்திருக்கும். இன்னும் சொல்லப்போனால் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுத்தான் இருந்திருக்கிறது. ஆனால், மிகவும் பிழையான, ஒருதலைப்பட்சமான ஆராய்ச்சி. ம.பொ.சி. எழுதிய கதை இந்தப் படத்துக்கு ஆதாரமாகக் கொள்ளப்பட்டிருக்கிறது. வெள்ளையத்தேவன் – வெள்ளையம்மா குறித்த நாட்டுப்புறப்பாடல்களும் ஆராய்ந்து படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், ஆடைகளில் ஆரம்பித்து அரங்க நிர்மாணம் வரையிலும் வசனங்களில் ஆரம்பித்து அதீதக் கதைநிகழ்வுகள் வரையிலும் மிகை மிகை மிகை என வரலாற்றுக்குத் துளிகூட மரியாதை தரப்படாமல் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. திரைப்படக் கலையின் ஆரம்பகட்டப் படைப்பு என்ற சலுகையையெல்லாம் தரவே முடியாது. உலகில் இதே காலகட்டத்தில் இதே வசதி வாய்ப்புகளுடன் காலத்தை வென்று நிற்கும் படைப்புகளை உருவாக்கிவிட்டிருக்கிறார்கள்.

கட்ட பொம்மு நாயக்கர் தெலுங்கர். ஆனால், படத்திலோ தாய்த்தமிழின் பெருமையை பேசியபடி அறிமுகமாகிறார். வீட்டுக்குள் அவர் நிச்சயம் தாய் மொழியில்தான் உரையாடியிருப்பார். அல்லது அவர் பேசும் தமிழாவது தெலுங்கு வாடையுடன்தான் இருந்திருக்கும். படத்திலோ அவர் அதி செந்தமிழில் புகுந்து விளையாடுகிறார். அவருடைய வசிப்பிடம் கொஞ்சம் பெரிய மாளிகைதான். ஆனால், படத்திலோ மிகவும் கஷ்டப்பட்டு ராஜஸ்தான் சென்று அங்கிருக்கும் மாபெரும் கோட்டைகளை கட்டபொம்மனின் அரண்மனையாகக் காட்டியிருக்கிறார்கள். அவர் சாதாரணமாக வேஷ்டி துண்டு, தலைப்பாகை அணிந்தவர்தான். படத்திலோ கிலோ கணக்கில் தங்க ஆபரணங்களும் கிரீடமும் பட்டும் பவளமுமாகக் காட்சி அளிக்கிறார் (வடக்கன் வீர கதாவில் வரும் மகாராஜா வெறும் ஒற்றை முத்து மாலை அணிந்து, பனை ஓலை விசிறியால் வீசிக் கொள்பவராக சித்திரிக்கப்பட்டிருப்பார்). இவைகூடப் பரவாயில்லை கட்ட பொம்மன் உண்மையில் வெள்ளையர்களுக்கு இணக்கமாகவே நடந்துகொண்டிருக்கிறார். வரி கட்டச் சொன்னபோது ஒழுங்காகக் கட்டத்தான் செய்திருக்கிறார். வானம் பொழிகிறது பூமி விளைகிறது என மஞ்சள், மசாலா எல்லாம் அரைத்திருக்கவில்லை.

பூலித்தேவன் வெள்ளையரை எதிர்த்தபோது இந்தக் கட்ட பொம்முவின் அப்பா வெள்ளையருக்குப் படை அனுப்பி உதவி புரிந்திருக்கிறார். அதனால்தான் தேவர் குலத்தினர் கட்ட பொம்முவுக்கு எதிர் நிலையை எடுத்திருக்கிறார்கள். புதுக்கோட்டை தொண்டைமான் தனது படைத்தளபதியான முத்து வைரவ அம்பலக்காரரை அனுப்பி கட்ட பொம்மனைச் சிறைப்பிடித்துக் கொடுத்திருக்கிறான். எட்டப்பனுக்கும் கட்ட பொம்முவுக்கும் இடையில் பகை உண்டுஎன்றாலும் படத்தில் காட்டப்பட்டிருப்பதுபோல் அவ்வளவு துரோகி அல்ல. எட்டப்பர் தனது ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் மிகச் சிறப்பாக ஆட்சி புரிந்திருக்கிறார். அந்த ஊர் மக்கள் கணக்கு வழக்குகளில் ஐந்து, ஆறு,ஏழு என்று அளக்கும்போது எட்டு என்ற வார்த்தையைச் சொன்னால் மகாராஜா பெயரைச் சொன்னதாக ஆகிவிடும் என்று அந்த எண்ணையே சொல்லமாட்டார்களாம். அந்த அளவுக்கு அவர் அந்த மக்களுக்கு நேசத்துக்குரியவராக இருந்திருக்கிறார்.

