மந்தரக்ரந்தா சென் – ஆங்கிலத்தில்: Arunava Sinha தமிழில்: கனவு திறவோன்  

[ A+ ] /[ A- ]

 

mandakranta_sen_picjpg_220x500

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

1972ல் பிறந்த மந்தரக்ரந்தா சென் பெங்காலி கவிதையுலகில் தவிர்க்க இயலாத ஆளுமை. அவர் 19 கவிதை தொகுப்புகளும், 8 நாவல்களும், இரு சிறுகதை தொகுதிகளும் எழுதியிருக்கிறார். இவரது படைப்புகள் பல ஆங்கிலத்திலும் பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இங்கே மந்தரக்ரந்தாவின் மூன்று கவிதைள் தமிழில்.

 

உனக்கு நீந்தத் தெரியுமா?

 

நீ சொன்னால்

நான் ஜீன்ஸ் அணிவதை நிறுத்திக் கொள்வேன்

இலகுவாக இன்னொரு பெண்ணாகிடுவேன்

உன்னை நேசிக்கும் சிறுமிக்கு

எண்ணையால் மென்மையாக்கப்படாத

குட்டை முடியென்று யாரிடமோ சொல்லியிருக்கிறாய்.

இஃது அசாத்தியமானதா?

ஒர் ஊதா புடவையை அவிழ்க்கையில்

உன் கால்களைச் சுற்றி நதி ஓடுமென்று

நீ நினைத்தால் நாளை முதல்

எனக்கே நான் அந்நியமாகிப்போகிறேன்.

என் ஆண்மைத்தனமான பழக்கங்களை

காற்றோடு சுண்டியெறியத் தயார்.

ஜீன்ஸ் அணிவதை எளிதில்

நிறுத்திக் கொள்ள முடியும்

நான் ஒரு நதியாக

பிரவாகமெடுக்க வேண்டுமெனின்.

ஆனால் உனக்கு நீந்தத் தெரியுமா?

 

பக்தன்

 

ஞாபகமிருக்கிறதா?

நீ துண்டு காகிதங்களால் ஓவியங்கள் செய்வாய்.

ஒவ்வாத தேவதைகளையும் செய்திருக்கிறாய்.

தலையிலிருந்து முளைக்கும் கைகள்

முளைகளே கண்களாகி வழிக்கும் நிர்வாணம்

விசித்திரமாய் இரு சகோதரர்களுடன் விளையாடும்
இல்லை அவர்கள் சகோதரிகள், உண்மையாகவே

தேவதை பெண்ணாகத்தானிருக்கணும்

பற்பல தொப்புள்கள் அவளது இடுப்பை மறைத்தது

அவள் காலில் உன் உதடுகளைப் பதிக்கிறாய்

புனிதமான யோனியை நெற்றியில் அமைக்கிறாய்.

அந்தோ!

அவளது மூன்றாவது கண் வெளிச்சம் காட்டுகிறது

இஃது ஒளியா? நெருப்பா?

நீ எரிந்து விழுகிறாய்.

பக்தனிடமிருந்த எல்லாவற்றையும்

தேவதை எடுத்துக் கொள்ளுகிறாள்!

கடைசி முத்தத்திற்குப் பிறகு

 

கடைசி முத்தத்தின் போது உதிர்ந்த
மயிரை எடுத்து வருவேன்.
இதனால் வாழ்க்கை மாறிவிடாது.
இந்தப் பிழையும் கடந்து போகும்.
க்ஷண கால மரணம்
எத்தனை உயிர்களின் நிர்ப்பந்தங்கள்?
ஒரு துளி வியர்வையைப் புருவத்தில் காட்டி,

நீ ஒர் ஆழிப்பேரலையை
என் உதட்டிலிருந்து உறிஞ்சிக்கொண்டாய்.
அதை எனக்குத் தந்துவிடு.
தாகத்தில் துவளும் நான் அதையாவது குடிக்கட்டும்.
இந்தக் கடைசி முத்தத்திற்கு முன்
எவ்வளவு வாழ்ந்தேன்?
இன்னும் எவ்வளவு மீந்திருக்கிறது?
வெறும் முடிக்குஞ்சம் தானா?
இதை என் விரலில் சுற்றிக் கொள்வேன்.
அந்த விரலைத்தான் நீ முதலில் தொட்டாய்.
தொடு. நிறையத் தொடு.
வாழ்க்கை சடுதியில் கடந்து போகட்டும்.
என் ரகசியக் குழந்தைக்காக
என் ஆத்மார்த்த காதலனை நாடுவேன்.
அவன் முடி உன்னது போலிருக்கும்
எல்லையில்லா என் இடம்.

 

************

Comments are closed.