Category: அருண் கொலாட்கர் சிறப்பிதழ்

அருண் கொலாட்கர் கவிதைகள் / தமிழில்: சமயவேல்

download-12

எனது பெயர் அருண் கொலாட்கர்

எனது பெயர் அருண் கொலாட்கர்

என்னிடம் ஒரு சிறிய தீப்பெட்டி இருக்கிறது

நான் அதைத் தொலைத்துவிட்டேன்

பிறகு அதை நான் கண்டுபிடித்தேன்

நான் அதை வைத்திருக்கிறேன்

எனது வலது கை பாக்கெட்டில்

இன்னும் அது அங்கேயே இருக்கிறது.

சுற்றி அலைதல்

பம்பாய் என்னை ஒரு பிச்சைக்காரன் ஆக்கியது.

கல்யாண் எனக்கு ஒரு கட்டி வெல்லம் கொடுத்தது சப்புவதற்கு

ஒரு அருவி இருக்கிற ஒரு சிறிய கிராமத்தில்

ஆனால் பெயர் இல்லை

எனது போர்வை ஒரு வாங்குபவனைக் கண்டுபிடித்தது

வெறும் பச்சைத் தண்ணீரில் நான் விருந்துண்டேன்.

நான் நாசிக்கை வந்தடைந்தேன்

பற்களுக்கிடையில் அரச இலைகளோடு.

அங்கே நான் எனது துக்காராமை விற்றேன்

எனக்குக் கொஞ்சம் ரொட்டியும் கொத்துக் கறியும் வாங்க.

நான் ஆக்ரா சாலையைவிட்டுத் திரும்பியபோது

எனது செருப்புகளில் ஒன்று ஆவியை விட்டது.

நான் ஒரு நல்ல குளியல் போட்டேன்

ஒரு சிறிய ஓடையில்.

நான் வந்து சேர்ந்த முதல் கதவைத் தட்டினேன்,

ஒரு துண்டுப்பிரசுரம் கேட்டேன், மற்றும் கிராமம் விட்டுக்கிளம்பினேன்.

ஒரு மரத்துக்குக் கீழே நான் உட்கார்ந்தேன்,

பசி இல்லை ஆனால் முன்பு எப்போதும் இல்லாத தாகம்.

எனது பெயர் இத்யாதி எல்லாம்

ஒரு மாட்டு வண்டியில் ஒருவரிடம் கூறினேன்

பிச்சைக்காரர்களை அவர் வெறுத்தார் மற்றும் துகாராமை மேற்கோளிட்டார்

ஆனால் அவர், நாங்கள் பின்பு அவரது தோட்டத்தை அடைந்தபோது,

குளிர்ந்த நீரைக் எனக்குக் குடிக்கக் கொடுப்பதற்குத்

தேவையான அன்பு அவரிடம் இருந்தது.

பிறகு வந்தது ரொடிஹாவன்

அங்கு ஒரு விசாரணைக்கு ஆளானேன்

மற்றும் அந்தப் பிணத்தை வெளியே இழுத்துப்போடும்படி ஆனது

இரவு முழுவதும் குரைத்துக் கொண்டே இருந்ததால்

ஒரு நாய் கோவிலில் இறந்தது

அங்கே கொஞ்சம் தூங்க நான் முயற்சி செய்தேன்.

அங்கே சாப்பிட ரொட்டி கிடைத்தது சரிதான்

ஆனால் ஒரு பெண் அதில் ஒன்றுக்கிருந்தாள்

இருட்டில் நான் அவளைப் பார்க்கவில்லை

மற்றும் அவள் வேகமாக இருந்தாள்.

ரொட்டியா வேண்டும் உனக்கு தாயோx நீ குருட்டுப் புxx நீ, அவள் கூறினாள்,

நான் ஒனக்கு ரொட்டி தர்றேன்.

ஒரு வயலிலிருந்து கொதிக்கும் கரும்புச்சாறு வாசம் வந்தது

நான் தின்பதற்குக் கொஞ்சம் கரும்பு கேட்டேன்

நான் சங்குப்பூச் செடியின்மேல் உட்கார்ந்தேன்

வேம்பு இலைகளைக் கொண்டு எனது பின்புறத்தைத் துடைத்தேன்

சாலையில் ஒரு பீடி கிடப்பதைப் பார்த்தேன்

எடுத்து என் பைக்குள் போட்டேன்.

அது நடை நடை நடை மற்றும் வழி முழுதும் நடை .

அது ஒரு பஞ்ச ஆண்டு.

நான் ஒரு இறந்த மாட்டைப் பார்த்தேன்

நான் ஒரு குன்றைக் கடந்தேன்

குன்றின் உச்சியிலிருந்த ஒரு சிறிய கோவிலில்

ஒரு சிறிய நாணயத்தை நான் எடுத்தேன்.

கோபர்ஹான் ஒரு பெரிய நகரம்

அங்குதான் ஸ்டாலின் இறந்து போனார் எனபதை வாசித்தேன்

கோபர்ஹான் ஒரு பெரிய நகரம்

அங்கு பிச்சையெடுப்பது வேட்கக்கேடாகப் பட்டது.

மற்றும் நான் ஐந்து கதவுகளைத் தட்ட வேண்டியிருந்தது

ஒரு அரைக் கை அரிசி பெறுவதற்கு.

எனது தாடியில் தூசி, எனது தலைமுடியில் தூசி.

ஒரு சம்மட்டியைப் போல சூரியன் என் தலை மேல்.

அரிக்கும் பின்புறம்

சிதறிய கற்களின் மேல் கழிந்தது ஓர் இரவு

எனது தகரக்காலணி ஓட்டம்

சூடேறிக் கொண்டிருந்தது.

என்னிடமிருந்து ஸ்டேஷன் இரண்டு மைல்கள் தொலைவு

நகரம் மூன்று மைல்கள் பின்னால் இருக்கிறது

எனது இடையிடுக்கில் சுருண்டுகொண்ட வேட்டியை

நேர் செய்வதை நான் நிறுத்தினேன்.

வியர்வை என் கண்களைக் கரித்த போதும்

நான் பார்க்க முடிந்தது.

சாலையோரம் ஒரு தாழ்வான வேலி.

ஒரு சுத்தமாகப் பெருக்கிய முற்றம்

ஒரு குடிசை. ஒரு பெரியவர்.

ஒரு வாசலில் ஓர் இளம்பெண்.

நான் கொஞ்சம் தண்ணீர் கேட்டேன்

மற்றும் அதைப் பெறுவதற்காகக் கைகளைக் குழித்து நின்றேன்.

எனது முழங்கைக்குக் கீழே தண்ணீர் சொட்டுகிறது

நான் பெரியவரைப் பார்க்கிறேன்

ஒரு நேர்த்தியான தாடி

அவரது கண்களில் தெரியும் மனநிறைவு

அவர் முன்னே பணிவுடன் விழுந்து கிடக்கும்

திறந்த மண்ணெண்ணெய் கேன்.

ரொட்டி வந்தது, கேட்கப்படாமல்,

ஓர் துணைக்காக ஒரு வெங்காயத்துடன்.

நான் அதை சாப்பிட்டேன்.

நான் உட்கார்ந்திருந்த பலசரக்கு சாக்கை எடுத்தேன்.

நான் ஓரிரு மைல்களுக்கு அதைப்பற்றி நினைத்தேன்.

