நத்தை ( கவிதைகள் ) சின்னப்பயல்

[ A+ ] /[ A- ]

download (10)

நீ யாரிடமும்
இதுவரை
பாடாத பாடலை
கேட்கக்காத்திருக்கிறேன்

****

மேகங்கள்
பிரிக்கும் வானத்தை
பறவைகள்
பிணைக்கின்றன

****

காகிதக்கப்பல்
செய்து வைத்துக்காத்திருந்தேன்
கனவில் தான் மழை வந்தது
அந்தக்கப்பலை
கனவினுள் எடுத்துச்சொல்லும்
ரகசியத்தை தேடிக்கொண்டிருக்கிறேன்

****

முதன்முதலாய் சயனைடு
சுவைத்த நாள் இன்று
இன்னமும் உயிர்ப்போடு
இருக்கிறேன்
கொஞ்சம் முன்னரே
சுவைத்திருக்கலாம்
உன் உதடுகளை

****

காதலில்
காத்திருக்க வைத்தாள்
இப்போது
காதலுக்காகவும்

****

காய்ந்த மரத்தின்
கொப்புகள்
அற்றகுளத்து மீனின்
முள்ளெலும்புகள்

****

எத்தனை துடைத்தும்
கண்ணாடியில் பனித்திரை
விலகவேயில்லை
இத்தனை நாளும்
வெளியேயே
துடைத்துக்கொண்டிருந்திருக்கிறேன்

****

சொற்களற்ற மொழியில்
இத்தனை நாளும் பேசித்தானிருக்கிறாய்
எனக்குத்தான் விளங்கவில்லை

****

நினைத்த
எதுவும் இதுவரை
கிட்டாத கவிஞனைப்போல்
இருக்கிறேன்

****

கூட்டில் விட்டுச்சென்ற
தாய்ப்பறவையின் நம்பிக்கை
உன் மேல்

****

போதி மரத்து
இலைகளும்
உதிர்கின்றன

கடந்து சென்ற
உன்னால்
நிழல் படுவதை
தடுக்கமுடியவில்லை

****

மெதுவாக நகரும்
நத்தை
மழைக்காலத்திலிருந்து
வெயிற்காலம் வரை

****

கவிதைகளை
ரசிக்கவேணுமென்றில்லை
உருவாக்க உதவுகிறாய்
அது போதும்

****

என்ன பிடிக்கும்
எனத்தெரிந்தால் கொடுத்துவிடலாம்
இல்லையேல்
முத்தம் தான்
கொடுக்கவியலும்

****

உன்னில் ஆர்வமுண்டாக்க
என்னில் இந்தக்கவிதைகளைத்தவிர
வேறேதும் இல்லை

****

ஈர்ப்பு விசையில்லா இடத்தில்
பொழிந்த மழை எனது
உனை வந்து சேரவேயில்லை

எனக்கும் அலகு இருந்திருப்பின்
கண்ணாடியை
கொத்திக்கொண்டுதானிருப்பேன்

****

கோடைச்சிறுநீர் போல
உன் அன்பு
சிறுத்துவிட்டது

****

பிறர் இரங்கற்பா
பாடுமளவுக்காவது
கொஞ்சம்
எழுத வேணும்

****

நாட்காட்டியின்
தாளைக்கிழிப்பது போல்
அத்தனை சுலபமில்லை
இந்த நாளைக்கடத்துவது

••••••••

Comments are closed.