சமகாலத்தின் மீது படரும் வரலாற்றின் அபத்தம் ( தேவிபாரதியின் நட்ராஜ் மகராஜ் ) / அரவிந்தன்

[ A+ ] /[ A- ]

download-6

புதிய கதைக் களங்கள், புதிய கூறல் முறைகள் எனத் தொடர்ந்து தனது தேடலை முன்னெடுத்துச் செல்பவர்களில் ஒருவர் தேவிபாரதி. அவர் அண்மைக் காலத்தில் எழுதியுள்ள சில சிறுகதைகள், ‘நிழலின் தனிமை’ என்னும் நாவல் ஆகியவை இதன் அடையாளங்கள். அந்த வரிசையில் இன்னொரு படைப்பைத் தந்திருக்கிறார் தேவிபாரதி. ‘நட்ராஜ் மகராஜ்’ என்னும் தலைப்பில் அவர் எழுதியுள்ள புதிய நாவல், தமிழ் நாவல் பரப்பைச் சில விதங்களிலேனும் விரிவுபடுத்தக்கூடியது.

‘நட்ராஜ் மகராஜ்’ எத்தகைய நாவல்? ந என்னும் தனிநபரின் அடையாளம் குறித்த கதையா அல்லது வரலாற்றைக் கண்டறிந்து அதைத் தன் விருப்பம்போல மீட்டுருவாக்கம் செய்யும் அரசியல் செயல்பாடுகளின் கதையா? பல்வேறு தரப்புகளும், பழம்பெருமைகளைத் தத்தமது தேவைகளுக்கேற்ற வடிவில் முன்னிறுத்தித் தனது சாதகங்களைக் கூட்டிக்கொள்ள விழையும் அரசியலைப் பேசும் கதையா? வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சிகளின் வினோதங்களைக் காட்டும் அபத்த நாடகமா? வரலாற்றை மீட்டெடுக்கும் அரசியல் நடவடிக்கையில் தனிநபரின் அடையாளம் மட்டுமின்றி அவரது வாழ்க்கையே எப்படி அடியோடு மாறிவிடும் யதார்த்தத்தைச் சொல்லும் கதையாடலா?

இவை அனைத்துமே உள்ளடங்கிய பன்முகத்தன்மை கொண்ட நாவல் என இதைச் சொல்லலாம். குறிப்பிட்ட மையத்தையோ சீரான கூறல் முறையையோ நேர்கோட்டிலான கதைப் போக்கையோ கொண்டிராத பின் நவீனத்துவ நாவல் என்றும் சொல்லலாம். வரலாற்றை மீட்டெடுக்கும் நடவடிக்கையின் ஊடுபாவுகளுக்கிடையில் வெளிப்படும் சமகால சமூக அரசியல் உளவியல் போக்குகளின் அபத்தங்களையும் தனிநபர் சார்ந்த அடையாளங்கள் அர்த்தமிழந்துபோகும் விதத்தையும் சொல்லும் இந்த நாவல், பல்வேறு சிக்கல்களும் பின்னல்களும் அடுக்குகளும் கொண்ட கதையாடலைத் தேர்ந்துகொண்டது மிகவும் இயல்பானதே.

ந என்பவன் வெறும் ந என்பவனோ ந என்னும் பெயரைக் கொண்ட சத்துணவு அமைப்பாளனோ அல்ல. நாட்டின் முதல் சுதந்திரப் போராட்ட வீரனின் நேரடி வாரிசு என்று தெரிந்த பிறகு அவன் வாழ்க்கை மாறத் தொடங்குகிறது. அந்த மாற்றம் சட்டென்று வந்துவிடவில்லை. தன் அடையாளம் இதுதான் என அவன் நம்புவதற்கே அதிக அவகாசம் தேவைப்படுகிறது. தன்னுடைய பாரம்பரியப் பெருமை தெரிந்த பிறகு அவனுக்கு ஏற்படும் மாற்றங்களைப் போலவே அதற்கு முன்னால் ஏற்படும் மாற்றங்களும் முக்கியம்தான். ஒரு விதத்தில் இந்த நாவலை மாற்றங்களின் கதையாகவும் படிக்கலாம். அந்த மாற்றங்களைச் சாத்தியப்படுத்தும் காரணிகளின் ஊடாட்டத்தையும் முரணியக்கத்தையும் இந்த மாற்றங்களின் பின்புலமாகப் பார்க்கலாம்.