ஆனால் நான் ஏற்கனவே அறிவேன்

அது சுற்றுவதில் இருந்து திரும்புவதற்கான நேரம் என்று.

மனோகர்

கதவு திறந்து கிடந்தது.

மனோகர் நினைத்தான்

அது மேலும் ஒரு கோயில் என்று.

அவன் உள்ளே பார்த்தான்

வியந்தான்

எந்தக் கடவுளை அவன் பார்க்கப் போகிறோனோ

அவன் வேகமாக வெளியே திரும்பினான்

ஒரு விரிந்த கண் கன்றுக்குட்டி

அவனைத் திரும்பிப் பார்த்தது.

இது மேலும் ஒரு கோவில் அல்ல,

அவன் கூறினான்,

அது ஒரு வெறும் பசுத்தொழு.

யஷ்வந்த் ராவ்

நீங்கள் ஒரு கடவுளைத் தேடுகிறீர்களா?

நான் ஒரு நல்ல கடவுளை அறிவேன்

அவரது பெயர் யஷ்வந்த் ராவ்

அவர் மிகச் சிறந்தவர்

அவரைப் தேடிப்பாருங்கள்

அடுத்தமுறை நீங்கள் ஜெஜூரியில் இருக்கும் போது.

இருக்கலாம் அவன் ஒரு இரண்டாம் தரக் கடவுள் தான்

மற்றும் அவனுடைய இடம் வெறும் பிரதானக் கோவிலுக்கு வெளியே

சுற்றுச் சுவருக்கும் கூட வெளியே.

அவர் வியாபாரிகள் மற்றும் குஷ்ட ரோகிகளைச்

சேர்ந்தவராக இருக்கலாம் போல.

நான் கடவுள்களை அறிவேன்

சௌந்தர்ய முகங்களோடு

அல்லது நேரான ஜரிகைகளோடு.

உங்கள் தங்கத்திற்காக உங்களை அமிழ்த்தும் கடவுள்கள்

உங்கள் ஆத்மாவிற்காக உங்களை அமிழ்த்தும் கடவுள்கள்

ஒரு எரியும் கங்குகளின் படுக்கையில்

உங்களை நடக்க வைக்கும் கடவுள்கள்.

உங்கள் மனைவிக்குள் ஒரு குழந்தையை வைக்கும் கடவுள்கள்

அல்லது உங்கள் பகைவருக்குள் ஒரு கத்தியை

உங்கள் வாழ்க்கையை நீங்கள் எப்படி வாழ்வதெனக் கூறுபவர்,

உங்கள் பணத்தை இரட்டிப்பாக்குவது

அல்லது உங்கள் நிலபுலங்களை மும்மடங்கு ஆக்குவது.

அவர்களுக்காக ஒரு மைல் தூரம் நீங்கள் தவழ்ந்தே வந்திருந்தாலும்

ஒரு புன்னகையைக் கூட மறைக்கத் தெரியாத கடவுள்கள்.

அவர்களுக்காக ஒரு புதிய கிரீடத்தை நீங்கள் வாங்காவிட்டால்

உங்களை மூழ்கடிக்கும் கடவுள்கள்.

அவர்கள் எல்லோருமே உறுதியாக வாழ்த்தப்பட வேண்டியவர்கள் என்ற போதிலும்

அவர்கள் ஒன்றுபோல இருந்தார்கள் அல்லது

நாடகத்தனமாக இருந்தார்கள் எனது ரசனையில்.

யஷ்வந்த் ராவ்

எரிமலைக் கரும்பாறை,

எந்தத் தபால்பெட்டியையும் போல பிரகாசம்,

செல்மையக் கூழ்வடிவம்

அல்லது சுவரில் ஓங்கி எறியப்பட்ட

ஒரு கிங் சைஸ் லாவா ரொட்டி,

ஒரு கால், ஒரு கையில்லாமல்

அல்லது ஒரு தலைகூட இல்லாமல்.

யஷ்வந்த் ராவ்,

நீங்கள் சந்திக்க வேண்டிய கடவுள் அவர்தான்.

உங்களுக்கு ஒரு அங்கஹீனம் என்றால்

யஷ்வந்த் ராவ் உங்களக்கு ஒரு கை கொடுப்பார்

மற்றும் உங்கள் காலை நீங்கள் திரும்ப அடைவீர்கள்.

யஷ்வந்த் ராவ்

அதிசயம் எதுவும் நிகழ்த்துவதில்லை

அவர் உங்களுக்கு பூமியை தருவதாக உறுதியளிப்பதில்லை

அல்லது சொர்க்கத்துக்கான அடுத்த ராக்கட்டில் உங்களுக்கு இருக்கை பதிவு செய்வதில்லை

ஆனால் ஏதேனும் எலும்புகள் உடைந்திருந்தால் ,

நீங்கள் அறிவீர்கள் அவைகளை அவர் சரி செய்துவிடுவார்

உங்கள் உடம்பை அவர் முழுமையாக்கிவிடுவார்

உங்கள் ஆவி அதுவே தன்னைப் பார்த்துக் கொள்ளும்

அவர் ஒரு வகையான எலும்பு வைத்தியர்.

விஷயம் என்னவென்றால்,

அவருக்கே தலைகளோ, கைகளோ மற்றும் பாதங்களோ கிடையாது என்பதால்

உங்களைக் கொஞ்சம் நல்லபடியாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

சைதன்யா (1)

அதைவிட்டு வந்து விடு

சைதன்யா கூறினார் ஒரு கல்லிடம்

கல் மொழியில்

உன்னுடைய முகத்திலிருந்து சிவப்பு பெயிண்டை துடைத்து விடு

உனக்கு அந்த நிறம் பொருத்தமானதென நான் நினைக்கவில்லை

நான் கூறுவதின் பொருள்

வெறும் ஒரு கல்லாக இருப்பதில் என்ன தவறு என்று

நான் இன்னும் உனக்கு பூக்கள் கொண்டுவருவேன்

உனக்கு ஜெண்டுவின் பூக்களைப் பிடிக்கும்

இல்லையா

எனக்கும் அவைகளைப் பிடிக்கும்.

சைதன்யா (2)

திராட்சைகள் போன்ற இனிப்பு

ஜெஜூரியின் கற்கள்

கூறினார் சைதன்யா

அவர் பட்டென ஒரு கல்லை

அவரது வாய்க்குள் போட்டார்

வெளியே துப்பினார் கடவுள்களை

வண்ணத்துப்பூச்சி

அதற்குப் பின்னால் கதையொன்றும் இல்லை

ஒரு நொடியைப் போல அது பிளந்திருக்கிறது

அது தன்னைத் தானே சுற்றுகிறது

அதற்கு எதிர்காலம் இல்லை

எந்தக் கடந்த காலத்தோடும் அது சிக்கியிருக்கவில்லை

நிகழ்காலத்தின் மீதான எள்ளல் அது.

அது ஒரு சிறிய மஞ்சள் வண்ணத்துப்பூச்சி

இந்தப் பரிதாபகரமான குன்றுகளை அது தூக்கி அலைகிறது

அதன் சிறகுகள் அடியில்

சும்மா ஒரு கிள்ளு மஞ்சள்

அது திறக்கிறது முன்பே அது மூடுகிறது

அது மூடுகிறது முன்பே அது தி-

எங்கிருக்கிறது அது

அணைக்கட்டு

அங்கே ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லை

பேஷ்வாக்கள் கட்டிய அந்த மாபெரும் அணையில்.

