பிரத்யுக்ஷா பிரஜோத் ( அறிமுகப் படைப்பாளி ) கவிதைகள்

[ A+ ] /[ A- ]

images (17)

இக்கால மாந்தர்

**

நயம்பட பேசி

நன்னடத்தை காட்டி

இன்முகம் பூண்டு

இனிப்பாய் சேதி சொல்லி

நட்பாய் பழகுவார்

சந்தர்ப்பம் வாய்த்தால்

நஞ்சை உமிழ்ந்து

முதுகில் குத்தி

வரைமுறையின்றி வசைபாடி

எதிராய் கூட்டம் சேர்த்து

காரி உமிழ்ந்து

கை தட்டலும் பெறுவார்

இக்கால மாந்தர் இவர்
••

நிழல் வேண்டி

**

நீண்ட நெடுந்தூர பயணமொன்றில்

மனித காட்டின் நடுவில்

சுட்டெரிக்கும் சூரியனின்

அச்சுறுத்தும் சுடு கிரணங்களிலிருந்து

தப்பி பிழைக்க பாய்ந்தோடுகிறது

உலர்ந்த வாழ்வும்

காய்ந்த வயிறும்
•••

மேடைவாசிகள்

**

நில்லாமல் நீங்கிச் செல்ல

நித்தமும் பயிற்றுவித்து

கண்களை மூடிக் கொண்டும்

நேர்க்கோட்டில் பார்வையை செலுத்தப் பழக்கியும்

தடம் புரளாமல் நடத்திச் செல்கிறது வாழ்க்கை

அருகிலோ எதிரிலோ

நிகழும் அநியாயமேதும்

நியாயமாய் தட்டிக் கேட்கப்படுவதில்லை

தனக்கு சுடும்போது

சுற்றி யாருமில்லை

அவநிலை மாற

குரல் கொடுக்கும் கூட்டத்து

தனி மனிதர் யாரும்

தனித்து செயல்படார்

கூட்டம் கலைந்தால்

மேடை பேச்சு

காற்றோடு போச்சு
நினைவடுக்கு

**

நீயும் நானும் சந்தித்த

துவக்கப் புள்ளியை

தேடி அலைகிறேன்

தடம் தெரியாமல் அழித்திட

புறந்தள்ள எண்ணி

செல் பூட்டி ஓடி ஒளிகிறேன்

என் அகம் புகும்

வித்தை அறிந்திருக்கிறாய்

அடர்ந்த காட்டின் இடுக்கினூடே

ஊடுருவி பாயும் வெளிச்சக்கீற்றாய்

உன் நினைவுகள்

கார்கால எதிர்மழையில்

ஊசலாடும் கடைசி சருகாய்

உன் இறுதி அத்தியாயம்

இன்றும் என்னுள்

களைந்தெறிய கற்கவில்லை

கரைந்துப் போகிறேன்

இன்னும் ஆழமாக

••••••

Comments are closed.