மருத்துவக் கொள்ளைகள் / கோவை எம் தங்கவேல்

[ A+ ] /[ A- ]

images-17

யாண்டு பலவாக நரையில வாகுதல்

யாங்காகியரென வினவுதிராயின்

மாண்டவென் மனைவியோடு மக்களும் நிரம்பினர்

யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்

அல்லவை செய்யான் காக்கும் அதன்றலை

ஆன்றவிந்தடங்கிய சான்றோர்பலர் யான்வாழுமூரே –

வயதான பிறகும் தலையில் ஒர் நரைமுடி கூட இல்லையே என்று கேட்ட நண்பருக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த பிசிராந்தையார் மேற்படி பாடலை பதிலாக்கினார். பாடலின் ஒரு வரி அர்த்தம் என்ன தெரியுமா? நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன், ஆதலால் எனக்கு நரை திரை இல்லை என்பதுதான். இதென்ன இலக்கியமாக இருக்கிறதே என்று அலறியடித்து ஓட வேண்டாம். விஷயம் இருக்கிறது.

உலகப் புகழ் பெற்ற கோடீஸ்வர வள்ளல் ராக்பெல்லர் உலக மகா கஞ்சனாய், பிசினஸ் பிசினஸ் என்று ஓடி ஓடி சம்பாதித்தவர். பிற்காலத்தில் அவரால் சம்பாதிக்கப்பட்ட அத்தனை பொருளும் பிறருக்கு தானமாய் அளிக்கப்பட்டன. ஏன் தெரியுமா? கோடிகள் குவிப்பது மட்டுமே வாழ்க்கை என்று எண்ணி இருந்தவருக்கு கோடிகளுடன் பரிசாய் நோயும் கிடைத்தது. வாழ்க்கையின் இறுதியில் உலக மகா கஞ்சனாய் வாழ்ந்த ராக்பெல்லர், பிறருக்கு அள்ளிக் கொடுத்து வள்ளல் ராக்பெல்லராய் மாறினார். அந்த மகிழ்ச்சியால் நோயிலே படுத்தவர் ஆரோக்கியமானார். வாழ்க்கையின் வரலாற்றுப் பக்கங்களிலே வள்ளல் என்ற அடைமொழியைப் பெற்றார்.

இந்த உலகில் நோயுள்ளவர்களே இல்லாது இருப்பின் எப்படி இருக்கும் என்று ஒரு கணம் கண்ணை மூடி சிந்தித்துப் பாருங்கள். மனிதராய் பிறந்தால் நோய் இல்லாமல் வாழவே முடியாது என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. ஆனால் அது உண்மை அல்ல. மனிதனால் முடியாதது என்று இவ்வுலகில் எதுவும் இல்லவே இல்லை. மனதை மகிழ்ச்சியோடு வைத்துக் கொண்டால் நரை திரை மூப்பு என எதுவும் அண்டவே அண்டாது என்றார்கள் முன்னோர்கள். இதையெல்லாம் நாம் கடைபிடிக்காத காரணத்தால் நாம் எப்படிச் சுரண்டப்படுகிறோம் என்பதையும், கண்டதைத் தின்று விதி வந்த அன்று சாவோம் என்று வாழ்பவர்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதையும் பார்க்கலாம். அதன்பிறகு பிசிராந்தையார் பாடலுக்கு வருவோம்.

இந்தியாவின் கடை மூலையில் சுண்டைக்காய் அளவு கூட இல்லாத இலங்கையில் அடிப்படைக் கல்வி முதல், மருத்துவக் கல்வி வரை இலவசமாய் படிக்க அரசாங்கமே உதவுகிறது. பெற்றோர்களுக்கு ஒரு பைசா செலவும் இல்லை. இலவச சோறு போடாமல், இலவசமாய் படிக்க வைக்கின்றது. அதுமட்டுமல்ல அங்கு மருத்துவ சிகிச்சையும் இலவசம். ஆனால் இந்தியாவில் பாருங்கள். படிக்க வேண்டுமென்று நினைத்தால் ஏழைக்கு அது அவ்வளவு சாத்தியமா? சளி காய்ச்ச்சல் வந்தால் குறைந்தது ஆயிரம் ரூபாய் அல்லவா செலவாகிறது? சுண்டைக்காய் நாடெல்லாம் இலவசமாய் கல்வியையும், மருத்துவத்தையும் அளிக்கும் போது உலகத்திலேயே பெரிய ஜனநாயக நாட்டால் ஏன் கொடுக்க முடியவில்லை? இதைப் பற்றி இறுதியில் பார்க்கலாம். முதலில் தனியார் மருத்துவமனைகள், மருந்துக் கம்பெனிகள் மற்றும் மருத்துவர்கள் மக்களை ஏமாற்றி அடிக்கும் கொள்ளைகள் பற்றி பார்த்து விட்டு நாட்டுப் பிரச்சினைக்கு வருவோம்.

தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் கட்டண கொள்ளைகளைப் பொறுக்க முடியாமல் ஒருவர், டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கொன்றினை தாக்கல் செய்தார்.

தனியார் மருத்துவமனைகள் ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிப்பதாக வாக்குறுதி கொடுத்து, மிக மிகக் குறைந்த விலையில் நிலங்களைப் பெறுவதால், பத்து சதவீதம் உள்நோயாளிகள் மற்றும் இருபத்தைந்து சதவீத புறநோயாளிகளுக்கு இலவசமாய் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று 2012ம் வருடத்தில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் தனியார் மருத்துவமனைகளிடம் அறிவுறுத்தினார்கள். இதோ அவர்களின் கூற்று.

”During the last hearing on July 5, the court had said private hospitals were acting like star hotels and wriggling out from their promise to treat the poor — 25% outdoor and 10% indoor — free of cost. “You got the land at a very cheap rate from the government because of this promise. If you admit a poor patient but ask him to pay for everything, it is not free treatment,” it had said. It had given two weeks to the hospitals to come out with a comprehensive plan to give meaningful free treatment to poor patients under the agreement and if not, then it would vacate stay on Delhi High Court order directing hospitals not to charge a single penny from poor patients.”

தனியார் மருத்துவமனைகள் இலவசமாய் 25 சதவீத புற நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கினால் திவால் ஆகி விடுமே என்றும், மருத்துவர்களின் பிழைப்பு பாழாய்ப் போகுமே என்றும் இதைப் படிக்கும் நீங்கள் யோசிப்பீர்கள். நீங்கள் அப்படித்தான் யோசிப்பீர்கள். ஏமாறுவதற்கென்றே பிறப்பெடுத்தவர்கள் அல்லவா நாம்.

2012, ஏப்ரல் 9ம் தேதி அன்று கோலாகல ஸ்ரீனிவாஸ் (நன்றி) என்பவர் தினமணியில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அதில் வரும் சாராம்சத்தை பார்த்து விட்டு தனியார் மருத்துவமனைகளின் மீதும், மருத்துவர்கள் மீதும் இரக்கம் கொள்ளுங்கள்.

இந்த உலகில் உழைக்காமல் சம்பாதிப்பதில் நம்பர் ஒன் யார் என்று கேட்டால் அது மருத்துவர்கள் தான் என்றுச் சொல்லலாம். அதற்கு கீழே இரண்டு கணக்கு விபரங்கள் இருக்கிறது. அவசரப்படாமல் படியுங்கள்.

12 மணி நேரம் உடல் வலிக்க கூலி வேலை செய்பவர்களுக்கு சம்பளம் ரூபாய் 150, வீடு துடைக்கும் பெண்ணுக்கு மாதச் சம்பளம் ரூபாய் 3000, டேபிள் துடைக்கும் சப்ளையருக்கு ரூபாய் 5000. இது நமக்கெல்லாம் தெரிந்த கூலிக் கணக்கு. தெரியாத ஒரு கூலிக் கணக்கினை இப்போது பார்ப்போம்.

மூளைக்கான எம் ஆர் ஐ ஸ்கேன் எடுக்க ரூபாய் 6000. இதில் டாக்டருக்கு கமிஷன் ரூபாய் 4000. கம்பெனிக்கு 2000 ரூபாய். ஆறு நோயாளிகளுக்கு மேல் அனுப்பினால் அந்த நோயாளிகளின் மொத்த கட்டணமும் டாக்டருக்கே கொடுக்கப்படும். அதாவது 6000 ரூபாயும் டாக்டருக்கே கிடைக்கும். சிடி ஸ்கேனுக்கு 2500 இதில் 1500 டாக்டருக்கு கமிஷன். ஏன் ஒவ்வொரு டாக்டரும் ஸ்கேன் செய்து விடுங்கள், டெஸ்ட் எடுத்து விடுங்கள் என்று அக்கறையாக கேட்கின்றார்கள் என்று புரிகிறதா? நோகாமல் நுங்கு தின்பவர்கள் யாரென்று கேட்டால் இப்போது நீங்கள் தெளிவாகச் சொல்லி விடுவீர்கள் அல்லவா? இன்னும் மருத்துவர்களின் வசூல் மழை முடியவில்லை. மருந்துக் கடைகளில் கமிஷன், மருந்துக் கம்பெனிகள் இலவசமாய் கொடுக்கும் மருந்துகளை நோயாளிகளிடம் விற்பதில் கிடைக்கும் பணம், பின்னர் சாதாரண நோய்க்கு பல தடவை மருத்துவம் செய்தலில் கிடைக்கும் கன்சல்டேஷன் ஃபீஸ் என்று வசூல் மழைக்கு பஞ்சமே இல்லை.

