இளங்கவிஞர்க்கு கடிதங்கள் / ரெய்னார் மரியா ரில்கே..

[ A+ ] /[ A- ]

download-38

பாரிஸ்

பிப்ரவரி 17, 1903

சில தினங்களுக்கு முன்னர்தான் உனது கடிதம் வந்தது. என்னிடம் நீ வைத்துள்ள பெரும் நம்பிக்கைக்காக உனக்கு நன்றி பாராட்ட விரும்புகிறேன். அவ்வளவுதான் நான் செய்யக்கூடியது. உன் கவிதை களை என்னால் விவாதிக்கலாகாது; எத்தகையதொரு விமர்சன நடவடிக்கையும் எனக்கு அந்நியமானதாக இருக்கும். விமர்சன வார்த்தைகள் போன்று கலையை அவ்வளவு சொற்பமாக ஸ்பரிசிப்பது எதுவுமில்லை; அவை எப்போதும் ஏறக்குறைய அதிருஷ்டவசமான தவறான புரிந்துகொள்ளலாகிவிடும். நம்மை நம்பவைக்கும் வகை யில், அவற்றை அவ்வளவு நிச்சயமானதாகவும் வெளிப்படுத்த முடிவதாகவும் காட்டுகின்றனர். ஆனால் விஷயம் அப்படியில்லை; பெரும்பாலான அனுபவங்கள் வெளிப்படுத்த முடியாதவை, எந்த வார்த்தையும் இதுவரையிலும் நுழைந்திராத ஒரு வெளியில் அவை நிகழ்கின்றன, பிற கலைகளை விடவும் அவை இன்னும் வெளிப் படுத்தமுடியாதவை, அற்பமாயும் தோன்றிமறைவதாயும் நம் வாழ்வு இருக்க, நீடித்து நிற்பதான அவை மர்மம் பொதிந்த இருப்புகளாய் உள்ளன.

இக்குறிப்பினை முன்னுரையாக வைத்துவிட்டு, உன் கவிதைகள் தமக்கான பாணியைக் கொண்டிருக்கவில்லை என்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். ஒருவித அந்தரங்கம் சார்ந்த நிசப்தமானதும் மறைவானதுமான தொடக்கங்களை அவை பெற்றிருப்பினும், Mதூ குணிதடூ எனப்படும் இறுதிக்கவிதையில் இதனை மிகத் தெளிவாக உணர்ந்து கொள்கிறேன். இதிலே உனக்குரிய ஒன்று வார்த்தையாகவும் இன்னோசைச் சந்தமாகவும் மாற முயலுகின்றது. ‘கூணி ஃஞுணிணீச்ணூஞீடி’ என்னும் இனிய கவிதையில் அம்மாபெரும் தனித்த உருவத்துடனான ஒருவித நெருக்கம் தோன்றவே செய்கிறது. இருப்பினும் இக் கவிதை கள் இன்னும் தன்னிச்சையானவையாக இல்லாது, தம்மளவில் ஏதுமற்றவையாகவே உள்ளன – ஃஞுணிணீச்ணூஞீடி – யைப் பற்றியதும் கடைசிக் கவிதையும்கூட இப்படியே. உனது கவிதைகளைப் படிக்கும்போது என்னால் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதுள்ள பல்வேறு குறைபாடு களை, உனது கவிதைகளுடன் சேர்ந்து இணைக்கப்பட்டுள்ள அன்பான கடிதம், எனக்குத் தெளிவுபடுத்தின.

உனது கவிதைகள் நன்றாக உள்ளனவா என்று கேட்கிறாய். நீ கேட் கிறாய். இதற்கு முன் மற்றவர்களிடம் கேட்டிருக்கிறாய். இவற்றைப் பத்திரிகைகளுக்கு அனுப்புகிறாய். பிறரது கவிதைகளுடன் அவற்றை ஒப்பிடுகிறாய். சில பத்திரிகை ஆசிரியர்கள் உன் கவிதைகளை நிராகரிக்கும்போது விரக்தியடைகிறாய். இவ்வாறு செய்வதை நீ நிறுத்தவேண்டுமென்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன் (என் ஆலோசனையை நீ விரும்புவதாகச் சொல்லியிருப்பதால்). நீ வெளிப் புறமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாய், இப்போதும் பெரிதும் தவிர்க்க வேண்டியது அதுதான். யாரும் உனக்கு ஆலோசனையோ உதவியோ செய்யமுடியாது-யாரும்.