இந்த ஊடாட்டங்களும் முரணியக்கமும் இந்த நாவலில் புதிரான வடிவம் கொண்ட நவீன வகை ஓவியம்போல அமைந்திருப்பது, இவற்றின் பன்முகத்தன்மையைக் காட்டுகிறது. படைப்பாளியின் பார்வை தன் அனுபவங்களை, தன் அனுபவப் பரப்புக்குள் வரும் உலகின் தன்மையை எப்படிப் பார்க்கிறது என்பதற்கான அடையாளம் இது. எதையும் எளிமைப்படுத்திப் புரிந்துகொள்வதையோ மேற்பரப்பில் புலனாகும் பிம்பங்களின் காட்சிகளில் மயங்கி நிற்பதையோ விரும்பாத கலை மனம் அனுபவ உலகினூடே மேற்கொள்ளும் தீவிரமான யாத்திரையின் வெளிப்பாடு.

***

நாவலில் சித்தரிக்கப்படும் மாற்றங்கள் மிக முக்கியமானவை. அரண்மனை வளாகம் ஒன்றின் காவல் கூண்டில் வசிக்கும் ந என்பவன், சத்துணவு அமைப்பாளன். நேர்மையும் எளிமையும் அவன் இயல்பு. குழந்தைகளுக்குச் சத்துணவு போடும் காரியத்தில் நடக்கும் முறைகேடுகள் அவனுக்கு அதிர்ச்சி அளிக்கின்றன. தன்னால் முடிந்தவரை நேர்மையாக இருக்க முயலும் அவன் விரைவிலேயே சூழலில் ஒட்டாமல் அன்னியமாகிறான். அமைப்பு அவனை எளிதாக ஓரங்கட்டுகிறது. அந்த அமைப்பு இயங்கும் விதத்தை மெல்ல மெல்லப் புரிந்துகொள்ளும் அவன் விரைவிலேயே அதன் விசுவாசமான அங்கமாக மாறுகிறான். பிழைக்கக் கற்றுக்கொள்கிறான்.

பாதுகாப்பற்ற இந்தக் காவல் கூண்டில் இருப்பதற்குப் பதில் தனக்கென ஒரு சிறிய வீடு வேண்டும் என நினைக்கும் அவன் அதற்கான முயற்சிகளை எடுக்கும்போது அவனது நடத்தையில் அதற்கேற்ற மாற்றம் ஏற்படுகிறது.

தான் வரலாற்று நாயகர் ஒருவரின் வாரிசு என அறிந்துகொள்ளும்போது அவனிடத்தில் உருவாகும் மாற்றம் மீண்டும் சூழலுடன் அவனை முரண்படவைக்கிறது. இந்தச் சமயத்தில் ஏற்படும் மாற்றத்தில் தார்மீக அம்சத்துடன் அதிகார தொனியும் சேர்ந்துகொள்கிறது. கால மாற்றம் என்னும் அலை இந்தக் கோலத்தையும் அழித்துவிட்டுப் போன பிறகு அவனது மாற்றம் வேறொரு வடிவம் எடுக்கிறது. அவன் வரலாற்று நாயகனின் வாரிசுதான் என்பது பின்னாளில், பல்வேறு வழிகளில் உறுதியான பிறகு அவன் வாழ்க்கை மீண்டும் மாற்றம் அடைகிறது. இந்த மாற்றத்தின் உச்சம் இன்றைய சமூக, அரசியல் இயக்கத்தின் அழுத்தமான வெளிப்பாடாகப் பரிணமிக்கிறது.

