நான்கு கவிதைகள் / கருணாகரன் ( இலங்கை )

[ A+ ] /[ A- ]

images-10

மீட்பர்

குற்றவாளிகளைத் தெரிந்தவன்
நீதி மன்றத்தின் வெளி நடையிலிருந்து கவனிக்கிறேன்

குற்றங்களை மறைக்கும் முயற்சியில்
சற்றும் தளராமல்
விவாதங்களை முன்னிறுத்திச் சமராடுகிறார்
வக்கீல்
அவருடைய வார்த்தைகள் உலர்ந்து
நீதிமன்றமெங்கும் சிதறுகின்றன.

குற்றங்களை முன்னிறுத்தித்
தண்டனையை நெருக்கிக் கொண்டிருக்கிறார்
எதிர் வக்கீல்

மூண்டெரியும் விவாதக்கனலில்
எந்த நேரமும் நீதிமன்றம் தீப்பற்றி எரியக்கூடும்

இந்த நிலையிலும்
பழுப்படைந்த கண்ணாடிக் கூண்டினுள்ளே
நிறுத்தப்பட்டிருக்கும் நீதிபதிக்கு
எதுவும் புலப்படவில்லை.

எழதுவுமே சொல்லத்தோன்றாமல்
விசாரணை நரம்புகளின் வழியே
தேடிச் செல்கிறார் தீர்ப்பாயத்தின் மையத்தை நோக்கி
என்றபோதும் அவருடைய காலடியில்
வழுகிச் செல்கின்றன
அவர் உணரத்தவறிய உண்மையின் தடயங்கள்

திடீரென
உறைந்த குருதி பெருக்கெடுத்துப் பாய்ந்து
குற்றவாளிகளை மூழ்கடிக்கக் கண்டேன்

சட்டெனப் பாய்ந்து வந்த நீதிபதி
அவர்களை மீட்டுச் சட்டத்தைப் பாதுகாத்தார்
நீதியையும்கூடத்தான்.

பெருக்கெடுத்த குருதி
உறைய மறுத்து தழும்பிக்கொண்டிருக்கிறது
கண்ணீரின் மையத்தில்

பதறும் என்னிதயத்தை அந்தக் கல்லறையில்
வைத்துவிட்டு வந்தேன் ஒரு சாட்சியமாக இருக்கட்டுமென்று.

00

கடவுளின் காலடி

இறங்கிச் செல்லும் படிக்கட்டில்தான்
உங்களைச் சந்தித்தேன்
ஏறிக்கொண்டிருக்கும் உங்கள் கண்களில்
பார்வைப்பரப்பு விரிந்து கொண்டேயிருந்தது.

பெரும்பரப்பின் மேலே நீங்கள் நின்றபோது
வானம் அண்மித்திருந்தது
நட்சத்திரங்கள் சிரித்துப் பேசும் குரல் கேட்டது
பறவைகளின் சிறகுகள் உங்கள் தோள்களிலும் முளைத்தது.

கடவுளின் தோற்றம்
அதிசயமானதொன்றல்ல
அதுவாகவே நீங்கள் ஆகிய பிறகு

இறங்கிக் கொண்டிருக்கும் என் கண்ணறிந்தது
காலடியில் சிரித்தபடியிருக்கும் முள்ளின் முனையே

ஏறிக்கொண்டிருக்கும் படிக்கட்டில்தான்
உங்களிடமிருந்து விடைபெற்றேன்

00

காணாமல் போனவன்

முருக்கம் பிஞ்சுக் கட்டுகளை வைத்துச் சென்றவன்
இன்னும் வரவில்லை
காத்திருக்கிறாள்
இரவழிந்து பகலாகி
பகல் உருகி இரவாகி
காலம் நீண்டு புதராகியது.

மாடவிளக்கு அவளோடு உருகிக் காய்கிறது
எத்தனை நாளென்று தெரியவில்லை
எத்தனை யுகமென்றும் புரியவில்லை

காத்திருப்பின் அடியில் வேர்கள் முளைத்து
அவள் பெருங்காடாகினாள்

அவனின்னும் வரவில்லை

நிலவு கரைந்து அலையாகிறது
நுரைகள் திரண்டு நிலவாகிறது
ஓயாத அலையாகிக் கடலில் புத்தவள்
அவன் வரவைக் காணாத கரையை மோதிச் சரிக்கிறாள்
கடலில் தேடித் தேடிச் சலிக்கிறாள்

அவன் வரும்போது
காத்திருப்பின் கனல் எங்கே செல்லும்?

அம்மா என்றொரு சொல்லறிய
அவள் காடாகிக் கடலாகி
வெயிலாகி மழையாகி
தெருவாகி வெளியாகி
இரவாகிப் பகலாகி
அலையாகி
கரையேற விதியற்றுக் காத்திருந்து
பெருந் தீயாகினாள்

வராமலே சென்றவன்
வளர்த்த தீ
அதுவென்றறியாதவளாக இருந்தாள்
தீ.

00

கூடாரத்தின் கீழே

கூடாரத்தின் கீழே
இரவுகளை வைத்து மூடிவிட்டுச் செல்லும்
பெண்ணைப் பின்தொடர்ந்து சென்றவன்,
இடையில் வழி தவறிச் சென்று
கடிகார முட்களின் முனைகளில் சிக்கினான்

வெள்ளரிப் பழங்கள் வெடித்து மலர்ந்த தோட்டத்தில்
அவள் கத்தரிப்புவாகிக் கனிந்திருந்தாள்
பருத்திச் செடிகள் புத்துக் களித்த வளவில்
அவள் பலாப்பழமாகிப் புத்துக் களித்தாள்

கடிகார முட்களிலிருந்து விடுவித்துக் கொண்டோடி வந்தவன்
அவளருகே வர
அவள் பகலாக மாறினாள்
திகைத்தவன், ஒளியின் விநோதம் கண்டு
தன்னுடலையும் ஒளியாக்கினான்

ஒரு பெரிய படையணி
அவர்களைச் சுற்றி வளைத்தது

மூடிவைத்த இரவை எடுத்து
அதுவே தன்னுடைய காதற் பரிசென்று
தம்மைச் சுற்றிவளைத்த ஒவ்வொருவருக்கும்
பகிரந்து கொடுத்தாள்

கூடாரத்தை எடுத்து அவர்களைச் சுற்றி மூடினாள்
ஒளியைப் பெருக்கி
தன்னை விடுவித்தாள்

ஒளிக்குச் சுவடு இல்லை என்பதால்
அதைத் தொடர்ந்து
அவர்களைப் பிடிக்க முடியவில்லை
என்று எழுதி வரலாற்றிடம் கையளித்த படையணி
அவள் கொடுத்த காதற் பரிசோடு
உறங்கியது கூடாரத்தினுள்.

•••

Comments are closed.