அங்கே ஒன்றுமே இல்லை

ஒரு நுறு ஆண்டுகளின் சகதியைத் தவிர.

•••

அருண் கொலாட்கர் என் மகன் / சிபிச்செல்வன்

download-8

அருண் கொலாட்கர் என் மகன். ஆம். அருண் கொலாட்கர் என் மகன்தான்.

அவர் மராத்திக் கவிஞர் மற்றும் இந்திய ஆங்கிலக் கவிஞர் என நாம் கேள்விப்பட்டிருக்கிறோமே. அல்லது அவரை முழுமையாக வாசித்திருக்கிறோமே என்ற கேள்விகளும் உங்கள் மனதில் எழுலாம்.

அதுவும் உண்மைதான். அப்படியானால் இரண்டு உண்மைகள் எப்படி இருக்க இயலும் என்ற கேள்வியும் எழும். ஆம் . இரண்டும் உண்மைகள்தான்.

அருண் கொலாட்கர் என்பவர் மராத்தி மற்றும் இந்திய ஆங்கில கவிஞர்தான். அவருடைய கவிதைகளின் மேல் நான் கொண்ட ஆர்வத்தின்காரணமாக என் மகனுக்கு அந்தப் பெயரை வைத்தேன்.

ஆகையால் இந்தக் கட்டுரையில் அருண் கொலாட்கர் என்ற கவியின் கவிதைகளைப் பற்றி நான் பேசப்போவதில்லை.

அருண்கொலாட்கர் என்ற கவிஞருக்கும் எனக்கும் கவிதையைக் கடந்த பந்தம் எப்படி உருவானது என்பதைப் பற்றி பேசப்போகிறேன்.

ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் வெளியிட்ட, பார்த்தசாரதி ( இவரும் இந்திய ஆங்கில கவிஞர்தான் ) தொகுத்த இந்திய ஆங்கில கவிஞர்களின் கவிதைகளின் தொகுப்பை ஸ்பென்சர் பிளாசா லேண்ட் மார்க் புத்தக கடையில் பார்த்து வாங்கியபோது அதில் அருண் கொலாட்கர் என்ற பெயரை முதன் முதலாகப் படித்தேன்.

அப்போது வரை வெளிவந்திருந்த ஜெஜீரி கவிதைகளில் சிலவற்றை மட்டும் அந்தத் தொகுப்பில் சேர்த்திருந்தார். அக்கவிதைகள் கண்டோபா என்னும் கடவுளை அதுவும் ஒரு மலைக்கோயிலில் இருக்கிற ஒதுங்கியுள்ள கடவுளைக் கிண்டல் செய்தபடி இருந்த கவிதைகள். அக்கவிதைகள் முதல் வாசிப்பிலேயே என்னை ஈர்த்தன. காரணம் அவர் கடவுளையே நையாண்டி செய்திருந்த விதம். நம்மூரிலே கடவுளை பக்தி ரசம் சொட்டச் சொட்ட பாடிய மரபு இருந்ததும் அதற்கு நேர் எதிராக இவர் கடவுளைக் கிண்டல் செய்த அந்த கலகத் தன்மையும் என்னை ஈர்த்தது.

அவருடைய கவிதைகளை வேறு எங்கே வாசிப்பது என்ற விபரங்களும் அப்போது உடனே கிடைத்துவிடவில்லை. ஆனாலும் அவரைப் பற்றிய தேடல்கள் இருந்தன.

ஒருமுறை நான் நாகர்கோவில் போயிருந்த சமயம் சுந்தர ராமசாமியை சந்தித்து, அவரோடு காலை நடைப்பயிற்சிக்காக எஸ்எல்பி பள்ளிக்கு போயிருந்தபோது அருண் கொலாட்கரைப் பற்றிச் சொன்னேன். அவரும் இந்திய கவிஞர்கள் சந்திப்புகளின் போது அவரை ஒரிருமுறை பார்த்திருப்பதாக உற்சாகமாகச் சொன்னார்.

அப்போதெல்லாம் அவர் யாரோடும் ஒட்டாமல் தனித்திருந்தார் என்ற தகவலையும் சொன்னார். முதன் முதலாக அவரைப் பார்த்தபோது அவருடைய காலில் ஏற்பட்டிருந்த காயத்திலிருந்து சீழ் வழிந்து ஓடிக்கொண்டிருந்ததையும் அதை அவர் ஒரு செய்தித்தாளை வைத்து துடைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்த சித்திரத்தையும் சொன்னது இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது.

அவருடைய கவிதைகளைப் பற்றியும் அவரைப்பற்றியும் சுந்தர ராமசாமி கொஞ்சம் அறிமுகம் செய்து வைத்தார். அவரைப் பற்றி என் தேடலையும் அவருடைய கவிதைகள் எனக்குப் பிடித்திருப்பதையும் சொன்னேன்.

அதன் பிறகு ஞானக்கூத்தனைச் சந்திக்கிற போதெல்லாம் அருண்கொலாட்கரைப் பற்றி பேசினேன். அவருக்கும் இந்திய கவிஞர்களைப் பற்றி அறிமுகங்களும் வாசிப்பும் இருந்ததால் அவரும் அருண் கொலாட்கரைப் பற்றி பேசியிருந்தார்.

அடுத்ததாக சிக்னேச்சர் என்ற கவிதை தொகுப்பை எங்கேயே பார்த்தேன். அது ஆசிய கவிஞர்களின் கவிதை தொகுப்பு . அதைத் தொகுத்தவர் மலையாளக் கவிஞர் சச்சிதானந்தம். அந்தப் புத்தகத்தை எப்படியாவது வாங்கிவிட எங்கெல்லாமோ தேடிக்கொண்டிருந்தேன். சென்னையில் அந்தப் புத்தகம் அப்போது கிடைக்கவில்லை.

நாகராஜன் என்ற நண்பர் அப்போது காலச்சுவடு இதழ்களையும் புத்தகங்களையும் மார்க்கெட்டிங் செய்து கொண்டிருந்தார். அவரோடு எனக்கு நெருங்கிய நட்பு இருந்ததால் அவரிடம் சொல்லி இந்தப் புத்தகத்தை எங்கே பார்த்தாலும் வாங்கி வரச் சொல்லியிருந்தேன்

அப்போது அவர் டெல்லி புத்தக காட்சியிலிருந்து இந்தப் புத்தகத்தை தேடிப்பிடித்து வாங்கி வந்து எனக்கு கொடுத்தார். அந்தப் புத்தகத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதலாகக் கவிதைகள் இருந்தன. அதாவது சுமார் பத்து கவிதைகள் இடம் பெற்றிருந்தன.

அவற்றை ஆர்வத்துடன் வாசித்தேன். அதைப் பற்றி நண்பரும் எழுத்தாளருமான எம்.ஜி.சுரேஷிடம் பேசிக்கொண்டிருப்பேன். எனக்கு அருண் கொலாட்கர் மீதும் அவரின் கவிதைகளின் மீதும் இருக்கிற ஆர்வத்தைப் பார்த்துவிட்டு அக்கவிதைகளை மொழிபெயர்க்க அவர் என்னைத் தூண்டினார். ஆனால் எனக்கு மொழிபெயர்ப்புகளைப் பற்றிய பிரமிப்புகளும், அதை செய்தவர் மிரட்டுவதையும், அதை மொக்கையான மோசமான மொழிபெயர்ப்புகள் என்று அவருக்கு ஆகாத எதிரணியினர் லாவணி பாடுவதைம், அவர் குழுவைச் சார்ந்தவர்கள் புகழ்மாலை பாடுவதையும் பார்த்து பயம் ஏற்பட்டிருந்தது.

