எஜமானடிமைகள் / நாகரத்தினம் கிருஷ்ணா

[ A+ ] /[ A- ]

download (32)

காலச்சுவடு பதிப்பகத்திற்காக அல்பெர் கமுய்யுடைய(Albert Camus) ‘l’homme révolté’ என்ற நூலை ‘புரட்சியாளன்’ என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறேன். 1951ல் வெளிவந்த நூல் என்ற போதும், தமிழில் இது போன்ற நூலின் வரவு அவசியம் எனக்கருதி மொழிபெயர்க்கப்பட்டது. அந்நூலை மொழிபெயர்த்தபோது, எனக்குத் தோன்றியதுதான் இந்த ‘எஜமானடிமை’ என்ற சொல். அல்பெர் கமுய் மனிதர்கூட்டத்தை எஜமான் அடிமையெனப்பிரித்து புரட்சிக்கான காரணங்களை அடுக்குகிறார். ஆனால் இன்றைய மனிதர் கூட்ட த்தில் எஜமானுமில்லை, அடிமையுமில்லை நாம் அனைவருமே எஜமானடிமை, என்பதனால் புரட்சி என்ற சொல்லை அவநம்பிக்கையுடன் பார்க்கவேண்டியுள்ளது .

அல்பெர் கமுய் மனிதர்கூட்டத்தை எஜமான் அடிமையென இரண்டாகப் பிரித்து, புரட்சி என்ற சொல்லை வரலாற்றின் அடிப்படையில் ஆய்வு செய்திருக்கிறார். மரபு, சமயம், அதிகாரபீடங்கள் ஆகியவற்றின் ஆதிக்கத்தை, சகித்தது போதுமென மறுக்க தீர்மானிப்பதும், தீர்மானித்ததைச் செயல்படுத்துவதும் புரட்சி. கிரேக்கத் தொன்மங்கள், கலை இலக்கியங்கள், முடியாட்சிகள், சோஷலிஸ அரசுகள் என பலதுறைகளிலும் நிகழ்ந்த புரட்சியின் பல்வேறு முகங்களை அறிமுகப்படுத்துவதோடன்றி அவற்றின் பண்புகளையும் வகைப்படுத்திய ஆழமானதொரு ஆய்வு. அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த நூல். அன்றே புரட்சியின் போக்குபற்றிய அனுமானமும் தீர்க்கதரிசனமும், அதுபற்றிய எதிர்கால கவலையும் அவருக்கு இருந்திருக்கிறது. கலகமும் கிளர்ச்சியும் புரட்சியின் தொடக்க நிலைகள். புரட்சி என்பது இவ்விரண்டின் இறுதிக்கட்டம். இன்றைக்கு நாம் அதிகம் சந்திப்பது கலகத்தை மட்டுமே, கிளர்ச்சி என்ற சொல்லையும் அரிதாகத்தான் கேள்விப்படுகிறோம், புரட்சி என்ற சொல், திரையில், படைப்பிலக்கியங்களில், கலையில், மேடைபேச்சில், கைத்தட்டல் எனும் சன்மானத்திற்காகவே உபயோகிக்கப்படுகிறது.

புரட்சியும் தனிமனிதனும்

படைப்பிலக்கியம், அரசியல், சமயம், மரபென்று பிறப்பெடுக்கும் களம் எதுவென்றாலும் ‘மறுப்பு’ பிறப்பெடுப்பது தனிமனிதனிடம். பின்னர் சமூகத்தின் ஒட்டுமொத்த ஆதரவுடன் கிளைகளை விரிப்பது. ‘நான் புரட்சி செய்கிறேன், அதனால் நாம் இருக்கிறோம்’ எனப் புரட்சியாளன் ஊடாக இருத்தலுக்குப் புதியதொரு விளக்கத்தை அல்பெர் கமுய் தருகிறார். அதிகாரத்திற்கு எதிரான தனிமனித மறுப்பினால் மீட்கப்படும் உரிமை, தனக்கு மட்டுமல்ல நாளைய எனது சமூகத்திற்காகப் பெறப்படும் உரிமை என உணரப்படும்போது புரட்சி தனிமனிதன் என்ற குறுகிய நிலப்பரப்பைக் கடந்து சமூகம் என்ற விரிந்த தேசத்திற்குள் பிரவேசிக்கிறது. இந்நிலையில் முடிந்தால் உரிமையை மீட்பது இல்லையெனில் சாவது என்ற முடிவுக்கு புரட்சியாளன் வருகிறான். இம்முயற்சியில் புரட்சியில் இறங்குபவனோ, அவன் இறங்கக் காரணமானவனோ மரணிப்பது தவிர்க்க இயலாதது. ஆகப் புரட்சி வெள்ளத்தின் ஊற்றுகண் தனிமனிதன். ஆனால் இன்றைய மனிதன் புரட்சியாளனாக உருவெடுக்கச் சாத்தியமுண்டா ?