டாக்டருக்கே இவ்வளவு வருமானம் வரும் என்றால் மருத்துவமனையை நடத்துபவர்களுக்கு எத்தனை கோடி கிடைக்கும் என்று ஒரு நிமிடம் சும்மா ஒரு மனக்கணக்கு போட்டுப் பாருங்கள். கிறுகிறுவென மயக்கம் வரும். நோயாளிகளைச் சுரண்டி, கோடி கோடியாய் குவிக்க முடியும் என்பதால் தானே புற்றீசல் போல தனியார் மருத்துவ மனைகள் முளைத்துக் கொண்டிருக்கின்றன.

ஜெர்மனியைச் சேர்ந்த பேயர் என்ற மருந்து நிறுவனம் கல்லீரல், சிறு நீரகப் புற்று நோய்க்கான 120 எண்ணிக்கை கொண்ட மாத்திரைகளை 2 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய்க்கு விற்றார்கள். அதாவது ஒரு மாத்திரையின் விலை ரூபாய் 2400 வரும். இதே மருந்தினை இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த நேட்கோ ஃபார்மா என்ற கம்பெனி இந்திய அரசுடன் மருந்தினை விற்கப் பெரும் போராட்டங்களை நடத்தி, தற்போது 120 மாத்திரைகளை ரூபாய் 8800க்கு அதாவது ஒரு மாத்திரையை 74 ரூபாய்க்கு விற்று வருகிறது. இதுவரை ஜெர்மனி கம்பெனி அடித்த கொள்ளையை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். எண்ணிலடங்கா கோடிகளை அல்லவா அவர்கள் குவித்திருப்பார்கள் மன்னிக்கவும் கொள்ளை அடித்திருந்திருக்கின்றார்கள். இத்தனையும் இந்திய அரசு கண்டும் காணாதது போலவே இருந்து வந்தது.

லேட்டக்ஸ் கையுறை வெறும் 50 ரூபாய் பொறுமானமுள்ளது மார்க்கெட்டில் 600 ரூபாய்க்கு விற்கப்படுகின்றதாம். எழுதிக் கொண்டே செல்கிறார் நண்பர். படிக்கப் படிக்க ஆயாசம் தான் எழுந்தது. இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய மத்திய அரசு உலகப் பொருளாதார சந்தை என்ற கொள்கையால் தனியார்கள் மக்களைச் சுரண்டிக் கொள்ளை அடிக்க உதவி செய்து வருகின்றது. யாரால் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள் பார்ப்போம்?

அதிக விலை என்பதை ஒரு வகையில் ஏற்றுக் கொண்டாலும் அதை விடக் கொடுமையாக அடிக்கும் கொள்ளை அல்ல அல்ல கொலைகளையும் மருத்துவ உலகம் நடத்திக் கொண்டு வருகிறது. அது என்ன தெரியுமா? இந்திய அரசால் தடை செய்யப்பட்ட மருந்துகளை எந்த வித தடையுமின்றி மருந்துக் கம்பெனிகள் தயாரித்து விற்று வருகின்றன. இதற்கு ஒரு நண்பரின்(உயிரோசை- திரு எர்னஸ்டோ குவேரா – நன்றி) கட்டுரையினை ஆதாரமாய் எடுத்துக் கொள்வோம். இந்திய அரசின் கெஜட்டில் மத்திய அரசின் மருந்துக் கட்டுப்பாடு வாரியத்தால் 79 வகையான மருந்துப் பொருட்கள் தடைசெய்யப்பட்டவை என அறிக்கைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அவை மனித உயிருக்கு உலை வைக்கும் கொடூரத்தன்மை கொண்ட பக்க விளைவுகளை உருவாக்கும் என்பதால் தடை செய்யப்பட்டது. ஆனால் இதையெல்லாம் யார் கண்டு கொள்ளப்போகின்றார்கள் என்று மருந்துப் பொருட்கள் தயார் செய்யும் கம்பெனிகள் இதுகாறும் தடைசெய்யப்பட்ட மருந்துகளை தொடர்ந்து தயாரித்து, விற்பனை செய்து கொண்டுதான் இருக்கின்றன. இவ்வகை மருந்துகளைச் சாப்பிடுவோர் பலவித புது விதமான நோய்களில் விழுந்து செத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய சுகாதாரத்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டு வாளாமல் இருக்கின்றது. அப்படி இந்திய அரசால் தடை செய்யப்பட்ட சில மருந்துகளை பார்க்கலாம்.