தூக்கில் இடப்படுவதற்கு முந்தைய விசாரணையில் கட்ட பொம்மு தன்னிலை விளக்கமாகச் சொல்லும்போதுகூட வெள்ளை அதிகாரிகள் அலுவல் நிமித்தமாக என்னை வந்து சந்தித்தபோது நான் அவர்களை மிகவும் அன்புடன் வரவேற்று நடத்தியிருக்கிறேன். நீங்கள் வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள் என்றுதான் சொல்லியிருக்கிறார். வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறயா என்று கேட்டபோது, விதிப்படி நடக்கட்டும். உங்களுக்கு எது சரியென்றுபடுகிறதோ அதைச் செய்யுங்கள் என்று பணிவாகத்தான் பதில் சொல்லியிருக்கிறார். கட்ட பொம்மு உண்மையில் வரி கட்டமாட்டேனென்றெல்லாம் மறுத்திருக்கவில்லை. ஓலை அனுப்பி தன்னை வந்து கலெக்டர் அலுவலகத்தில் சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் சொன்னதை தனக்கு இழைக்கப்பட்ட அவமனமாகக் கருதித்தான் அவரிடம் கோபப்பட்டிருக்கிறார். அப்போதுகூட சென்னைக்குச் சென்று தன் தரப்பு நியாயத்தை சொல்லி உரிய கப்பத்தைக் கட்டிவிட்டுத்தான் வந்திருக்கிறார். அவருடைய விசுவாசத்தைப் பாராட்டி ஜாக்சனை மதராஸ் பிரஸிடென்ஸி இட மாற்றம் செய்துமிருக்கிறது. இந்தத் தகவல்கள் எல்லாமே பிரிட்டிஷ் ஆவணங்களில் தெளிவாகப் பதியவைக்கப்பட்டிருக்கின்றன.

ஆதிக்க சக்தியான பிரிட்டிஷார் தமக்கு உகந்த முறையில் வரலாற்றைத் திரித்து எழுதியிருப்பார்கள். உண்மையில் நடந்தது வேறாகத்தான் இருந்திருக்கும் என்று ஒருவர் வரலற்றை மறு வாசிப்பு செய்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், இந்த உண்மைகளைப் புறமொதுக்குவதன் மூலமாக அல்லாமல் இவற்றுக்கு வேறு ஒருகோணத்திலான நியாயத்தைக் கற்பிப்பதன் மூலமாக அதைச் செய்யவேண்டும். உண்மையில் கட்ட பொம்மு ஆங்கிலேயருடன் இணக்கமாக நடந்துகொண்டது ஒரு ராஜ தந்திரம் என்று மறுவாசிப்பு செய்திருக்கலாம். அதற்கான அனைத்து சாத்தியங்களும் இருந்திருக்கின்றன. வெள்ளையர்களிடம் துப்பாக்கிகளும் பீரங்கிகளும் இருக்கின்றன. நம்மிடம் வேலும் வாளும் வில்லும் அம்பும் மட்டுமே இருக்கின்றன. எனவே அவர்களை வெல்லுவது கடினம். நாம் அவர்களுடன் நட்புறவுகொண்டதுபோல் நடித்து துப்பாக்கி, பீரங்கிகளை இயக்குவதில் தேர்ச்சி பெறுவோம். போதிய அளவுக்கு அந்த ஆயுதங்களைச் சேகரித்துக் கொள்வோம். அதன் பிறகு அவர்களைத் தாக்குவோம் என்று தீர்மானித்து அவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்கிறார் என்று அந்த நிகழ்வுகளை மறுவாசிப்பு செய்திருக்கவேண்டும். நிற்க வைத்து கணக்கு கேட்டபோதும் கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல்  புலி பதுங்குவது பாயத்தான் என்பதுபோல் அவர் நடந்துகொண்டதாகக் காட்டியிருக்கவேண்டும். ஏனென்றால், சரித்திரமாக நம்மிடம் கிடைத்திருப்பது அந்தத் தகவல்கள்தான். அவற்றை மாற்றக்கூடாது. மறுவாசிப்பு மட்டுமே செய்ய முடியும்.

