அஜ்வா நாவல் விமர்சனம் / சிவப்ரசாத்

[ A+ ] /[ A- ]

images (4)

•••

images (5)

•••

இந்த வருடம் சென்னை புத்தகத் திருவிழாவில் நிறைய புத்தகங்கள் வாங்கினேன். வாங்கிய புத்தகங்களில் முதலில் வாசித்த புத்தகம் “அஜ்வா”. சரவணன் சந்திரனின் முத்தைய நாவலான “ரோலக்ஸ் வாட்ச் ” தந்த நம்பிக்கையால் இதை வாசித்தேன். பயத்தின் காரணமாக போதை உலகத்துக்குள் சிக்கிக் கொண்டவன் ஒருவன் அவற்றிலிருந்து மீண்டு வருவதற்கான அக மற்றும் புறக்காரணிகளைப் பற்றி பேசுவதே அஜ்வா நாவலில் மையம்.

கதைச் சொல்லியின் அம்மா, அத்தை, காதலி டெய்ஸி, நண்பன் ஜார்ஜ் ஆண்டனி போன்றவர்கள் உயிரோட்டமான பாத்திரப் படைப்புகள். வாழ்க்கையை வெட்டாத்தியான மனநிலையில் பார்க்கும் நாவலின் தொனி நன்றாக உள்ளது. பாரம்பாரியமான விவசாயத்தால் ஏற்படும் நஷ்டத்திலிருந்து விலகி பரிசோதனை முயற்சியாக செய்யப்படும் விவசாயம் குறித்த பார்வையை முன்வைப்பது நாவலுக்கு கூடுதல் அழகு சேர்க்கிறது.

சரவணன் சந்திரனின் பலம் என நான் நினைப்பது நாவலுக்காக அவர் தேர்ந்தெடுக்கும் களம். அந்த களம் நடுத்தர வர்க்கம் அறியாத அல்லது அறிந்தாலும் அங்கு செல்ல முடியாத பெரும் பணக்காரர்கள் புலங்கும் இடம். இவரின் நாவலில் வரும் நடுத்தர வர்க்க கதைச்சொல்லிகள் கூட அப்படியான இடத்தில் ஒட்டியும் ஒட்டாமலும் தான் அலைகிறார்கள். ஒரு வகையில் அதிலிருந்து வெளிவருவதே அவர்களுக்கான விடுதலையாக அமைத்து விடுகிறது. இந்த ஊசலாட்டத்தின் வழியாக அந்த உலகத்தில் புலங்கும் மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றியும் தான் அந்த உலகத்துக்குள் சிக்கிக் கொண்ட நிலையைப் பற்றியும் சொல்லிச் செல்கிறார்கள்.

ரோலக்ஸ் வாட்ச்சில் பெரும் பணக்காரர்கள் வட்டத்தில் பழகும் இடைத்தரகன் தான் கதைச்சொல்லி என்றால் அஜ்வாவில் பயத்தின் காரணமாக போதை உலகத்துக்குள் தன்னை ஒப்புக் கொடுத்த ஒருவன் கதைச்சொல்லி. இந்த உத்தியின் வாயிலாக இரண்டு நாவல்களும் ஒன்றுக்கொன்று தொடச்சியானவை என்பதான எண்ணம் எழுகிறது. இது ஒரு நாவலாசிரியராய் சரவணன் சந்திரன் சறுக்கும் இடமாக தோன்றுகிறது. எனவே இனி எழுதவிருக்கும் நாவல்களுக்கு வேறு உத்தியைக் கையாண்டால் சிறப்பு.

சரவணன் சந்திரனின் மொழி பாசாங்கு அற்ற தெளிந்த மொழி. அது குளிருட்டப்பட்ட வாகனத்தில் அமர்ந்து ஆளில்லாத சாலையில் போகும் பயணத்தைப் போல ஈர்த்துச் செல்கிறது. இந்த நாவலில் மரணம் என்பது நிரம்பிக் கிடக்கிறது. கதைச் சொல்லி தன் நண்பர்கள் பற்றி சொல்லும் ஒவ்வொரு கதையிலும் குறைந்த பட்சம் ஒரு மரணமாவது நிகழ்ந்து விடுகிறது. தன் அன்பிற்குறியவர்களின் இழப்பைத் தாங்க முடியாமல் தான் சிலர் போதை உலகத்துக்குள் ஒழிந்து கொள்கிறார்கள். இன்னும் சிலர் போதை உலகத்தில் கரைந்தே மரணம் அடைகிறார்கள். இந்த உலகத்திலிருந்து வெளியேறும் மார்க்கம் தெறிந்த கனக ரத்தினம் போன்றவர்கள் ஐ.பி.எஸ் ஆகி வெற்றி பெறுகிறார்கள்.

இந்த நாவலில் கதைச்சொல்லியின் காதலியான டெய்ஸின் மரணம் நம்மையும் பாதிக்கிறது. கதைச்சொல்லி போதை உலகத்திலிருந்து மீட்டு வரும் புள்ளியாய் அவளின் மரணம் அமைந்து விடுகிறது. நாவலில் கதைச்சொல்லி அவநம்பிக்கையின் வார்ப்பு என்றால் அவனின் நண்பன் ஜார்ஜ் ஆண்டனி, முத்தலிப் போன்றவர்கள் தன்னம்பிக்கையின் புதல்வர்கள் எனலாம்.

அஜ்வாவில் ஒவ்வொரு அத்தியத்தையும் ஒவ்வொரு சிறுகதையைப் போல தான் எழுதியிருக்கிறார். போதை உலகத்தின் அறியப்படாத பக்கங்களை கணிதப் புதிர்களுக்கு விடை காணும் மாணவனின் ஆர்வத்திற்கு ஒப்பாக சொல்லிச் செல்கிறார். ஹாட் பாக்ஸ், விடுதி,ரெட் மைட் வண்டு, அதலைக்காய், லுக்கேமியா, சமாதி கோவில், அஜ்வா, கமுதியில் விவசாயம் செய்யும் சீக்கியர்கள் என்று நாம் அறியாத உலகத்தின் ஒவ்வொரு புதரையும் அவர் சொல்லுகின்ற போது நாவல் வாசிப்பு இன்ப மையமானதாகவே இருக்கின்றது. இது ஊடகத்தில் பணியாற்று ஒருவர் தன் தேடலில் கிடைக்கும் அரிய செய்திகளைக் கதைகளாக கோர்க்கும் தொழில் நுட்பம்.

இந்த நுட்பத்தில் சரவணன் சந்திரன் சிறந்து விளங்குகிறார். ஆனாலும் மீள் வாசிப்பு என்று வரும் போது புதிர் மையமான இந்த தகவல் செல்லும் யுக்தி விடை தெறிந்த கணக்கையே மீண்டும் போடும் சளிப்பையே தரும். நல்ல நாவல்கள் வாசகனை மீண்டும் வாசிப்புக்கு தூண்ட வேண்டும். அந்த வகையில் இந்த நாவல் தீவிர இலக்கிய பிரதியாகவும் மாறாமல் வெகுஜன இலக்கியமாகவும் ஆகாமல் நடுநிலையில் நிற்கிறது. இந்த இரண்டு கெட்டான் நிலையை சரவணன் சந்திரன் எளிதில் கடந்து விடுவார் என்ற நம்பிக்கையும் அஜ்வா எனக்கு அளிக்கிறது.

•••

Comments are closed.