ந என்பவனின் வாழ்க்கையில் வெவ்வேறு கட்டங்களில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றத்தையும் நாம் கவனமாக ஆராயும்போது அந்த மாற்றங்கள் சமகால சமூக அரசியல் யதார்த்தங்களைப் பொதிந்துவைத்திருப்பது தெரியவரும். நேர்மையாளனாக இருந்தபோது அவனுக்கு ஏற்படும் அனுபவங்களும் நடைமுறைசார் அணுகுமுறையுடன் அவன் தன்னை உருமாற்றிக்கொண்டு அமைப்புடன் இணக்கமாகும் அனுபவங்களும் இன்றைய சூழலில் அமைப்புகள் இயங்கும் விதத்தை வெளிப்படுத்துகின்றன. அமைப்புக்கும் தனிநபருக்கும் இடையிலான உறவுகளின் சமன்பாட்டுகளைச் சொல்கின்றன. நாவலின் இந்தப் பகுதி துல்லியமான யதார்த்தச் சித்தரிப்புடன் கச்சிதமாக அமைந்துள்ளது.

***

நாவலின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு தன்மைகளுடன் உருப்பெறுகின்றன. ந என்பவனின் அன்றாட வாழ்க்கை உணர்ச்சிப் பிசுக்கு அற்ற யதார்த்தச் சித்திரமாக வெளிப்படுகிறது. தொகுப்பு வீட்டுக்கான கடனுதவி பெறுவதற்கான முயற்சிகளின் சித்தரிப்புகள் அவலச் சுவையுடன் கூடிய சித்திரமாக விரிகின்றன. வரலாற்று நாயகனின் வாரிசு என்னும் நம்ப முடியாத கிரீடம் அவன் மேல் சுமத்தப்படும்போது கனவினையொத்த அனுபவங்கள் மிகுபுனைவுச் சித்திரங்களாகத் தோற்றம் கொள்கின்றன. கனவு கலைவதுபோல விரைவிலேயே இந்த நிலை மாறினாலும் வேறொரு வடிவில் அது திரும்ப வரும்போது முற்றிலும் வேறொரு விதமான அனுபவங்களைச் சாத்தியப்படுத்துகிறது.

இந்த முறை தனிநபர்கள் மூலமாக மட்டுமின்றி, ஊடகங்களின் மூலமாகவும் அந்தச் செய்தி வருகிறது. அது மெய்யான வரலாறுதான் என்பதை நிலைநிறுத்தப் பல விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு கட்டத்தில் அரசு அமைப்புகளும் இதில் சேர்ந்துகொள்ள, ஒரு வரலாறு அங்கே முழுமையாக மீட்டுருவாக்கம் செய்யப்படுகிறது.

நாவலின் இந்தக் கட்டத்தின் பெரும்பகுதி அபத்தச் சித்திரங்களாகத் தோற்றம் கொள்கிறது. வரலாற்றை மகோன்னதமானதாகக் கற்பிதம் செய்துகொள்வதில் சுகம் காணும் அரசு, ஊடகங்கள், பொதுமக்களின் உளவியல் ஆகியவற்றுக்கு அந்தப் பெருமையை நிலைநாட்டுவதில் இருக்கும் ஆவல் அதை அறிவியல்பூர்வமாக ஆராய்வதில் இருப்பதில்லை. இத்தகைய மனம் தான் நம்ப விரும்புவதையே உண்மையானதாகக் கட்டமைக்க முனையும். இந்த முனைப்பு யதார்த்தத்தின் மீது புனைவம்சத்தை ஏற்றிவிடுகிறது. இந்தப் புனைவையே உண்மை என நம்ப விரும்பும் மனம், புனைவை யதார்த்தமாகக் கற்பித்துக்கொள்கிறது. இத்தகைய செயல்பாட்டின் ஆதாரமாக இருக்கும் அபத்தத்தை உணர்த்தும் வகையில் இந்தப் பகுதி அபத்த நாடகமாகவே உருக்கொள்கிறது.

