கலாப்ரியா கவிதைகள்

[ A+ ] /[ A- ]

 

download (12)

 

 

 

 

 

 

 

 

 

தலை நகர்
கழுவேற்றி முடுக்கு
வழியாகச் சென்று
வடக்குக் கோபுர வாசலில்
நுழையும் போதெல்லாம்
தோன்றுவதுண்டு
கழுவேற்றும் முன்
கடைசி ஆசையாகக்
கோவிலைத் தொழச்செய்து
கூட்டி வந்தவன் ஆவி
எதிர்ப்படுமோ என்று

இப்படித்தான்
தேர்வுக்கு முந்திய
விடுமுறை நாட்கள்
ஆரம்பித்துத் தேய்ந்தன

காவல்ப் பிறைத் தெரு
கடந்து பூதத்தான் முக்கு
நெருங்கும் போதெல்லாம்
தோன்றும்
இங்கே காவலர்கள் இருந்தாரா
கைதிகள் காவலில் இருந்தாரா

இப்படித்தான்
தேர்வில் தோற்று
ரத வீதிகள் சுற்றிய
கடுத்த நாட்கள் கடந்தன

வெளித் தெப்பம்
தன் கீழ்ப் பக்கத்து
புற மடைத்தெரு
வீடுகளுக்கெல்லாம்
தளும்பினாலும்
சகதியாய்க் கிடந்தாலும்
நீர்க் குளுமை வழங்கும்

”வட்டங்கள் இட்டும்
குளமகலாத மணித் தெப்பம்
போலே”
ஜன்னலில் எப்போதும்
அமர்ந்திருக்கும்
அம்மை வாரிக் கொண்டு போன
அழகான முகத்துடன்
இனி ஆறுதலுக்காகப்
பார்க்க வராதே என்னும்
இளம்பருவத்தோழி

தலை நகர் நாகரிகம்
தெருப் பெயர்களால்
அறியப்படும் ஊர்க்காரன்
மண்புழு தின்று செரித்த
மென்னிலமாய்
இறந்த காலம்
எளிதாய் வேர் விடும்
மூளையுடன்
ஏதோ சிற்றூரில்
இடம் பெயர்ந்து.

Comments are closed.