அல்லது குறைந்தபட்சம் இந்த ஆவணங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லிவிட்டு, உண்மையில் அவர் வேறு வகையான வீரராக இருந்திருக்கிறார். நிஜத்தில் தூக்கிலிட்டுக் கொன்றதோடு சரித்திரத்திலும் குழி தோண்டிப் புதைத்திருக்கிறார்கள். அவருடைய உண்மை கதையைப் பதிவு செய்தால் அது அடுத்த தலைமுறைக்கு வீரத்தை ஊட்டி மீண்டும் கலகத்தைத் தூண்டிவிடும். எனவே அவரை கோழையாகவே சித்திரித்துவைப்போம் என்று முடிவெடுத்துப் போலி ஆவணங்களாக கட்டுக்கதைகளை இட்டுநிரப்பியிருக்கிறார்கள் என்றாவது நமது புதிய கதைக்கு ஒரு நியாயத்தைக் கொண்டுவந்திருக்கவேண்டும். அதுவும் செய்யவில்லை. இந்தத் தவறு ஏன் நிகழ்ந்தது என்றால் முறையான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. ஒருசில ஆவணங்களை மட்டுமே படித்துவிட்டு வரலாற்றைக் கட்டமைத்துவிட்டிருக்கிறார்கள். இதனால்தான் அந்தப் படம் தமிழ் எல்லை தாண்டி அதிலும் அந்தத் தலைமுறையைத்தாண்டி வரமுடியாமல் முடங்கிப் போய்விட்டிருக்கிறது. இன்று குறைந்தபட்ச வரலாற்று புரிதலோடு இருக்கும் எவருக்கும் அது அடைந்திருக்கும் வீழ்ச்சியை எளிதில் புரிந்துகொள்ளமுடியும்.

இப்போதும்கூட கட்டபொம்முவின் வாழ்க்கை மறு திரைப்படமாக  எடுக்கப்படவேண்டிய ஒன்றே. உண்மையில் அதுவே முதல் முயற்சியாகக் கருதவேண்டியதாக இருக்கும். அதற்கு அனைத்துத் தரப்புத் தகவல்களையும் விரிவாக ஆராய்ந்து உங்கள் திரைக்கதையை அமைத்துக்கொள்ளவேண்டும். பூலித்தேவன் வெள்ளையர்களால் கொல்லப்பட்டார். ஆனால், அவரைப் பற்றிய ஒரு நாட்டுபுறக் கதையில் வேறுவிதமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறார். வெள்ளையரால் சிறைபிடித்து வரப்பட்ட அவர் சங்கரன் கோவில் கருவறைக்குள் சென்று இறைவனோடு ஐக்கியமாகிவிட்டதாக ஒரு கதை சொல்லப்படுகிறது. அவருடைய அல்லது அதுபோல் வெள்ளைக்காரர்கள் கொன்ற போராளி ஒருவர் மக்களின் கதையில்  நாயகனாக, தெய்வமாக உயர்ந்து நிற்பதைப் பார்க்கும் வெள்ளையர்கள் கட்டபொம்முவும் அதுபோல் நாயகனாகிவிடக்கூடாது என்று தீர்மானிக்கிறார்கள். அவரை கொள்ளைக்காரர் என்றும், அயோக்கியர் என்றும், கோழை என்றும், கப்பப் பணத்தைக் கட்டுவதற்காக ஊர் ஊராக ஓடிவந்தவர் என்றும், நிற்க வைத்துக் கேட்ட கேள்விகளுக்கு கைகளைக் கட்டிக்கொண்டு பதில் சொன்னவர் என்றும், போரில் ஓடி ஒளிந்தவர் என்றும் பொய்யாகக் கதை புனைந்திருக்கிறார்கள். உண்மையில் அவர் மாவீரரே என்று திரைக்கதையை வடிவமைக்கலாம். ரொஷோமான் திரைப்படத்தில் உண்மையின் பல வடிவங்கள் முன்வைக்கப்படும். அது  உண்மையில் தனி நபர் சம்பந்தப்பட்ட, மிகச் சிறிய விஷயம். அதில் பெரிதாக வேறு பரிமாணங்கள் கிடையாது. ஆனால், ஆதிக்க சக்தி எழுதிய உண்மைக்கும் எளிய மக்கள் முன்வைக்கும் உண்மைக்கும் இடையிலான  விளையாட்டாக கட்டபொம்முவின் திரைக்கதையை அமைத்தால் அது கூடுதல் வலிமையைப் பெறும். ஆதிக்க சக்தியின் முன்வைத்த வரலாற்றில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் இரண்டாம் பாதியில்  மறு கோணத்தில் சித்திரிப்பதென்பது மிகப் பெரிய, சுவாரசியமான சவால். ஆதிக்க சக்தியின் வரலாற்று மண்ணைத் தோண்டி எடுத்து உண்மையின் சிலையை ஒவ்வொரு உறுப்பாக உயிர்த்தெழச் செய்வதைப் போன்றது. ஆனால், இதற்கு  ஆதிக்க சக்தி எழுதியிருக்கும் வரலாறை முழுவதுமாக அலசி ஆராய்ந்தாக வேண்டியிருக்கும்.

Comments are closed.