இது அபத்தத்தின் யதார்த்தமா அல்லது யதார்த்தத்தின் அபத்தமா எனக் கண்டறிய இயலாத அளவுக்கு யதார்த்தமும் அபத்தமும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. யாரை முன்னிட்டு இதெல்லாம் நடக்கின்றனவோ அந்த நபர் வெறும் நிமித்தமாக மாறிவிடுகிறார். மகோன்னத வரலாறு குறித்த கற்பிதங்களின் போதையில் கிறங்கும் பொதுப் புத்திக்கு யாருடைய வரலாறு கண்டறியப்படுகிறது, அந்தக் கண்டறிதலால் அவரது வாழ்வில் இப்போது எத்தகைய மாற்றங்கள் நிகழ வேண்டும் என்பதெல்லாம் முக்கியமல்ல. மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டிய வரலாறே முக்கியம். அந்த வரலாறு தங்கள் விருப்பம் சார்ந்து உருப்பெறுகிறதா என்பது முக்கியம்.

ஒரு சமூகம் தன்னுடைய வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்துகொள்ள விழையும்போது அது தனக்கேயான ஒரு வரலாற்றை நேற்றைய யதார்த்தமாகக் கற்பித்துக்கொண்டு அந்த யதார்த்தத்தின் நீட்சியாக இன்றைக் கற்பித்துக்கொள்கிறது. ஒட்டுமொத்த சமூகமும் தனக்குப் பொதுவானது என்று கருதப்படக்கூடிய வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்துகொள்ள முனையும்போது அந்தச் சமூகம் முழுவதும் இத்தகைய கற்பிதங்களைக் கைக்கொள்கிறது. இந்தக் கற்பிதங்களில் தனிநபருக்குப் பெரிய இடம் ஏதும் இல்லை. தான் மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரனின், மகாராஜாவின் வாரிசு என அறியும் நபருக்கு தன்னை முன்னிட்டு வரலாறு மீட்டுருவாக்கப்படுவதால் எந்தப் பலனும் இல்லை. ஏனென்றால் அதை அவருக்குச் சொல்லும் சமூகத்துக்கு அந்த வரலாறுதான் முக்கியம். அவரல்ல.

யதார்த்தத்தின் இந்த அபத்தத்தைச் சிறந்த அபத்த நாடகமாகச் சித்தரிக்கும் பகுதிகள் நாவலை வேறொரு தளத்துக்குக் கொண்டுசெல்கின்றன. பொதுப்புத்தி சார்ந்த சமூக அரசியல் நாடகத்தில் தனி நபரின் அடையாளம் என்பது அந்தத் தனிநபரின் வாழ்வு தொடர்பானதல்ல. அது வெறும் குறியீடு. அந்தக் குறியீட்டை நிரப்பப் பொது மனத்திற்குத் தேவை ஒரு உருவம். அவர் அல்லது அவரைப் போன்ற ஒரு உருவம். இந்த உளவியல்தான் அந்தத் தனிநபரின் வாழ்க்கைக்கும் அவரை முன்னிட்டு நடக்கும் மாபெரும் நாடகத்துக்கும் இடையிலான உறவின் அபத்தத்தைத் தீர்மானிக்கிறது. வரலாற்றில் மட்டுமல்ல, வரலாற்றின் மீட்டுருவாக்கத்திலும் தனிநபர்கள் வெறும் பகடைகள், உதிரிகள் என்பதை இந்த நாடகம் தெளிவாகக் காட்டிவிடுகிறது. நாவலின் உச்சமான இந்தப் பகுதி அவலச் சுவை கொண்ட பக்கங்களாக வெளிப்படுகின்றன.