1.அனால்ஜின்(Analgin) – பயன்பாடு – வலி நிவாரணி பக்க விளைவு – எலும்பு மஜ்ஜை சீர்கேடு

2.நிமிசுலைட்(Nimisulide) பயன்பாடு – வலி நிவாரணி மற்றும் காய்ச்சல் பக்க விளைவு – கல்லீரல் செயல் இழப்பு

3.பினைல் ப்ரோபநோலமைன்(phenyl propanolamine)பயன்பாடு – சளி மற்றும் மூக்கு ஒழுகுதல் பக்க விளைவு – மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் திடீர் அடைப்பால் சுயநினைவு இழத்தல்

4.சிசாபிரைடு(cisapride) பயன்பாடு – மலச்சிக்கல் மற்றும் அதிக அமிலம் சுரத்தலை கட்டுப்படுத்துதல், பக்க விளைவு – இதயத் துடிப்பு சீர்கேடு

5.குயிநோடக்ளர்(quinodochlor) பயன்பாடு – வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல் பக்க விளைவு – கண்பார்வை பாதிப்பு

6.பியுரசொளிடன்(Furazolidone)பயன்பாடு – வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல் பக்க விளைவு – புற்றுநோய்

7.நைட்ரோபியுரசொன்(Nitrofurozone) பயன்பாடு – கிருமிகளை அழித்தல், பக்க விளைவு – புற்றுநோய்

8.ஆக்சிபென் பியுட்டசொன்(Oxyphenbutozone)பயன்பாடு – வலி நிவாரணி பக்க விளைவு – எலும்பு மஜ்ஜை சீர்கேடு

9 . பைப்பரசின் (Piperazine) பயன்பாடு – வயிற்றுப் புழுக்களை அழித்தல் பக்க விளைவு – நரம்புச் சிதைவு

10 . பினப்தலின் (Phenophthalein ) பயன்பாடு – மலமிலக்கி பக்க விளைவு – புற்றுநோய்

இந்த மருந்துகளின் விற்பனைப் பெயர்கள் கீழே

1. அனால்ஜின் – Paralgan-M,Novalgin,

2. நிமிசுலைட் -Monogesic,N lid,Nam,Nelsid,Nimbus,Nimulid,Nise,Nugesic,Sumo,Zydol

3. பினைல் ப்ரோபநோலமைன் – D-cold,Coldact,

4. சிசாபிரைடு -Alipride,Cisapro,Santiza,Unipride

5. பியுரசொளிடன் – Furoxone

6. பைப்பரசின் -Piperazine citrate

7. குயிநோடக்ளர் – Entero quinol

நிமிசுலைட் பாரசெட்டமல் மருந்தைத் தொடர்ந்து சாப்பிட்டால் இதய நோய் வரும் என்று பின்னால் தான் தெரிய வந்ததால், 2004இல் மத்திய அரசு தடை செய்தது. இம்மருந்தினை அதிக அளவில் தயார் செய்து வைத்திருந்த மருந்துக் கம்பெனிகள் விழி பிதுங்கி நின்ற போது, 200 கோடியை வாங்கிக் கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் மருந்தை ஆறு மாதம் விற்பனை செய்ய தடையை நீக்கி உதவினார் என்று நண்பர் எழுதியிருக்கிறார்.

அதுமட்டுமா முன்னாள் உச்சபதவியில் இருந்தோரின் நட்பு உறவுகளில் பலர் போலி மருந்து தயார் செய்து தமிழக மக்களைக் கொன்று வந்தார்கள் என்பதையெல்லாம் கடந்த கால செய்திகளில் நாம் படித்திருக்கிறோம். அதாவது காசைக் கொடுத்து நம்மை நாமே கொலை செய்து கொண்டிருக்கிறோம்.