ஆனால் எம்.ஜி.சுரேஷ் என்னை விடாப்பிடியாக உற்சாகப்படுத்தியும் தைர்யமுட்டியும் என்னை மொழிபெயர்க்க சொன்னார். அப்படி நான் மொழிபெயர்த்ததை அவர் சரிபார்த்துகொடுத்தார். அத்தோடு நில்லாமல் அப்போது அவர் நடத்திக்கொண்டிருந்த பன்முகம் இலக்கியக் காலாண்டிதழில் அருண் கொலாட்கர் கவிதைகளை வெளியிட்டும் உற்சாகப்படுத்தினார். இப்படித்தான் நான் மொழிபெயர்ப்பாளனாகவும், அதுவும் குறிப்பாக அருண் கொலாட்கரை மொழிபெயர்ப்பவனாகவும் மாறினேன்.

இவை நடந்தது 2003 களில் என நினைக்கிறேன்.

அதற்கு அடுத்த வருடம் குறிப்பாக ஆகஸ்டு மாதத்தில் என நினைக்கிறேன். ஆங்கில இந்துவில் கௌரி நாரயணன் என்பவர் அருண் கொலாட்கரின் இரண்டு புதிய தொகுப்புகளை அறிமுகப்படுத்தி விரிவாக எழுதியிருந்தார். கால கௌடா மற்றும் சர்ப்ப சாஸ்திரா என்ற இரண்டு தொகுப்புகளும் ஒரே சமயத்தில் வெளியிட்டிருந்தார்கள். அவைகளுக்கு ஒரே சமயத்தில் மதிப்புரையும் வெளியிட்டிருந்தார்கள்.

கௌரியை இதற்காகத் தொடர்புகொண்டேன். அவருடைய புத்தகங்களை வாங்குகிற வசதி அப்போது சென்னையிலும் இருக்கவில்லை. அவரிடம் கேட்டிருந்தேன். ஆனால் அப்போது அவர் அருண் கொலாட்கரின் கவிதைகளின் மேல் அதீதமான ஆர்வத்தினால் அக்கவிதைகளை நாடகமாக்குகிற முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதற்காக அந்தப் புத்தகங்கள் கைவசம் இருக்க வேண்டியதன் அவசியத்தை சொன்னார் , இதனால் எனக்கு உடனே அவருடை புத்தகங்களை பார்க்கிற வாய்ப்புகூட கிடைக்கவில்லை.

அந்த சமயத்திலே எழுத்தாளர் இரா.முருகன் அருண் கொலாட்கரின் கவிதைகளை மொழிபெயர்க்க தொடங்கினார்,. அது திண்ணை இணைய இதழில் அவ்வப்போது வெளி வரத் தொடங்கின. அக்கவிதைகளையும் நான் தமிழில் தொடர்ந்து வாசிக்க தொடங்கினேன்.

இரா.முருகன் கிட்டத்தட்ட அருண்கொலாட்கரின் எல்லாக் கவிதைகளையும் இப்போது மொழிபெயர்த்துவிட்டார் என நினைக்கிறேன்.

கௌரி அருண் கொலாட்கரின் கவிதைகளை நாடகமாக்கி அப்போது சென்னையில் அரங்கேற்றினார். அதற்கான அழைப்பும் எனக்கு கொடுத்திருந்தார். அந்த நாடகத்தை பார்க்க நானும் உற்சாகத்தோடு போய்ப்பார்த்தேன்.

இவை எல்லாம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலம் சற்றுமுன்பின்னாக இருக்கலாம். ஆனால் இவை நடந்தவை.

செப்டம்பர் மாத 25 தேதிய ஆங்கில இந்துவில் அருண் கொலாட்கரின் மரணம் பற்றிய செய்தி வெளிவந்தது. அவருக்கு தி இந்துவில் ஆங்கிலத்தில் அஞ்சலிக் கட்டுரை ஒன்றை கௌரி நாராயணன் எழுதியிருந்தார்.

பன்முகத்தில் நான் மொழிபெயர்த்திருந்த அருண் கொலாட்கரின் கவிதைகளைப் படித்திருந்த நண்பர் தளவாய் சுந்தரம் என்னைத் தொடர்பு கொண்டு தீராநதி இலக்கிய இதழில் ஒரு அஞ்சலிக் கட்டுரை எழுதச் சொன்னார்.

அந்த வாய்ப்பினால் அருண் கொலாட்கரைப் பற்றி உரைநடை எழுதவும் வாய்த்தது.

இப்படிதான் அருண் கொலாட்கர் கவிதைகளுக்கும் எனக்கும் நெருக்கம் உருவானது. இவை எல்லாம் நடந்தது செப்டம்பர் மாத இறுதியில் . அக்டோபர் 18 தேதி என் இளைய மகன் பிறந்தான். அருண் கொலாட்கர் மீது அந்த சமயத்தில் அபரிமிதமான ஆர்வத்தில் நான் இருந்ததால் என் இளைய மகனுக்கு அருண் கொலாட்கர் என்ற பெயரை வைத்தேன்.

இவை நடந்த சில மாதங்கள் கழித்து இந்தத் தகவல் கௌரியின் வழியாக அருண்கொலாட்கரின் மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு இந்த விஷயம் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய அதே சமயம் ஒரு வேண்டுகோளையும் அனுப்பியிருந்தார். அது என்னவெனில் அருண் கொலாட்கர் என்பதில் கொலாட்கர் என்ற பெயரை பள்ளி ஆசிரியைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக உச்சரித்து அந்தக் குழந்தையை பாடாய்படுத்திவிடுவார்கள் என்பதால் அந்தக்குழந்தை ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகுவான் என்பதால் அந்தக் கொலாட்கர் என்ற பெயரை நீக்கிவிடும்படி வேண்டிக்கொண்டார்.

அப்புறம் அருண் கொலாட்கர் என்பதில் கொலாட்கர் என்பது அவருடைய குடும்ப மற்றும் குளக்கரையை குறிப்பிடுவதாகவும் சொன்னாராம். இதை கௌரி என்னிடம் சொன்னார். அதன் பிறகுதான் அருண் கொலாட்கர் என்ற மகனின் பெயரில் இருக்கிற கொலாட்கர் என்ற பின்னொட்டை நீக்கி அருண் என்று பரவலாக அவனை அறிந்தார்கள்.

இந்த விவரங்களை அப்போது எனக்கு நெருக்கமாக இருந்த இலக்கிய நண்பர்கள் அறிவார்கள். இப்படி ஒரு கிறுக்கன் இருக்கிறானே என கள்ளச்சிரிப்புகளை அவர்கள் உதிர்த்ததையும் அறிவேன். ஆனால் நான் எதைப் பற்றியும் கவலைபடவில்லை.

