நடேஷின் சித்திர வெளி / சில குறிப்புகள் / ப்ரசன்னா ராமஸ்வாமி

[ A+ ] /[ A- ]

14642209_10210329376046072_7231556889758448285_n

14666269_10210329377606111_1298094270790056153_n

எழுந்து வருவது போலும் உங்களைப் பார்த்து சிரிப்பது போலும் பரிகசிப்பது போலும் உங்களிடம் கோபப்படுவது போலும் தெள்ளத்தெளிவான உணர்வுகளைக் காட்டும் நடேஷின் கோட்டுச் சித்திரங்கள் முழுக்க முழுக்க உருவ ஒழுங்குக்குள் அடைபடுபவையும அல்ல. அருவ வகையும் அல்ல. ஆனால் ஒரு நவீனச் சொல்லாடலை, கருத்தியக்கத்தை, முரண்களை விவரணம் செய்பவை. அவரது சித்திரங்களில்
கோடு தொடங்குவதும் வளர்வதும் முடிவதும் ஒரு தொடர்ச்சியான இயக்கம், வீணையில் தானம் வாசிப்பதைக் கேட்கும் அனுபவம் போன்றது. தடித்த கோடுகள், மெல்லிய கோடுகள், நெளிகள், வீச்சரிவாள் போல நீட்டுக்கள்…
அந்தக்கோடுகள் ஏதேதோ உலகங்களுக்கான மர்மச் சுரங்கங்களைத் திறந்து விடும்.

மிருகம் போலும், மனிதம் போலும் ஒரு விரல் நீட்டமும் மூக்கும் பழமும் அலையலையாய் நெளிக் கூந்தலும் ஆண் குறியும் பெண்ணென்னும் பேரழகும் இங்குமங்கும் பொங்கித் ததும்பும் அந்த சித்திரப்பரப்பு நம்மை சிலபோது வசீகரிக்கும், வதைக்கும், குஷிப் படுத்தும்..இன்னும் என்னென்னவோ செய்யும். ஆனால் ஒன்றும் நேராமல் ஒரு சித்திரத்தைப் பார்த்த நொடியைக் கடக்க முடியாது.

14702433_10210329378006121_3114953505648576912_n
வதைபடுதலை, பேராசையை, கோபத்துடன், இயலாமையுடன் மிருகங்களும் குருவிகளும் பார்வையாளருடன் சம்பாஷணை நிகழ்த்தும்.
உருட்டி விழிக்கும்.
ஒரு புன்னகையை வீசும்.
ஒரு விரல் தனியாக உயர்ந்து உங்களை எச்சரிக்கும். விரல் மாத்திரம் பார்த்து முழு உருவத்தை அல்ல, ஒரு கூட்டத்தை உங்கள் மனவெளிக்குள் உருவகிக்கும் கோடுகள்.

நவீன வாழ்க்கையின் அதிர்வுகளை, முரண்களைக் கதை கதையாகச் சொல்வதற்கு நடேஷ் மனிதர்களும் மிருகங்களும் மனிதனாகவும் இல்லாத மிருகமாகவும் இல்லாத சனத்தொகையை ஏதோ காடுகளில் தான் மேய்த்து வருபவற்றைக் கொண்டுவந்து கட்டினாற் போல ஒரு காகித வெளிக்குள் உலவ விடுகிறார்.
அவை நம்முடைய வாழ்க்கையை, வாழ்வை, வாழ்தலைச் சொல்கின்றன..வித விதமான உயிர்ப்போடு…

அழுத்தப் பச்சையும் பளீர் மஜந்தாவும் அவற்றை எப்போதும் எல்லையிடும் நீலமும் நிறைந்த அவரது ஓவிய வெளி பற்றி பின்னொரு சமயம் எழுதுவேன்.

சில பத்தாண்டுகள் தாவிப்போய் சிந்தித்து அவர் நிறுவிய இன்ஸ்டால்லேஷன் குறித்தும் கூடத்தான் பேசவேண்டும்…
14716311_10210329375966070_2613712369343343906_n
சந்துரு, பாஸ்கரன் என்ற இரண்டு அற்புதமான கலைஞர்கள் தனது ஆசிரிய முன்னோடிகள் என்று எப்போதும் சொல்கிறார் நடேஷ். ஆனால் அவர்களுடைய வேலையில் இருப்பதைக் காட்டிலும் அதீத சுதந்திரமான கற்பனையும் கைவீச்சும் இவரிடம் இருக்கிறது என்று தோன்றும் எனக்கு.

•••

Comments are closed.