நீ செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். உனக்குள் நீ போக வேண்டும். உன்னை எழுதக் கட்டளையிடும் காரணத்தைக் கண்டறிய வேண்டும்; உன் இருதயத்தின் ஆழங்களுக்குள் அது தன் வேர்களைப் படர விட்டிருக்கின்றதா என்று காண வேண்டும்; நீ எழுதுவதற்குத் தடைவிதிக்கப்பட்டால், நீ மடிந்துபோக வேண்டியிருக்குமா என்று உனக்கு நீயே அறிக்கையிட்டுக்கொள். எல்லாவற்றையும் விட இது முக்கியமானது: இரவில் மிகவும் நிசப்தமான தருணங்களில் உன்னை நீயே கேட்டுக்கொள் – நான் எழுதி ஆகவேண்டுமா? ஆழமான பதிலுக்காக உனக்குள் தோண்டிப்பார். இதற்கான பதில் இசைவாக இருப்பின், “நான் எழுதியாக வேண்டும்” என்னும் எளிய, வலுவான பதில் கிடைத்தால், இத்தேவைக்கேற்ப உன் வாழ்வைக் கட்டமைத்துக் கொள்; தனது அடக்கமானதும் மிக அலட்சியமானதும் ஆகிய வேளை யிலும் கூட உன் வாழ்வு இத்தூண்டுதலுக்கான அடையாளமாகவும் சாட்சிய மாகவும் ஆகிவிடும். அப்புறம் இயற்கையுடன் நெருங்கிவர வேண்டும். பின்னர் இதற்குமுன் யாரும் முயற்சி செய்திராதபடி, நீ பார்த்தவற்றையும் உணர்ந்தவற்றையும், நீ நேசித்தவற்றையும் இழந்த வற்றையும் சொல்ல முயற்சி செய். காதல் கவிதைகள் எழுதாதே; மிகவும் தட்டையானதும் சாதாரணமானதுமான வடிவங்களைத் தவிர்த்துவிடு. இவற்றில் ஈடுபடுவது மிகவும் சிரமமானது, தனித்து வமான ஒன்றை உருவாக்கிட முற்றிலும் முதிர்ந்த ஆற்றல் அவசிய மாகும். இம்மாபெரும் மையக் கருத்துக்களிலிருந்து உன்னை விடு வித்துக்கொண்டு, அன்றாட வாழ்க்கை உனக்குத் தரக்கூடியதைப் பற்றி எழுது; உனது கவலைகளையும் ஆசைகளையும், உன் மனதில் கடந்து போகும் எண்ணங்களையும், ஒருவித அழகில் உள்ள உன் நம்பிக்கை யினையும் விவரி – நெஞ்சார்ந்த, நிசப்தமான, பணிவான நேர்மையு டன் இவற்றையெல்லாம் விவரி; மற்றும் உன்னை வெளிப்படுத்தும் போது, உன்னைச் சுற்றியிருக்கும் பொருட்களையும், உன் கனவுகளி லுள்ள படிமங்களையும், நீ நினைவில் வைத்துள்ள பொருட்களையும் பயன்படுத்து. உனது அன்றாட வாழ்க்கை வறியதாயிருப்பின், அதனைக் குற்றம்சாட்டாதே; உன்னைக் குற்றஞ்சாட்டு; அதன் வளங்களை எடுத்துரைக்கும் அளவுக்கு நீ கவிஞனாக இல்லையென்பதை உனக்கு நீயே ஏற்றுக்கொள்; படைப்பாளியைப் பொறுத்தவரை வறுமை என்பதும் ஏழை என்பவரும் ஒதுக்கவேண்டிய இடம் என்பதும் இல்லை.

உலகின் எந்தவொரு சப்தத்தையும் நுழையவிடாத சிறை ஒன்றுக்குள் நீ இருப்பினும் கூட, விலை மதிக்க முடியாத மாணிக்கமும் நினைவு களின் பெட்டகமும் ஆன குழந்தைப் பருவம், இன்னமும் உன்னிடம் இருக்கவில்லையா? அதன்பால் உன் கவனத்தைத் திருப்பு. இப்பாரிய கடந்த காலத்தின் ஒடுங்கிய உணர்வோட்டங்களை எழுப்பிட முயன்றால், உன் ஆளுமை வலுவாக வளரும், உன் தனிமை விரிவு கொள்ளும், மேலும் தொலைதூரத்திலே மற்றவர்களின் அமளிகள் கடந்து செல்கின்றதும், மங்கிய பொழுதுகளில் நீ வாழ்ந்திடக் கூடியதுமான இடமாக மாறும்.

மேலும் உனக்குள்ளான இம்மாறுதலிலிருந்து, உனக்கேயான உலகத் திற்குள் நீ இப்படி ஆழ்ந்ததன் காரணமாக, கவிதைகள் வரும், அப்போது நீ அவை நன்றாக இருக்கிறதா-இல்லையா என்று யாரைக் கேட்கலாம் என்று எண்ண மாட்டாய். இப்படைப்புகளில் பத்திரிகை களின் கவனத்தைத் திருப்பவும் முற்பட மாட்டாய். ஏனெனில் இவற்றை உனக்குப் பிரியமான இயற்கை உடைமையாக, உன் வாழ்வின் ஓர் அங்கமாக, அதனின்று வரும் ஒரு குரலாக நீ கவனிப்பாய். ஓர் அவசியத்தினின்று எழுந்திருக்குமாயின் ஒரு கலைப் படைப்பு நல்லதே. ஒருவர் மதிப்பீடு செய்வதற்கான வழிமுறை அது ஒன்றுதான்.