மார்க்ஸ் கனவுகண்ட உலகத் தொழிலாளர் ஒற்றுமை தோற்றதற்கும், இன்று அதிகாரத்திற்கெதிரான கலகம், கிளர்ச்சிகள் போன்றவை (அதாவது புரட்சி தன் பூர்வாங்க நிலையிலேயே) தோல்வியைத் தழுவுவதற்கும் ஒரே ஒரு காரணத்தைத் தான் சொல்ல முடியும். அது ஒவ்வொரு மனிதனும் முதலாளி தொழிலாளியென்ற இருகுணங்களையும் தன்னுள் ஒளித்திருப்பதைப்போலவே, அவன் எஜமான் அடிமை இருபண்புகளுடனும் வாழ்கிறான் அல்லது எஜமானடிமையாக இருக்கிறான்.நவீன மனிதன் பிறரை எஜமானாகவும் பார்ப்பதில்லை தன்னை அடிமையாகவும் உணர்வதில்லை.

புரட்சி ‘உடன்படுதல் – மறுத்தல்’ என்ற இரு பண்புகளை மனிதரிடத்தில் காண்கிறது. கட்டளைக்கு அடிபணிந்த மனம், அதை மறுத்து புரட்சி அவதாரம் எடுப்பதாக அல்பெர் கமுய் தெரிவிக்கிறார். அதாவது கிளர்ச்சியாளன் கட்டளையை மறுத்து தனது உரிமைக்குப் போராடுகிறவன், இன்று நிலமை வேறு : நிகழ்கால மறுப்பாளி உரிமைக்காக அல்ல அதிகாரத்திற்காக போராடுகிறான். முடிவில் எஜமானை அடிமையாக நடத்தவேண்டும் என்பது மட்டுமே அவன் அவா. அவன் இறுதி நோக்கம் அடிமைகளுக்கு உரிமையை மீட்டுத் தருவது அல்ல, தனக்கும் ஆயிரம் அடிமைகள் வேண்டும் என்ற உந்துதல் பாற்பட்ட து. இந்த நோக்கில்தான் எஜமானடிமை முக்கியத்துவம் பெறுகிறது

எஜமானடிமை

எஜமானடிமைகளை புரிந்துகொள்ளும் முன்பு அதிகாரம் என்ற சொல்லை விளங்கிக் கொள்ளவேண்டும். ஆங்கிலத்தில் authority மற்றும் Power என்று இரண்டு சொற்கள் அதிகாரத்தின் தரப்பில் வழக்கில் உள்ளன. நான் இன்னவாக இருக்கிறேன் அதனால் எனக்கு சில அதிகாரம் செலுத்தும் உரிமைஉள்ளது என்பதால் பிறப்பது அதிகாரம். இந்த அதிகாரத்தைக் கடந்த காலத்தில் முடிமன்னர்கள் ‘Divine right’ ஆகப் அதாவது தெய்வீக உரிமை எனப் பார்த்தார்கள். இந்திய மரபின் வழி சித்தரிப்பதெனில் கடவுள் விதித்தது. கடவுள் எங்களுக்கு ஆளுகின்ற உரிமையை வழங்கியிருக்கிறார் அல்லது உங்களை ஆள எங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது, நீங்கள் அதனை ஏற்கவேண்டும். எங்களை கேள்விகேட்கின்ற உரிமை உங்களுக்கில்லை என்பது அதற்குப் பொருள். இந்த அதிகாரத்தை வேறுவகையிலும் பெறலாம். ஒரு கூட்டம் முன்வந்து தங்களை வழிநட த்த ஒருவர் வேண்டும் எனத் தீர்மானித்து அதிகாரத்தை ஒருவர்வசம் ஒப்படைக்கலாம். அதற்குப் பல காரணங்கள் : அந்நபரின் ஆளுமை காரணமாக இருக்கலாம், பலம் காரணமாக இருக்கலாம், அந்தக் கூட்டத்தை வழி நடத்தும் பொறுப்பை வேறொருவரிடம்அளித்தால் பிறர் இணக்கத்தைப் பெறுவது சாத்தியமில்லை என்ற நிலையிருக்கலாம். இப்படி அதிகரத்திற்கு வந்தபின்பு இருக்கின்ற சட்டங்களைக்கொண்டோ அல்லது புதிய சட்டங்களைக் கொண்டோ, அல்லது வேறுவகையிலோ( பணம், படைபலம், காவல்துறை இவற்றைக்கொண்டு) தமது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வது அல்லது தொடர்ந்து அதிகாரத்தைச் செலுத்துவதை Power அல்லது இயக்குத் திறன் எனக் கருதலாம்.