***

நவின் கதையைச் சொல்லப் பல விதமான கதையாடல்களை தேவிபாரதி கைக்கொள்கிறார். கதையாடல் வகைகளைக் கதைச் சூழல்களே தீர்மானிக்கின்றன. ந என்பவன் வெறும் சத்துணவு அமைப்பாளனாக இருக்கும் இடங்களும் காவல் கூண்டுக்குள் உழலும் அவன் வாழ்க்கையும் துல்லியமான யதார்த்தச் சித்திரங்களாக வெளிப்படுகின்றன. வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் இடங்கள் அவற்றின் தன்மைக்கேற்ப அபத்த நாடகமாக உருப்பெறுகின்றன. இடையில் வரும் பகுதிகள் இவை இரண்டுக்கும் இடையில் ஊடாடுகின்றன. ஒரு படைப்பாளி தன் கதைச் சூழல்கள் கோரும் மொழியையும் கதையாடலையும் இயல்பாகக் கண்டடைவதன் அடையாளமாக இந்த நாவலின் கதையாடல்கள் உள்ளன.

யதார்த்தம், மிகுபுனைவு, அபத்த நாடகம், யதார்த்தமும் அபத்தமும் குழம்பிக் கிடக்கும் கயிற்றரவு நிலை ஆகிய எல்லாக் கட்டங்களையும் தனித்தனியாகப் படிக்கும்போது அவை ஒவ்வொன்றும் தன்னளவில் முழுமையான பகுதிகளாக விளங்குகின்றன. ஒட்டுமொத்தமாக இணைத்துப் பார்க்கும்போது வேறு பரிமாணங்களைக் கொள்கின்றன. சில காட்சிகள் அழியாச் சித்திரங்களாக வாசகரின் மனதில் தங்கிவிடக்கூடியவை. உதாரணமாக, காவல் கூண்டு வீட்டுக்குள் பாம்பு வரும் காட்சி. கரப்பான்பூச்சிகள், சுண்டெலிகள் ஆகியவை படையெடுக்கும் காட்சிகள் யதார்த்தத்தை மீறிய மிகுபுனைவுச் சித்திரங்களாகவே உள்ளன. மாபெரும் வரலாற்று நாயகனின் வாரிசாக நம்பப்படும் ந என்பவனின் இன்றைய வாழ்நிலை எத்தகையதாக இருக்கிறது என்பதை இந்த மூன்று காட்சிகளும் உணர்த்துவதாகக் கொள்ளலாம். இவற்றின் குறியீட்டுப் பொருள்கள் காண்பவரைப் பொறுத்து மாறக்கூடும்.

சமகால வாழ்வின் மறைபரிமாணங்களைக் காட்டும் மிகுபுனைவுச் சித்திரங்களும் அபத்த நாடகங்களும் ஒருபுறம் இருக்க, நாவலில் உள்ள யதார்த்தச் சித்தரிப்புகள் சமகால வாழ்வின் தன்மைகளைக் காட்டிவிடுகின்றன. சத்துணவு போடுதல் என்னும் ஏற்பாட்டினுள் வெளிப்படும் போக்குகள், ஏழைகளுக்குத் தொகுப்பு வீடுகள் கட்டிக்கொள்ளக் கடனுதவி தரும் திட்டம் செயல்படுத்தப்படும் விதம், உள்ளாட்சி அமைப்புகளின் இயங்குமுறை ஆகியவை சமகால யதார்த்தத்தின் கசப்பான பக்கங்களாக விரிகின்றன. ஏழை எளிய மக்களுக்காகவே தீட்டப்படும் திட்டங்களும் செயல்படும் அமைப்புகளும் அந்த மக்களை எவ்வாறு நடத்துகின்றன என்பதை இவை காட்டுகின்றன.