ஜன நாயக நாட்டில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தான் நம்மால் ஏதாவது செய்ய முடியும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் அப்படித்தான் இருக்கிறது. குற்றவாளிகளுக்கு ஏதுவாய்த்தான் சட்டங்கள் இருக்கின்றன. ஏனென்றால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாதாம். உண்மையில் நிரபராதிகள் தான் தண்டிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றார்கள். மக்கள் பணி செய்ய வரும் அரசியல்வாதிக்கு தனியார் மருத்துவமனையிலே ஸ்பெஷல் சிகிச்சை கிடைக்கும். ஆனால் அந்த அரசியல்வாதியைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கோ குப்பைத் தொட்டிபோல காட்சியளிக்கும் மருத்துவமனைகளிலே சிகிச்சை கிடைக்கும். இதைத்தான் ஜன நாயகம் என்பார்கள். இதைப் பற்றி பிறிதொரு நாள் பார்த்துக் கொள்ளலாம்.

இத்தனை அயோக்கியத்தனங்களைச் செய்து கொண்டிருக்கும் மருத்துவ உலகை கட்டுபடுத்தாமல் அரசாங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஏன் தெரியுமா? அரசு மக்களை கருணையினாலோ அல்லது ஓட்டுப் பெறுவதற்காகவோ வாழ அனுமதித்து இருக்கிறது. அரசுக்கு மக்கள் தேவையில்லை என்றால் அடுத்த நிமிடம் அழித்து முடித்து விடும்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆன பிறகும் இன்றைக்கும் இந்தியாவில் பசியோடிருப்பவர்கள் இருக்கத்தானே செய்கின்றார்கள்? இந்த நிலைக்கு மக்களை உட்படுத்தி இருக்கும் அரசியல்கட்சிகள் மருத்துவத்துறையில் தனியாரை அனுமதித்த காரணம் சேவை என்றா நினைக்கின்றீர்கள்? அரசியல்வாதிகளின் கறுப்புப் பண வேட்டையில் கோடிகள் குவிய வேண்டும் என்ற பேராசைதான் காரணம். எந்த ஒரு அரசியல்வாதிக்கும் மக்களின் மீது அபிமானமோ, அன்போ, நன்றியுணர்ச்சியோ இருந்ததே இல்லை. இந்தியாவில் மருத்துவத்துறையானது தனியார் கைக்குப் போனது போனதுதான். இனி அது அரசின் பிடிக்குள் வரவே வராது. வரவும் விட மாட்டார்கள். கல்விக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து படித்து, மருத்துவராய் வருகின்றவர்கள் கொள்ளையடிக்கத்தான் செய்வார்கள், கோடிகளை லஞ்சமாய் கொடுத்து மருத்துவமனை தொடங்குபவர்கள் கொள்ளை அடிக்கத்தான் செய்வார்கள். இதையெல்லாம் தடுக்க வேண்டிய அரசு, இந்தியாவை உலகப் பொருளாதாரச் சந்தையாக மாற்றி விட்டிருக்கிறது. இனி மருத்துவத்துறையில் அரசு என்ன செய்தாலும் தனியாரைக் கட்டுப்படுத்தவே முடியாது. ஆனால் ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசியல்வாதிகள் சொல்லும் பொய் உறுதிகளை நம்பி நம்பி கெட்டுப் போய்க் கொண்டே தான் இருப்போம்.

ஆகவே பிசிராந்தையாரைப் பின்பற்றுவதை விட மக்களுக்கு வேறு வழியே இல்லை. நோயற்ற வாழ்வு வாழ முயற்சிக்க வேண்டும். நோயாளிகளே இல்லையென்றால் தனியார் மருத்துவமனைகளின் ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்து போய் விடும் அல்லவா? அதற்கு என்ன உண்வு சாப்பிட்டால் உடலுக்கு நல்லது, எது கெட்டது என்ற அறிவும் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுமென்ற திடமும் கொண்ட வாழ்க்கை முறையினை அமைத்துக் கொண்டால் நரை, திரை, மூப்பு இன்றி வாழ்வாங்கு வாழலாம். அரசு செய்யத் தவறியதை தனி மனித ஒழுக்கத்தினாலும், கட்டுப்பாடான வாழ்க்கை முறையாலும் மக்கள் செய்யலாம்.

•••

Comments are closed.