ஆகவே, பிரியமான நண்பனே, இது தவிர்த்து வேறெந்த ஆலோசனை களையும் என்னால் வழங்க இயலாது. உனக்குள் சென்று உன் வாழ்க்கை பிரவகிக்கும் இடம் எவ்வளவு ஆழமானது என்று கண்டுகொள்; நீ படைக்க வேண்டுமா என்னும் கேள்விக்கான பதிலை அதன் தோற்று வாயில் கண்டுகொள்வாய். அதனை விளக்குவதற்கு முற்படாது, உனக்கு அளிக்கப்பட்டபடியே, அப்பதிலை ஏற்றுக்கொள்.

அப்புறம், வெளியிலிருந்து என்ன வெகுமதி கிடைக்கும் என்று ஒரு போதும் கேட்காதே. விதியின் பாரத்தையும் பெருமையினையும் தாங்கிக்கொண்டு, அதனை உனதாக்கிக்கொள். ஏனெனில் படைப் பாளி தனக்கான உலகமாயிருக்க வேண்டும் மற்றும் தன்னிடத்திலும் இயற்கையிலும் அனைத்தையும் கண்டுகொள்ள வேண்டும் – அவனது ஒட்டுமொத்த வாழ்வும் அதற்கே அர்ப்பணிக்கப்படுகிறது.
ஆனால் உனக்குள்ளும் உனது தனிமைக்குள்ளும் ஆழ்ந்த பின்னர், கவிஞனாக மாறுவதை நீ கைவிடவேண்டிவரும். (ஏற்கனவே நான் சொல்லியுள்ளபடி, எழுதாமலேயே ஒருவர் வாழ முடியும் என்று உணரக்கூடுமாயின், அப்போது ஒருவர் எழுதவே கூடாது). இருப் பினும் அப்போது கூட இந்த அகத்தேடல் ஒன்றுமில்லாதுபோய் விடாது. உனது வாழ்க்கை அதனின்றும் தனக்கான பாதைகளைக் கண்டறியும் அவை நல்லவையாக, வளமானவையாக, பரந்து விரிந்த வையாக இருக்கும் என்பதே உன்னைப் பொறுத்து நான் ஆசைப் படுவது.

நான் வேறென்ன சொல்வது? ஒவ்வொன்றும் அதற்கேயான அழுத்தம் கொண்டுள்ளது என்றே எனக்குத் தோன்றுகிறது. கடைசியாக ஒரேயொரு ஆலோசனையை மட்டும் சொல்ல விரும்புகிறேன். உன் வளர்ச்சியின்போது நிசப்தமாகவும் நேர்மையாகவும் வளர்ந்து கொண்டிருக்க வேண்டும். அமைதியான வேளையில் உனது உள்ளார்ந்த உணர்வு மட்டுமே பதிலளிக்கக் கூடிய கேள்விக்கு, வெளிப்புறத்தில் பதில்களைத் தேடி, அதனை நீ சஞ்சலப்படுத்தக் கூடாது.

உனது கடிதத்தில் பேராசிரியர் ஹொரசெக்கின் பெயரைப் பார்த்தது எனக்குச் சந்தோஷமளித்தது. அந்த அன்பார்ந்த, கற்றறிந்த மனிதரிடம் நான் மிகுந்த மதிப்பும் ஆயுள் பரியந்தமான நன்றி பாராட்டுதலும் வைத்துள்ளேன். நான் எப்படி உணர்ந்துகொள்கிறேன் என்று அவரிடம் தெரிவிப்பாயா? அவர் இன்னும் என்னை நினைத்திருப்பது அவரது நல்ல தன்மையாகும், அதனை நான் போற்றுகிறேன்.

எனக்கு நீ அனுப்பியிருந்த உன் கவிதைகளை உனக்குத் திருப்பி அனுப்புகிறேன். உனது கேள்விகளுக்கும் நேரிய நம்பிக்கைக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி பாராட்டுகிறேன். என்னால் முடிந்த அளவு நேர்மையாகப் பதிலளித்துள்ளதன் மூலம், நிஜமாகவே ஓர் அந்நிய னான நான், என்னைச் சற்று தகுதியானவனாக ஆக்கிக்கொள்ள முயன்றிருக்கிறேன்.

மிகவும் உண்மையுள்ள உனது,

ரெய்னார் மரியா ரில்கே.

Comments are closed.