நவீன அரசியல் எஜமானர்கள் Divine right ல் வருபவர்களல்ல, அரசியல் சட்டம், நிவாகச் சட்டம், இவற்றின் விதிமுறைகளைப் பூர்த்திசெய்து அதிகாரத்திற்கு வருபவர்களுமல்ல. பின் வாசல் வழியாக நுழைகிறவர்கள். அண்ணே என்றும், தலைவரே என்றும், ஐயா, அம்மா வென்றும் தங்கள் எஜமானை அல்லது எஜமானியை அழைத்து உள்ளே நுழைந்து அப்படி அழைக்கப்பட்டவரின் அதிகாரத்தைக் கைப்பற்றும் தந்திரசாலிகள். இப்படி எஜமான் ஆகிறவர்கள் காலப்போக்கில் சோர்வுறுகிறார்கள். ஐயா உங்களுக்காகத்தான் செய்தேன், அக்கா உங்களுக்காத்தான் அதைச் செய்யச்சொன்னேன் என்கிற மனிதர்களிடத்தில் உண்மையில் இந்த எஜமான்கள் அடிமைகளாக வாழ்கிறார்கள். தங்கள் அதிகாரத்தில் குறுக்கிடுறவர்களை, குறுக்கிடக்கூடியவர்களை களையெடுத்து அலுத்து, தங்கள் துதிபாடிகளுக்கு எளிதில் அடிமையாக இருப்பது இவர்களுடைய எஜமான் வாழ்க்கையின் உச்சத்தில் நிகழும் அவலம். இது எஜமான் – அடிமை சூத்திரத்தால் பெற்ற விடை அல்ல. குரு – சிஷ்யன், தலைவன்-தொண்டன், தலைவி-தோழி என்ற உறவின் பரிணாமத்தால் நேரும் விபரீதம்.

பல முடிமன்னர்கள் தங்கள் ராஜகுருக்களுக்கு அடிமைகளாக இருந்திருக்கிறார்கள். கத்தோலிக்க குருமார்களின் கட்டளைகள் நிர்வாகத்தில் மட்டுமல்ல, சொந்தவாழ்க்கையிலும் மேற்குலக அரசாங்கங்கங்களின் வேதவாக்காக இருந்துள்ளன. சோஷலிஸ அரசுகளின் எஜமானர்கள் அனைவருமே ஓர் ஆலோசகரிடமோ அல்லது ஆலோசனைக்குழுவினரிடமோ இறுதிக்காலத்தில் அடிமைப்பட்டுக் கிடந்தவர்கள் தான். அலெக்ஸாந்த்ரோவுக்கு ஸ்டாலின் அடிமை, கொயெபெல்ஸுக்கு உண்மையில் ஹிட்லர் அடிமை, சகுனிக்கு துரியோதன ன் அடிமை, மனோன்மணீய குடிலனுக்கு பாண்டியன் சீவகன் அடிமை, இப்படி சான்றுகளை அடுக்கிக்கொண்டு போகலாம்.

தன்னைச் சுற்றியுள்ள எதையும் சந்தேகத்துடன் பார்க்கப் பழகி இறுதியில் தங்கள் நிழலைக் கண்டும் அஞ்சுகின்ற இம்மனிதர்களைப் புரிந்துகொண்டுள்ள, இவர்களை நிழலாகத்தொடர்கிற மனிதர்களுக்கு தங்கள் பலவீனமான எஜமான்களை அடிமைப்படுத்துவது எளிது. தவிர இந்த எஜமான்கள் ஒருகாலத்தில் அடிமைகளாக இருந்தவர்கள் என்றால் மிகமிக எளிது. அடிமைகளாக வாழ்க்கையைத் தொடங்கி அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள், எந்தத் தெய்வீக உரிமையினாலும் ( Divine Right ) அதிகாரத்தைப் பெற்றவர்களில்லை என்ற உண்மையை இவர்களை அண்டியிருக்கிற அடிமைகள் நன்கறிந்திருக்கிறார்கள். எஜமான், அடிமை என்ற இருநிலையிலும் இல்லாது, இரண்டும் கெட்டானாக அல்லது கெட்டாளாக வாழ்ந்து தொடுவானத்தில் கண்களை நிறுத்தி இறுதி மூச்சை விடுவது கொடுமைதான்.

Comments are closed.