சிபிச்செல்வன் கவிதைகள்

[ A+ ] /[ A- ]

602784_10200198662103337_515294167_n

முன் மதியம்

முன் மதியம் ஒரு கொய்யாப் பழத்தை
விண்டு உண்டேன்
இன்னும் சில பழங்களை விருந்தினர்க்குக் கையளித்தேன்
மீதியான
ஒரே ஒரு கொய்யாப்பழத்தை என் வீட்டின் மாடியிலிருந்து
தூக்கியெறிந்தேன்
தரையில் விழுவதற்குள் காற்றில் கிளை பரப்பி
கொத்து கொத்தாக காய்த்த கொய்யாப்பழங்கள்
மண்ணில்
சொத்தென
சொத்தென
விழுந்தன

**

அசைகிறது கேபிள் கம்பி

அதில் ஒன்றும் குழப்பமில்லை
அதில் ஒன்றும் சிக்கலில்லை
ஆனால்
எல்லாமே அதில்தான் இருக்கிறது.
அதில் ஒன்றும் குழப்பமில்லை
என்பதால் அதை அப்படியே விட்டுவிட இயலாது
அதில் ஒன்றும் சிக்கலில்லை என்பதால் அதை விடுவிக்காமலும்
விட இயலாது
ஆக குழப்பமும் சிக்கலும் வேறுவேறானதல்ல என
குறுக்குமறுக்காக ஓடிக்கொண்டிருக்கிறது இவ்வேளை
ஒரு அணில்போல்
கேபிள்கம்பி மேலும் கீழும் அசைந்தசைய

•••

சற்றுமுன் தூறலாகப் பெய்த மழை

தவளைகள் கறட்கறட்டென கத்தத் தொடங்கியிருந்தன
இங்கொன்றும் அங்கொன்றுமாக இடியோசை வெடித்துக்கொண்டிருந்தது
மண்வாசனை கிளர்ந்து பரவியது
இருண்ட வானில் வெளிச்சம் கீறி மறைந்தன மின்னல்கள்
இவ்வாறாக மழை வருவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியிருந்தன
வானிலை அறிக்கையும் மழை வருவதை மீண்டும் ஒருமுறை அறிவித்துக்கொண்டிருந்தது
சற்றுமுன் தூறலாகப் பெய்து
ஓய்ந்திருந்த சற்றில்
இன்னும் மழை வருமா என எதிர்பார்த்து நடக்கிறார் ஒரு சகபயணி
வந்துவிடுவதைப் போலவேயிருக்கிறார் மற்ற சகபயணி
நூறு சதவிகிதம் மழை வருவதற்கு வாய்ப்பிருக்கும் வானமுமாக

**

குறிப்பு

இந்தக் கவிதைகள் மூன்றும் நவின விருட்சம் 101 ஆவது இதழில் வெளிவந்த கவிதைகள். நன்றி நண்பர் அழகியசிங்கர்.

Comments are closed.