இப்போதும் நான் பிரியத்துடன் என் மகனைக் கொஞ்சும்போது அருண் கொலாட்கர் என்ற முழுப்பெயரோடுதான் கொஞ்சுகிறேன்.••

இந்த மலைகள் இதழ் அருண் கொலாட்கரின் சிறப்பிதழாக கொண்டு வரத் திட்டமிட்டதற்கு காரணம் ஒரு மாதத்திற்கு முன் மறுபடியும் அருண் கொலாட்கரைத் தேடி வாசித்தேன். அப்போதுதான் அவருடைய நினைவு நாள் செப்டம்பர் 25 இல் வரப்போவதையும் அறிந்தேன். ஆகையால் கடந்த ஒரு மாதமாக திட்டமிட்டு நண்பர் சமயவேலிடம் இத்தகவலை சொன்னேன். அவர் உற்சாகப்படுத்தினார். பத்து கவிதைகளையும் அவரைப் பற்றிய கட்டுரை ஒன்றையும் கொடுப்பதாகச் சொன்னார். அதன்பிறகு நான் பெரிதும் மதிக்கும் ஆர்.சிவக்குமாரிடம் இந்தத் திட்டத்தையும் அதற்காக அருண் கொலாட்கரின் கவிதைகளை மொழிபெயர்த்துக்கொடுக்கும்படியும் கோரினேன். அவர் ஒப்புக்கொண்டதோடு உடனே மொழிபெயர்த்து முதல்ஆளாக அனுப்பியும் வைத்தார். அவருடைய நண்பரும் மீட்சி இதழில் பல உலக கவிதைகளை மொழிபெயர்த்தவருமான எதிராஜ் அகிலனிடமும் அருண் கொலாட்கரின் சில கவிதைகளை மொழிபெயர்த்துகொடுக்க வேண்டினேன். அவரும் ஒப்புக்கொண்டபடியே செய்து ஒத்துழைத்தார்.

இதற்கிடையில் சேலம் நண்பர் ஷாஅ விடம் அருண் கொலாட்கர் பற்றிச் சொல்லி அவரை மொழிபெயர்த்துக் கொடுக்கும்படித் தூண்டினேன்,. ஆனால் மொழிபெயர்த்த அனுபவம் ஏதுமில்லை என அவர் தயங்கினார்,. மேலும் அருண் கொலாட்கரைப் பற்றித் தனக்கு எதுவும் தெரியாது எனவும் மறுத்தார். ஆனால் நான் விடாப்பிடியாக அவரிடம் அருண்கொலாட்கரைப் பற்றிய அறிமுகத்தைச் சொன்னதோடுல்லாமல் அவருடைய கவிதைகளை அனுப்பி வைத்து மொழிபெயர்க்கச் சொன்னேன்.

அவரும் தயக்கத்தோடு ஒப்புக்கொண்டு படித்துப் பார்த்துவிட்டுதான் எதையும் தன்னால் செய்ய இயலும் என்றார். அருண் கொலாட்கரின் கவிதைகளை வாசித்துவிட்டு அவரும் பெரும் உற்சாகமாகி உடனே மொழிபெயர்த்து அனுப்பி வைத்திருந்தார்.

இவை நடந்த பின்னர்தான் நான் அருண் கொலாட்கரின் சிறப்பிதழாக மலைகள் வெளிவரப்போகிறது என்ற அறிவிப்பை முகப்புத்தகத்தில் நேற்று அறிவித்தேன்.

முதன் முதலாக உற்சாகமூட்டிய சமயவேல் தவிர்க்கவியலாத காரணங்களால் அவருடைய பங்களிப்பை அனுப்பிவைக்க இயலவில்லை. ஆனால் இந்த இதழ் உருப்பெற்றதில் அவருக்கும் பெரும் பங்கிருக்கிறது.

••

அருண் கொலாட்கரின் சிறப்பிதழை நண்பர்கள் உற்சாகத்தோடு வரவேற்றால் மேலும் அடுத்த இதழ்களில் உலக ஆளுமைகளின் சில சிறப்பிதழ்களை மலைகள் வெளியிடும். அதற்கான பணிகளும் தொடங்கிவிட்டன. விரைவில் அந்த அறிவிப்புகளும் வரும் .

நண்பர்கள் அனைவருக்கும் நன்றி . குறிப்பாக சமயவேல் மற்றும் ஆர்.சிவக்குமார் மற்றும் எதிராஜ் அகிலன் மற்றும் ஷாஅ.

மேலும் இந்த இதழில் எழுத கௌரியையும் தொடர்புகொண்டேன். அவர் எம்.எஸ் . சுப்புலட்சுமியின் நூற்றாண்டு என்பதால் அதில் பிசியாக இருப்பதால் எதையும பங்களிக்க தற்போது வாய்ப்பில்லை என்றார் ( கௌரி நாரயணன் கல்கியின் பேத்தி).

நண்பரும் எழுத்தாளருமான இரா.முருகனைத் தொடர்பு கொண்ட போது அவருடைய பங்களிப்பாக படைப்புகளை அனுப்ப சொல்லி கோரியிருந்தேன். ஆனால் இந்த இதழ் பதிவேற்றம் ஆகிற இந்த நொடி வரை அவரிமிருந்து படைப்பு எதுவும் வரவில்லை . ஆனால் அவரும் கௌரியும் வேறொரு சந்தர்ப்பத்தில் நிச்சயம் அருண் கொலாட்கரைப் பற்றி எழுதுவார்கள்.அப்போது அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு இன்னும் கூடுதலாகச் சில காரியங்களைச் செய்வோம்.

அருண் கொலாட்கரின் படைப்புகளை, குறிப்பாகக் கவிதைகளை, தமிழ் வாசகர்களுக்கும் கவிஞர்களுக்கும் கொஞ்சம் பரவலாக அறிமுகப்படுத்தும் பணியில் மலைகள் தொடர்ந்து ஈடுபடும் என்ற நம்பிக்கையோடு நண்பர்களிடமிருந்து விடைபெறுகிறேன்

••

அருண் கொலாட்கரின் கவிதைகளைப் பற்றி விரிவாக வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதுவேன்.

இப்போது சொல்லுங்கள் அருண் கொலாட்கர் என் மகன் என்ற முதல் வரி பொருத்தமானதுதானே?

நன்றி

உங்கள்

சிபிச்செல்வன்

ஆசிரியர்

மலைகள் இணைய இதழுக்காக

விருதுகளின் பல பயன்கள் ( அருண் கொலாட்கர் சிறப்பிதழ் ) ஆங்கிலத்திலிருந்து தமிழில் / ஷாஅ

download-1

download

அருண் கொலாட்கர் ( 01.11. 1932 to 25.09.2004)

மராத்தி எழுத்து பாடவிளக்கப் படங்கள்

அன்னாசி. அம்மா. கால்சராய். எலுமிச்சை.
குழவி. கரும்பு. கிடாய்.
எவ்வளவு பத்திரமாகத் தெரிகின்றன
ஒவ்வொன்றும் ரகசியமாக தனக்கான தனிச் சதுரத்தில்.