***

ந என்பவனின் வம்ச வரைபடம் குறித்த பதிவு முக்கியமானதொரு உண்மையைக் குறியீட்டுரீதியாக உணர்த்துகிறது. ந என்பவனின் வம்ச பரம்பரை மகோன்னதமானது. அதை நிரூபிக்க அவனிடம் இருக்கும் ஆதாரம் அவனுடைய வம்சத்தைக் காட்டும் வரைபடம். திரும்பத் திரும்பப் பார்த்துப் புளகாங்கிதம் அடையக்கூடிய அந்த வரைபடம் அவன் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை. அவன் வசிக்கும் காவல் கூண்டில் படரக்கூடிய நூலாம்படைகளுக்கும் அந்த வரைபடத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. தன் அடையாளத்தை நிலைநிறுத்த அவன் எந்த மெனக்கெடலையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல்போகிறது. அந்த அடையாளம் அவனிடமிருந்து பிடுங்கப்பட்டுப் பொது அடையாளமாக மாறுகிறது. ந என்பவனிடம் இருக்கும் வம்ச வரைபடம் யாருக்கும் தேவையில்லை. அவனுடைய வரலாறுதான் தேவை. சமூகத்தின் சகல தரப்புகளும் சேர்ந்து அந்த வரலாற்றை மீட்டெடுத்துவிட்ட பிறகு வரைபடம், அந்த வரைபடத்தை வைத்திருக்கும் வாரிசு இரண்டுமே தேவையற்றவை. யதார்த்தத்தின் இந்தக் கூரூர முகத்தின் குறியீடாகக் கேட்பாரற்றுக் கிடக்கிறது ந என்பவனின் வம்ச வரைபடம்.

கதையின் சூழலில் ஒரு பொருளும் குறியீட்டுத் தளத்தில் வேறு பொருளும் தரக்கூடிய அம்சங்களை இந்நாவலில் நிறையவே காண முடிகிறது. பேராசிரியர் புவின் வருகை, பேரழகி ஸ்-ன் நடவடிக்கைகள், அவளைத் தூக்கிச் செல்லும் இளைஞன், கடைசிக் காட்சியில் அவனே நவைச் சுமந்து செல்லுதல் ஆகியவற்றையும் ஆழமாக நோக்கும்போது வெவ்வேறு பொருள்கள் புலப்படக்கூடும்.

***

நட்ராஜ் மகராஜ் நாவலை ஒட்டுமொத்தமாக எப்படிப் புரிந்துகொள்வது என்பது ஒரு கேள்வி. நாவலில் யாருக்குமே பெயர் குறிப்பிடப்படாமல் அவரவர் பெயர்களின் முதலெழுத்து மட்டும் குறிப்பிடப்படுவது ஏன் என்பது இன்னொரு கேள்வி. அரண்மனை வளாகத்தினுள் இருக்கும் காவல் கூண்டுக்குள் ஒண்டியபடி வாழும் ஒரு சாமானிய மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள்தான் கதையின் அடித்தளம். பாதுகாப்பான வீடுதான் அவனுடைய ஆகப் பெரிய கனவு. அவனுடைய வாழ்க்கை, வரலாற்றின் முக்கியமானதொரு நிகழ்வுடன் தொடர்புகொண்டிருப்பது தெரியவந்ததும் கற்பனை செய்ய இயலாத அளவுக்கு அவன் வாழ்க்கை மாற்றம் அடைகிறது. ஆனால், அந்த மாற்றம் அவனுடைய பிரச்சினைகளைத் தீர்க்கப் பயன்படவில்லை. அவனுடைய தீராத ஏக்கமான பாதுகாப்பான வீடு அவனுக்குக் கிடைக்கவில்லை. அவன் அடையாளம் மாறுகிறது. அவனை வைத்து அந்த ஊரின் அடையாளம் மாறுகிறது. அவனை வைத்து அந்தப் பகுதியின் வரலாறு மாறுகிறது. ஆனால் அவன் வாழ்க்கை மாறவே இல்லை. உதிரியாக வாழும் அவனுடைய அடையாளம் மைய நீரோட்டத்தில் முக்கிய இடம் பெற்ற பிறகு அந்த அடையாளத்தைப் பொதுச் சமூகம் சுவீகரித்துக்கொள்கிறது. அவன் எப்போதும்போல அடையாளமற்றவனாக, பாதுகாப்பற்றவனாக விடப்படுகிறான். இந்த அவலத்தை, இதன் பின்னே உள்ள அபத்தத்தை அதற்கான மொழியோடும் குறியீடுகளோடும் நம் முன் நிகழ்த்திக் காட்டும் மாயம்தான் நட்ராஜ் மகராஜ் என்னும் நாவலின் சாதனை.

மனிதர்களின் பெயர்களும் அவை சார்ந்த அடையாளங்களும் அபத்தங்களாகிவிடும் சூழலில் எந்த அடையாளத்தையும் யாருடையதாகவும் முன்னிறுத்த முடியாத நிலையில் தன் பாத்திரங்களின் அடையாளங்களை அழித்துவிடுகிறார் நாவலாசிரியர். எந்தப் பாத்திரத்துக்கும் பெயர் கொடுக்கப்படாமல் இருப்பதை இப்படியும் புரிந்துகொள்ளலாம்.

***

நாவலில் வரும் அபத்த நாடகங்கள் சில இடங்களில் தேவைக்கதிகமாக நீண்டுகொண்டேபோவதாகத் தோன்றுகிறது. வரலாற்றைச் சுமந்து வரும் தூதுவர்கள் குறித்த சித்திரங்கள் புனைவின் சுதந்திரத்தை மிதமிஞ்சிப் பயன்படுத்திக்கொள்வதாகவும் தோன்றுகிறது. வரலாற்றைச் சொல்லும் தொனி கொண்ட இந்தக் கதையாடலில் பல இடங்கள் கவித்துவமாக வெளிப்படுவதைப் போலவே சில இடங்களில் மொழி தன் படைப்புசார் அழகியலைத் துறந்து தட்டையான விவரிப்பாகவும் மாறுகிறது. சில அனுபவங்கள் செறிவாக வெளிப்படுத்தப்பட்ட பிறகும் மேலும் மேலும் தம்மை வெளிப்படுத்திக்கொள்ளத் துடிப்பதையும் உணர முடிகிறது.

ந என்பவனின் வரலாற்றைச் சொல்ல வெவ்வேறு கட்டங்களில் அந்த ஊருக்கு வரும் புதியவர்கள் குறித்த காட்சிகள் கிட்டத்தட்ட ஒரே தன்மையைக் கொண்டிருப்பது இயல்பானதுதான். ஆனால் அப்படி இருப்பதாலேயே அவை சுருக்கத்தைக் கோருகின்றன. நாவலாசிரியர் அந்தக் குரலுக்குச் செவிசாய்க்காததால் சில இடங்கள் ஏற்கனவே கடந்து வந்த இடங்களின் நகல்களாகத் தோற்றமளிக்கின்றன. ந வுக்கு வரும் அஞ்சலட்டை முதலமைச்சர் அவரைப் பார்க்க விரும்புவதாகச் சொல்கிறது. அவரைச் சந்திக்க விழையும் ந வின் முயற்சி நாவலில் அந்தரங்கத்தில் தொங்க, நாவலாசிரியர் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வதில் மும்முரமான இறங்கிவிட்டார். நாவலின் படைப்பு வெளிப்பாட்டில் உள்ள போதாமைகளாக அடையாளம் காணத் தக்க அம்சங்கள் இவை.

***

ஒரு எழுத்தாளர் புதியதொரு களத்தில் புதியதொரு மொழியில், புத்தம் புதியதான கூறல் முறையில் ஒரு படைப்பை உருவாக்குகையில் அது தான் வெளியாகும் சூழலைப் பல அடிகள் முன்னெடுத்துச் செல்கிறது. தேவிபாரதியின் இந்த நாவல் அத்தகைய தன்மையைக் கொண்டிருக்கிறது. வரலாற்றை மீட்டெடுத்தல் என்னும் பொதுச் சமூகத்தின் செயல்பாட்டின் அபத்தங்களைத் தனிநபர் வாழ்வின் பின்னணியில் வைத்துக் காட்டும் இந்த நாவல் சமகால இலக்கியச் சூழலின் பரப்பை விரிவுபடுத்தி முன்னெடுத்துச் செல்லக்கூடிய பிரதியாக வெளிப்பட்டிருக்கிறது.

••••••••

Comments are closed.