மாம்பழம். பட்டறைக்கல். கோப்பை. பிள்ளையார். வண்டி. வீடு.
மருந்துப் புட்டி. தன் கால்விரல்களைத் தொட்டுக்கொண்டிருக்கும் மனிதன்.
எல்லாம் மிகச் செளகரியமாக,
அவை யாவுக்கும் சரியாகவே தெரியும் எங்கு சேர்ந்திருக்கிறோம் என

கரண்டி. குடை. கப்பல். கவுன்.
தர்பூசணி. முத்திரை. பெட்டி. மேகம். அம்பு.
அவை ஒவ்வொன்றும் கண்டறிந்திருக்கும்போல் இருக்கிறது
தன் சொந்த ப்ரத்யேக இடம், பொறுப்பில்லாதிருக்க

வாள். மைக்குப்பி. கல்லறை. நீண்டவில். நீர்க்குழாய்.
பட்டம். பலா. அந்தணன். வாத்து. சோளம்.
தமக்குத் தாமாக சும்மா இருப்பதே அவற்றின் வேலை
மற்றும் ஆயுள்பூரா இப்படியிருக்கவே இவற்றின் நியமனம்

யாகம். தேர். பூண்டு. தீக்கோழி.
அறுகோணம். முயல். மான். கமலம். வேடன்.
வேண்டாம், நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
இந்த அமைதியான ராஜ்ஜியத்தில் தொந்திரவு எதுவும் நடக்காது.

குழந்தையை உலக்கையால் அம்மா சாத்தமாட்டாள்.
அந்தணர் பூண்டில் வாத்தை வறுத்தெடுக்கமாட்டார்.
அந்தக் கப்பல்
தர்பூசணியின்மீது ஒன்றும் மோதி விடாது.

குழந்தையின் கவுனை தீக்கோழி சாப்பிடவில்லையென்றால்,
பிள்ளையாரின் வயிற்றில் வேடன் அம்பைச் செலுத்தமாட்டான்.
தவிர அவனுக்குப் பின்னாலிருந்து முட்டும் கிடாய்
அந்நினைப்பைக் கட்டுப்படுத்தும்வரை

என்ன காரணம் இருந்து தொலைக்கும்
தன்-கால்விரல்களைத்- தொட்டுக்கொண்டிருக்கும்- மனிதன்
கல்லறை மேல் வீசி
கோப்பையை நொறுக்க?

*

விருதுகளின் பல பயன்கள்

விருதுகளினால் பல பயன்கள் உண்டு
அவை விமர்சகர்களை மெளனமாக்குகின்றன
படிக்காதவர்களை சமாதானப்படுத்துகின்றன
உன்னை எப்போதும் நம்பும் சிலரின்
நம்பிக்கையை உறுதிப்படுத்துகின்றன

. . .
மேலும் விருதுகள் கவிஞனின் சவப்பெட்டியிலுள்ள வெள்ளி ஆணிகள் போன்றவை

ரொம்ப நாட்களாக இருப்பதுபோல் இருக்கும்
கவிஞர்களை புதைப்பதற்கு ஏதுவான வழி அவை
நிச்சயமாக எல்லா சிறந்த கவிஞர்களும்
சீக்கிரத்தில் இறந்து போவதைக் காட்டிலும்

அதே சமயம்
ஒரு கவிஞனுக்குக் கடமையாவதில்லை
அவனைப் புதைத்து விட்டதால்
எழுதுவதை நிறுத்த வேண்டுமென்று

[ . . . ]

படகுச்சவாரி

கொக்கியுள்ள நீண்ட கம்புகள்
சந்து பொந்துகள் அறிந்திருக்கின்றன
கல்அமைப்புகளில் ஓட்டைகள் தேடுகின்றன
அல்லது கிரானைட் இறுகப்பற்றிய முட்கள்
புறாக்களின் எதிர்பாராத
படபடப்பைத் தூண்டச் செய்துவிடுகின்றன
படகு பின்னர் துறைவிட்டு
விரைந்து விலகிப் போகிறது

ஒரு ஜோடி முழங்கால்கள்
விர்ரென எழுந்து கொடிக்கம்பின் கீழே
ஓடியபின்
சுக்கானைச் சரிசெய்வதற்கான கைகளின்
குழப்பத்திற்குப்பின்

ஒரு பழுப்பு-வெள்ளையில் அற்புதமாக
இப்படுதா
விரிகிறது

ஏனென்றால் ஒரு பையனுக்குத்
திருப்பி
கையசைக்கிறான் ஒரு மாலுமி
வேறொரு சிறுவன்
மற்றொரு மாலுமிக்கு கையசைக்கிறான்

காற்றின் தெளிவில்
இச் சைகை உதிர்ந்து போகிறது
பகிர்தலை வேண்டி
பதிலுக்கு கை அவனைச் சேர்கிறது
அந்தக் கை அவன் முழங்கால்
தன்னுடையதாக
ஏற்கும் கை
ஒரு வயதானவனுக்கானது
ஒரு கை
பொறுமையாக இருக்க வேண்டி
சிறுவனுக்கு அளிக்கிறது நேரத்தின் ஒரு
பகுதியை
கவ்விப் பிடிக்க

சீருடையில் உறைந்திருக்கும் ஃபோர்மேன்
சுய- உணர்வுடன் பக்கத்தில்
அதிக சுய- உணர்வுடன் அவன் மனைவி
தெளிவில்லாமல் இருக்கும் உள்ளங்கையைப் பார்க்கிறாள்
காய்ப்பேறி அவன் முன்னே திறந்தபோது

வலது முழங்கால் உடைந்துபோய்
பூஞ்சை ஏறிய கைகளால்
அவன் ஒரு பிளாஸ்டிக் உறையை எடுக்கிறான்
கட்டணத்தைச் செலுத்துகிறான்

படகின் ஓரமாய்
மெதுவாகத் தன் கையைச் சாய்க்கிறான்
தன்னவளின் தோள் மீது
உரசாமல்
பொன்
மற்றும் சூரியஒளி
மோதிக்கொள்கின்றன
அவள் தொண்டையை உரிமைகொள்ள
மரத்தாலான இருக்கையில்
அவள் நகர்ந்திடும்போது

புதுத் தம்பதிகள் பரிமாற்றிக்கொள்கின்றனர்
மென்னகைகளை சிறு சந்தோஷங்களுக்காக

எங்கே காட்டு ஒரு ஃபோர்மேன்
அவன் தனக்குத்தானே பேசிக்கொள்கிறான்

யாருக்குத் தெரியும்
எண்ணெய் பற்றியெரியும் உப்புக்குளியல் உலையில்
நடுப்பிடியில்லாமல் அரவையைத்
தன்னைவிட சிறப்பாகச் செய்ய

கடல்பறவையின் மேல்

சத்தியமிட்டு
எவன் கண்டுபிடிக்க முடியும்
காற்றின் சுழல் வைத்தே
தெளிவாகப் பொங்கும் அதிவெண்மை என்னவென்று
தெரிவதும்

மற்றும்

அலைகளின் மேலமரும்
கடற்பறவைக்குத் தெளிவாக என்னவென்றறிவதும்
ஒரு தனிக் கலை

விசைப்படகு சட்டென வளைந்து போகிறது
கடலின் விரிவைப் பின்னுக்குத் தள்ளி
மொத்தத் துறைமுகமும்
மிதக்கும் அத்தனை உப்புக் கழிவுகளையும்
தாங்கியாக வேண்டும்
பெரிய உறுதியான உருளைகளின் மேல்
அழுக்கடைந்த பழம்பாயை வேகமாய் வீசி விரித்ததும்
உடனுக்குடன் அசைந்தசைந்து
முன்னேறிச் செல்கிறது
பாய்மரப்படகு

ஒரு பறவை உச்சிக் கொம்பைப் பற்றிக் கொள்கிறது
ஒவ்வொரு கைவினையிலும்
சமநிலை குலைத்து
நெடிய பாதை வலிந்து போகிறது
சின்ன தோணிக்கு ஒரு அதிர்ச்சி
பெரும் கப்பலுக்கு ஒரு ஊக்கம்
சிறிய மரக்கலத்திற்கு ஒரு அகம்பாவம்

கடற்சுவருக்குப் பின்னால்
வெறுக்கத்தக்க தீய நத்தையோடுகள்
உத்வேகத்தை மழித்துப் போகின்றன
அலை வந்து கழுவியபின்
மொத்த நீருக்கும் வந்து சேர்கிறது
மிதந்தபடியிருக்கும் அத்தனைப் பொருளும்
திரும்பவும்
வழக்கமான ஊசலாட்டமே

[ . . .]
……………….

ஒரு ராணியைப்போல
அவன் மனைவி அலைகளை ஒதுக்குகிறாள்
எண்ணெய் தடவிய கழைக்கூத்தாடிகளின் இசைக்குழுவென

அவளுடைய மூடிய விழிகளுக்குள்
இருள் வட்டங்களாக நகர்கின்றன
அவள் விருப்பத்தை மீறி அவை நகர்ந்து போகின்றன

ஒரு தொல்லியலாளனின்
விரல்களைப்போல்
காற்று
இறுகிப்போன அவள் முகம் கடந்து போகிறது
நைந்துபோயிருக்கும்
நகைப்பின் ஆணையாகக் குறுக்கே
வெட்டிச் செல்கிறது

சங்கிலியால் பிணைக்கப்பட்ட அவள் கணவன்
அவள் முன்னே அழைத்து வரப்படுகிறான்
அவன் கூச்சலிடுகிறான் மண்டியிட்டு மன்றாடுகிறான்

அவன் வலது நாசியிலிருக்கும் முடியை
வெறித்துப் பார்த்தபடி
அவள் சொல்கிறாள்
ஓநாய்களுக்கு இவனை வீசி எறியுங்கள்.

இரு- வயதுப்- பாலகனொருவன்
அம்மாவின் காதைக் கடிக்கிறான்
பிறகு பச்சை குத்திய அவள் கரத்தை உதறிவிட்டு
வழிந்திறங்க
முற்படுகிறான்
அவள் மடியை மறுத்து
இறுக்கிப் பிடிக்கும் அவளுடைய
முழங்கால்களையும் ஒதுக்கி
இன்னும் கீழே அவள் கெண்டைக் காலையும் உதறிப்
புரண்டு

அவன் கேட்கிறான்

பலூன்கள் வேணும்

பலூன்கள்

அப்பாவிடமிருந்து மகன்

கையைச்

சேர்கின்றன

எல்லாப் பெரியவர்களையும்

தாண்டி

அடித்தளத்தின் வெகுஅருகே
பூட்சுகளுக்கு இடையில் அவன் போகிறான்
காலணிகள் மற்றும்
வெறுங் கால்களின் நெரிசல் தரும் மரியாதையில்

பலூன்கள்
பிடியின் உறுதியில்

ஒன்று மற்றொன்றுடன்
இணக்கமாகிப்

பின்னிருக்கும்

மூன்றாவதைத்
தண்டிக்க முன்மாதிரியாக அமைந்து விட்டன

………………

இரு சகோதரிகள்
கடைசியாக
வந்து
படகு கிளம்பும்
போது சேர்ந்தனர்

அருகருகே
அமர்ந்து கொண்டனர்
அப்பால் குறுக்கே ஒரு
மரப்பலகையின் மேல்
எதையும்
பேசாமல்

மடிமேல் கை
வைத்து அவர்கள்
படகோட்டியின்
உருவத்தைத் தாண்டி
பார்த்துக்கொண்டிருந்தனர்

அவனுடைய உப்பு படிந்த
முகத்தின்
சுருக்கங்களையும்
கடலின்

தளர்வான முனைகளையும்
பின்னலிட்டபடி

[ . . . ]
………………………..

படகு சுற்றி வந்து
பக்க வாட்டாய்
படகுத்துறையை
ஒட்டி நிற்க
கரைச்சுவர் கச்சிதமாய் எழுகிறது
இசைப்பவனையும்
விஞ்சி

திருப்பங்கள் இல்லாத
விரிந்திருக்கும் கல்
சொரசொரப்பாகப் பதிந்திருக்கும்
நத்தைக்கூடுகளோடு
எங்கள் பார்வையை தீர்க்கமாய் எச்சரிக்கின்றது
*

அருண் கொலாட்கர் கவிதைகள் ( அருண் கொலாட்கர் சிறப்பிதழ் ) ஆங்கிலத்திலிருந்து தமிழில் / அகிலன் எத்திராஜ்

download-7

1487446_10202216487485521_1549028948_n

ஆடு புலி ஆட்டம்

யார் ஆடு, யார் புலி என்பது

ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை

ஒரு பொழுதும்.

முடிவு என்னவோ ஒரே மாதிரியாகத்தான்

அமைந்திருக்கிறது, எப்பொழுதும்.

அவள் ஜெயிப்பாள்.

நான் தோற்பேன்.

ஆனால், ஒரு சில நேரங்களில்,

அவளுடைய புலிகள்

மூர்க்க வேட்டையில் ஈடுபட்டிருக்கும் பொழுது,

என் ஆடுகளில் பாதியை

நான் இழந்து நிற்கும் பொழுது,

அபயம் கிட்டும்

எதிர்பாராத இடத்திலிருந்து.

மேலேயிருந்து.

அதுவரை நடுநிலை வகித்திருந்த

சரக்கொன்றை மரம் •1

காப்புதிர்க்கும் ஒரு வெற்றி மலரை,

மஞ்சள் வண்ணத்தில்

சற்றும் பொறுத்தமின்றி;

நடைபாதை மீது அடுப்புக் கரியால்

கோடிழுக்கப்பட்ட ஆட்டப் பலகையின் மேல்;

ஒரு புலியின் பின்வாங்குதலைத் தடுத்து விட்டு;

இன்னொரு புலிக்கு நெருக்கடி கொடுத்து.

உடனே இதை மீண்டும் தொடர்ந்து;

அதே சம்பந்தமற்ற,

அதே மஞ்சள் வண்ண மலரால்.

ஒரே ஒரு மாற்றம் மட்டுமே.

இப்பொழுது அது உதிரும் முன்னிலும் மெதுவாக.

தேடல் உத்தரவு இல்லாமலே.

அவளுடைய காது மடல்களைத் தடவிக்

கடந்து கன்னங்களில் மேய்ந்து

தன் போதைப் பொருளை

அவள் வழக்கமாய் மறைத்து வைத்திருக்கும்

ரவிக்கையின் கீழிறங்கும் முன்பகுதிக்குள் நுழைந்து,

மென்மையான, கிளர்ச்சியூட்டும்

ஆனால் கவனத்தைச் சிதறடிக்கும் நறுமணத்தால்

அவளை மேலும் குழப்பும்.

••

•1 Rusty Shield Bearer (துருவேறிய கவச மெய்க்காப்பாளன்) என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் மரம்.

••

கதவு

சிலுவையினின்றும் பாதிநிலை

கீழிறக்கப்பட்ட தீர்க்கதரிசி.

ஊசலாடும் புனிதத் தியாகி.

ஒரு மூட்டுவாய் உடைந்து

மீந்திருக்கும் மற்றொன்றின் தயவில்

தொங்கிக் கொண்டிருக்கிறது பழங்காலக் கதவு.

ஒரு மூலை பாதையின் புழுதியில் இழுபட,

உயர்ந்து நிற்கும் நுழைவாயிலை

இடித்தபடி இருக்கிறது மற்றொன்று.

காலப்போக்கில் கூர்ந்தெழும் நினைவெனப்

பரப்பின் மேல் துருத்தி நிற்கிறது மரச்சேவு;

ஏதோ ஒரு பழைய வாயிற்கதவின் மீது சரிந்த படி

போதை தெளியக் காத்திருக்கும் ஓர் உள்ளூர்க் குடிகாரன் போல்,

உடற்கூறு அமைப்பியல் நூலினுள் மீண்டும் இடம் பெற்றுவிட முடியாத

கட்டுத் தளர்ந்த பலவானுக்கேயுரிய துல்லிய அம்சங்களோடு.

நாசமாய்ப் போக கதவின் மூட்டுவாய்!

பாழாய்ப்போக வாயிலின் புடைநிலை!

எந்தக் காலத்திலோ பிய்த்துக் கொண்டு போயிருக்கும் கதவு

அதன் தோள்களில் உலரப் போட்டிருக்கும்

அந்த அரைக்காற்சட்டை மட்டும் தொங்காமல் இருந்திருந்தால்.

••

குதிரைலாட க்ஷேத்ரம்

பாறையின் அச் சிறு பிளவு

உண்மையில் குன்றின் மருங்கே உள்ள

ஓரிடர்.

அங்கேதான் இடறியது

குதிரையின் காலடிக் குளம்பு ஒன்று

ஓரிடியென.

காந்தோபா

அந்த நீல வண்ணக் குதிரையின் மீது.

அவனுக்குப் பின்புறம்

சேணத்தைப் பகிர்ந்திருந்த மணப்பெண்.

பள்ளத்தாக்கைத் தாவிக்

குதித்தனர் மூவரும்.

பாய்ந்தனர் அங்கிருந்து

சிக்கிமுக்கிக் கல்லிலிருந்து பறக்கும்

ஒரு தீப்பொறியென.

குன்றின் மறுபுறம்

காத்திருக்கும் ஒரு வீட்டுக்கு,

ஒரு வைக்கோல் போரென.

•••

அருண் கொலாட்கர் கவிதைகள் ( அருண் கொலாட்கர் சிறப்பிதழ் ) / தமிழில்: ஆர். சிவகுமார்

download-12

கீறல்

கடவுள் எது

கல் எது

பிரிக்கும் கோடு,

அப்படி ஒன்று இருந்தால்,

ஜெஜூரி*யில்

அது மிக மெல்லியது

ஒவ்வொரு இரண்டாம் கல்லும்

கடவுள் அல்லது அவருடைய நெருங்கிய உறவினர்

கடவுளைத் தவிர இங்கு

வேறொரு பயிர் எதுவும் இல்லை

இந்தப் புன்செய் நிலத்திலிருந்து

கடும் பாறையிலிருந்து

வருடம் முழுவதும்

இரவும் பகலும்

கடவுள் அறுவடை செய்யப்படுகிறார்

ஒரு படுக்கை அறையின் அளவில் இருக்கும்

இந்தப் பாறையின் பெருந்துண்டம்

கண்டோபா*வின் கல்லாக மாறிய மனைவி

குறுக்காக முழுதும் ஓடும் அந்த விரிசல்

கடுஞ்சீற்றத்தில் ஒரு சமயம் அவர் அவளைப்

பட்டாக் கத்தியால் வெட்டியக் காயத்தால்

உண்டான வடு

பாறை ஒன்றைக் கீறினால்

தொன்மம் ஒன்று ஊற்றெடுக்கும்

••

*ஜெஜூரி: பூனா மாவட்டத்திலுள்ள ஒரு நகரம். கண்டோபா கோயில் இருப்பதால் புகழ் பெற்ற ஊர்.

*கண்டோபா: சிவனின் ஒரு வடிவமாக மஹாராஷ்ட்ராவிலும் கர்நாடகத்திலும் வணங்கப்படும் கடவுள். மராத்தியர்களுக்கு முக்கியமான குல தெய்வம்.

••••••••••

ரயில் நிலைய நாய்

ரயில் நிலைய நாயின்

சொறி பிடித்த உடம்புக்குள்

வாழ்கிறது அந்த இடத்தின் ஆன்மா

வருகைகள் புறப்பாடுகளுக்குரிய மரத்தின் கீழ்

கடந்த முந்நூறு ஆண்டுகளாக அது

கழுவாய் தேடிக் கொண்டிருக்கிறது

நீங்கள் ஒரு மனிதனா அல்லது ஒரு சிறுதெய்வமா

அல்லது நோய்த் தணிக்கும் ஒரு கையால்

அதன் தலையை வருடி

சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்ல வந்த

எட்டுக் கரங்கள்* கொண்ட

ரயில் கால அட்டவணையா

என்று கண்டறியத் தேவையான அளவுக்கு

நாய் தன் வலது கண்ணைத் திறந்து பார்க்கிறது

அது முடிவு செய்கிறது

அதற்கான நாள் இன்னும் வரவில்லையென

••

*எட்டுக் கரங்கள்: கடவுளுக்கான மறைமுகக் குறிப்பு

•••••••••••••

பேருந்து

அரசுப் போக்குவரத்துப் பேருந்தின் ஜன்னல்கள்

தார்ப்பாய்த் துண்டுகளால் பொத்தான் வைத்து மூடப்பட்டுள்ளன

ஜெஜூரிப் போய்ச் சேரும்வரையும்

உங்கள் முழங்கை அருகே

தார்ப்பாயின் ஒரு மூலையைக்

குளிர்க்காற்று அறைந்து தாக்குகிறது

கர்ஜிக்கும் சாலையைக் கீழே பார்க்கிறீர்கள்

பேருந்தின் வெளியே சிதறும் சிறு ஒளியில்

விடியலின் அறிகுறிகளைத் தேடுகிறீர்கள்

ஒரு முதியவரின் மூக்குக் கண்ணாடியில்

நீங்கள் பார்க்கும் உங்கள் இருபாக முகம்தான்

உங்களுக்குப் பார்க்கக் கிடைக்கும் வயல்வெளி

அவருடைய புருவங்களைத் தாண்டியுள்ள

ஜாதி அடையாளத்துக்கு அப்பாலிருக்கும்

சேருமிடத்தை நோக்கித் தொடர்ந்து

நீங்கள் நகர்வது போலிருக்கிறது

வெளியே, சூரியன் முற்றிலுமாக உதித்துவிட்டது

தார்ப்பாயின் சிறுதுளை வழியே குறிபார்த்து

முதியவரின் கண்ணாடி மீது அது ஒளியை எய்கிறது

சூரியக் கதிரின் அறுபட்டத் துண்டு ஒன்று

ஓட்டுநரின் வலது நெற்றிப்பொட்டின் மீது

இளைப்பாற மென்மையாக வந்து சேர்கிறது

பேருந்து தன் திசையை மாற்றுவதாகத் தெரிகிறது

இரண்டு பக்கமும் பார்த்தபடி உங்கள் முகம் இருக்க

குலுக்கியெடுத்தப் பிரயாணத்தின் முடிவில்

பேருந்தை விட்டு நீங்கள் இறங்கும்போது

அந்த முதியவரின் தலைக்குள் நீங்கள் காலடி வைப்பதில்லை

***********